பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

Loten’s Sunbird Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.



லோட்டன் தேன்சிட்டு – Loten’s sunbird

நான் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பறவைகள் ஆய்வகம் ஒன்றில் இறந்துபோகும்  பறவைகள் பற்றி ஆய்வு செய்துவருகிறேன். இந்த ஆய்வகமானது இயற்கை எழில் கொஞ்சும் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியில் அமைந்துள்ளது. பல்லுயிரிய வளமிக்க புதர் காடுகள் சூழ்ந்த இப்பகுதியானது யானைகள், புள்ளிமான்கள், காட்டுமாடுகள் மற்றும் எண்ணற்ற பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் ஊர்வனவற்றையும் உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகத் திகழ்கிறது.

பறவைகளின் அபாயக்குரல்

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பனிக்காலத்தில் நாங்கள் எங்களது  ஆய்வகத்திலிருந்தபோது பல பறவைகளின் அபாயக்குரல் கேட்டு என்னவென்று பார்க்க ஓடினோம். பறவைகள் அங்குமிங்கும் பறந்தவாறு கத்திக்கொண்டிருந்தன. நாங்கள் அனைவரும் அவைகள் சப்தமிட்டதிசைநோக்கி கவனிக்க ஆரம்பித்தோம். அங்கே நாங்கள் கண்ட காட்சியை ஒரு இயற்கை வரலாற்று நிகழ்வாக இங்கே பதிவுசெய்கிறேன்.

மூங்கில் மரமொன்றில் “தேன்சிட்டு” வின்கூடமைந்திருந்தது. அதில் ஒரு சில நாட்களுக்கு முன்பு முட்டையிலிருந்து வெளிவந்த இரு குஞ்சுகளில் ஒன்றைப் பாம்பு விழுங்க முயற்சி செய்துகொண்டிருந்தது. சிறகுகள் முளைக்காத குஞ்சுகள் இளஞ்சிவப்பு தோலுடன் காட்சியளித்தன. தாய்ப் பறவைகளின் அலறல் ஒரு புறமிருக்க பாம்பு தனக்கான இரையை விழுங்கத் துவங்கியது. எங்களோடு இருந்த ஊர்வன பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளர்களும் விரைந்து சென்று புகைப்படக்கருவிகளை எடுத்துவந்து உடனடியாக அதனைப் பதிவு செய்தார்கள். அன்று பாம்பிற்கு இரையான குஞ்சுகள் தான் லோட்டன் தேன்சிட்டின்  குஞ்சுகளாகும்.

லோட்டன் தேன்சிட்டு

ஆண் பறவையின் உடல் முழுதும் வண்ணங்களால் மின்னியது. நீளமான  கீழ்நோக்கி வளைந்த மெல்லிய அலகும், ஔிரும் கரு ஊதா நிற தலைப்பகுதியும், செம்மஞ்சள் நிற மார்புப்பகுதியையும் கொண்டிருந்தன. பெண் பறவையின் உடல் அடர் பச்சைநிறத்திலிருந்தது.13 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த தேன்சிட்டின் எடை 8 – 11 கிராம் வரை இருக்கும்.

லோட்டன் தேன்சிட்டு

படம் – https://birdsoftheworld.org/bow/species/lobsun2/cur/introduction 

இப்பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் கிழக்கே விசாகபட்டினத்திற்கு தெற்காகவும், மேற்கில் மும்பைக்கு தெற்கேயும் உள்ள பகுதிகளில் தொடங்கி தென்னிந்தியா முழுவதிலும் இலங்கையிலும்  காணப்படுகிறது. இலங்கையில் வட மாகாணத்தைத் தவிரப் பிற பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன.

உணவு மற்றும் வாழ்விடம்

இலையுதிர் காடுகள், பூக்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த மலையடிவாரத் தோட்டங்கள் போன்ற இடங்களில் காணலாம்.1600 மீட்டர் உயரத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை கூட இவற்றைக் காணலாம்.

மலர்களின் புல்லிவட்டத்தை தன் மெல்லிய அலகால் துளையிட்டு தேனை உறிஞ்சும் திறன்கொண்டது. சிலந்திகள் மற்றும் சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. பார்ப்பதற்குச் சாதாரண தேன்சிட்டு போலவே தோன்றினாலும் உருவ அமைப்பும் அலகும் அவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.

இனப்பெருக்க காலம்

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் பறவையே கூடு கட்டுகின்றன. மரப்பட்டைகளையும், இலைகளையும் வைத்து சிலந்தியின் நூலாம்படையின் உதவியுடன் கூடுகளைக் கட்டுகின்றன. சில நேரங்களில் அதே கூடுகளை அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்திக் கொள்கின்றன.  முட்டைகள் சாம்பல்வெள்ளை நிற ஓட்டில் பழுப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும் என முனைவர் சாலிம் அலியின் குறிப்புகள் கூறுகின்றன. முட்டைகளை பதினைந்து நாட்கள் வரை அடைகாக்கும். ஆண் பெண் இரண்டுமே குஞ்சுகளுக்கு இரையூட்டுகின்றன.

பெயர்க்காரணம்

லோட்டன் என்பவர் இயற்கை நிகழ்வுகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். மிக அரிதான கூறுகளின் மீதான மோகமும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தினாலும், ஒரு தனித்துவமான கலைநயமிக்க சேகரிப்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டவர்.

அதன் விளைவாகப் பறவைகளையும் சேகரித்தவர். தான் சேகரித்த பறவைகளைப் பாடம் செய்து லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும், பிரிட்டிஷ் நூலகத்திலும், ஹார்லெதில் உள்ள டெயலர்ஷ் அருங்காட்சியகத்திலும் வைத்துள்ளார். 18ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த ஆங்கில இயற்கை வரலாற்றுப் புத்தகங்களில் இவர் சேகரித்த இயற்கை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே லின்னேயஸ் அவர்கள் லோட்டன் பெயரை அவர் சேகரித்து வைத்திருந்த தேன்சிட்டிற்கு வைத்துள்ளார்.

Joan Gidlon Loten (1710 – 1789) Dutch Governor of Ceylon (1752 – 1757)

அறிவியல் பெயர்: Cinnyris lotenius

நிறைவாகப் பாம்புகள் பறவைகளின் குஞ்சுகளை உணவாகக் உட்கொள்வதை இயற்கை நிகழ்வாகவும் உணவுச்சங்கிலியின் அங்கமாகவுமே பார்க்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்டவுடன் தடுக்க முயல்வது இயற்கைக்கு மாறான செயலாகும். உயிரினங்களின் உணவுச்சங்கிலி பிணைப்பில் ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உயிரின சட்டப்படி விலங்குகளையோ கானக உயிரினங்களையோ துன்புறுத்துவதும், அதன் உடல் உறுப்புகளைத் தொடுவதோ தண்டனைக்குரிய குற்றமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

வனம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அவற்றை இரசிப்போம். அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்போம்.

தரவுகள்

  1. https://birdsoftheworld.org/bow/species/lobsun2/cur/introduction

  2. http://datazone.birdlife.org/species/factsheet/lotens-sunbird-cinnyris-lotenius/details 

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.