M. Natesan's Suranga Nagaram Book Review By Jeevakarunyan. நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* - ப. ஜீவகாருண்யன்

நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* – ப. ஜீவகாருண்யன்



சுரங்க நகரம்
நெய்வேலி பொறியாளரின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்: மு. நடேசன்
செம்மண் பதிப்பகம்,
எண்-170, திருமூலர்தெரு (தெற்கு),
இந்திரா நகர் – நெய்வேலி – 607 801
பக்கங்கள்:144
விலை: ரூ.150

அலைபேசி: 94439 56574

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகில் காடாம்பட்டியானூர் என்னும் சிறிய கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து கடின முயற்சிகளுடன் கோவையிலும் சென்னை கிண்டியிலும் ‘சுரங்கவியல்-நில அளவையாளர்’ பட்டயப் படிப்பு முடித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் துவங்கிய காலத்தில் வேலையில் சேர்ந்த மு.நடேசன் அவர்களின் 1964 முதல் 1994 வரை 30 ஆண்டுகள் அளவிலான பணி அனுபவங்களும் நெய்வேலியில் பணியில் சேர்வதற்கு முன்பே நிகழ்ந்த திருமணத்தின் தொடர்ச்சியில் பணி ஒய்வுக்குப் பிறகு வாய்த்துள்ள வாழ்க்கைத் தரவுகளும் நூலில் ‘இளம்பருவத்து நினைவுகள்’ எனத் துவங்கி ‘குடும்பம்’ என்னும் தலைப்புடன் 21 அத்தியாயங்களாக வளர்ந்து நிறைவு கண்டுள்ளன. உதிரிச் சேர்க்கையாக, ‘நிலக்கரிச் சுரங்கம் – சில தகவல்கள்’ என்னும் அத்தியாயம் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

எழுதும் தகவல்களுக்கு ஏற்ற படங்கள் சேர்ந்திருக்கும் ஐந்து – ஆறு பக்கங்கள் அளவிலான அத்தியாயங்களில் டி.எம். எஸ் மணி நெய்வேலியின் ஆணிவேர், எஸ்.யக்னேஸ்வரன் – சுரங்க நாயகன், நெய்வேலி நிலக்கரியின் மூலவர் ஜம்புலிங்க முதலியார், நேர்மை உறங்கிய நேரம், மறைந்த கிராமங்கள்-மறையாத சுவடுகள் ஆகியவை நூலில் ஆசிரியரின் உணர்வுப் பூர்வமான வெளிப்பாடுகள் என்னும் வகையில் குறிப்பிடத் தகுந்தவை.

நூலாசிரியரின் நெடிய வாழ்க்கை விவரங்களுடன் நிலக்கரி நிறுவனம் குறித்த தகவல் களஞ்சியமாக விளங்கும் நூலில் – 1935 ஆம் ஆண்டில் புதிய கிணறு தோண்டும்போது கருப்பு நிறத் திரவப் பொருளாகக் கண்ட நிலக்கரிக்காக தனது 620-ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார். 1951-ஆம் ஆண்டு 170 -ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. 2000-மில்லியன் டன் அளவுக்கு பழுப்பு நிலக்கரி இருப்பது தெரிய வந்தது.

நெய்வேலி நிலக்கரி அதிகபட்சமாக 4000-முதல் 5000-கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரிக் குடும்பத்தில் கடைநிலைக் கரியாக 2800 -கலோரி எரிதிறன் கொண்டது. முதிர்ந்த கரியின் நிலவியல் பெயர் ‘ஆந்தரசைட்’. நெய்வேலி கரியின் பெயர் ‘மயோசின்’.

நெய்வேலி நிறுவனத்தின் முதல் நிர்வாக இடமாக இருந்தது மந்தாரக்குப்பம். அழகிய நெய்வேலி நகரம் 35-சதுர கிலோ மீட்டர் பரப்பில் 30-வட்டங்களுடன் அழகழகான பெயர்களில் 360-தெருக்களைக் கொண்டது- என்று பட்டியலாகப் பல அரிய தகவல்கள் பக்கங்கள் 40, 42, 43 ஆகியவற்றிலும் மற்றும் பக்கங்கள் தோறும் இடம் பெற்றிருக்கின்றன. நெய்வேலியின் திறந்த வெளி சுரங்கங்களில் பெஞ்ச்களின் ஆழ – அகலம், கரி கிடைக்கும் ஆழத்தின் அளவு, ஆர்ட்டீசியன் நீரூற்று குறித்த தகவல்களுடன் பீகாரின் தன்பாத், ஆந்திராவின் சிங்கரேணி போன்ற மூடிய சுரங்கங்கள் பற்றிய விவரங்களும் ஆசிரியர் எடுத்துக் கொண்ட நூலாக்க முயற்சிக்கு அணிசெய்யும் சான்றுகளாக பல பக்கங்களில் இடம் கண்டுள்ளன.

தொடர்ச்சியில் அனல் மின் நிலைய கட்டுமாணப் பணி, 1953-காலத்தில் அமைந்த பைலட் குவாரி, சுரங்க அகழ்வுக்கு உதவும் சிறிய- பெரிய இயந்திரங்கள், சுரங்கங்களை, ஆலைகளைத் துவக்குபவர்களாக – பார்வையாளர்களாக வருகை தந்த தலைவர்கள் நேரு, காமராசர், டாக்டர் இராதா கிருஷ்ணன், நீலம் சஞ்ஞீவ ரெட்டி, ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர் இவர்களுடன் ஜம்புலிங்க முதலியார், நிறுவனம் சிறப்புற அர்ப்பணிப்புடன் உழைத்த முன்னோடி அதிகாரிகள், வட்டம் 26-ல் அமைந்துள்ள ஆலயத்தில் இடம் பெற்றுள்ள ஆசியாவின் மிகப் பெரிய நடராசர் ஐம்பொன் சிலை, நிறுவனம் துவங்கிய காலத்தில் நடைமுறையிலிருந்த 25-35-55 பைசா மலிவுப் பேருந்து ரசீதுகள் என்னும் வரிசையில் அரிய பல நிழற்படங்களை மற்றும் நெய்வேலி நகரம் ஆகியவற்றின் வரைபடத்தை அவை குறித்த தகவல்கள் அடங்கிய பக்கங்களின் அணியாய்ப் பார்க்கையில் ‘அடடா!’ என்று ஆச்சரியம் மேலோங்குகிறது. ‘நெய்வேலி இந்திரா நகரில்’ என்னும் அத்தியாயத்தில் நெய்வேலி ஆர்ச் கேட் எனப்படும் முதன்மை வாயிலின் எதிரில் முந்திரிக்காடாக இருந்த நிலம் ‘இந்திரா நகர்’ என்னும் பெயருடன் இன்று 52-பெயர்கள் கொண்ட குடியிருப்புப் பகுதியாகியுள்ள செய்தியுடன் நிறுவனத்தின் அண்டை அயலில் நிலை பெற்றிருக்கும் கிராமங்களின் பெயர்கள் மற்றும் நிறுவன வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பெயர்கள் அழகுற வரிசையாகியுள்ள பாங்கினை ஆசிரியரின் நூலாக்க முனைப்புக்கு எடுத்துக்காட்டு எனக் கொள்ளலாம்.

M. Natesan's Suranga Nagaram Book Review By Jeevakarunyan. நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* - ப. ஜீவகாருண்யன்

ஆஸ்துமா நோயாளியாக இருந்தும் தமது அயராத உழைப்பால் 1961-ல் சுரங்கத்தில் நிலக்கரி வெளிப்படவும் 1962-ல் முதல் அனல் மின் நிலையம் செயல்படவும் மூல காரணமாக-மூலவராக நின்ற டி.எம்.எஸ் மணி 54 வயதில் மும்பையில் மகள் வீட்டில் இறந்து நெய்வேலியில் அடக்கமான வரலாறும் டி.எம்.எஸ். மணியை அடுத்து நிறுவன வளர்ச்சிக்கு ஓயாது உழைத்த யக்னேஸ்வரன் பணி ஓய்வு பெற்ற பிறகு மருத்துவ மனையிலிருந்த நேரத்தில் நெய்வேலி நிறுவனத்திடம் மருத்துவ உதவி கோரிய வரலாறும் நிறுவனம் துவங்க தமது 620 – ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய ஜம்புலிங்க முதலியாரின் வாரிசுகள், ‘ஏழ்மையிலிருக்கிறோம்!’ என்று நிறுவனத்திடம் உதவி கோரிக்கை வைத்த செய்தியும் நூலில் வாசிக்கும் நெஞ்சங்களைக் கலங்க வைக்கும் பகுதிகளாக இருக்கின்றன.

பணிக் காலத்தில் பணியிடத்திலும் நகரப் பகுதிகளிலும் நூலாசிரியரியருக்கு ஏற்பட்ட மூன்று விபத்துகள் குறித்த தகவல்களின் தொடர்ச்சியில் தொழிற்சங்கத் தலைவர் இருவரின் முறையற்ற குற்றச்சாட்டினால் நூலாசிரியர் முதல் சுரங்கத்திலிருந்து இரண்டாம் சுரங்கத்திற்கு – செய்யாத தவறுக்கு தண்டனையாக- பணி மாறுதல் பெற்ற செய்தி ‘நேர்மை உறங்கும் நேரம்’ என்னும் அத்தியாயத்தின் வழி வெளிச்சப்படுகிறது.நூலாசிரியரின் ‘குடும்பம்’ குறித்த தகவல்களில், ‘நிறுவனம் மூலம் நானடைந்த வேலை வாய்ப்பே மகன் மற்றும் இரண்டு மகள்கள் நல்ல வாழ்க்கை (மகன் செல்வன் – நண்பர் இவர் தமது உயரிய ஒளிப்படக் கலையாக்கத்தின் வழியில் அரிய பல விருதுகளுக்குச் சொந்தக்கரர் – கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் 5-ஆண்டு பட்டயக் கல்விக்குப் பிறகு நெய்வேலி ஜவகர் பள்ளியில் ஓவிய ஆசிரியர். மூத்தமகள் செல்வி அமெரிக்க வாழ்க்கை. இளைய மகள் கலை சேலம் மாவட்டத்தின் அரசினர் மேனிலைப் பள்ளியில் ஆசிரியை) பெறவும் பேரக் குழந்தைகள் உயர் கல்வி கற்கவும் உதவிற்று’ என்று பதிவாக்கியுள்ள செய்தி வாசகரை ஆழ்ந்த யோசனைக்கு ஆட்படுத்தும் கருப்பொருளாக உள்ளது.

‘நெய்வேலி நகரத்தார்கள், நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அம்மக்களை (நெய்வேலி நிறுவனத்திற்காக தங்கள் வீடு வாசல்களை, நிலங்களைக் கொடுத்த மக்களை) நன்றியோடு நினைவு கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள். இழந்த விளை நிலங்கள். முந்திரிக்காடுகள், கிராமங்களை நினைக்கும்போது மட்டும் மனது ஆற்றாமையாக இருக்கிறது.’ (பக்கம்-125) என்று நிறுவனத்திற்கு உதவிய மக்கள் குறித்து கவலை கொள்ளும் திரு- மு.நடேசன், -7557-ரூபாய் 75-பைசா சம்பளக்காரராக பணி ஓய்வு பெற்று நெய்வேலி இந்திரா நகரில் துணைவியாருடன் அமைதி வாழ்க்கை பேணும் முதிய வயதில் நாள் தவறாமல் எழுதிய பல ‘டைரி’களின் உதவியிலும் நினைவாற்றலின் வழியிலும் நல்லதொரு நூலை நமக்குக் கொடையாக்கியிருக்கிறார் என்பது மிகையற்ற உண்மை.

இந்தியாவின் முதல் பிரதமரும் நாத்திகரும் ஆன நேரு அவர்கள், ‘பொதுத்துறைகள் தேசத்தின் ஆலயங்கள்’ எனக்கூறி பல்வேறு பொருளாதாரச் சிரமங்களுக்கிடையே நிறுவிய தேசத்தின் பல பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்தது தமிழகத்தின் நெய்வேலி இந்தியா நிலக்கரி நிறுவனம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்கள், தொழிலகங்கள், நிறுவனம் அமைய நிலம் வழங்கிய அண்டை அயல் கிராமங்கள், நிறுவனத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அதிகாரிகள் – தொழிலாளர்கள், மற்றும் அழகிய மின்னொளி நகர் குறித்த தகவல்கள் அரிதினும் அரிதாகவே – ஒரு சில உதிரிச் செய்திகளாகவே – இதுவரை அடையாளப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள குறையை முடிந்த அளவில் களைந்திடும் வகையில் 84 வயதுகள் கொண்ட முதியவர் ஒருவரின் அரியதொரு முயற்சியாக, தோழர்கள் வேர்கள் மு இராமலிங்கம் மற்றும் ‘காட்டுயிர்’ இதழ் ஆசிரியர் ஏ.சண்முகானந்தம் இருவரின் முகமனுடன் ஆவணப்பட்டுள்ளது இந்த ‘சுரங்க நகரம்’.

‘35-ஆண்டுகள் நெய்வேலியில் சுரங்கம் இரண்டில் மேல் மண் நீக்கப் பகுதியிலும் சுரங்க அலுவலகத்திலும் பணியாற்றி மூன்றாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருக்கும் நான் இந்த நூலின் வழியில் அரிய பல செய்திகளைப் புதிதாக அறிந்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன்’ என்கின்ற வகையில் ‘சுரங்க நகரம்’ நெய்வேலி மற்றும் அதன் அண்டை அயல் கிராமங்கள்- நகரங்களின் மக்கள் மட்டுமென்றில்லாது அனைவரும் படித்தறிய வேண்டிய அரியதொரு நூல் என முன் மொழிகிறேன். நூலாசிரியருக்கு எனது வணக்கங்களை-வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

ப. ஜீவகாருண்யன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. மு.ராமலிங்கம்

    முகமறியா எழுத்தாளராக அதுவும் தனது 80 + வயதில் முதல்நூலை எழுதியுள்ள திரு நடேசனின் சுரங்க நகரம் புத்தக அறிமுகம் மிக சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *