மு.மகேந்திர பாபு எழுதிய "பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)" புத்தகம் | M. Mahendra Babu's Poonthottam Siruvar Padalkal Book Review in Tamil | www.bookday.in

மு.மகேந்திர பாபு எழுதிய “பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)” – நூல் அறிமுகம்

“பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)” – நூல் அறிமுகம்

சிறுவர்களுக்கான உலகில் நீங்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. நீங்கள் உங்கள் உயரங்களை, ஒப்பனைகளை கலைத்துவிட்டு அவர்களோடு இரண்டறக் கலக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உங்கள் முகம் திருப்பி பார்ப்பார்கள். உலகம் காலந்தோறும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. அதில் மிகவும் தனது குழந்தைமைகளை இழந்து போனது ஈராயிரக் குழவிகள் மட்டுமே.

நவீனம் பலி கொண்ட அரும்புகள் அவர்கள் . டிஜிட்டலின் மாய உலகில் தொலைந்து போன அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் போதுமான அளவில் இல்லை என்பதை விட அவர்களை திசை திருப்பும் வழிமுறைகள் கூட நமது கைவசம் இல்லை என்பது கசப்பான உண்மை.

கால மாற்றம் குழந்தைகளுக்கான கதைகளும், பாடல்களும் ஏராளமாக உருவாகி வருகிறது. புதிய எழுத்தாளர்கள் இந்தத் துறையில் கோலோச்சி வருகிறார்கள். நாளிதழ்களும், வார, மாத இதழ்களும் அவர்களுக்கென பக்கங்களை ஒதுக்கித் தருகிறார்கள்.

குழந்தைகள் வாசிக்கின்றார்களோ இல்லையோ? இந்தக் காலத்தில் இதெற்கென எழுத்தாளர் படை உருவாகி வருவது நல்ல விஷயமாக பார்க்கிறோம். மாநில ஒன்றிய அரசுகள் விருதுகள் கூட வழங்குகின்றன. இது நல்ல முயற்சி.

அந்த வகையில் எழுத்தாளரும், கவிஞரும், ஆசிரியருமான மு. மகேந்திர பாபு அவர்கள் 7வது புத்தகமாக குழந்தைகளுக்காக, சிறுவர் பாடல்களை பூந்தோட்டம் என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார். வரவேற்க வேண்டிய நல்ல முயற்சி. மொத்தம் 63 பாடல்கள் படமும், பாடலுமாக வாசிக்க எளிமையாக இருக்கிறது.

வள்ளுவர் வாழ்த்து எனும் பாடலின் சந்தம் மிக நன்றாக இருக்கிறது.தலைவர்களை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக அவர்கள் எளிமையாக புரியும் வண்ணம் பாடுகிறார்.

“உள்ளம் நிறைந்த தமிழை
உலகம் எங்கும் சேர்த்தார்
வெள்ளம் போலக் கருத்தை
இல்லம் எங்கும் வார்த்தார் ”

உயிர்களை நேசிப்போம் எனும் பாடலில், சக மனித உயிர்களைப் போல பூச்சிகள், விலங்குகள் என யாவரிடமும் அன்பை பொழியச் சொல்கிறார். வள்ளலார் சிந்தனை களை மறைவாக சொல்கிறார்.

“மனித உயிரே உயர்ந்ததென
மழலை நீங்கள் நினைப்பீரே
மண்ணில் வாழும் உயிரெல்லாம்
மனித உயிர்க்கு ஒப்பாகும்”

உலகே இன்று அடிமைப்பட்டு கிடக்கும் கைப்பேசியை திறன்பேசி என்று பெயரிட்டு பாடல் பாடுகிறார் வார்த்தை புதியதாய் இருக்கிறது.

“சிறிது நேரம் பார்க்கலாம்
சிரித்து மகிழ்ந்து செல்லலாம்
நல்ல செய்தி பார்க்கலாம்
நண்பரிடம் சொல்லலாம்”

இதன் தொடர்ச்சியாக ஜென் – சி இளைஞர்கள் குறித்தும் அருமையான பாடலொன்றும் இருக்கிறது. இந்தக் காலத்தில் தேவையான அறிவுரையும் கூட,

“திறன்பேசியில் தொலைந்து தான்
திறமை இருப்பதை மறக்கின்றார்
வீம்புக் குணத்தை விட்டாலே
வீட்டில் வெளியில் சிறக்கின்றார்”

இப்படி நூல் முழுக்க குழந்தைகளுக்கான அருமையான பாடங்களை, மிக எளிமையான வார்த்தைகளில் சமூகத்திற்கு ஒரு நீதி சொல்கிறார்
ஆசிரியர் மு. மகேந்திர பாபு தோழருக்கு அன்பு வாழ்த்துகள்.

நூலின் விவரங்கள்:

நூல்: “பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)”
ஆசிரியர்: மு.மகேந்திர பாபு
பதிப்பகம்: யாப்பு வெளியீடு
விலை: ரூ.100

எழுதியவர் : 

✍🏻 – செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *