எம்.எஸ்.சுவாமிநாதன் வரலாற்றின் விளைபொருள்…! – பிரியம்பதா ஜெயக்குமார்
நேர்காணல்: வசந்த் ஸ்ரீனிவாசன்
தமிழில்:மோசஸ் பிரபு
இந்தியாவில் பசுமைப் புரட்சியை முன்னெடுத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் பற்றி ஆங்கிலத்தில் ஆசிரியர் பிரியம்பதா ஜெயக்குமார் அவர்கள் எழுதிய புதிய புத்தகம் “இந்தியாவிற்கு உணவளித்த மனிதன்” (THE MAN WHO FED INDIA) என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு விவசாயத்திற்கான கொள்கை, மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம், சமூக மாற்றத்தின் விரிவான வரலாற்றுக்குள் அவரது பங்களிப்புகளை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் பிரியம்தா ஜெயக்குமார் அவர்கள் ஃப்ரண்ட்லைன் இதழுக்காக அளித்த பேட்டியில், சுவாமிநாதனின் பசுமைப் புரட்சியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் பற்றியும் இந்த புத்தகம் உருவாக்கப்படுவதற்கு அவர் மேற்கொண்ட பயனத்தை பற்றியும் இந்த நேர்காணலில் பதிவு செய்திருக்கிறார்.

கேள்வி:1 – இந்தப் புத்தகம் எழுதுவதற்கான யோசனை கொராணாத் தொற்று(COVID-19) ஊரடங்கின் போது வந்ததாகக் கூறியுள்ளீர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மீண்டும் அவர்களின் மாநிலம் நோக்கி நடந்தே செல்லும்காட்சியையும் பசியால் அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும் குறிப்பிட்டு எம்.எஸ். சுவாமிநாதன் சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒரு பதிவால் தூண்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள், அந்த குறிப்பிட்ட வரலாற்று தருணத்தில் எம்.எஸ் சுவாமிநாதன் பணிகள் குறித்து மீண்டும் சொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைத்தீர்கள்?
கொராணா தொற்றின் போது ஏற்பட்ட துயரங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பாக உணர்ந்தேன். புலம்பெயர்ந்த தொழிலாளிகள் உணவுக்காக ஏங்கி தவித்த சூழல் கொடுமையானது. இந்த துயரங்களை காணும் போது நம் நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாகப் போராடிய நமது பல தலைவர்களின் முகத்தில் அறை விழுந்ததாகவே நான் உணர்ந்தேன். எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பிய மகத்தான தலைவர்களில் ஒருவர். அவர் வேதனைப்பட்டு அந்த பதிவை வெளியிட்டபோது, அது மிகுந்த மனத்துயரத்தோடு இருந்திருப்பார் என நினைக்கிறேன் நிச்சயமாக, கொராணா பரவல் பல நாடுகளையும் கடுமையாக பாதித்தது புலம்பெயர்ந்த ஏழை மக்கள் தங்கள் மாநிலத்திற்கு திரும்பிச் செல்வதையும், இளைஞர்கள் முதுகில் கட்டப்பட்ட முதியவர்களை சுமந்துகொண்டும், தாய்மார்கள் குழந்தைகளை மார்பில் கட்டியனைத்தப்படியும், நடந்து சென்றனர் மக்கள் உணவின்றியும், தண்ணீரின்றி தவிப்பதையும், சிலர் சாலையில் இறப்பதையும் பார்த்து எம்.எஸ்.சுவாமிநாதன் இதயம் உடைந்து போயிருக்கும். அவருக்கு கடந்த கால பஞ்சத்தில் இந்தியா தவித்த சம்பவங்கள் நினைவுக்கு வந்திருக்கும். எனவேதான் இந்தியா உணவு பற்றாக்குறை என்ற நிலையிருந்து உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த வரலாற்றை சொல்வது அவசியம் என கருதுகிறேன். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொல்ல வேண்டிய வரலாறு.
கேள்வி:2 – நீங்கள் ஒரு வரலாற்றாசிரியர், உங்கள் கல்வியின் அடித்தளம் அவரை மற்றொரு அறிவியல் விஞ்ஞானியாக கருதுவதற்குப் பதிலாக, இந்தியாவின் பெரிய அரசியல் மற்றும் புவிசார் அரசியல் நீரோட்டங்களுக்குள் அவரது வாழ்க்கையை பொருத்திப்பார்த்துள்ளீர்கள் இவ்வாறு உங்களது பார்வையை வடிவமைக்க உதவியது எது?
எம்.எஸ் சுவாமிநாதன் வெறும் அறிவியல் விஞ்ஞானி இல்லை என்று நான் நம்புகிறேன். அவர் வரலாற்றின் ஒரு விளைபொருள். ஆரம்பத்தில் எம்.எஸ் ஒரு மருத்துவராகத் தயாராகிக் கொண்டிருந்தார், ஆனால் இரண்டு வருட மருத்துவப் படிப்பை முடித்த பிறகு வங்காளப் பஞ்சம் காரணமாக ஒரு விவசாய விஞ்ஞானியாக மாற அவரை அந்த சூழல் கட்டாயப்படுத்தியது அன்றைய சமூக வரலாறு அதற்கு முக்கிய காரணம். பிறகு மத்திய பொது சேவை ஆணையத்தின் கீழ் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் அவருக்கு மேலும் மரியாதைக்குரிய வேலை கிடைக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பினர். அவர் போலிஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார், இந்திய காவல் சேவை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பயிற்சிக்காக ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவுக்குச் உடனே செல்லும்படியான சூழல் உருவானது. அதே நேரத்தில், ஹாலந்து நாட்டில் உள்ள வாகனிங்கன் வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவர மரபியல் படிக்க யுனெஸ்கோ உதவித்தொகையை பெறும் அழைப்பும் வருகிறது.
பெரிதும் அறியப்படாத வரலாற்றின் மற்றொரு சம்பவம் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது. பிர்லா மாளிகையில் எம்.எஸ்.சுவாமிநாதனும் இருந்தார், அவரது தந்தை கும்பகோணம் மாநகராட்சியின் தலைவராக செயல்பட்ட போது காந்தி அவர்களின் வீட்டில் தங்கியிருக்கிறார் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) மாணவர் தலைவராகவும் எம்.எஸ் இருந்திருக்கிறார். நேருவின் புகழ்பெற்ற வாசகமான உலகில் உள்ள மற்றவை அனைத்தும் காத்திருக்கலாம் ஆனால் விவசாயம் அவ்வாறு காத்திருக்க கூடாது என்பதை நேரு சொல்வதை நேரிடியாக எம்.எஸ். கேட்டிருக்கிறார். காந்தியின் தாக்கம், நேருவின் தொலைநோக்கு பார்வையிலிருந்த ஆர்வம் போன்ற சூழல்கள் தான் அவரை வேளாண் விஞ்ஞானியாக மாற்றியது அவர் உண்மையிலேயே வரலாற்றின் ஒரு விளைபொருள் தான்.
1960 ஆம் ஆண்டுகளில், PL 480 வேளாண் வர்த்தக மேம்பாடு மற்றும் உதவிச் சட்டம் (PL) 480 – அமைதிக்கான உணவு (food for peace) திட்டத்தை உருவாக்கிய அமெரிக்காவின் நடவடிக்கை இல்லாவிட்டால், பசுமைப் புரட்சி ஏற்பட்டிருக்காது. திருமதி இந்திரா காந்திக்கும் அந்த சிந்தனை ஏற்பட்டிருக்காது அவர் “சுவாமி! நீங்கள் இந்த மரபணு விதைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். அமெரிக்கர்களை என் முதுகில் இருந்து அகற்ற எனக்கு 10 மில்லியன் டன்கள் இதன் மூலம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார்.
எனவே எனது வரலாற்றுப் பயிற்சி, நிகழ்வுகள், உரையாடல்கள் மற்றும் வரலாற்று உண்மைகளை சமநிலைப்படுத்த எனக்கு உதவியதே தவிர எனது நோக்கத்தை சிதைக்கவில்லை. எம்.எஸ். வாழ்க்கையில் இதற்கு முன்பு தொகுக்கப்படாத பலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.

கேள்வி:3 – இது ஒரு கல்விசார் புத்தகம் அல்ல, ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புத்தகம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். எம்,எஸ்.வாழ்க்கையில் சம்பவத்திற்கும் அந்த வரலாற்று துல்லியத்திற்கும் இடையிலான சமநிலையை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்?
வரலாற்று நிகழ்வுகள் இல்லாமல் எனது புத்தகம் முழுமையடையாது நேரு தனது சப்பாத்திகளில் சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்ப்பார், லிண்டன் ஜான்சன் திருமதி காந்தியை அவமதித்தார், மற்றும் பாபு ஜெகஜீவன் ராம் “நாங்கள் இங்கு உதவி கேட்க வந்தோம், பிச்சை எடுக்க அல்ல” என்று கூறி அமெரிக்கர்களை எதிர்த்தார் இவையெல்லாம் வரலாறு தான் எனவே வரலாறு இல்லாமல் எனது புத்தகம் முழுமையடையாது, பசுமைப் புரட்சியை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான உண்மையான போராட்டங்களை எனது புத்தகம் உங்களுக்குச் சொல்கிறது. இதற்கு வரலாற்று சம்பவங்களும் பக்கபலமாக துணை நிற்கிறது, இவ்வாறு இணைத்து சொல்லும் போது இதன் தாக்கம் அதிகளவு இருக்கும் அப்போதுதான் என் புத்தகம் உண்மையிலேயே பொருத்தமானதாக மாறுகிறது,
கேள்வி:4 – இந்த புத்தகம் எம்.எஸ்ஸை ஒரு விஞ்ஞானியாகவும் கொள்கையாளராகவும் உருவகப்படுத்துகிறது, அறிவியல் ஆய்வகத்தையும் அரசு எந்திரத்தையும் இணைத்த ஒருவர். அந்த இரட்டைத்தன்மை அவரது வெற்றிக்கு மையமாக இருந்ததா, இன்று இந்தியாவில் அத்தகைய உறவு சாத்தியமா?
எதுவும் சாத்தியமற்றது என்று நான் நினைக்கவில்லை. அவரது காலத்தில் அறிவியலும் அரசின் கொள்கையும் தெளிவாக வடிவமைக்கப்பட்டது, மேலும் 1960களுக்கு பிறகு கொள்கை மாற்றம் நடைபெற துவங்கியது, ஏனெனில் இந்தியாவில் அரசியலின் தன்மையும் மாறிவிட்டது. 1960களில் திருமதி இந்திரா காந்தி விஞ்ஞானிகளுடன் மிகவும் தனித்துவமான அனுகுமுறையை கொண்டிருந்தார். இந்தியாவின் உணவு நிலைமையை மாற்றியமைத்ததில் பெரும் பங்கு அறிவியலுக்கு உண்டு என்பதை அறிவித்தார். பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவியலையும் விவசாயிகளையும்தான் அவர் பாராட்டினார். அதற்கான பெருமையை அவர் ஒருபோதும் தனதாக்கிக்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் தனிநபர் அரசியல் வழிபாட்டு முறை உள்ளது. தற்போதைய அரசாங்கம் அதற்கான முன்னோடி என்று நான் கூறவில்லை; அது நேரு காலத்திலிருந்தே தொடங்கியது. ஆனால் அறிவியலோ அல்லது வேறு எந்தத் துறையோ அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இன்று, அறிவியலை விடவும், கொள்கையை விடவும், எல்லா வெற்றியும் அரசாங்கத்திற்குக் மட்டுமே கிடைக்க வேண்டுமென நினைக்கப்படுகிறது. இதில் கொள்கை வெற்றி பெறுவதாக நான் நினைக்கவில்லை.
கேள்வி:5 – திருமதி இந்திரா காந்தி மற்றும் எம்.எஸ்ஸைப் பற்றிப் பேசுகையில், அந்தக் கட்டத்தை நீங்கள் மீண்டும் நினைவுப்படுத்தும்போது அவர்களுக்கு இடையேயான இயக்கவியல் (dynamics) குறித்து உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எது?
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், திருமதி இந்திரா காந்தி எவ்வளவு எளிதாக அனுகக்கூடியவராக இருந்தார் என்பதுதான். கிருஷி தரிஷன் என்ற விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொலைக்காட்ட்சி நிகழ்ச்சி 1967 ஆம் ஆண்டு எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். எம்.எஸ்.சுவாமிநாதனும் விக்ரம் சாராபாயும் இணைந்து பல கிராமங்களைப் பார்வையிட்ட பிறகு திரும்பி வந்தனர். இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்திய விவசாய நிறுவனங்களில் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் குறித்து கல்வி கற்பிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தான் ஆர்வமாக இருப்பதாக சாராபாய் எம்.எஸ்ஸிடம் கூறினார். அவர்கள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் இல்லத்திற்கு மிக அருகில் குடியிருந்தனர், எந்த முன் அனுமதியும் இல்லாமல் அவர்கள் உள்ளே நுழைந்தனர். “நாம் தொலைக்காட்சியில் விவசாயிகளுக்கான ஒரு நிகழ்ச்சியை தொடங்க வேண்டும். நீங்கள்தான் முன்னின்று துவக்கி வைக்க வேண்டும்!” என்று திருமதி காந்தியிடம் சாராபாய் கூறினார். தொழில்நுட்ப பயன்பாடு குறித்து எம்.எஸ் சுட்டிக் காட்டுவதை அவர் பொறுமையாகக் கேட்டார், உடனே அந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டார், 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தினத்தன்று அதை முறையாகத் தொடங்கி வைத்தார். இந்த மாதிரியான எளிதாக ஒரு பிரதமரை அணுகும் முறையும் வெளிப்படைத்தன்மையையும் இன்று நான் எங்கும் காணவில்லை.
நேரு முதல் மோடி வரை அனைத்து வகையான அரசியல் தலைவர்களுடனும் எம்.எஸ் பணியாற்றியுள்ளார். அனைத்து பிரதமர்களுடனும் அவருக்கு நிறைவான, அன்பான மற்றும் சமமான உறவு இருந்தது. ஆனால் அவர் திருமதி இந்திரா காந்திக்கு மிக நெருக்கமானவராக இருந்திருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் திருமதி இந்திரா காந்தியின் தலைமையும், அவர் தனது மன உறுதியையும் தக்க வைத்துக் கொண்டதும்தான் பசுமைப் புரட்சி வெற்றிகரமாக கொண்டு வந்தது. எனவே தான் எம்.எஸ். சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகும் அவர் இன்னும் நிறைய பணிகளை செய்தார். திருமதி காந்தியுடனான அவரது உறவில் கொள்கைக்கும் அரசியலுக்கும் இடையே ஒரு இணைப்பும் இருந்தது. பின்னர், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு, காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை எழுதச் சொன்னார். அவர் இந்திரா காந்தியை மேடம் என்று அழைப்பார், மேலும் எம்.எஸ். அவர்களுக்கு இந்திரா காந்தியோடு பணியாற்றுவது விருப்பமான ஒன்று. ஆனால் அவர் அதை ஒருபோதும் வெளிப்படையாக பதிவு செய்ய மாட்டார், ஏனென்றால் அது அவரது வாழ்க்கையை மேலும் கடினமாக்கும். மேலும் எம்.எஸ். ஒரு தலைசிறந்த ராஜதந்திரி. அவரது மக்களை தொடர்புகொள்ளும் திறன் தனித்துவமானது. அவர் மற்றவர்கள் மீது அன்பும் பரிவும் கொண்டவர். எடுத்துக்கொண்ட பணிகளை மற்றவர்களையும் கறராக வேலைவாங்கி சிறப்பாக செய்து முடிப்பார்.

கேள்வி:6 – பசுமைப் புரட்சி இப்போதும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததற்காகப் பாராட்டப்பட்டது, ஆனால் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை மற்றும் நீடித்து உழைக்க முடியாத நடைமுறைகளுக்காகவும் விமர்சிக்கப்பட்டது. அவரைப் பாதுகாக்க அல்லது அவர் மீது வைக்கப்படும் விமர்சனத்தை அவரது சாதனைகளுடன் சமநிலையில் வைத்து விவாதிக்க உங்களுக்கு நெருக்கடிகள் இருந்ததா?
இல்லை. நான் அவரைப் பாதுகாக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனைகதை அல்ல என்பதால் விமர்சனத்தை முன்வைக்கவே விரும்பினேன். விமர்சனத்தோடு ஒரு மனிதனின் பணிகளை முன்வைப்பதே எனது முழு நோக்கமாக இருந்தது.
1960களில் நாம் வழித்தெரியாமல் சிக்கிக் கொண்ட ஒரு நேரத்தில் நமக்கு பசுமைப் புரட்சி தேவை என்பதை எம்.எஸ். அவர்கள் நன்கு அறிந்திருந்தார். வேறெங்கும் கையேந்தாமல் திருமதி இந்திரா காந்திக்கு உணவு பற்றாக்குறையை போக்க வேண்டும் என்ற நெருக்கடிகள் இருந்தது.1968 ஆம் ஆண்டு, பசுமைப் புரட்சிக்குப் பிறகு, நிலத்தில் உப்புத்தன்மை, அதிகப்படியான நீர் உறிஞ்சுதல் மற்றும் உரங்களை அதிகமாகச் சார்ந்திருத்தல் ஆகிய பாதிப்புகள் இருப்பதை கண்ட முதல் நபர் அவர்தான். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பே அவரே அதைக் காண முடிந்தது. நிச்சயமாக, இதற்காக அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு அரக்கனைக் கொண்டு வந்து எங்கள் வயல்களிலும், எங்கள் உணவு முறையிலும் கட்டவிழ்த்துவிட்டார். என்ற விமர்சனம் இருந்தது. இதில் மரபணு கொள்ளை விவாதமும் உள்ளது, அதை நான் அதை பதிவு செய்திருக்கிறேன். எனவே, முடிந்தவரை, எல்லாத்தரப்பினரும் பாராட்டப்படாத ஒரு மனிதராகவும் அவரைக் காட்டியுள்ளேன்.
எம்.எஸ்ஸைப் பொறுத்தவரை, அவரது ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெறும் கூட்டங்களில், விமர்சகர்கள் மற்றும் மாற்றுக்கருத்து உள்ளவர்களை அணுகி, “தயவுசெய்து வந்து பங்கேற்று உங்கள் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்” என்று கூறும் ஒரே மனிதர் அவர்தான். முரண்பாடான கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அறிவியல் செழிக்க முடியும் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்து நான் ஒரு முழு அத்தியாயத்தையும் ஒதுக்காதது குறித்து சிலர் வருத்தப்படுகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். அதற்கு எனக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்தது. எம்.எஸ்ஸைப் பொறுத்தவரை, மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் ஒரு கத்தி போன்றது. ஒரு பழத்தை வெட்ட இதைப் பயன்படுத்தலாம். ஒரு மனிதனைக் கொல்லவும் இதைப் பயன்படுத்தலாம். அது பயன்படுத்தப்படுவதைப் பொறுத்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர் குறித்து ஏன் ஒரு முழு அத்தியாயத்தை இந்த புத்தகத்தில் ஒதுக்கவில்லை என்று மக்கள் என்னிடம் கேட்டால், எனது பதில்:
“இது ஒரு கல்வி புத்தகம் அல்ல. இது ஒரு விவசாய புத்தகம் அல்ல.” வேளாண் விஞ்ஞானியாக பேராசிரியர் சுவாமிநாதன் மற்றும் அவரது பசுமைப் புரட்சி மாற்றம் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் மிகச் சில புத்தகங்களே அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், அவரது தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் அவர் கடந்து வந்த அனைத்திற்கும் பின்னால் உள்ள கோணங்களை ஆராய்கின்றன. அதை சொல்ல வேண்டுமென்றுதான் நான் இந்த புத்தகத்தை எழுதினேன்.
கேள்வி:7 – நீங்கள் ஆவணங்கள் நேர்காணல்கள் மற்றும் குடும்ப நினைவுகளிலிருந்து தகவல்களை தொகுத்துள்ளீர்கள். எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றிய உங்கள் புரிதலை அடிப்படையில் மாற்றிய அல்லது தீவிரப்படுத்திய ஒரு தருணம் உங்கள் ஆராய்ச்சியின் போது நிகழ்ந்ததா?
காந்திஜி சுட்டு கொல்லப்பட்டபோது அவர் பிர்லா மாளிகையில் இருந்தார் என்பதை நான் தெரிந்துகொண்ட. அந்த தருணத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன். அவரும் என் அத்தை மினாவும் மகாத்மா காந்தியின் சவ ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். அப்போது அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை, மாபெரும் மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாக அவர்கள் நடந்தார்கள். எம்.எஸ்ஸைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி வரலாற்றில் மிகச்சிறந்த நபர் மட்டுமல்ல. அவர் அவரது ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தார். காந்தி அவரில் பொதிந்துள்ளார். அவரது காந்தியவாதம் அவரது இரத்தத்தின் ஒரு பகுதியாக, அவரது ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தது, கிட்டத்தட்ட ஒவ்வொரு கொள்கையிலும் ஒரு காந்தியின் தாக்கம் இருந்தது. அது அறங்காவலர் பொறுப்பேற்றிருந்த போது பொதுச்சொத்து ஏழைகளுக்கு பயன்பட வேண்டுமென நினைத்தார், மெக்ஸிகோவிலிருந்து வந்த மரபணு விதைகள் மற்றும் கலப்பின விதைகள். ஆகியவை முதலில் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன, பணக்காரர்களுக்கு அல்ல. மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த எளியவர்களுக்கு உதவிய தருணங்களை எம்.எஸ்.எஸ். நெருக்கமாக உணர்ந்தார். அதனால்தான் எம்.எஸ் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் வரலாற்றின் ஒரு விளைபொருளாகவும் இருந்தார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

கேள்வி:8 – அத்திம்பர் [மாமா] உடனான உங்கள் உறவைப் பற்றி நீங்கள் நெகிழ்ச்சியுடன் எழுதுகிறீர்கள். அவரது மருமகளாக, இந்த நெருக்கம் எப்போதாவது வரலாற்றாசிரியரின் பார்வையிலிருந்து விலக செய்ததா?
எனக்கிருக்கும் விமர்சனத்தையும் நான் பதிவு செய்திருக்கிறேன் இன்னும் விமர்சன ரீதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள் அவரை ஒரு புனிதராக சித்தரிக்க நான் விரும்பவில்லை. ஆனால் எம்.எஸ்ஸை அறிந்த எவருக்கும் தெரியும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தவறான செயல்களில் ஈடுபட்டதில்லை. அவர் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தார். தனக்குச் சொந்தமானதை மற்றவர்களுக்குக் கொடுத்தார். உயிர்வாழத் தேவையானதை மட்டுமே அவர் வைத்திருந்தார். அவர் தனது விருப்பமான பணிகளை செய்வதன் மூலம் வாழ்ந்தார். கொள்கை உறுதியை பேச்சளவில் இல்லாமல் அதன்படியே தனது செயல்பாட்டையும் அதன்படி அமைத்துக்கொண்டவர் பலரும் அவ்வாறு இருப்பதில்லை. எம்.எஸ் அவர்கள் தான் கொண்ட கொள்கைப்படி வாழ்ந்துகாட்டியவர். அரசாங்கத்தில் பல கோப்புகள் கிடப்பில் போடப்படும் ஆனால் சரியான நபர்கள் இருந்ததால் அந்நிய செலவானி இல்லாதபோதும் 18,000 டன் விதைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர அரசு நிர்வாகத்தை சம்மதிக்க செய்ய அவரால் முடிந்தது. எனவே, நான் அவரது மருமகள் என்பதால் எனது வரலாற்றாசிரியரின் பார்வையில் எந்த விலகலும் ஏற்படவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் அதை நான் வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும் என விட்டுவிடுகிறேன்.
கேள்வி:9 – அறிவியலுக்கு அப்பால், நீங்கள் அவரை ஒரு மனிதநேயவாதி, காந்தியவாதி மற்றும் பெண்ணியவாதி என்று குறிப்பிடுகிறீர்கள். இவற்றில் எந்த அம்சத்தை சமகால வாசகர்கள் உணர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ?
ஒரு பெண்ணியவாதியாகவும், சூழலியல் நிபுணராகவும் இருப்பதால், நீங்கள் குறிப்பிட்டவை நவீன வாழ்க்கையின் இரண்டு அம்சங்கள் என்று நான் நினைக்கிறேன், அவை நிறைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன, மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் இந்தியாவை இவைதான் வரையறுக்கும். நாம் எந்த முடிவுகளை எடுத்தாலும், பெண்களையும் அதில் சமத்துவமாக பங்கேற்க செய்யவில்லை என்றால், நாம் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கிறோம் என்று அர்த்தம். நான் வயல்களில் உள்ள பெண் விவசாயிகளைப் பற்றி மட்டும் பேசவில்லை. நான் அனைத்து துறைகளிலும் உள்ள சூழ்நிலையை பற்றி பேசுகிறேன். எம்,எஸ். எல்லா இடங்களிலும் சம உரிமைக்காக போராடினார். இன்று, நாம் எல்லாம் கடந்த நிலையில் வாழ்கிறோம். காலநிலை நெருக்கடியைப் பொறுத்தவரை, நம் குழந்தைகளுக்காக நாம் விட்டுச் செல்லும் தேசமும் பூமியும் உண்மையில் அவர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அவர்களால் இந்நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போகலாம். நம் குழந்தைகளுக்கு நாம் மிகவும் நிச்சயமற்ற எதிர்காலத்தை விட்டுச் செல்கிறோம். வேறு யாரும் சொல்வதற்கு முன்பே எம்எஸ் இதை சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுதியவர் :
✍️ – நேர்காணல்: வசந்த ஸ்ரீனிவாசன்
தமிழில்:மோசஸ் பிரபு
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
