நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய "பண்டைய சமுதாயம்" நூல் | Louis Henry Morgan's Pandaiya Samuthayam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய “பண்டைய சமுதாயம்” நூல்

வெகுகாலமாகத் தமிழில் எதிர்பார்க்கப்பட்ட லூயி ஹென்றி மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” (Ancient Society) எனும் நூல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த நூலைச் சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. முனைவர் டி. ஆர். சுதா தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்; அந்த மொழியாக்கத்தை மயிலைபாலு செம்மையாக்கியுள்ளார். இன்று இந்நூல் சிறந்த மொழியாக்கமாகத் திகழ்கிறது என்றால், அதற்குக் காரணம் இந்தச் செம்மையாக்கப் பணியே ஆகும். மொழிபெயர்ப்பை மூலநூலுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்து வெளியிடுவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாகும்.

2019ஆம் ஆண்டிலேயே இந்த மொழியாக்கப் பணியை முனைவர் டி. ஆர். சுதா நிறைவு செய்திருந்தாலும், ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுச் செம்மைப்படுத்துவதற்கே ஆறு ஆண்டுகள் எடுத்திருக்கிறது. சுமார் 850 பக்கங்களைக் கொண்ட நூலை வரி வரியாக ஒப்பிடுவது எளிதான செயல் அல்ல. இத்தகைய பொறுமையும் கடமையுணர்ச்சியும் நூலின் தரத்தில் தெளிவாக வெளிப்படுகின்றன.

மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற இந்த நூல், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோருக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்ஸ் இந்த நூலைப் படித்து விரிவான குறிப்புகள் எடுத்து வைத்திருந்தார்; அவை தனி நூலாக அவர் காலத்தில் வெளிவரவில்லை. அந்தக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு எங்கெல்ஸ் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை எழுதினார். “பண்டைய சமுதாயம்” எங்கெல்ஸ் நூலுக்கான அடித்தளமாகும். எங்கெல்ஸ் மார்கனை அடிப்படையாகக் கொண்டு தமது ஆய்வை விரிவுபடுத்தியுள்ளார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்கள் வரலாற்று புரிதலுக்கான ஆதார நூலாகக் கொண்டிருந்த இந்தப் படைப்பு தமிழில் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதைப் படித்துப் பயன்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் அறிவுக் கடமையாகும்.

“பண்டைய சமுதாயம்” வெளியாகிச் சுமார் 150 ஆண்டுகள் ஆகின்றன. “இந்த நூல் குறித்து மானுடவியலாளர்களிடையே கடும் விமர்சனங்கள் உள்ளன; அப்படியிருக்க, இதைப் படிக்க வேண்டுமா?” என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால் நூலை முழுமையாக வாசித்துப் பார்க்கும்போது, இன்றும் அது படிக்கத் தகுதியானதாக இருப்பது தெளிவாகிறது. உண்மையில், நூல் மீதான விமர்சனங்களே அதைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய "பண்டைய சமுதாயம்" நூல் | Lewis Henry Morgan's Pandaiya Samuthayam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மனித முன்னேற்றத்தைப் படிநிலைகளாக விளக்கும் மார்கனின் முறையே விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆனால் அனைத்துச் சமூகங்களும் ஒரே நேர்கோட்டு பாதையில் வளர்ந்தன என்று அவர் எங்கும் வலியுறுத்தவில்லை. அவர் முன்வைத்தது ஒரு பொதுவான வளர்ச்சியின் வடிவம்; விதிவிலக்குகளையும் அவர் பதிவு செய்துள்ளார். எனவே அவர் மீதான “நேர்கோட்டு பரிணாமவாதி” என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.
“… பண்டைய காலத்திலிருந்து, நாகரிகக் காலத்துக்கு முன்னேறிய, மனிதகுலத்தின் அனைத்து இடங்களிலுமே, ஒருதாரமணக் குடும்பத்துக்கு முன்னதாகப், டுரானியன் அமைப்பும், அதற்கு நெடுங்காலத்துக்கு முன்னர் ஜென்டைல் அமைப்பும், அதற்கும் முன்னதாகப் புனாலுவன் அமைப்பும் இருந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்கப் பழங்குடியினரிடையே விதிவிலக்காக, இங்குமங்குமாகச் சில இடங்களில் காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் இடைநிலை வரை, புனாலுவன் வழக்கம் இருந்ததற்கான தடயங்கள் இருந்தன.” (பக்கம் – 663)

இதில் குடும்ப முறையின் வரிசை மாறியதை மார்கன் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்று பல விதிவிலக்குகளை நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். அதனால் மார்கன் ஒரே நேர்கோட்டில் மட்டும் சிந்தித்தார் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மார்கனின் பொதுவான நேர்கோட்டை ஒட்டியே எங்கெல்ஸ் தமது நூலை எழுதியுள்ளார். ஏனெனில் மார்கன் வரலாற்றைக் கருவி–உற்பத்தி–சொத்து என்ற அடிப்படையில் விளக்குகிறார். இதுவே வரலாற்று பொருள்முதல்வாதத்தின் மையக் கருத்து. இதனை ஏற்காதவர்களே அவரை விமர்சிக்கின்றனர். கம்யூனிஸ்டுகளுக்கோ இந்த அணுகுமுறை இன்றும் பயன்படும் அறிவியல் முறையாக இருக்கிறது.

மார்க்சின் விஞ்ஞானக் கம்யூனிசத்தை அறிவதற்கு, ராபர்ட் ஓவன், செயிண்ட்-சைமன், சார்லஸ் ஃபூரியர் ஆகியோர்களின் நூல்களைப் படிக்க வேண்டும், மார்க்சின் தத்துவத்தைப் படிப்பதற்கு ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். மார்க்சின் அரசியல் பொருளாதாரத்துக்கு ஆடம் ஸ்மித், ரிக்காடோ போன்றோர்களின் நூல்களைப் படிக்க வேண்டும், அதே போல வரலாற்று காலத்துக்கு முன்பான மனிதர்களின் வளர்ச்சியை அறிவதற்கு மார்கனின் நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிக்கக்கூடாத நூல் என்று ஒன்றும் இல்லை, ஆனால் கம்யூனிஸ்டுகள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்கள் இருக்கின்றன, அதில் மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் முதன்மையாக இடம்பெறுகிறது.

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய "பண்டைய சமுதாயம்" நூல் | Louis Henry Morgan's Pandaiya Samuthayam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மனிதனினுடைய வளர்ச்சியினை மார்கன், விலங்குத்தன நிலை (Savagery), காட்டுமிராண்டி நிலை (Barbarism), நாகரிக நிலை (Civilization) என்கிற மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார். இந்தக் காட்டுமிராண்டி நிலை (Barbarism) என்கிறதைத் தான், ஐரோப்பிய மையவாதம் என்று விமர்சிக்கின்றனர். இன்றைய தொல்லியல் துறை மனித வளர்ச்சியினை, வரலாற்றுக்கு முன்பானது, வரலாற்றுக்கானது என்று பிரிக்கின்றனர், இதனையும் எழுத்தறிவு பெறாத மக்களின் வரலாறு மறுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். புரிதலுக்காகக் கூறப்பட்டதின் சொற்களைப் பிடித்துக் கொண்டு குற்றம் சாட்டுவது என்பது உண்மையில் அணுகுமுறை சிக்கலே ஆகும். அதனை இப்போக்கினர் மறைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

Barbarism என்கிற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் காட்டுமிராண்டி நிலை அல்லது அநாகரிக நிலை என்று சொல்வது அநாகரிகமாக இருப்பதாகக் கருதுகின்றனர், இதனை அரை நாகரிகம் என்று மொழியாக்கம் செய்யலாம், இதையும் நாகரிக மற்றவர்கள் என்கிற தொனி இதில் இருக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள் கூறலாம். குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டுதான் இருப்பர், அதனை ஒதிக்கிவிட்டு நமது வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும். அப்போது தான் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.

மார்கன் தமது நூலை நான்கு பகுதியாக வகுத்துள்ளார்.

1.கண்டுபிடிப்புகள் கண்டெடுப்புகள் மூலமாக அறிவின் வளர்ச்சி
(Growth of Intelligence through Inventions and Discoveries

2.அரசாங்கம் என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of Government)

3.குடும்பம் என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of the Family)

4.சொத்து என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of Property)

வரலாற்றுக்கு முந்திய சமூகங்களையும் வரலாற்றுக் கால சமூகங்களையும் ஒப்பிட்டு மார்க்ஸ் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தாரோ, அதேபோன்ற முடிவை மார்கனும் தனது ஆய்வின் மூலம் அடைந்தார் என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். எங்கெல்ஸ் 300 பக்கங்களில் கூறியதற்கான ஆதாரங்கள், மார்கனின் 860 பக்கங்களில் அடங்கியிருக்கிறது. எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலைச் சிறப்பாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கு மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூலைப் படிக்க வேண்டும்.

முதல் பகுதியின் தலைப்பு, கண்டுபிடிப்புகள் கண்டெடுப்புகள் மூலமாக அறிவின் வளர்ச்சி.

மனிதர்கள் முன்னேற வேண்டும் என்றால், அவர்கள் இயற்கையை தங்களுக்குப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்காக கருவிகளை உருவாக்க வேண்டும். கருவிகள் மேம்பட்டால் உற்பத்தி முறைகளும் மேம்படும். புதிய கருவிகளை கண்டுபிடித்ததன் மூலம் மனிதர்கள் உற்பத்தியை வளர்த்துக் கொண்டு, தங்களது பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

கண்டுபிடிப்புகளும் கண்டெடுப்புகளும் (Inventions and Discoveries) மனிதனின் தனிப்பட்ட திறமையினால் மட்டும் நடைபெறுவதில்லை, சமூகத் தேவைகள் மற்றும் உற்பத்தி முறையின் அழுத்தத்தினால், அதாவது உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற வாழ்வாதாரத் தேவையால் உருவாகிறது என்று மார்கன் கூறியுள்ளார். இதனைக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்வதைப் போல மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மனித சமூகம் நாகரிக நிலையை அடையும்முன் இரண்டு கட்டங்களைத் தாண்டி வளர்ந்த. மனித வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்தது மார்கன்; அந்தப் பிரிவை எங்கெல்ஸ் தமது நூலில் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

எங்கெல்ஸ் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலிலும் மார்கன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலிலும் வேறுபட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Savagery, Barbarism, Civilization என்ற ஆங்கிலச் சொற்களுக்கு, மார்கன் தமிழ் மொழிபெயர்ப்பில் விலங்குதனம், காட்டுமிராண்டித்தனம், நாகரிகம் எனக் காணப்படுகிறது. எங்கெல்ஸ் தமிழ் மொழிபெயர்ப்பில் காட்டுமிராண்டி, அநாகரிகம், நாகரிகம் என்று வருகிறது. இந்தச் சொற்களாலேயே மார்கன்–எங்கெல்ஸ் மீது சிலர் விமர்சனம் முன்வைக்கிறார்கள். ஆகவே இச்சொற்களைத் துல்லியமாகப் பயன்படுத்துவது அவசியம்.

மனிதயினம் தொடக்கத்தில் விலங்கு நிலைக்கு மிக அருகில் இருந்தது. பின்னர் நெருப்பைப் பயன்படுத்தக் கற்றது; அதன் பின் வில்–அம்பு போன்ற கருவிகளை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கியது. அப்போது கல், எலும்பு போன்றவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தியிருந்தாலும், அது இன்னும் முழுமையாக விலங்கு நிலையிலிருந்து விடுபடவில்லை. எனவே அந்தத் தொடக்கக் கட்டத்தை “விலங்குதன நிலை” அல்லது “விலங்காண்டி நிலை” என்று குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

Barbarism என்கிற ஆங்கிலச் சொல்லே மிகவும் விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது, அதனால் இந்தச் சொல்லைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும், மார்கன் நூலில் காட்டுமிராண்டி என்கிற சொல்லும், எங்கெல்ஸ் நூலில் அநாகரிகம் என்கிற சொல்லும் தமிழ் மொழியாக்கத்தில் காணப்படுகிறது. முனைவர் டி.ஆர்.சுதா அவர்களின் மொழியாக்கமே சரியானதாக எனக்குப் படுகிறது. விலங்காண்டி (Savagery), காட்டுமிராண்டி (Barbarism), நாகரிகம் (Civilization).

 

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய "பண்டைய சமுதாயம்" நூல் | Louis Henry Morgan's Pandaiya Samuthayam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

காட்டுமிராண்டி, அநாகரிகம் என்கிற சொற்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் அவை அவமதிப்பு நோக்கில் கூறப்பட்டதல்ல; வளர்ச்சி நிலைகளை விளக்குவதற்கே அவ்வாறு எழுதப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காட்டுமிராண்டி கட்டத்தில் மண் பானை பயன்படுத்தத் தொடங்கியதும், தொடக்கநிலை வேளாண்மைப் பயன்படுத்தியதையும், உலோகப் பொருள் பயன்படுத்தியதையும் வைத்துப் பார்க்கும் போது இந்தக் கட்டத்தை தொடக்க நாகரிகம் என்கிற சொல்லால் குறிப்பிடலாம். தொடக்க நாகரிகம் என்ற சொல் சரியானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் பிரச்சினை செய்பவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள், அதனால் நமது தெளிவுக்கு சரியானச் சொல்லைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

விலங்காண்டி நிலை (Savagery), தொடக்க நாகரிக நிலை (Barbarism), நாகரிக நிலை (Civilization) ஆகிய மூன்று கட்டத்தையும் மூன்று உட்பிரிவுகளாக மார்கன் பிரிக்கிறார். முதல்நிலை (Lower Status), இடைநிலை (Middle Status), உயர்நிலை (Upper Status). தொடக்கநிலை கீழ்நிலையாகவும் வளர்ச்சி பெற்றநிலை இடைநிலையாகவும், வளர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்துக்கு நுழையும் நிலையினை மேல் நிலையாகவும் மார்கன் விளக்குகிறார். மார்கன் விளக்குவது இயக்கவியல் அடிப்படையாக இருக்கிறது. அளவு மாறுபாடு, பண்பு மாறுபாடு, நிலைமறுப்பு என்கிற இயக்கவியல் அடிப்படையில் மார்கன் இதனை ஆராய்ந்து முடிவெடுத்துள்ளார்.

விலங்காண்டி (Savagery) நிலையின் முதல் நிலையிலும் மனிதயினம் இயற்கையைச் சார்ந்தே செயல்பட்டது, ஆனால் கல்லையும், முதுகு எலும்பையும் கருவியாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டது, இடையில் வேட்டையாடவும் நெருப்பைப் பயன்படுத்தவும், நெருப்பைக் கொண்டு மீனைச் சமைத்துச் சாப்பிடவும் அறிந்து கொண்டது. உயர் நிலையில் வில்-அம்பு கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதால் வேட்டையாடுவதில் முன்னேற்றம் கண்டது. அதுவே தொடக்க நாகரிகம் என்கிற கட்டத்தின் முதல்நிலைக்கு அழைத்துச் சென்றது.

தொடக்க நாகரிக நிலையின் (Barbarism) ஆரம்பத்தில் மண் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடோடி வாழ்க்கை ஓரளவு குறைந்து, மனிதர்கள் நிலையான குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். ரத்த உறவை அடிப்படையாகக் கொண்ட குலங்களும் உருவாயின. தொடக்க நாகரிகத்தின் இடைநிலையில் விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டது, தொடக்கநிலை தோட்டக்கலையும், சிறிதளவு வேளாண்மையும் செய்யக் கற்றுக்கொண்டது. தொடக்க நாகரிகத்தின் உயர் நிலையில் செம்பு, வெண்கலம், இரும்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டது. உலோகப் பயன்பாட்டால் வேளாண்மைக் கருவிகள் வளர்ச்சி பெற்றது.

இரும்பு போன்ற உலோகக் கண்டுபிடிப்பைக் குறிப்பிடும் போது மார்கன் எவ்வளவு உற்சாகமும் மகிழ்வும் அடைந்தார் என்பதை அவரது எழுத்துகளைப் படிக்கும்போது அறிந்து கொள்ளமுடிகிறது.

“காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தில் இருந்த மனிதன் படிப்படியாக முன்னேறி, இயற்கை உலோகங்களைக் கண்டறிந்தது; உலோகங்களை உருக்குவதற்கான உருக்குக் கலனையும்; அவற்றை அச்சுகளில் வார்ப்பதையும் கண்டறிந்தது; இயற்கைச் செம்புடன் தகரத்தைக் கலந்து வெண்கலம் தயாரித்தது; இறுதியாக இன்னும் சில பெருமுயற்சிகளை மேற்கொண்டு, கொதிகலன் கண்டுபிடித்தது; தாதுக்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தது என இவை அனைத்தையும் மனிதன் செய்வதற்குள், நாகரிகத்திற்கான போரில் பத்தில் ஒன்பது பங்கு மனிதகுலம் வெற்றியடைந்து விட்டது’. இரும்புக் கருவிகள் உதவியுடன், கூரான ஒரு முனையையும், பக்கவாட்டு விளிம்புகளையும் பிடிக்கக்கூடிய திறனுடன், ஒருங்கிணைந்த ஆற்றலோடு, மனிதகுலம் நாகரிகத்தை அடைவது உறுதியானது … …..

இதற்குப்பின் வந்தவை உலோகத்தாலான சுத்தி, பட்டடை (இரும்புத் தளம்), கோடரி, உளி, இரும்பு முனையுடன் கூடிய ஏர், இரும்பு வாள் ஆகியவை. நாகரிகத்தின் அடிப்படை, இரும்பு என்கிற உலோகம் என்றும் சொல்லலாம். இரும்புக் கருவிகள் இல்லாததாலேயே, நாகரிகத் தொடக்கக் காலகட்டத்தில் முன்னேற்றம் தடைபட்டு நின்றது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியை நிரப்பத் தவறியிருந்தால், இப்போதுவரை மனிதகுலம் அதே நிலையிலேயே இருந்திருக்கும். இரும்புத் தாதுவை உருக்குவது என்ற எண்ணமும், இரும்புத்தாதினை உருக்கும் முறை பற்றிய சிந்தனையும் மனிதனுக்கு ஒருமுறைதான் தோன்றியிருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த எண்ணம், எந்தப் பழங்குடியினம் அல்லது, எந்தக் குடும்பத்திற்கு வந்ததோ, அங்கிருந்துதான் நாகரிகமும் தொடங்கியிருக்கும், அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” (பக்கம் 108-109)

அடுத்து நாகரிகக் கட்டத்தை மார்கன் விவரிக்கிறார். எழுத்தின் பயன்பாடு தொடங்குவதே நாகரிகத்தின் தொடக்கம் ஆகும். எழுத்துக்கு இணையாகக் கருதப்படும் கற்களில் எழுதப்பட்ட உருவப் பதிவுகள் இல்லாமல், நாகரிகமோ, வரலாறோ முறையாக இருந்திருக்காது என்கிறார் மார்கன். நாகரிகக் காலத்தைப் பண்டைக் காலம், நவீனக் காலம் என இரண்டாகப் பிரிக்கிறார்.

மூன்று காலக்கட்டத்தையும் எளிதாகப் பிரித்தறியலாம். விலங்காண்டி கட்டத்தில் உணவு சேகரிப்பே முழு நேரத்தையும் எடுத்துக் கொண்டது, வேட்டையாடுதலும் பழங்கள், கிழங்குகள் ஆகியவைகளை நேரடியாகப் பறித்து உண்ணும் நிலையில் இருந்தனர். எளிதான கருவிகளையே பயன்படுத்தினர், கிடைத்திடும் உணவு குழுவில் உள்ள அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட்டது.

நாகரிகத்தின் தொடக்கக் கட்டத்தில் மனிதர்கள் விலங்குகளை வளர்க்கத் தொடங்கினர். சிறிய அளவில் வேளாண்மையும் தொடங்கப்பட்டது. மண் பானைகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் உலோகப் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இந்த உலோகப் பயன்பாடே, தொடக்க நாகரிக நிலையிலிருந்து முழுமையான நாகரிக நிலைக்குச் செல்ல முக்கிய காரணமாக இருந்தது.

நாகரிகக் கட்டத்தில் மனிதர்கள் எழுதக் கற்றுக் கொண்டானர். தொழில்களில் பிரிவு ஏற்பட்டது. அதன் விளைவாக வர்க்கங்கள் தோன்றின. வர்க்க வேறுபாடு தீவிரமானபோது, அந்த வர்க்கங்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் வர்க்கச் சார்பான “அரசு” என்ற நிறுவனம் உருவானது.

இந்த மூன்று கட்டங்களில், நாகரிகக் கட்டத்தைவிட நாகரிகத்தின் தொடக்கக் காலம் மிக நீண்டதாக இருந்தது. அதைவிடவும் காட்டுமிராண்டி காலம் இன்னும் நீண்ட நெடுங்காலமாக நீடித்தது. உண்மையில் பார்க்கும்போது, கால அளவில் மிகக் குறைவானது நாகரிகக் கட்டமாக இருப்பினும், மனித சமூகம் இன்றுவரை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதே நாகரிகக் கட்டத்தில்தான்.

இரண்டாவது பகுதியின் தலைப்பு, அரசாங்கம் என்ற சிந்தனையின் வளர்ச்சி.

இந்தப் பகுதி நூலின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதில் தகவல்கள் மிக அதிகமாகச் செறிந்துள்ளன. இந்தப் பகுதியை பொது வாசகர்கள் படிக்கும் போது ஓரளவு சோர்வு ஏற்படும் என்பது தெரிகிறது. ஆனால் கல்வித் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது மிக அவசியமான பகுதியாகும். ஆகையால், பொறுமையுடன் வாசித்தால் அனைவருக்கும் இது பயனளிக்கும். குறிப்பாக, இப்பகுதியில் மார்கன் அரசு தோற்றம் குறித்து விரிவான ஆய்வை முன்வைத்துள்ளார்.

சொத்துடைமையின் வளர்ச்சியோடு வர்க்கப் பிரிவு தோன்றுகிறது; அதனோடு அரசு உருவாகிறது. சொத்துடைமையாளர்களின் நலனை முன்னிறுத்தும் அமைப்பாக அரசு மாறுகிறது. இதனை மார்கன் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நாகரிக நிலையில்தான் அரசு தோன்றுகிறது. இதற்கு முன்பிருந்த சமூக நிறுவனங்களின் ஒரு வளர்ச்சியாக அரசை கூறலாம்; ஆனால் இவ்விரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உள்ளது. அரசு உருவான காலத்தில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. ஆனால் அதற்கு முன் இருந்த சமூக அமைப்புகள், வர்க்கப் பிரிவினை இன்னும் தோன்றாத கட்டத்தைச் சேர்ந்தவை. வர்க்கங்கள் இல்லாத, நாகரிகத்திற்கு முந்திய சமூகத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பண்புகள் இயல்பாக நிலவின. ஆனால் வர்க்கச் சமூகத்தில் உருவான அரசின் கீழ் அவை மங்கிப்போயின. சமூக நலன் பின்தள்ளப்பட்டு, செல்வந்தர்களின் தனிநலனே முதன்மையாகியது. இந்த அடிப்படை மாற்றத்தை மார்கன் தெளிவாக உணர்ந்து விளக்கியுள்ளார்.

“மனிதகுலம் காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் கீழ்நிலையில் இருந்தபோது, அரசு ஒற்றைத் தலைமை, ஒற்றை அதிகாரம் கொண்டதாக இருந்தது என்பதைப் பார்த்தோம். தலைவர்களைக் கொண்ட மன்றத்துக்கு ஒட்டுமொத்த அதிகாரமும் இருந்தது. காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் இடைநிலையில், இரட்டைத் தலைமையிலான அதிகாரம் இருந்தது. தலைவர்களைக் கொண்ட மன்றமும், இராணுவத் தளபதியும், அதிகாரத்தில் இருந்தனர். காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்தின் மேல்நிலையில் மூன்று தலைமையிலான அதிகாரம் நிலவியது. தலைவர்களைக் கொண்ட மன்றம், மக்களின் அவை, இராணுவத் தளபதி ஆகியோரிடம் அதிகாரம் இருந்தது. ஆனால், நாகரிகம் தொடங்கிய பின். அரசின் அதிகாரங்களை வேறுபடுத்திப் பார்ப்பது மேலும் அதிகரித்தது. இராணுவ அதிகாரம் முதலில் போலிசிடம் இருந்தது, இப்போது இது பெரும் கட்டுப்பாடுகளுடன், தளபதிகள் மற்றும் போர்ப்படை அணித்தலைவர்களின் அதிகாரத்துக்குட்பட்டதாயிற்று.” (பக்கம் 421-422)

இந்த அரசின் தோற்றத்திற்குக் காரணம் சொத்துடைமை என்பதைவும், அதன் விளைவாக அரசு என்பது செல்வந்த வர்க்கத்தின் நலன்களையே முன்னுரிமையாகக் கொண்ட அமைப்பாக மாறுகிறது என்பதைவும் மார்கன் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“சொத்து என்கிற அம்சம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக வளர்ந்து வந்தது. இதுவே அரசின் தன்மைகளை நிர்ணயிப்பதாக அமைந்தது.

செல்வந்த வகுப்பு மற்றும் முன்னுரிமை வகுப்புகள் ஆகியவற்றை இந்த அரசு முன்னிறுத்தியது. இந்த வாய்ப்பை, இவை, நன்கு பயன்படுத்திக் கொண்டு, அரசைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தின் பெரும்பாலானவற்றை மக்களின் கைகளிலிருந்து எடுத்துச் சொத்துகள் கொண்ட மனிதர்களிடம் ஒப்படைத்தது. ஜென்டிஸ்களிடமிருந்து பெறப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கான இயல்பான போக்கிற்கு, முற்றிலும் எதிர்த்திசையில் செல்வதாக இந்த இயக்கம் அமைந்திருந்தது.” (பக்கம் -527-528)

நாகரிகம் முன்னேறியபோது சொத்துகள் பெருகின. ஆனால் மனிதன் தானே உருவாக்கிய சமூக அமைப்பின் முன் அவன் திகைத்துப் போகிறான் என்று மார்கன் எழுதுகிறார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை உயர்ந்த வடிவில் மீண்டும் உருவெடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவர் தனது நூலை நிறைவு செய்கிறார்.

மூன்றாம் பகுதி, குடும்பம் என்ற சிந்தனையின் வளர்ச்சி

இந்தப் பகுதியில் குடும்பத்தின் படிநிலை வளர்ச்சி குறித்து மார்கன் முன்வைத்த கருத்துகளை, எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் தெளிவாகவும் துல்லியமாகவும் வடிவமைத்து எழுதியுள்ளார். அந்த நூலுக்கான கோட்பாட்டு அடித்தளமாக இருப்பது மார்கனின் இப்பகுதியே ஆகும்.

ஒரு தாரக் குடும்பம் அதாவது ஒரு துணைக் குடும்பம் தோன்றுவதற்கு முன்பாகக் குடும்பத்தின் படிநிலை வளர்ச்சியாக ஐந்தை மார்கன் குறிப்பிடுகிறார். 1.இரத்த உறவுக் குடும்பம் (The Consanguine Family), 2.குழுமணக் குடும்பம் (The Punaluan Family), 3.இணைக் குடும்பம் (The Syndyasmian or Pairing Family), 4.தந்தை வழிக் குடும்பம் (The Patriarchal Family), 5.ஒரு துணைக் குடும்பம் (The Monogamian Family)

மார்கன் குடும்ப வளர்ச்சியைப் படிநிலைகளாக ஆராய்கிறார். இது மத அடிப்படையிலான “நிலையான குடும்பம்” என்ற கருத்தைச் சிதைக்கிறது. ஒரு துணை மணம் என்பது ஒரு நிலையான தெய்வீக அமைப்பு அல்ல, சொத்து மற்றும் வாரிசுரிமை தொடர்புடைய வரலாற்று வடிவம், அதுவும் திடீரென்று தோன்றிடவில்லை, ஒரு படிநிலை வளர்ச்சியின் விளைவாகவே தோன்றியது. குடும்பத்தை புனிதமான ஒன்றாகக் கருதும் கோட்பாட்டாளர்களால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய "பண்டைய சமுதாயம்" நூல் | Louis Henry Morgan's Pandaiya Samuthayam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

1.இரத்த உறவுக் குடும்பம்

இரத்த உறவுக் குடும்பம் என்பது விலங்காண்டி நிலையில் தோன்றிய முதல் குடும்ப வடிவமாகக் கருதப்படுகிறது. இதில் உறவுகள் ரத்த உறவின் வரம்புக்குள் அமைந்திருந்தன. அதன் ஆரம்ப நிலையில் கட்டுப்பாடற்ற பாலுறவுகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது; சகோதரர்–சகோதரி உறவுகள் மட்டுமல்லாமல், பெற்றோர்–பிள்ளை உறவுகளும் இருந்ததாக கருதப்படுகிறது. பின்னர் வளர்ச்சி நிலையிலேயே முதலில் பெற்றோர்–பிள்ளை உறவுகள் தவிர்க்கப்பட்டன; அதற்குப் பிறகு உடன்பிறந்தவர்களுக்கிடையிலான உறவுகளும் தடை செய்யப்பட்டன. இந்தக் கட்டத்தை இன்றைய ஒழுக்கக் கண்ணோட்டத்தில் இருந்து மதிப்பிடக் கூடாது. அது உருவான காலத்தின் சமூகநிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

2.குழுமணக் குடும்பம்

குழுமணக் குடும்பம் “புனாலுவன் குடும்பம்” என்று அழைக்கப்படுகிறது. இதில் உடன்பிறந்த சகோதரிகளாக இருந்தாலும், உடன்பிறவாத சகோதரிகளாக இருந்தாலும், அவர்கள் பலர் சேர்ந்து ஒரு குழுவாக வாழ்ந்து, தங்களின் கணவர்களை இணைக் கணவர்களாகப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த இணைக் கணவர்கள் ஒருவருக்கொருவர் ரத்த உறவு கொண்டவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், அவர்கள் ஒருவரையொருவர் “சகோதரன்” என்று அழைக்காமல், “புனாலுவன்” — அதாவது கூட்டாளி அல்லது பங்காளி — என்று அழைத்துக் கொள்வார்கள். ஒரு குழு ஆண்கள் ஒரு குழு பெண்களுடன் திருமண உறவு கொண்டு வாழும் அமைப்பே குழுமணக் குடும்பம் ஆகும்.

3.இணைக் குடும்பம்

ஒர் இணைக் குடும்பம் என்பது ஒர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண உறவு ஏற்பட்ட நிலையாகும். ஆனால் அவர்கள் முற்றிலும் தனித்த குடும்பமாகப் பிரிந்து வாழவில்லை. இரு தரப்பினரும் விரும்பினால் உறவை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இக்குடும்ப நிலையில் தொடர்ந்தது. இது நீண்ட காலமாகவோ குறுகிய காலமாகவோ நீடிக்கும் ஒரு வகையான இணை வாழ்வாக இருந்தது என்று எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதனை மார்கன் எழுதிய நூலுடன் சேர்த்து வாசித்தால் கருத்து மேலும் தெளிவாகப் புரியும். மேலும், ஒர் ஆணுக்கு பல மனைவியர் இருந்தாலும், அவர்களில் ஒருத்தி அவனுடைய முதன்மை மனைவியாகக் கருதப்பட்டாள். அதேபோல், ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருந்த சூழலிலும், அவர்களில் ஒருவன் முதன்மை கணவனாகக் கருதப்பட்டான் என எங்கெல்ஸ் விளக்குகிறார்.

4.தந்தை வழிக் குடும்பம்

தந்தை வழிக் குடும்பம் என்பது ஒர் இடைநிலைக் கட்டத்தில் தோன்றிய குடும்ப வடிவமாகும். அது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை; பின்னர் அது துணைக் குடும்பமாக மாறி மறைந்தது. ஆகையால், பலதார மணத்தை அடிப்படையாகக் கொண்ட தந்தை வழிக் குடும்பத்தைப் பற்றி விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை என்று மார்கன் குறிப்பிடுகிறார்.

5.ஒரு துணைக் குடும்பம் (The Monogamian Family)

The Monogamian Family என்ற ஆங்கிலச் சொல்லை இதுவரை “ஒருதார மணக் குடும்பம்” என்று மொழிபெயர்த்துள்ளனர்; மார்கன் தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதேபோலவே காணப்படுகிறது. ஆனால் இதனை “துணைக் குடும்பம்” என்று அழைப்பதே பொருத்தமானதாகும். ஒர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து, தனித்த இணையாகப் பிரிந்து வாழும் அமைப்பே துணைக் குடும்பம் எனப்படுகிறது. இந்தத் துணைக் குடும்பம் சமூக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உருவானது. சொத்துடைமை தோன்றிய காலமும் இந்த மணமுறை நிலைபெற்ற காலமும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததால், துணைக் குடும்பம் சொத்துடைமைக்கு ஆதரவான சமூக அமைப்பாகச் செயல்பட்டது. மார்கன் இதைத் தெளிவாகப் புரிந்திருந்தாலும், அவரது எழுத்துகளை வாசிக்கும் போது “சொத்துடைமையினாலேயே துணைக் குடும்பம் உருவானது” என்ற தவறான புரிதலுக்கு இடம் கொடுக்கிறது. ஆனால் எங்கெல்ஸ் இதை எந்தக் குழப்பமும் இன்றிக் தெளிவாக விளக்கியுள்ளார்.

சொத்துகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, அவை தன் குழந்தைகளுக்கே சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கு ஏற்பட்டது. சட்டப்படி வாரிசுரிமை பெற்றவர்களுக்கே சொத்து கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையே துணைக் குடும்ப முறையை வலுப்படுத்தியது என்று மார்கன் குறிப்பிடுகிறார். ஆனால் சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, சொத்துடைமை இல்லாமல் போகும்போது குடும்ப உறவுகளும் துணைக் குடும்ப முறையும் முற்றிலும் அழிந்து விடும் என்று வாதிடுகின்றனர். உண்மையில், துணைக் குடும்பம் என்பது சொத்துடைமை மற்றும் வாரிசுரிமையுடன் தொடர்புடைய ஒரு வரலாற்று வடிவமாகும். எங்கெல்ஸ் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறார். சொத்துடைமை ஒழிக்கப்பட்ட கம்யூனிசச் சமூகத்தில் ஒருதுணை மணம் மறைந்து விடாது; மாறாக, பொருளாதாரக் கட்டாயங்கள் நீங்குவதால் அது உண்மையான சமத்துவ அடிப்படையில் நிலைபெறும் என்று அவர் விளக்குகிறார்.

சொத்துடைமை ஒழிக்கப்பட்ட கம்யூனிசச் சமூகத்தில் காணும் நிலை பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:-

“பொருளாதாரக் காரணங்களிலிருந்து ஒருதார மணம் தோன்றியதால் இக்காரணங்கள் மறைகின்ற பொழுது அதுவும் மறைந்து விடுமா?

அது மறைவதற்குப் பதிலாக நடைமுறையில் முழுமையாக ஈடேறுதல் ஆரம்பமாகும் என்று பதில் கூறினால் அது தவறாகாது. ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களைப் பொது உடைமையாக மாற்றும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன; அத்துடன் ஒரு குறிப்பிட்ட -புள்ளிவிபரப்படி கணக்கிடத்தக்க-எண்ணிக்கையிலுள்ள பெண்கள் பணத்திற்காகத் தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது. விபசாரம் மறைகிறது. ஒருதார மணம் நலிந்து போவதற்குப் பதிலாக முடிவில் -ஆணுக்கும் சேர்த்து – எதார்த்தமாகிறது.” (பக்கம் 125-126)

இத்தகைய மார்க்சியக் கருத்தை மறைத்து, சில அதிதீவிரப் பெண்ணியவாதிகள் எங்கெல்ஸ் அவர்களைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள். எங்கெல்ஸ் எழுதிய நூல் அவர்களுக்கு பயன்படாது; கம்யூனிஸ்டுகளுக்கே எங்கெல்ஸ் துணைபுரிவார்.

நான்காம் பகுதி, சொத்து என்ற சிந்தனையின் வளர்ச்சி

சொத்துடைமை குறித்து இந்தப் பகுதியில் மட்டுமல்லாது, நூல் முழுவதும் மார்கன் • எழுதியுள்ளார். அதில் ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். நாகரிகத் தொடக்கத்தின் மேல்நிலையில்தான் சொத்துடைமை தோன்றுகிறது; சொத்துடைமையின் தோற்றத்தோடு நாகரிக நிலையும் தொடங்குகிறது. இந்தச் சொத்துடைமையின் வரலாற்றுப் பங்கினை மார்கன் தெளிவாகப் புரிந்து விளக்கியுள்ளார்.

“மக்களிடையே சொத்துகள் உருவாகத் தொடங்கியதும், அதிகாரமும், தாக்கமும் சமுதாயத்தால் உணரப்பட்டதும், அடிமைத்தனம் தோன்றியது; இது எல்லாக் கோட்பாடுகளுக்கும் எதிரான ஒரு அமைப்பாக இருந்தது; இரத்தச் சம்பந்தமில்லாத அந்நியன் அல்லது கைப்பற்றப்பட்ட எதிரி அடிமையாக்கப்படவேண்டும் என்ற சுயநலமான எண்ணத்தினாலும், மாயையான சிந்தனையாலும் இது ஏற்பட்டது. சொத்துகள் என்பதோடு, மெல்ல மெல்ல, செல்வந்தர் வகுப்பு என்ற கோட்பாடும் வரத் தொடங்கியது. இதையடுத்து முன்னுரிமையும், சலுகைகளும் பெற்ற வகுப்பினர் உருவாயினர். ஒப்பிட்டுப் பார்க்கையில் குறுகிய காலமாகவே உள்ள நாகரிகக் காலத்தில், சொத்து என்கிற அம்சம், சமுதாயத்தை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்து, மனிதகுலத்துக்கு எதேச்சாதிகாரம், ஏகாதிபத்தியம், மன்னராட்சி, முன்னுரிமைகள் கொண்ட வகுப்புகள், அதன்பின் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என, பல அம்சங்களைத் தந்துள்ளது.

நாகரிகமான நாடுகளின் வாழ்வு முறையை, அடிப்படையில் சொத்துகள் உருவாக்கும் வாழ்வுமுறையாக அது செய்து விட்டது. ஆனால், சொத்துகள் குறித்த தனிநபர் உரிமைகள், அரசுக்கும், சொத்துகளுக்கும் உள்ள தொடர்பு உட்பட — சொத்துகள் தொடர்பான கருத்தியல் சார்ந்த உரிமைகள் பற்றிய மாபெரும் கேள்வி எழுப்பும் அளவிற்கு மனிதகுலத்தின் அறிவு, வளரும் போது — தற்போதைய அமைப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். வரவிருக்கும் மாற்றங்கள் குறித்த தன்மைகள் பற்றி, எண்ணிப்பார்ப்பதே இயலாததாக இருக்கும். ஆனால், தொடக்க நிலையில் இருந்தாலும், ஒரு காலத்தில் உலக அளவில், எங்கும் நிலவிய; பல நாகரிக அரசுகளால் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள ஜனநாயகம், மீண்டும் உலகளாவியதாகவும், மிக உயரியதாகவும் உருவெடுப்பது சாத்தியமானது என்று கருதலாம்.” (பக்கம் -537-538)

சொத்துடைமைக்கு முன்பான சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம் போன்ற பண்புகள் நிலவின. சொத்துடைமையின் தோற்றத்திலிருந்தே அரசு உருவானது; அதன் விளைவாக செல்வந்த வர்க்கத்துக்கு அரசு சலுகை வழங்கும் அமைப்பாக மாறியது என்பதை மார்கன் தெளிவாக உணர்ந்திருந்தார். அரசு உருவான பின்னர், சமூகத்தில் ஜனநாயகமும் சமத்துவமும் மங்கிப் போனது. இந்த நிலைமை எதிர்காலத்தில் மாறலாம் என்ற நம்பிக்கையை மார்கன் முன்வைக்கிறார். ஆனால் மார்க்சியம் இதற்கான தீர்வை வெறும் நம்பிக்கையாக அல்லாது, தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் ஆகிவற்றின் அடிப்படையில் அறிவியல் முறையில் விளக்குகிறது. இருந்தாலும், மார்கனின் நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

“நாகரிகக் காலம் தொடங்கியதையடுத்து, சொத்துகள் அபரிமிதமாக வளர்ந்துவிட்டன. அவற்றின் வடிவங்கள் பலவாகி விட்டன. அதன் பயன்பாடுகளும் விரிவடைந்துள்ளன. சொத்துகளின் சொந்தக்காரர்கள் அவற்றை நிர்வகிப்பதில் மிகுந்த அறிவாளிகளாக இருந்தனர். மக்களைப் பொறுத்தவரை, அது நிர்வகிக்க முடியாத ஒரு சக்தியாக மாறியது. மனிதமூளை, தானே உருவாக்கிய ஒன்றின் முன், திகைத்து நிற்கிறது. இருந்த போதும், ஒரு காலம் வரும். அப்போது மனித அறிவாற்றல் உயர்ந்தெழுந்து, சொத்து என்பதற்கு மேலானதாக, அதைக் கட்டுக்குள் வைக்கும் வல்லமை பெற்றதாக உருவெடுக்கும். மேலும் இது, சொத்துக்கும் அதைப் பாதுகாக்கின்ற அரசுக்கும் உள்ள உறவையும், சொத்துடைமையாளர்களின் கடமைகளையும், உரிமைகளையும் வரையறுக்கும்.

தனி நபர்களின் நலனை விடச் சமுதாய நலன் முக்கியத்துவம் பெறும். தனிமனித நலனும், சமுதாய நலனும் ஒன்றுக்கொன்று நேர்மையான, இணக்கமான உறவுகள் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இருந்தது போல், முன்னேற்றம் என்பதுதான் வருங்காலத்தின் சட்டம் என்று சொன்னால், சொத்துகளைச் சேர்ப்பதற்கான வாழ்க்கை முறை, மனிதகுலத்தின் இறுதிக் கட்டமல்ல. நாகரிகம் தொடங்கிய பிறகு இப்போது வரையிலான காலகட்டம் மனித வாழ்வின் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், ஒரு சிறு பகுதியேயாகும். இன்னும் வரவிருக்கும் பல காலங்களின் ஒரு சிறு பகுதி. சொத்துகள் என்பது மட்டுமே இறுதியாகவும், குறிக்கோளாகவும் உள்ள வாழ்க்கை முறை முடிவுறும், ஏனென்றால், இதுபோன்ற வாழ்க்கை முறையில், சுய அழிவிற்கான தன்மைகள் உள்ளன.

அரசில் ஜனநாயகம், சமுதாயத்தில் சகோதரத்துவம், உரிமைகளிலும், சலுகைகளிலும் சமநிலை, உலகமயமான கல்வி போன்றவற்றை நோக்கி, அதற்கான அனுபவத்தையும், அறிவையும், புத்திக்கூர்மையையும் சமுதாயம் நாடிக் கொண்டே உள்ளது. சமுதாயத்தின் அடுத்த தளம் அதுவாக இருக்கலாம். பண்டைக்கால ஜென்டிஸ்களிடையே நிலவிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை, அதை விட உயரிய அளவில் புதுப்பிப்பதாக இது அமையும்.” (859-860)

மார்கன் அவர்களின் நூலின் சாரத்தை மட்டுமே இங்கு அறிமுகமாகப் பார்த்தோம். ஆனால் தாய்வழிச் சமூகத்தின் தோற்றமும் அதன் மறைவும், அதேபோல் ஆண்வழிச் சமூகத்தின் உருவாக்கமும் போன்ற பல முக்கிய கருத்துகளை அவரது நூலை நேரடியாக வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நூல் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாகக் கூட்டுவாக்கியங்கள் தமிழ் மொழியாக்கத்தில் சிறுசிறு வாக்கியமாக மாற்றப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்த முனைவர் டி.ஆர்.சுதா தேவைப்படுகிற பல அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று நூலைச் செம்மையாக்கியுள்ளார். மொழியாக்கத்தில் வாக்கிய அமைப்பு மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

தமிழ் மொழியாக்கத்தில் “Ethnical periods” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சில இடங்களில் “இனரீதியான காலகட்டங்கள்” என்றும், பல இடங்களில் “இனவாதக் காலகட்டங்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “இனவாதம்” என்பது Racism என்ற தவறான பொருளைத் தருகிறது. இனவாதத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடும் கம்யூனிஸ்டுகள் இத்தகைய சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமல்ல. செம்மையாக்கம் செய்யும் போது இவ்வகை தவறானாதைத் திருத்தி, கருத்துக்கு ஏற்ப துல்லியமான சொல்லாட்சியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

இந்த மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்லாது கல்வி புலம்சார்ந்த பலருக்குப் பயன்படக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம், தொல்லியல், வரலாற்றியல், அரசியல் அறிவியல், மார்க்சியம் போன்ற துறைசார்ந்த மாணவர்களும், ஆய்வாளர்களும் கண்டிப்பாக மார்கனின் நூலைப் படிக்க வேண்டும்.

“பண்டைய சமுதாயம்” என்கிற இந்த நூல் குடும்பம்–அரசு–சொத்து பற்றிய மாயைகளை உடைக்கும் நூல். வரலாற்று பொருள்முதல்வாதத்தின் அடித்தளமாகக் கொண்ட நூல். பல்துறை மாணவர்களுக்கு மார்கனின் நூல் இன்றும் பார்வை நூலாக (Reference book) இருக்கிறது. எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” படித்தறிவதற்கு மார்கனின் இந்த நூல் கம்யூனிஸ்டுகளுக்குப் பார்வை நூலாக இருக்கிறது. அனைத்து வகையிலும் மார்கனின் நூல் படித்தறிய வேண்டிய நூலாகவே இருக்கிறது.

படிப்போம்; பயன்பெறுவோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: பண்டைய சமுதாயம் (2025)
ஆசிரியர்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) | செம்மையாக்கம்: மயிலை பாலு
வெளியீடு:
சிந்தன் புக்ஸ்
விலை: ₹.1000
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.கா.ஈஸ்வரன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *