லப்பர் பந்து - திரைப்பட விமர்சனம் | Lubber Pandhu Tamil Movie 2024 - review - Cricket - Attakathi Dinesh - Harish Kalyan - Tamizharasan Pachamuthu - https://bookday.in/

லப்பர் பந்து – திரைப்பட விமர்சனம்

லப்பர் பந்து – திரைப்பட விமர்சனம்

 

பலரின் விமர்சனங்களைப் படித்த பின்னரே இப்படம் பார்க்கப் போனேன். விமர்சனங்களைப் படிக்காமல் சென்றிருந்தால் இன்னும் வெகுவாக ரசித்திருக்கலாமோ என்ற எண்ணமே மேலிட்டது.

இயக்குநருக்கு மிகப்பெரிய பாராட்டு. மிகச் சிறப்பான கதைக்களம். திரைக்கதை, வசனங்கள் அனைத்தும் மிக நேர்த்தி. பாத்திர வார்ப்புகள் மிக துல்லியம்.

படத்தில் நடித்த அனைவருமே தங்களது பாத்திரத்தை உணர்ந்து கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளனர். அனைவருக்கும் சபாஷ்.

அட்டகத்தி தினேஷ்… இனி கெத்து தினேஷ். இளவயதில் கதாநாயகிக்கு தந்தையாக நடிக்கத் துணிந்தமைக்கு முதல் பாராட்டுக்கள். அவரின் முகத்தோற்றமும், நடை உடை பாவனைகளும் வெகு நேர்த்தி.

மனைவியிடம் பகிரும் மெளன காதல் சம்பாஷனைகள் ஒருபுறமென்றால் பிரிவாற்றாமையில் படும் துயரப் பக்கம் மறுபுறமென மிரட்டியுள்ளார் மனிதர்.

இயக்குநரின் காதல் மெனக்கெடல் காட்சிகள் மிகவும் ரம்மியமானவை. வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு வயது முதிர்ந்த அம்மாவின் முன்னிலையில் நிகழும் அன்பு பரிமாற்றங்கள் ஒவ்வொன்றும் கவித்துவம்.

புடவை முந்தானையில் கைகளைத் துடைத்துக் கொண்டு தோள்பட்டையில் வாயைத் துடைப்பதெல்லாம் அன்பின் உச்சமின்றி வேறேது.

அனைத்து கதாபாத்திரங்களின் நியாயங்களைக் காட்டிக் கொண்டே உரசும் ஈகோவை தவிடுபொடியாக்கும் வண்ணம் முடிச்சுகளை அவிழ்த்த விதத்தில் இயக்குநர் சபாஷ் பெறுகிறார்.

ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் கெத்து தானே…

9 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

அப்பாவின் மீதுள்ள பாசமே நேசத்தின் மூலம் என்ற புரிதலை உணர வைத்த விதம் மிக நுட்பமாக வெளிப்பட்டுள்ளது.

கணவனின் விளையாட்டு மோகத்தை வெறுக்கும் மனைவியின் மனநிலையை முதல் காட்சியிலேயே உச்சமாகக் காட்டிய விதம் மிக சிறப்பு.

வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மையானவை.. அது நகைச்சுவையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, மிக யதார்த்தமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு பின்னப்பட்ட வசன மாலைகளாக நறுமணம் பரப்பின என்பதே மெய்.

“ஊருக்கு நல்லவங்களா இருப்பவர்கள் வீட்டுக்கு நல்லவங்களாக இருக்கமாட்டாங்க”

“அவன் தம்பி மாதிரி தானே… தம்பியில்லையே”

போன்ற வசனங்கள் பளிச்..

பெண்களை உயர்வாகவும் கம்பீரமாகவும் காட்டிய விதம் உன்னதம். மாமியார் – மருமகள் உறவு, அம்மா – மகள் உறவு, அம்மா – மகன் உறவு – சம்பந்திகள் உறவு என ஒவ்வொன்றும் மதிநுட்பமாக செதுக்கிய விதம் அருமை.

மருமகள் வீட்டிற்கு மாமியார் வந்து பேசும் வசனங்கள் மற்றும் காட்சியமைப்பெல்லாம் புதுமை. ஈகோவைத் தாண்டி குடும்ப உறவைப் பேணும் பெண்களால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமென்பதை உணர்ந்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு செய்த மரியாதை மிகச் சிறப்பு. அவரது படங்கள் மற்றும் பாடல்களை சரியான விதத்தில் கையாண்ட நுட்பம் மிக அருமை.

லப்பர் பந்து பேசும் கதை ஒரு விளையாட்டு வீரனின் கதை மட்டுமல்ல; அதனால் அந்த குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களைப் பற்றியது மட்டுமே அல்ல; விளையாட்டால் காதல் அடையும் துயரங்களைப் பற்றியது மட்டுமே அல்ல.. இவையாகவும் இல்லாமலும் இப்படம் இல்லை…

லப்பர் பந்து திரை விமர்சனம்: தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு எப்படி உள்ளது? - BBC News தமிழ்

இவை யாவற்றையும் விட இப்படம் பேசும் அரசியல் மிகத் தெளிவானது. சாதிய வன்மத்தை மிகத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டிய விதத்தில் இப்படம் உயர்ந்து நிற்கிறது.

வழக்கமான இறுதிக்காட்சியாக இல்லாமல் நுட்பமாக சமூக மாற்றத்தை பிரதிபெலித்த விதம் மிக அருமை.

இரு தலைமுறை விளையாட்டு வீரர்களின் ஈகோவை பிரதானமாகக் காட்டி அதனால் ஏற்படும் காதல் பிரிவின் வழியாகப் பயணித்து வழக்கமான திரைப்படமாக முடிக்காமல் இத்திரைப்படம் பேசும் சாதி அரசியலால் இது தனித்துவமிக்க திரைப்படமாக ஜொலிக்கிறது.

இந்த திரைப்படம் பார்க்கும்பொழுது ஒவ்வொருவரும் அவர்களது பால்ய கால கிரிக்கெட் அனுபவங்களுக்குச் சென்று வருவது இயல்பாகவே நடந்திருக்கும்.

எனக்கு எங்களூரில் நடந்த கபடிப் போட்டிகளே கண்முன் வந்து சென்றன. ஒரே ஊரிலுள்ள அணி வீரர்களிடையே இல்லாமல் வேறொரு ஊரிலிருந்து வந்த அணியையே சாதிய மனப்பான்மையோடு அணுகும் போக்கு என் கண்முன் வந்து நிழலாடிச் சென்றது.

சமூக மாற்றத்திற்கு இது போன்ற திரைப்படங்கள் நிச்சயமாக உதவுமென்று நம்புவோம்.

வெறுமனே ஆவணப் படமாக இல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் படமாக்கிய விதத்தில் இயக்குநர் சிறந்து நிற்கிறார்.

காதல், நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து தான் நினைத்ததை சாதுரியமாக வழங்கிய விதத்தில் சுவாரஸ்யமான படமாக அமைந்துவிட்டது இந்த லப்பர் பந்து…

அலைபேசியில், ‘செல்வி ‘ மற்றும் “நான் தான்” என்று பதிவிடும் வண்ணம் காட்டி இன்றைய இளசுகளின் மனசையும் கொள்ளையடித்துவிட்டாரென்றே கருதுகிறேன்.

ஜெராக்ஸ் கடையில் நடக்கும் உரையாடல் யதார்த்தமான முறையில் அமைந்த தேர்ந்த காட்சியமைப்பு. சரவணன், காளி வெங்கட் மற்றும் தினேஷின் நண்பராக வருபவரின் நடிப்பு மிகச் சிறப்பு.

காளி வெங்கட் அவர்களின் பாத்திரப் படைப்பு மிக உச்சம். எதிர்பாராத திருப்பமாக “அடேங்கப்பா 11 பேர் அணி”யில் அவரின் மகளைக் களமிறக்குவதெல்லாம் திரைக்கதையின் மதிநுட்பமின்றி வேரேது. அதற்கு முன்பு சரவணனை கதாநாயகன் சாடுவது எல்லாம் மிகக் கச்சிதம்.

Lubber Pandhu Movie Review | லப்பர் பந்து விமர்சனம்

சிறு சிறு நிகழ்வுகள் வழியாக பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே காட்சிகளை நகர்த்திய விதத்தில் திரைப்படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு முடிச்சாக பின்னி அவற்றை சரியான விதத்தில் பிரித்து மிகச் சிறந்த திரைப்படமாக்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

“பொட்டு வச்ச தங்கக்குடம்.. நீ ஊருக்கு மணிமகுடம்”…

திரைத்துறைக்கு ஒரு மணிமகுடமாக ஜொலிப்பீர்கள் என நம்புகிறேன்.

அவசியம் காண வேண்டிய திரைப்படம். தவறவிடாதீர்கள்.

லப்பர் பந்து – ரெண்டு தென்னை மர உயரத்தில் சிக்ஸாக பறக்கிறது.

எழுதியவர் :

பா. அசோக்குமார்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *