புத்தக அணிந்துரையிலிருந்து சில வார்த்தைகள்:
தோழர் மூ.சுந்தரலிங்கம் அவர்களின் ‘‘♥புத்தகப்பை குடையானது♥’’ என்ற இந்த புத்தகம் கல்வி ஆளுமை இருவரை என் கண் முன்னே கொண்டு நிறுத்தியது. பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லே ஃபிரையிரே மற்றும் போலந்து நாட்டு கல்வியாளர் ஜெனோஸ் கோச்சாக்
பாவ்லே ஃபிரையிரே உரையாடல் கல்விமுறை மற்றும் அதற்கேற்ற ஆசிரியர் மண்ணுக்கேத்த பாடத் திட்டம் ஆகியவற்றை பற்றி வலியுறுத்துகிறார்.
பாடத் திட்டம் என்பது வானத்தில் இருந்து குதித்ததாக இல்லாமல் மக்கள் வாழும் மண்ணில் இருந்து பிறந்ததாக வேண்டும். இந்த ஆதங்கம் தேடல்கள் அனைத்தும் இந்த புத்தக ஆசிரியரின் பதிவுகளில் கண்டு பிரமித்தேன்.
அடுத்ததாக Respect for the Child என்ற புத்தக ஆசிரியர் ஜெனோஸ் கோச்சாக்கின் அனுபவமும் இங்கே கண்ணுற்றேன். வீதியோர ஆதரவற்ற குழந்தைகளுக்காக, தான் நடத்திய இல்லத்தில் குழந்தைகள் நீதிமன்றம் ஒன்றை குழந்தைகளையே நீதிபதிகளாக வைத்து நடத்தியவர் குழந்தை உரிமை மீறல் செய்தவர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தில் குழந்தை நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டனர்.
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இல்லத்தின் இயக்குனராக இருந்த ஜெனோஸ் கோச்சாக் ஆறு மாதத்தில் ஆறுமுறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். என்பதுதான். இன்று ஐ.நா.சபையில் நடைமுறையிலிருக்கும் குழந்தைகள் உரிமை பிரகடனத்தை உருவாக்கிக் கொடுத்தவரும் இவர்தான். அவர் இறந்த பின் தான் மற்றவர்களுக்கு அது நடைமுறைக்கு வந்தது.
இந்தப் புத்தக ஆசிரியர் குழந்தைகளைப் பற்றி எழுதியுள்ள அத்தனை கவிதைகளிலும் அவர் மீதான அன்பும் இரக்கமும் மேலோங்கியது.
- காய் விட்டதும், உடனே பழம் ஆகி விடுகிறது மழலைகளின் காய்.
- ஓட்டப்பந்தயத்தில் நிர்ணயித்த எல்லையையும் தாண்டி ஓடுகிறார்கள். அவர்களின் தேவை எல்லை அல்ல, முடியும் அளவு ஓடுவது.
- கொடுப்பதில் கடவுளும் தோற்கிறார் குழந்தைகளிடம்
- விடை தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் முகமூடி அணிய முழுநிலவாய் ஒரே முகம்.
- என்னை சூழ்ந்து நிற்கிறார்கள். பழகிவிட்டது.
- என் வெள்ளைச் சட்டையில் பூத்திருந்தது மழலையின் ரேகைகள்.
இப்படி எத்தனையோ கவிதைகள்.
- கற்றல் கற்பித்தல் இருவழிப் பாதையாக இருந்தால் வகுப்பறை கட்டுப்பாடுகள்.
- விதைப்பவை எல்லாம் விருட்சமாகும் விதைப்பதை நிறுத்திவிடாதீர்கள்.
- மாணவர்கள் அகராதி- பொறுமையாக படித்தால் பொருள் புரியும்.
- தோற்றவன் வெல்வதே உண்மையான கற்பித்தல்.
- அச்சத்தில் உருவாக்கப்படும் அவர்கள் மாணவர்கள் அல்ல. ஆணைக்கு அடிபணியும் ரோபோக்கள்.
- கேள்விக்கு ஆசிரியர் சொன்னதே பதிலாக இருக்க வேண்டும் என்பதால் சரியான பதிலும் தவறாகிவிடுகிறது.
- வீட்டிற்குள் ஒரு ஆசிரியர் வேண்டும் வகுப்பறைக்குள் ஒரு தாய் வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ‘‘வருடந்தோறும் குறைகிறது வருகையின் எண்ணிக்கை’’. விலை குறைவு என்றால் தரத்தை சந்தேகிப்பது மக்கள் குணம், அரசுப் பள்ளியும் அந்த வகையில் சேர்ந்துவிட்டது.. என்று தனது வருத்தத்தை தனது கவிதையில் வடித்திருக்கிறார்.
தேர்வு முறையைப் பற்றி மிகச் சரியான புரிதலோடு.
தேர்வு எழுதி தேய்கிறது பிள்ளை நிலாக்கள்
ஏழைக்கு ஒரு கல்வி. பணக்காரனுக்கு ஒரு கல்வி. தேர்வு முறை ஒன்றே.
ஏட்டுச் சுரைக்காய் ஆக மதிப்பெண் தேர்வு முறைகள்.
கற்றதை எழுத வாய்ப்புக் கொடுங்கள் தேர்ச்சி அதிகமாகும்.
சிவப்பு பேனா ஒவ்வொரு பக்கத்திலும் வெட்டுகிறார்கள் மாணவர் மனங்களை.
தேர்வில், உண்மையில் தோல்வி என்பது கற்பித்தவர்க்குத்தான்.
போன்ற கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். வணிகப் பள்ளிகளின் ஆதிக்கம். ஆங்கில வழிக் கல்வியில் பெற்றோர்களின் மயக்கம், பள்ளிக்கூட பதிவேட்டில் கூட சாதிப் பிரிவினை, தாய் வழிக் கல்வியில் உன்னதம் போன்றவைபற்றி சரியான கல்வி அரசியல் பார்வையுடன் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு விருது கொடுக்கப்படுவது எப்போது? விருது வாங்கியதாகச் சொல்கிறார்களே என்ற கேள்வியையும்… மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது எப்படி சரியாகும்? இடப்பங்கீடு என்பது தானே பொருத்தமாக இருக்கும்.. என்று பொருள் பொதிந்த கேள்வியையும் மிக அழகாக தனது கவிதைகளில் கேட்டிருக்கிறார்.
‘‘கரும்பலகை மேதைகளை உருவாக்கித் தருகிறது – கருப்பு துரதிர்ஷ்டமான நிறமாம்’’.
‘‘மாணவர்களின் தரத்தை பெஞ்சுகள் ஒருபோதும் தீர்மானிப்பதில்லை’’ மாணவர்களை தரம் பிரிப்பது கல்வி வன்முறையின் ஆரம்பம்.. போன்றமூடநம்பிக்கை மற்றும் தவறான நம்பிக்கை எதிர்ப்பு கவிதைகளும் மெருகூட்டுகின்றன.
இத்தனை சுமை புத்தகப்பை – வாழ்வின் சுமையை அறிந்து கொள்ளவா? முப்பருவம் வந்தாலும் முடியாத சுமை புத்தகப்பை, கர்ப்பப்பைகளின் சுமை பத்து மாதம் – புத்தகப் பைகளின் சுமை பல வருடங்களாக தொடர்கிறது.
ஆனாலும்,
‘‘மழை பெய்தது. புத்தகப்பை குடையானது. போன்ற கவிதைகளை எளிதில் கடக்க முடியவில்லை. பேராசிரியர் யஸ்பால் கமிட்டி பரிந்துரைத்த ‘‘Lessening the burden of education’’ எங்கே போனது..? என்ற கேள்வி பேரலையாய் எழுகிறது.
நான் ரசித்து, வசித்து வாசித்தபுத்தகம் இது ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி தளத்தில் பணிபுரியும் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டிய புத்தகம் இது.
புத்தகப்பை குடையானது கவிதை தொகுப்பு
மூ.சுந்தரலிங்கம்
நண்பர்கள் பதிப்பகம்
பக்கங்கள் – 78
விலை – ரூ. 80
தோழர் மூ. சுந்தரலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்…
ஜெ.கிருஷ்ணமூர்த்தி
செயலர்
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்
தமிழ்நாடு– புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
படிக்கத் தூண்டும் புத்தக விமர்சனம். தோழர் JK அவர்களுக்கும், சிறந்த புத்தகத்தை வழங்கிய எழுத்தாளருக்கும் மிக்க நன்றி!