மோ.கு.செந்தில்குமரன் எழுதிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்" சிறார் பாடல்கள் புத்தகம் | M K Senthilkumaran's Chinnanjiriya Vannapparavaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மோ.கு.செந்தில்குமரன் எழுதிய “சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்” சிறார் பாடல்கள் – நூல் அறிமுகம்

கொண்டாட்டமும் ஆனந்தமும்

பாவண்ணன்

சிறார் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளரான அழ.வள்ளியப்பா சிறார்களுக்காக ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் படித்த என்னைப் போன்றவர்கள் அவருடைய பாடல்களைப் பாடமாகவே படித்தோம். ’வட்டமான தட்டு. தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு, எட்டில் பாதி விட்டு, எடுத்துத் தின்றான் கிட்டு, மீதம் உள்ள லட்டு முழுதும் தங்கை பட்டு, போட்டாள் வாயில் பிட்டு, கிட்டு நான்கு லட்டு, பட்டு நான்கு லட்டு, மொத்தம் தீர்ந்தது எட்டு, மீதம் காலித் தட்டு’ என்னும் பாடல் இன்னும் என் மனத்தில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. சிறார் பாடல் எப்படி அமையவேண்டும் என்பதற்கு அது ஒரு முன்னுதாரணப் பாடலாக அமைந்துவிட்டது.  

இந்தப் பாடலில் அமைந்திருப்பது குழந்தைகள் உலகத்துக்கே உரிய தருணம். குதூகலம் நிறைந்த தருணம். அவர்கள் தம் மகிழ்ச்சியைத் தாமே கண்டடைகிறார்கள். மகிழ்ச்சியைக் கண்டடைவது என்பது ஒரு கலை. அக்கலையில் குழந்தைகள் இயல்பாகவே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கண்டறியும்தோறும் அத்தகு தருணங்கள் பெருக்கிக்கொண்டே போகும். அத்தகு தருணங்களையும் அவர்கள் நெஞ்சில் பொங்கும் ஆனந்தத்தையும் எழுத்தில் கொண்டுவருவது மிகப்பெரிய சவால். வள்ளியப்பாவைப் போன்றவர்கள் அத்தகு சவாலைத் தம் நுண்ணுணர்வால் மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள். ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்குப் பிறகும் கூட அவருடைய படைப்புகள் இன்றும் படித்து ரசிக்கத்தக்கவையாக இருப்பதற்கு அதுதான் காரணம். 

புதிதாக வெளிவரும் சிறார் பாடல் தொகுதியொன்றை மதிப்பிடும்போது வள்ளியப்பா போன்றவர்கள் வகுத்துவைத்த இலக்கணத்தை ஒட்டி அப்பாடல்கள் இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. சிறார்களின் கொண்டாட்டத்தையும் ஆனந்தத்தையும் சொற்சித்திரங்களாக முன்வைக்கும் பாடல்களைப் படிக்கும்போது நம் மனமும் ஆனந்தத்தில் பங்கு கொள்கிறது. 

சோ.கு.செந்தில்குமரன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சின்னஞ்சிறு வண்ணப்பறவைகள்’ தொகுதியில் பல பாடல்கள் கருத்துகளை விதைக்கும் வகைமையில் இருந்தபோதும் ஒருசில பாடல்கள் கொண்டாட்டத்தின் சித்திரங்களாக அமைந்திருக்கின்றன. அவையே இத்தொகுப்புக்கு வலிமை சேர்க்கின்றன. 

கத்தரிக்காய் பற்றிய பாடல் நல்ல தாளக்கட்டோடு அமைந்திருக்கிறது. ஒரு குழந்தை கத்தரிக்காய் பற்றி என்னென்ன செய்திகளைத் தெரிந்துவைத்திருக்குமோ, அவற்றை மட்டும் கொண்டு அப்பாடல் புனையப்பட்டிருக்கிறது. 

குண்டு குண்டு கத்தரிக்காய்
கூடை நிறைய கத்தரிக்காய்
வண்டு மொய்க்கா கத்தரிக்காய்
வாசச் சாம்பார் கத்தரிக்காய்

கூட்டு வைத்துச் சமைக்கலாம்
குழம்பு கூட வைக்கலாம்
நாட்டுக் கத்தரிக்காயதோ
நல்ல சுவையைத் தந்திடும்

பச்சை ஊதா நிறத்திலே
பார்க்க அழகாய் இருந்திடும்
எச்சில் ஊறும் வகையிலே
ஏற்ற பொரியல் செய்யலாம்

குழந்தையின் இயல்பை மீறி ஒரு சொல் கூட இல்லை என்பதை இப்பாடலைப் படிப்பவர்கள் உணரலாம். 

இன்னொரு குறிப்பிடத்தக்க பாடல் பச்சைக்கிளியைப்பற்றிய பாடல். இப்பாடலும் குழந்தையின் கண் கொண்டு கவனமாக எழுதப்பட்டிருக்கிறது. 

பச்சைக்கிளியே வாவாவா
பழங்கள் தின்ன வாவாவா
இச்சையுடனே வாவாவா
இறக்கை விரித்து வாவாவா

வளைந்த மூக்கைக் கொண்டாயே
வண்ணம் சிவப்பெனக் கண்டாயே
கிளைகள் தோறும் தாவிடுவாய்
கீச்கீச்சென்றே கத்திடுவாய்

சோலை எங்கும் குறைந்ததனால்
சோர்வாய் நீயும் ஆனாயோ
சீலம் நிறைந்த கிளியேவா
சிறப்பாய் வளர்ப்போம் வாவாவா

பூனையைப்பற்றிய பாடலிலும் ஒரு குழந்தையின் மனம் அழகாக வெளிப்படுவதை உணரமுடிகிறது. தன்னால் பார்க்கமுடிந்த பூனையின் செயல்களையும் இயல்புகளையும் மட்டுமே அப்பாடலில் பார்க்கமுடிகிறது. கூடுதலாக ஒரு செய்தியும் இல்லை. அந்தக் கச்சிதமே அதைச் சிறந்த பாடலாக்குகிறது.

மியாவ் மியாவ் பூனையார்
வீட்டைச் சுற்றும் பூனையார்
அயர்ச்சி இன்றி எங்குமே
அலைந்து திரிந்தும் சுற்றுவார்

பாலை மிகவும் விரும்புவார்
பானை பண்டம் உருட்டுவார்
வேலை செய்யும் பொழுதிலே
வேண்டிக் காலை நக்குவார்

பஞ்சு போன்ற உடம்பினை
பக்குவமாய்த் தடவத்தான்
கொஞ்சி மகிழ விரும்புவார்
குட்டியான பூனையார்

இத்தொகுதியின் மிகச்சிறந்த பாட்டு என கட்டெறும்பை முன்வைத்து செந்தில்குமரன் எழுதியிருக்கும் பாடலைச் சொல்லலாம். கட்டெறும்புக்கும் சிறுவன் அல்லது சிறுமிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் தொகுப்பு வள்ளியப்பா வகுத்தளித்த இலக்கணத்துக்கு இசைவாக இருக்கிறது. 

கட்டெறும்பே கட்டெறும்பே கிட்ட வராதே – நீ
கிட்டவந்து எங்களையே கடிக்க வராதே
சுட்டிப்பயல் சுந்தருன்னை கிள்ள வருவான் – நீ
சிக்கிடாமல் வேகமாய் உன்னிடத்தைச் சேர்ந்திடு

கூட்டம்விட்டு தனிமையாகச் சுற்றி வராதே-உன்
கூட்டத்தோடு சேருவதே நன்மை சேர்க்குமே
பாட்டி மீது ஏறி இறங்கிப் பயமுறுத்தாதே –உன்
பாதை மறந்து அங்குமிங்கும் சுற்றித் திரியாதே

எறும்போடு ஒரு குழந்தை பேசுகிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த உரையாடலில் ஒழுங்கு இருக்கிறதா, தர்க்கம் இருக்கிறதா, உண்மை இருக்கிறதா என்கிற அம்சங்கள் எதுவுமே பொருட்டில்லை.   அந்த உரையாடலோடு நம்மால் உடனடியாக ஒன்ற முடிகிறதா என்பதுதான் முக்கியமான அம்சம். அந்த வகையில் கட்டெறும்பு பாடலை மிகச்சிறப்பாக எழுதப்பட்ட பாடல் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு பாட்டும் ஓர் ஓவியத்தோடு இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. பாடல் தொகுதியைப் படிக்கும் சிறார்களுக்கு அத்தகு ஓவியங்களே முதல் ஆர்வத்தை அளிக்கின்றன. பாடல்களுக்குரிய ஓவியங்களைப் பார்த்ததுமே எழும் கற்பனையையும் எதிர்பார்ப்பையும்  பாடல்கள் எங்ஙனம் நிறைவேற்றுகின்றன என்பதுதான் ஒரு பாடல்தொகுதியின் தகுதியைத் தீர்மானிக்கும் அளவுகோல். சமீபத்தில் வெளிவந்திருக்கும் பாடல் தொகுதிகளில் செந்தில்குமரனின் தொகுதியை நல்ல தொகுதி என்று  குறிப்பிடலாம்.

 ——————————————–

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்” சிறார் பாடல்கள்
ஆசிரியர்: மோ.கு.செந்தில்குமரன்
வெளியீடு:
லாலிபாப் சிறுவர் உலகம்
விலை: ₹.150
அறிமுகம் எழுதியவர்:  
பாவண்ணன்

******************************************************************************

*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*

தோழமையுடன்

புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *