Love Longing and Little Things (Dr. S. Vincent) பேராசிரியர் ச.வின்சென்ட்

 

 

 

அன்பின் ஏக்கங்கள் நிறைந்த சிறு விசயங்களின் பெருங்கதையாடல்கள்

பேராசிரியர் ச.வின்சென்ட் ஏழு தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Love, Longing and Little Things என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார். இதனை கொல்கத்தா பதிப்பகமான Antonym Collections வெளியிட்டிருக்கிறது.

இன்றைய தமிழ் சிறுகதையின் வரலாற்றை இந்த ஏழுகதைகளிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவரான கு. அழகிரிசாமி, அறிஞர் அண்ணா, நாவலாசிரியர் அகிலன் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நூற்றாண்டின் சிறுகதையாசிரியர்கள் தேன்மொழி, வயலட், பாரதி பாலன் ஆகியோரின் கதைகளும் இத் தொகுப்பில் உள்ளன. தமிழகத்தின் பரந்துபட்ட சிறுகதை வெளியை இந்தக் கதைகளில் காணமுடியும். 

இவற்றில் சில கதைகளைப் பலர் தமிழில் படித்திருப்பார்கள். கு. அழகிரிசாமியின் ”ராஜா வந்திருக்கிறான்” கதையும், அண்ணாவின் செவ்வாழைகதையும் பலருக்கும் தெரிந்தவைதான். 

வெவ்வேறு கால கட்டங்கள், வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு வகையான மனிதர்கள். எனினும் அவற்றில் அன்பும், பாசமும், ஏக்கங்களும் பொதுத் தொனியாக இருக்கின்றன. குறிப்பாக பல கதைகளில் குழந்தைகள் மையம் பெறுகிறார்கள். “Raja has come” என்ற அழகிரிசாமியின் கதையில் சிறு குழந்தைகளின் சின்னசின்ன விளையாட்டுகள், போட்டிகள், சண்டைகள், அகந்தை இவையனைத்தும் மிகவும் மென்மையாகச் சொல்லப்படுகின்றன.  அந்தச் சின்னப் பெண் மங்கம்மாளின் துடுக்குத்தனம், துணிச்சல், அறிவுக்கூர்மை, கர்வம் இந்தச் சிறுகதையில் அத்தனையும் எவ்வளவு நுணுக்கமாய்க் காட்டப்படுகின்றன. அவர்களது அம்மா தாயம்மாவின் தாயுள்ளம் அனாதை ராஜாவிடம் காட்டும் அன்பு அவரது மற்ற குழந்தைகளுக்கும் அதற்கும் அப்பால் சென்று எல்லாக் குழந்தைகளுக்குமான அன்பின் ஒளியைக் காட்டுகின்றது.

வயலட்டின் கதையில் வரும் குழந்தைகள் மிகவும் இயற்கையாகப் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். மத ஒற்றுமை, அரசின் கண்மூடித்தான ஆணைகள் பற்றிய விமர்சனம் இவை அனைத்தும் ஊடே வந்தாலும் குழந்தைகளின் அப்பாவித்தனமான நம்பிக்கைகள், அச்சம், அவர்களின் விளையாட்டுத்தனங்கள் அனைத்துக்கும் மேலாக அவர்களின் பாசம் ஆகியவை மேலோங்கி நிற்கின்றன.   

அண்ணாவின் ”செவ்வாழை” Red Banana வாக மாறியிருக்கிறது. கிராமத்துப் பின்புலம், உழவுத்தொழிலில் மிராசுகளின் ஆதிக்கம், உழவடை செய்யும் உழவர்களின் துன்பங்கள் எல்லாவற்றையும் தாண்டி குழந்தைகளின் வீட்டுத் தோட்டத்தில் காய்க்கும் செவ்வாழைக்காக ஏங்கும் குழந்தைகளின் மனநிலை வாசகர்களின் உள்ளத்தைத் தொடும் இந்தக் கதைவெளியின் முக்கியமான தருணங்கள். 

சென்னை வெள்ளத்தை நேரில் பார்த்து அனுபவித்த மக்களுக்கு அகிலனின் ”வெள்ளம் வந்தது” கதையில் வரும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு மீள் அனுபவம் கொண்டது போல இருக்கும். கூவம் ஆற்று வெள்ளத்தில், வீடிழந்த குப்புசாமி குடும்பத்துக்கு இன்னுமொரு இடி. ஆனால் அவர்கள் மகன் துலுக்காணத்தின் பார்வையில் வெள்ளம் ஒரு சிலநாட்களாவது நல்ல உணவும் தங்கும் இடமும் கிடைக்க வாய்ப்பளித்திருக்கிறது. அந்தச் சின்ன உள்ளத்திற்கு வெள்ளத்தின் அவலம் புரியவில்லை. ஆனாலும் இன்னுமொரு வெள்ளத்தை எதிர்பார்த்து ஏங்குகிறது.

தேன்மொழியின் கதை வித்தியாசமானது. மனநலம் பாதித்த ஒரு பெண்ணின் கணவரும் குழந்தைகளும் படும் மனத் துன்பங்களையும் போராட்டங்களையும் ஆசிரியர் மிக நுட்பமாகப் பதிவிடுகிறார். கதை தொடர்வண்டிப் பெட்டியில் நிகழ்கிறது. கதை சொல்லி அவர்களது நிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் வண்டியிலிருந்து இறங்கிப் போய்விடுகிறார். அந்தப் பெண்ணின் கணவரும் குழந்தைகளும் அன்பையும் பாசத்தையும் ஓரங்கட்டி வைத்து விட்டு அவரை எங்கேயோ விட்டு விடப் போகிறார்கள். மனித உறவுகளின் அவலம் உச்சத்தை எட்டுகிறது. 

இந்தக் கதைகள் எல்லாம் குழந்தைகளின் அன்பு, ஏக்கங்கள், அவர்களது அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிப் பேசுகின்றன. பாரதி பாலனின் இரு கதைகளும் கிராமத்துப் பின்னணியில், முதியவர்களின் நட்பைக் காட்டுகின்றன. நவீன உலகின் புதிய மாற்றங்கள் கிராமத்து மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. நண்பனின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப்போகும் சீலையம்பட்டி மணியக்காரரும், தனது நண்பருக்குச் செய்த துரோகத்துக்காக வருந்தும் விருமாண்டித் தேவரும், துரோகத்தை மன்னிக்கும் கதை சொல்லியின் தந்தையும் என்றும் நிலைத்திருக்கும் மனிதத்தின் ரூப வெளிப்பாடுகள்.

கதைகளை பேரா. வின்சென்ட் எளிமையான ஆங்கிலத்தில் மூலக்கதைகளின் சுவை குன்றாமல் மொழி பெயர்த்திருக்கிறார். பாராட்டுகள். பேராசிரியர் பிரபாகரின் முகவுரை சிறப்பு, கொல்கத்தாவின் Antonym Collections நூலை அருமையாகக் கொண்டுவந்து தமிழ்ச் சிறுகதைகளை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

Love Longing and Little Things
Antonym Collections
Kolkata
பக்கம் 99
விலை: ரூ 235.

ஜனமித்திரன்
பேரா. முனைவர் இளங்கோவன்
ஆங்கிலத்துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை-09.

                                                                                                                                                                                                                                                                                                        

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

One thought on “ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “Love Longing and Little Things” – முனைவர் இளங்கோவன்”
  1. நூல் அறிமுகம் வெளியிட்ட புக் டேவுக்கும் எழுதிய முனைவர் இளங்கோவனுக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *