தீமையை நன்மையாக்குவது
என்னுடைய மாணவர் ஒருவர் முதுகலைப்படிப்பின் பகுதியாக திரைக்கதை எழுதி வந்தார். அவருக்கு நான் நெறியாளராக இருந்தேன். அவர் படித்து முடித்துவிட்டு செயலியொன்றின் திரைக்கதைப் பிரிவில் வேலைசெய்கிறார். தயாரிப்பாளர் ஒருவரிடம் கதைசொல்ல தான் போவதாகச் சொல்லி அதற்குமுன் என்னிடம் மீண்டும் கதையைப் பகிர்ந்தார். நான் அப்போதும் முன்பு சொன்ன அதே கருத்தையே சொன்னேன். வித்தியாசமான நல்ல கதை. ஒரே ஒரு பிழை மட்டுமே இருந்தது. பிரதான பாத்திரத்தின் (எதிர்நாயகன்) மீது நமக்கு இரக்கம் வரும்படியாக அவர் கதையை எழுதவில்லை. எதிர்-நாயகன் மூடுண்டு போயிருந்தான். இதை சரிசெய்வதெப்படி என்று அவர் கேட்டபோது என் மனத்தில் தோன்றிய படம் 1974இல் சலீம்-ஜாவித் ஜோடி இணைந்து எழுதிய “தீவார்” (சுவர்). ரௌடியும் தாதாவும், கடத்தல்காரனுமான நாயகன் மீது பிரியம் தோன்றும்படியாக கதையை எழுதியிருந்தார்கள். அதற்கு அவர் ஒரே ஒரு விசயத்தைத்தான் செய்தார்கள் – நாயகன் செய்யும் குற்றங்களுக்கெல்லாம் குடும்பத்தைப் பொறுப்பாக்குவது. அவன் தன் தாயையும் தம்பியையும் காப்பாற்றும்பொருட்டு குற்றங்களைச் செய்கிறான், அவன் கடைசிவரைத் தன் தாயிடம் மிகுந்த பக்தியுடன் இருக்கிறான் என்று சொல்லி, தன் அப்பாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் செய்யப் போராடுகிறான் எனக் காட்டியதும் இந்திய ரசிகர்களின் மனம் கலங்கிவிடுகிறது. இன்றும் இப்படத்தைப் பார்க்கையில் அமிதாப் பச்சனின் பாத்திரம் நெருப்பாக இருக்கிறது.
ஒரு குற்றத்தை நியாயப்படுத்த மற்றவர்கள் செய்யும் அதைவிடப் பெரிய குற்றங்களைக் காட்டினால் வேலைக்காகாது. தனக்காக ஒருவர் அதைச் செய்யவில்லை என்று அவரது முகமையை இல்லாமல் பண்ணிவிட வேண்டும். அனேகமாக எல்லா தீமைகளையும் இப்படியாக நன்மையாக மாற்றிட முடியும். இந்த உத்தியை பல படங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் (“அபூர்வ சகோதரர்களில்” இதைச் செய்ய முடிந்த கமலால் “ஹேராம்” உள்ளிட்ட பல படங்களில் முடியவில்லை. அவை தோல்வியுற்றன). அண்மையில் நான் பார்த்த சில படங்களில் மட்டுமே இதைச் செய்யமுடியாமல் சொதப்பியிருந்தார்கள்.
இன்னொரு உத்தி எதிர்நாயகன் திருந்தி மன்னிப்புக் கேட்டு பாவத்தைக் கழுவ பல செயல்களில் ஈடுபடுவதாகக் காட்டுவது (“தரமணி”). மற்றொன்று ராபின் ஹுட் பாணி – நாயகன் தொடர்ந்து அநியாயமாக நடத்தப்பட்டு அதனால் கடும் துன்பங்களை அவமானங்களைச் சந்தித்து தானே கெட்டவனாக மாறி அதைக்கொண்டு அடுத்தவர்களுக்கு நன்மைகளைச் செய்ய முயல்வது. கடைசியில் அவன் தண்டிக்கப்படுவதாகவும், அதையும் மீறி அவன் வெல்வதாகவும் காட்டுவது.
“லக்கி பாஸ்கர்” மேற்சொன்ன குடும்பத்துக்காக குற்றம் செய்வது, தானே பாதிக்கப்பட்டவராக இருப்பது இரண்டு உத்திகளையும் பயன்படுத்தி பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது – மிக சாமர்த்தியமாக எழுதப்பட்ட மோசமான படம் அது. படத்தில் முதல் 40 நிமிடங்கள் முழுக்க பாஸ்கர் அனுபவிக்கும் அவமானங்கள், கொடுமைகள், அதையும் மீறி அவன் தொடர்ந்து கடுமையாக உழைப்பதும், நல்லவனாக இருப்பதும். ஆனால் ஒரு கட்டத்தில் அவனுடைய மேலதிகாரியே நியாயமாக இல்லை என்று வரும்போது அவன் மனம் மாறுவதாகக் காட்டுகிறார்கள். கூடவே அவன் அவனைப் போல பாதிக்கப்பட்ட அப்பாவித் தொழிலதிபர் (கடத்தல்காரர்) ஒருவருக்கு உதவவே ஊழல் செய்கிறான். மெல்லமெல்ல சீரழிவின் ஊடாக தன் நன்மையை இழந்து அதைப் பின்னர் உணர்ந்து தன்னைச் சுற்றியுள்ளோருக்கு நன்மைகள் செய்கிறான், மன்னிப்புக் கேட்கிறான். ஆனால் இப்படியே போனால் தன்னைவிட மோசமான ஊழல்வாதிகள் தன்னை ஏய்த்துவிடுவார்கள் என்று அவர்களுக்கும் ஆப்படித்துத் தப்பிக்கிறான். இந்த எதிர்பாராத கடைசி 15 நிமிடத் திருப்பம் சற்றே நாம் எதிர்பார்க்கக் கூடியதே என்றாலும் நன்றாக வேலைசெய்கிறது. தொடர்ந்து அதிரடியான சம்பவங்கள் வந்துகொண்டே இருப்பதால் “அட நீ அமைப்பை ஏமாற்றவில்லை, நீ செய்வது மக்கள் பணத்தைத் திருடுவது” என நான் நினைக்கவே திரைக்கதையாளர் நேரம் தருவதில்லை. இப்படி மோசடியை நியாயப்படுத்த திரைக்கதையிலே ஏகப்பட்ட “மோசடிகளைச்” செய்து நம்மை “ஏமாற்றுகிறார்கள்”.
பொதுவாக, கடுமையான பொருளாதார நெருக்கடிகளும், ஏற்றத்தாழ்வும் உள்ள, எல்லாருமே தனித்தனியாக உடைந்துபோய், மற்றமை மீது சதா வெறுப்பும் சந்தேகமுமாக உலவும், தீவிரமாக நகரமயமாக்கட்ட சமூகத்தில் நாம் எவ்வளவு உழைத்தாலும் ஒன்றும் எஞ்சுவதில்லை, நம்மை யாரோ சுரண்டுகிறார்கள் எனும் எண்ணம் வலுவாக இருக்கும். அதை இப்படம் முதல் 40 நிமிடங்களில் அபாரமாக பயன்படுத்துகிறது. பாஸ்கர் உழைத்துக்கொண்டே இருக்கிறான், ஆனால் அவன் பர்ஸில் எப்போதுமே பணமிருப்பதில்லை. உறவினர் வீட்டுப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தன் குழந்தையின் பொம்மையை எடுத்து பரிசாகக் கொடுத்துவிட்டு அங்கும் அவமானத்தைச் சந்தித்து சாப்பிடாமல் வந்து வெளியே சாப்பிடக் காசில்லாமல் … இவர் வங்கி ஊழியர் தானே என நாம் கேட்க நாவின் நுனிவரை வந்துவிடுகிறது, ஆனால் இப்படித்தானே நாமும் இருக்கிறோம் எனத் தோன்றியதும் அக்கேள்வி அடங்கிப்போகிறது. அந்த இடத்தில்தான் படம் வெல்கிறது. ஆனாலும் இது மோசமான, அபத்தமான படம்தான்.
1969 இல் கருத்தரங்கொன்றில் பேசிய உளவியலாளர் லக்கான் அவரது காலத்தில் பாரிஸில் நடந்த இளைஞர்களின் போராட்டங்களையும், கலகங்களையும் குறிப்பிட்டு எதிர்-நடவடிக்கைகளின் மூலம் நாம் அதிகாரத்தை எதிர்த்தால் நாம் செய்வதைவிட மோசமான சீரழிவுடன் அதிகாரம் நம்மைத் திரும்ப அடிக்கும் என்றார். இதை அண்மையில் ஒரு உரையாடலில் குறிப்பிட்ட ஸிஸக் டிரம்பின் நடத்தையை உதாரணம் காட்டி பாசிசத்தை வெற்றிபெற வைப்பது “நெறியற்ற, பண்பற்ற எதிர்ப்புதான்” என்றார். வங்கிகளை மோசடி செய்வதை கார்பரேட்டுகள் ஒருபக்கம் தொழில்தர்மமாகவே செய்கிறார்கள். அதையே தனிமனிதர்களும் அதிகாரவர்க்கத்துடன் இணைந்து இன்னொரு பக்கம் “மோசடியாகச்” செய்கிறார்கள். முன்னதை நியாயப்படுத்த முடியாத மக்களால் பின்னதை ஏற்றுக்கொள்ள முடிகிறது – அப்படி அவர்கள் ஏற்கும்போது மோடியும், டிரம்பும், அவர்களுடைய தலைக்குப் பின்னால் ஹிட்லரும் முசோலினியும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் மக்கள் இந்தளவுக்கு இறங்கியபின்னர் எல்லாமும் நியாயமாகிவிடும், தாம் தப்பித்துவிடலாம் என.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.