எண்ணப்பாம்புகளின் நஞ்சு – பாவண்ணன்

M. Gopalakrishnan's Theertha Yaathirai Book Review by Writer Pavannan. Book Day is Branch of Bharathi Puthakalayam



புறநகரில் ஒரு வீடு கட்டிக் குடியேறுகிறது ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு வைத்தியர். அக்குடியிருப்பில் அவருக்கு முன்னால் வீடு கட்டிக்கொண்டு குடிபோனவர்கள் பலர். அவரைத் தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டு குடிவந்தவர்களும் உண்டு. இரவு பகல் வித்தியாசமின்றி அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்துவிடும் பாம்புகளைக் கண்டு எல்லோருமே அஞ்சுகிறார்கள். பாம்புச் செய்தி பரவத் தொடங்கியதுமே வைத்தியர் எங்கிருந்தோ சிறியாநங்கைச் செடிகளைக் கொண்டுவந்து வீட்டைச் சுற்றி சீரான இடைவெளிகளில் நட்டு வளர்க்கத் தொடங்குகிறார். ஆழமாக வேர் பிடித்துவிட்ட செடிகள் தழைத்து வளர்ந்து நிற்கின்றன. காற்றில் பரவியிருக்கும் அச்செடிகளின் மணம் பாம்புகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றது. பாம்புத்தொல்லையால் மற்ற குடும்பங்கள் தவித்துத் தடுமாறும் போது, வைத்தியரின் குடும்பம் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றது.

கால ஓட்டத்தில் வைத்தியர் மறைந்துபோகின்றார். அவர் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆட்களாகி மணம் முடித்து வாழத் தொடங்குகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள். வெற்றிதோல்விக்கள். பெருமிதங்கள். அவமானங்கள். பல வகையான எண்ணங்கள் பாம்புகளாக வந்து அவர்கள் நெஞ்சில் நுழைந்து பாடாய்ப்படுத்துகின்றன. உண்மையான பாம்புகளின் வருகையைத் தடுக்கத் தெரிந்த அந்தக் குடும்பம் எண்ணப்பாம்புகளின் வருகையையோ தாக்குதலையோ தடுக்கத் தெரியாமல் தினமும் தடுமாறுகிறது.

அக்குடும்பத்தின் மூத்த மகனான முரளியால் பாம்பாகவும் இருக்கமுடியவில்லை. மனிதனாகவும் இருக்கமுடியவில்லை. சரியான வடிவில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளத் தெரியாத அவன் ஒருநாள் கருக்கலில் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றான். அந்த வெளியேற்றத்தின்போது தான் இழந்ததையும் பெற்றதையும் பழைய நினைவுகளை அசைபோடுவதன் வழியாகத் தொகுத்துக்கொண்டு தன்னைத்தானே வகுத்துக்கொள்ள அவன் முயற்சி செய்கிறான். வெளியில் இலக்கறியாத திசையில் விரிந்துசெல்லும் ஒரு பயணம். மனத்துக்குள் யாரும் அறிந்துவிடாதபடி உள்முகமாக ஒரு பயணம். இந்த இரு தளங்களே, எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய நாவலான தீர்த்தயாத்திரையின் களம்.

முரளியின் பயணம் தீர்த்தஸ்தலங்களைத் தேடிச் செல்லும் தீர்த்தயாத்திரை அல்ல. கண்ணாடியில் முகம் பார்ப்பதுபோல, முரளி தன் நெஞ்சிலிருக்கும் நஞ்சை தானே பார்த்துக்கொள்ள துணைசெய்யும் உள்முக யாத்திரை. தனக்குள் நிறைந்திருக்கும் நச்சுத்தன்மையை அவனே மதிப்பிடுகின்றான். எத்தருணத்தில் தனக்குள் நஞ்சு பொங்கி நிறைந்ததென்றும் அதை எப்படியாவது கொஞ்சம்கொஞ்சமாக உதறிவிட்டு தன்னை நஞ்சில்லாதவனாக வைத்துக்கொள்ள முடியுமா என்றும் முயற்சி செய்து பார்க்கிறான். இது ஒரு பக்கம் நிகழ்ந்தபடி இருக்க, வழிப்பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களின் வழியாக அவனுக்குள் பரவும் வெளிச்சமும் அவனுக்கு தன் இருளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றது. இலக்கிலாமல் புறப்பட்ட அவனுடைய பயணத்திற்கு இந்த இலக்கு தானாகவே அமைந்துவிடுகின்றது.

May be an image of text that says 'தீர்த்த யாத்திரை எம்.கோபாலகிருஷ்ணன்'

முரளியின் நெஞ்சிலிருக்கும் நஞ்சு எத்தகையது என்பதை நாவலின் போக்கில் அவன் நினைவலைகள் வழியாகவே புரிந்துகொள்ளும் விதமாக நாவலை வடிவமைத்துள்ளார் எம்.கோபாலகிருஷ்ணன். முரளிக்கு ஒரு அக்கா இருக்கிறாள். அக்காவுக்கு ஒரு தோழி உண்டு. அவள் பெயர் சங்கரி. இளம்பருவத்திலேயே விதவையாகி வீட்டில் அடைந்திருப்பவள் அவள். பாடங்கள் குறித்து சந்தேகங்களைக் கேட்க அவளுடைய வீட்டுக்குச் செல்லும் முரளிக்கும் சங்கரிக்கும் எப்படியோ நெருக்கம் உருவாகிவிடுகிறது. இருவராலுமே அந்த உறவைத் தவிர்க்க முடியவில்லை. வயதில் இளையவன் என்றபோதும் அவனைத் திருமணம் செய்துகொள்ளவே சங்கரி விரும்புகிறாள்.

ஒருநாள் கொடுமுடி கோவில் வாசலில் தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு வந்து சந்திக்கும்படியும் திருமணத்துக்குத் தயாராக வரும்படியும் அவனுக்குத் தெரியப்படுத்துகிறாள். ஆனால் அவளைத் தவிர்த்துவிட்டு அவன் அலுவலகத்துக்குச் சென்றுவிடுகிறான். அந்தத் திருமணத்தை அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. குடும்பம் சார்ந்த அச்சம் அவனை முடிவெடுக்க முடியாமல் தடுக்கிறது. விழைவுக்கும் அச்சத்துக்கும் இடையில் அவன் ஊசலாடுகிறான். முரளிக்காக கோவில் வாசலிலேயே மாலை வரைக்கும் காத்திருந்துவிட்டு திரும்பிய சங்கரி வேதனையில் அன்றிரவே தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த இழப்பு விழுங்கமுடியாத நஞ்சாக அவன் நெஞ்சிலேயே தங்கிவிடுகிறது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மனோகரி என்னும் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவளோடு அவனால் இயல்பாகவே நடந்துகொள்ள முடியவில்லை. இயல்பாக நடந்துகொள்ள அவன் தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொள்ளும் தருணத்தில் அவள் புற்றுநோயில் மறைந்துபோகிறாள். அந்த இழப்பும் இன்னொரு துளி நஞ்சாக அவன் நெஞ்சில் உறைந்துவிடுகிறது.

அலுவலக விசாரணை சார்ந்து தனக்கு உதவி செய்து, இழந்த வேலையை மீண்டும் பெற துணைபுரிய வேண்டுமென்ற கோரிக்கையோடு அவனை வீட்டுக்கு வந்து சந்திக்கிறான் ஒருவன். அப்போது ஒரு மரியாதையின் நிமித்தமாக அவன் தன் மனைவியை அழைத்துவந்திருக்கிறான். அவள் நல்ல அழகி. அந்த அழகைக் கண்டு முரளி தடுமாறுகிறான். இப்படி ஒரு குற்றவாளிக்கு இப்படி ஒரு பேரழகியா என அவன் மனம் உள்ளூர குமைகிறது. அவனுக்கு உதவிசெய்ய வேண்டும் என அவன் மேல்மனம் விரும்பினாலும், அவனுடைய ஆழ்மனம் அவனுக்கு எதிராகவே செயலாற்றவைக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு அந்தப் பெண்ணே அவனைத் தேடி வந்து சபிக்கிறாள். தன் நெஞ்சிலிருக்கும் நஞ்சின் கடுமையை அவனே அப்போதுதான் உணர்கிறான்.

திருமண வாழ்வே வேண்டாம் என ஒதுங்கி வாழத் தொடங்குகிறான் அவன். ஒவ்வொரு நாளும் எண்ணங்களுடன் போராடிப் போராடி களைத்துப் போகிறான். ஒவ்வொரு கணமும் பாம்புகள் அவனைச் சூழ்ந்து நின்று படமெடுத்து ஆடுகின்றன. அவன் தம்பிக்கு திருமணம் நடக்கிறது. பிள்ளைகள் பிறந்து பெரியவர்களாக வளர்கிறார்கள். ஆனால் தம்பி மனைவியின் நடமாட்டமும் அருகாமையும் அவனை ஒவ்வொரு கணமும் வதைக்கிறது. அவனுடைய அறிவையும் புலனடக்கத்தையும் கடந்து உள்மனத்தில் தழல்விட்டு எரிகிறது ஆசைத்தீ. எக்கணத்திலும் அத்தீ தன்னைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடுமோ என அஞ்சியபடியே இருக்கிறான். பதுங்கிக் கிடக்கும் தீ என்றோ ஒருநாள் அவனை அனல்கொண்டவனாக மாற்றி அவளை நோக்கி முன்னோக்கித் தள்ளும் கணத்தில் தற்செயலாகக் கேட்ட பக்கத்துவீட்டு குழந்தையின் அழுகுரல் அவனை தரைக்கு இழுத்துவருகிறது.

எல்லாவற்றுக்கும் நடுவில் குடும்பத்தில் ஏராளமான குழப்பங்கள். வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொருவரும் “உனக்கென்ன பொண்டாட்டியா பிள்ளையா? இந்த சொத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கும் கேள்விகளையும் பணத்துக்காக கண்டபடி பேசுவதையும் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு சொல்லும் நச்சுச்சாறாக அவன் மீது வழிகிறது.

எந்த நஞ்சையும் தாங்கிக்கொள்ளும் மனமில்லாமல்தான் முரளி குடும்பத்தைவிட்டு வெளியேறுகிறான். அந்தப் பயணத்தில் உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவர்களுடய செயல்பாடுகளும் உரையாடல்களும் அவன் நெஞ்சில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. ஒவ்வொரு பகுதியும் எம்.கோபாலகிருஷ்ணனின் கதைகூறும் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

கூறுகட்டி கொய்யாப்பழம் விற்கும் பாட்டி வெயிலில் வாடி வதங்கி வந்து நிற்கும் முரளியிடம் “ஒனக்கு வேணும்ங்கறத எடுத்துக்க சாமி, காசெல்லாம் வேணாம். கூட ரெண்டு பழம் எடுத்துக்கோ. போற வழியில சாப்பிடலாமில்ல” என்று மிக இயல்பாகச் சொல்கிறாள். பஜனைக்கோயில் தெருவில் வேளாவேளைக்கு தம்பி வீட்டிலிருந்து தம்பி மனைவி கொண்டுவந்து கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு தனி வீட்டில் வசிக்கும் சகோதரனின் வாழ்க்கை முறையைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இன்னொரு ஊரில் இரு சகோதரர்களை அவன் சந்திக்கிறான். இருவருமே கோவில் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டு பசியாறிவிட்டு காலத்தை ஓட்டுகிறவர்கள். அந்தப் பிரசாதத்துக்காக கோவில் குருக்களிடம் அவர்கள் படும் ஏச்சுகளும் அதிகம். தனக்குக் கிடைத்த பிரசாதத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் உண்பதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் முரளி. அவர் உண்டு முடித்ததும் தனது வாகனத்திலேயே அவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். தனிமை நிரம்பிய அவர்களுடைய உலகின் கதையை அவர்கள் கூற்றின் வழியாகவே தெரிந்துகொண்டு மனம் உருகுகிறான்.

May be an image of Gopalakrishnan Murugesan and text that says 'தீர்த்த யாத்திரை தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் துறந்து ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான். அலைதலும் திரிதலுமான இப் மடிவில் அவன் எங்கு சென்று சேர்கிறான் என்பதைச் න් யாத்திரை ទទុទ្ត புதினம். ISBN 8764 46-3 தமிழினி ரூ 220 எம்.கோபாலகிருஷ்ணன்'

மற்றொரு ஊரில் அவன் சந்திக்க நேரும் ஒரு பெரியவரும் தனிமையில் வாழ்பவரே. அவருடைய பிள்ளைகள் எல்லோரும் வெளியூர்களில் இருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்னும் நம்பிக்கையோடு தன் பொழுதுகளை நிம்மதியோடு கழிக்கிறார் அவர்.

கோவில் வளாகத்தில் மயக்கமுற்று விழுந்த முரளியை ஒருவர் வீட்டுக்கு அழைத்துவந்து மனைவியின் வழியாக மருத்துவம் பார்த்து, வீட்டிலேயே தங்கவைத்து சரிசெய்கிறார். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலான உறவின் விசித்திரம் குடும்ப வாழ்க்கை தொடர்பான அவனுடைய புரிதலை மேம்படுத்துகிறது.
மாயவரத்துக்கு அருகில் முரளியின் இருசக்கர வாகனம் திடீரென பஞ்சராகி நின்றுவிடுகிறது. அந்த வழியாகச் செல்லும் ஒரு ஆட்டோக்காரர் முரளியை விசாரித்துவிட்டு, சக்கரம் பழுதுபார்ப்பவர் ஒருவரை அழைத்து தகவல் சொல்லிவிட்டுச் செல்கிறார். பழுதுபார்க்கும் இளைஞன் அந்த இடத்துக்கே வந்து சக்கரத்தைக் கழற்றிச் சென்று எடுத்துக்கொண்டு சென்று பழுது நீக்கி கொண்டுவந்து பொருத்திக் கொடுக்கிறான். அக்கணத்தில் முரளிக்கு அந்த வண்டியை அந்த இளைஞனுக்கே கொடுத்தால் என்ன என்று தோன்றுகிறது. உடனே மறுசிந்தனைக்கே இடமில்லாமல் அந்த வண்டியின் சாவியை அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு, அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறிச் செல்கிறான். வாழ்வில் முதன்முதலாக கொடுத்தலின் இன்பமென்ன என்பதை உணர்கிறான் முரளி. அதுவரை தன் பயணத்தைப்பற்றிய தெளிவே இல்லாமல் இருந்த முரளிக்கு அருகிலிருக்கும் எழில்மங்கலத்துக்குச் சென்று தன் தந்தையின் ஊரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

மனிதர்களோடு பழகுவது ஒரு பெரிய கலை. குடும்ப வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் இக்கலையில் குறைந்தபட்ச அளவிலாவது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களைப் புரிந்துகொள்வதும் அவர்களுடைய எண்ணப்போக்கினைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். இல்லற வாழ்வில் சேர்ந்து பயணம் செய்பவர்களுக்கு இந்தப் புரிதல் மிகமிக முக்கியம். புரிதல் இல்லாத பயணம் வாழ்க்கையையே நரகமாக்கிவிடும்.
குளித்து முடித்த ஒரு யானையை கோயிலுக்கு அழைத்துச்செல்லும் காட்சியொன்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அன்று அந்த யானையை அழைத்துச் செல்லும் பொறுப்பையேற்று வந்திருப்பவன் துடுக்கான ஒரு புதிய பாகன். வழக்கமாக வரும் பாகன் உடல்நலம் சரியில்லாமல் படுத்திருப்பதால் அவன் வந்திருக்கிறான். சற்றும் அன்பின்றி, மிரட்டும் போக்கில் நடந்துகொள்ளும் அந்தப் புதிய பாகனின் நடவடிக்கையை யானை விரும்பவில்லை.

அவன் அலட்சியமாக ஊதிவிடும் பீடிப்புகையின் துர்நாற்றத்தை அந்த யானையால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், தான் நின்ற இடத்திலிருந்து அந்த யானை அசைய மறுக்கிறது. அதன் உறுதியை உணர உணர பாகனின் வெறி ஏறுகிறது. யானையை அடிக்கத் தொடங்குகிறான். அப்போதும் அசையாமல் யானை உறுதியாக நின்ற இடத்திலேயே நின்றுவிடுகிறது. அதனால் சிறிது நேரத்திலேயே போக்குவரத்து உறைந்துவிடுகிறது. கோவில் ஆட்களும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றுவிடுகிறார்கள். உடனே அந்தச் செய்தி பழைய பாகனுக்குச் செல்கிறது. அதைக் கேட்டு அந்த இடத்துக்கு ஓடோடி வருகிறான் அவன். அவன் யானைக்கு அருகில் வந்து அதன் காதருகில் எதையோ முணுமுணுக்கிறான். ஓரிரு கணங்களில் எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்ப, எதுவும் நடக்காததுபோல யானை கோவிலை நோக்கி நடக்கத் தொடங்குகிறது. ஒரு பாகனுக்குக் கட்டுப்படாத யானை மற்றொரு பாகனுக்குக் கட்டுப்படுகிறது, கட்டுப்பட்டிருப்பதற்கும் மீறிச் செல்வதற்குமான நுட்பமான வேறுபாட்டை உணர்த்தும் இந்தப் பகுதி, யானைக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்திவரும் உண்மை.

ஒவ்வொருவருடைய அணுகுமுறையே வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். சரியான அணுகுமுறைகள் வெற்றியை நோக்கிச் செலுத்துகின்றன, பிழையான அணுகுமுறைகள் தோல்வியென்னும் பள்ளத்தில் தள்ளிவிடுகின்றன. எனினும் பெரும்பாலானோர் தோல்வியிலிருந்து எவ்விதமான பாடத்தையும் கற்றுக்கொள்வதில்லை. மானுட அகந்தை அதற்கு இடம்கொடுப்பதில்லை என்பதுதான் தீயூழ். அதுவே மானுடரிடம் நஞ்சு ஊறிப் பெருகும் கணம்.
பாலினம், செல்வநிலை, கல்விநிலை, பதவிநிலை, தகுதிநிலை சார்ந்து ஒவ்வொருவரும் உருவாக்கிக்கொள்ளும் பலவிதமான அகந்தைகளால் ஒவ்வொருவரும் தம் எண்ணங்களை நஞ்சேறியதாக வடிவமைத்துக்கொள்கின்றனர். நஞ்சை நிறைத்துக்கொள்வது எல்லோருக்குமே எளிது. இந்த வாழ்க்கையில் அதற்கான வாசல்களே அதிகம். ஆனால் நஞ்சின் கறை படியாது இயல்பான வாழ்க்கையை வாழ்வதுதான் கடினமானது. வாழ்ந்து பழகினால் மட்டுமே அதன் இன்பத்தையும் ஆற்றலையும் புரிந்துகொள்ள முடியும். தீர்த்தயாத்திரை முரளியின் வாழ்க்கை இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது.

(தீர்த்தயாத்திரை – நாவல். எம்.கோபாலகிருஷ்ணன், தமிழினி பதிப்பகம், சென்னை . விலை ரூ.230)

பாவண்ணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.