அப்பா என்னுடைய புத்தக பை எங்கப்பா
எங்களுக்கு பரிட்சை வைக்க போறாங்களாம் என்று அப்பாவிடம் கேட்டேன்.
ஆமல்ல நீ பத்தாம் வகுப்புல
நான் மறந்தே போயிட்டேன் என்றார்.
உயிர்பிழைச்சா
போதும்னு
கையிலி காசு இல்லாம
கடன் வாங்க துப்பு இல்லாம
கால்நடையா நடந்துவந்தோமே
எத்தனை இடத்துல நீ மயங்கி விழுந்திருப்பே
கால்வலிக்குதுன்னு ஒன் தம்பி அழுதது
அதுக்குள்ளேயா மறந்துட்டே
ஒங்கள உசுரோட கொண்டுவந்து சேர்க்கிறதுக்குல எங்களுக்கு பாதி உசுரு போயிடுச்சு இதுல புத்தக பைய எங்கடி சுமப்பது என்றாள் அம்மா.
ஒனக்குத்தான் தெரியும்லம்மா நான் நல்லா படிச்சு
நல்ல மார்க் வாங்குவேன்னு என்றேன்.
என்ன செய்யச் சொல்ற
பரிச்ச வைக்கிறதா முடிவு பன்னிட்டாங்க
நம்ம கையில என்ன இருக்கு என்றார் அப்பா.
எப்படி நான் படிப்பேன்
எப்படி பரிட்சை எழுதுவேன்.
ஏற்கனவே நான் படிச்சதெல்லாம்
இந்த பொல்லாத காலத்துல
பொழப்பு இல்லாம
போறவுக வாறவுக
ஏதாவது கொடுப்பாங்களான்னு
கொடும் பசியோடு ரோட்டையே பார்த்துக்கிட்டு இருக்கிற அப்பாவையும்
கிழிஞ்ச புடவையோடு
வீடுவீடா சென்று ஏதாவது பழைய துணி இருந்தா கொடுங்க எம்புள்ளைகளுக்கு என்று எல்லோர் வீட்டு வாசலில் அம்மாநிற்பதையும் பார்த்தபிறகு எனக்கு
எதுவுமே நான் படித்தது ஞபாகம் வரவில்லை
எப்படி ஞபாக படித்தினாலும்
உடல் மெலிந்த அப்பாவும்.
உள்ளம் நொந்துபோன அம்மாவும்
பசியோட இருக்கிற தம்பியுந்தான் ஞபாகத்திற்கு வருகிறார்கள்..
எனக்கு மட்டுமல்ல
என்னைப்போன்ற இடம்பெயர்ந்து சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் நினைவுகளில் மாறாத வடுவாக அவர்கள் பெற்ற துயரம் தான் நினைவுக்கு வரும்.
தோழமையுடன்
கு.கா.