எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan) | நான் ஒரு ரசிகன் (Naan Oru Rasigan)

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் “நான் ஒரு ரசிகன்”

கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பக்கத்தில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த, எம்(மனையங்கத்து ஹவுஸ்)எஸ்( அப்பா சுப்பிரமணியன் நாயர், அம்மா நாணிக் குட்டி நாராயணி) விஸ்வநாதனின் வாழ்வு குறித்த எம்.எஸ்.வியின் சுவையான வார்த்தை விவரிப்பு.

கணவரின் எதிர்பாராத மரணம், வறுமையின் காரணமாக, இன்னொரு நல்லதங்காளாக ஆயிருக்க வேண்டிய எம்.எஸ்.வியின் தாயாரை அவரது தாத்தா கிருஷ்ண நாயர் தடுத்துக் காப்பாற்றியிருக்கிறார்.

பள்ளிக்கூடத்திற்குப் போகாமல், நீலகண்ட பாகவதரின் மியூசிக் ஸ்கூலில் விஜயதசமி அன்று ஹார்மோனிய பெட்டியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு முதன்முதலாக பாட ஆரம்பிக்கிறார்.அதைப் பார்த்த ஆசிரியர் திட்டாமல் பாராட்டுகிறார். அங்கு தொடங்குகிறது அவரது இசைப் பயணம்.

ஜுபிடர் கம்பெனியில் பாலகோபாலன் வேஷம். அதுவும் கைவிட்டுப் போய் விடுகிறது. அங்கிருந்து, பாலையாவுடன் போகிறார். மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஜுபிடர் கம்பெனியில் சேர்கிறார்.அங்கு, ஆர்கெஸ்ட்ரா இன்சார்ஜர் வேலை. காபி கொடுக்கிறது, வாத்தியங்களை கிளீன் பண்ணி எடுத்துக் கொடுக்கிறது, மியூசிக் டைரக்டர் சுப்பையா நாயுடுவின் சைக்கிளை துடைக்கிறது இதுதான் வேலை.

வீர அபிமன்யு படத்தின் சுப்பையா நாயுடுவுக்கு, கை வராத டியூனை இவர் போடுகிறார். இவரது சம்மத்துடன் சுப்பையா நாயுடுவின் பெயருடன் அந்த பாடல் வருகிறது. இது போல் நிறைய பாடல்கள். ஜூபிடர் பிக்சர்ஸ் லீஸ் முடிஞ்சு கம்பெனியை குளோஸ் பண்றதுன்னு முடிவு எடுத்த பிறகு, கண்ணெல்லாம் கலங்க, இந்த பையனை லேசா நினைக்காதீங்க. கடவுள் சத்தியமா சொல்றேன். சமீபத்துல நம்ம கம்பெனி எடுத்த படங்களோட பாட்டுகள் ஹிட்டாச்சு. அதெல்லாம் இந்தப் பையன் போட்டது இவன் லைஃபை ஸ்பாயில் பண்ணாதீங்க என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் சுப்பையா நாயுடு.என்னவொரு மனிதர்.

எம்ஜிஆர் நடித்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கிறார். ஜூபிடர் ஆபீஸ்ல காபி, டீ கொடுத்துக்கிட்டு புரடக்சன் ஆபீஸ் பாயா இருந்தவனுக்கு மியூசிக் பத்தி என்ன தெரியும் என்று எம்ஜிஆர் கோவப்படுகிறார்.

எம்ஜிஆர் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் எம்ஜிஆரின் தலையீடு காரணமாக அவர் இஷ்டப்படி போட்டதால ஒரு பாட்டு கூட தேறல. அந்த அனுபவத்தால் நாளை நமதே படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்கிறார்.

எம்ஜிஆரின் தலையீட்டால்தான் அவரது பாடல்கள் ஹிட்டாயின என்ற வெகு ஜன நம்பிக்கையை உடைக்கின்ற தகவலல்லவா இது.

இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் நீங்க இதுல தலையிடாம இருந்தா நல்லா இருக்கும்னு எம்எஸ்வி சொல்ல, முறைத்த எம்ஜிஆர்தான்,பின்னாட்களில் அவருக்கு நெருக்கமாகி
எம். எஸ். வி க்கு விழா எடுத்திருக்கிறார்.

1940 வருஷம் ஜூபிடர் பிக்சர்ஸ்ன் கன்னியின் காதல் படத்திற்கு பாட்டு எழுத வந்த போது அறிமுகமான கண்ணதாசன், அதன் பிறகு மரணம் வரை இவரை விட்டுப் பிரியவில்லை. இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கம் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கண்ணதாசன் பாடகராக ஆசைப்பட்டதற்கு அதெல்லாம் வேண்டாம் நீங்க பாடினீங்கன்னா ஜனங்களுக்கு ஒங்க மேல இருக்குற மரியாதை குறைந்துவிடும் என்று சொல்லி மறுத்திருக்கிறார்.

எம்எஸ்விக்கு உடல் நலம் சரி இல்லாமல் போன போது கண்ணதாசன் அத்தனை பதறி, கலங்கியிருக்கிறார்.

ஒரு டியூனுக்கு எழுத முடியாது என்று சொன்னவரை,இதுக்கு எழுத முடியல. நீ கவிஞனாயான்னு கோபப்படுத்தி,அதில் பிறந்த பாடல் தான் வான் நிலா நிலா அல்ல பாடல்.

தங்கை படத்திற்காப் போட்டு ஐந்து பல்லவிகளில் ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடித்துப் போக,தபால் கொடுக்க வந்த போஸ்ட்மேன் தேர்வு செய்த டியூன்தான் கேட்டவர் எல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம் பாடலின் டியூன்.

எம்கே தியாகராஜ பாகவதருக்கு குரலுக்கு டியூன் போட முடியவில்லை என்ற ஏக்கத்தைத் தீர்க்க, டிஎம்சௌந்தர்ராஜன் அவருக்குக் கிடைத்திருக்கிறார்

கவிஞர் வாலியுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு,அதனால் கண்ணதாசனுக்கு வந்த கோபம்,தைரியமாக சொல் நீ மனிதன் தானா என்ற வாலியின் பாடல் மற்றும் யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே என்ற கண்ணதாசனின் பாடல்,இந்தப் பாடல்களால்,கண்ணதாசனுக்கும்,எம்ஜிஆருக்கும் இடையில் சிக்கித் தவித்தையெல்லாம் சுவையாகச் சொல்கிறார்.

ராமமூர்த்தி,எஸ்பிபி, பிபி சீனிவாஸ், சந்திரபாபு, சுசீலா, ஜேசுதாஸ், ஜெயலலிதா, சோ, கருணாநிதி,கே பாலச்சந்தர், ஸ்ரீதர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இப்படி பிரபலங்களுடனான நெருக்கத்தைப் பற்றி மட்டுமல்ல,அவரது இசைக் குழுவினரைப் பற்றியும் பேசுகிறார்.

வாரிசு இல்லாத தனது குருநாதர் சுப்பையா நாயுடுவின் குடும்பத்திற்கு செய்த உதவிகள் அவரது நன்றியுணர்ச்சிக்கு சாட்சியாக இருக்கின்றன.

ஒரு இசையமைப்பாளராக அவரை அவரது பாடல்கள் வழி அறிந்திருக்கிறோம்.நான் ஒரு ரசிகன் என்று சொல்லும் அவர் ஒரு நல்ல மனிதன் என்பதை அவரது வாழ்வின் வழி அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.

காலத்தால் அழியாத எம்எஸ்வியின் பாடல்களை ரசித்ததைப் போலவே,வாசிப்பவர்கள்,இந்தப் புத்தகத்தையும் நிச்சயம் ரசிப்பார்கள்.

 

நூலின் தகவல் 

நூல்                     : நான் ஒரு ரசிகன்

ஆசிரியர்        : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

வெளீயீடு        : விகடன் பிரசுர வெளியீடு

பக்கங்கள்    :168

விலை            : ரூ. 200 /

 

எழுதியவர் 

ஜி.சிவக்குமார்
2/274 – 3 ஆறாவது குறுக்குத் தெரு
சக்தி நகர்
அய்யர் பங்களா
மதுரை 625 007
drsivaagc@gmail.com
தொடர்புக்கு 9443558201

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *