வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளைத் தக்கவைத்தல் (திருப்பூரிலிருந்து கிடைத்த சில கொள்கைப் பாடங்கள்) – எம். விஜயபாஸ்கர் (தமிழில் தா.சந்திரகுரு)

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 நிலைமைகளை முன்னிட்டு தொடராகப் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளைத் தக்கவைத்தல் குறித்த இந்த கட்டுரையைத் தமிழில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

முன்னுரை

தொழில்துறை அல்லது பொருளாதார முனைப்பு இடம் சார்ந்து வேறுபாடு கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட தொழில்துறையின் வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டிருக்கும் தொழில்நிறுவனங்களின் அடர்த்தியான பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்பே, வளர்ச்சிக்கான இயந்திரமாக காணப்படுகின்றது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, தொழிற்பேட்டைகள் அல்லது மாவட்ட தொழில் மையங்கள் (industrial clusters or districts) என்றழைக்கப்படுகின்ற இத்தகைய ஒருங்கிணைப்பு, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பது முக்கியமாகிறது.  ஏராளமான கைத்தொழில்களைத் தவிர்த்து, 28 நவீன குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்பேட்டைகள் தமிழ்நாட்டில் இருப்பதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது1. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் அமைந்திருக்கும் ஜவுளி, ஆடைகள், விசைத்தறி, வீட்டு வசதிப் பொருட்கள் மற்றும் நூற்பு உள்ளிட்ட தொழிற்பேட்டைகளிலிருந்து, கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் பொறியியல் சார்ந்த பொருட்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள (வார்ப்பு, அடித்து வடித்தல், வேளாண் மற்றும் ஜவுளி இயந்திரங்கள், வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரக் கருவிகள், டீசல் என்ஜின்கள் மற்றும் கிரைண்டர்கள் போன்ற சமையலறை உபகரணங்கள்) தொழிற்பேட்டைகள் வேறுபட்டு இருக்கின்றன. இந்த பட்டியலில் மதுரையில் ஆயத்த ஆடைகள், ராஜபாளையத்தில் மென்துணி தயாரித்தலுக்காக அமைந்திருக்கும் தொழிற்பேட்டைகள் சேர்ந்து கொள்கின்றன. பாலாறு ஆற்றுப் படுகை மற்றும் சென்னையில், அரிசி ஆலைகள், ஸ்டார்ச் மற்றும் சாகோ தொழிற்சாலைகளும், தோல் மற்றும் தோல் பொருட்களுக்கான வேளாண் பொருட்களைப் பதப்படுத்துகின்ற பல தொழிற்பேட்டைகளும் உள்ளன. சென்னை பெருநகரப் பிராந்தியத்தில் ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்களுக்கான தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டைகளில் பல தொழிற்பேட்டைகள் உழைப்பாளர்களை அதிகமாக நம்பியிருப்பவையாக இருப்பது மட்டுமல்லாது, மதிப்பு கூட்டுகின்றவையாகவும், பல்வேறு விரிவாக்கங்களுக்கு துணை புரியும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய தொழிற்பேட்டைகள் தங்களிடமிருக்கின்ற திறன்களை, மேம்பட்ட முனைப்பு மற்றும் வளர்ச்சியாக மாற்றுவதில் எதிர்கொள்கின்ற தடைகளைப் புரிந்துகொள்வது, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு பயனுள்ள வழிமுறையாக இருக்கும். மாநிலத்தில் உள்ள ஆற்றல்மிக்க தொழிற்பேட்டைகளில் ஒன்றாக இருக்கின்ற திருப்பூர் தொழிற்பேட்டை மற்றும் பிற தொழிற்பேட்டைகளில் இருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலை தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் அடிப்படையில்2 தயாரிக்கப்பட்டுள்ள இந்த கொள்கைக் குறிப்பு, கோவிட்-19க்குப் பிந்தைய வருங்காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக எழப்போகின்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்கான சில வழிமுறைகளை வழங்குகிறது. இந்த தொழிற்பேட்டைகளில் பலவும் இந்த தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பாகவே நெருக்கடியில் இருந்து வந்தன என்பதை அங்கீகரித்து விட்டே, இந்த குறிப்பு தொடங்குகிறது.

நெருக்கடியின் கூறுகள்: தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமை

டெக்கான் ஹெரால்டில் வெளியான சமீபத்திய கட்டுரை3 குறிப்பிடுவதைப் போல, இந்த தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களைப் பாதித்த பல காரணிகளுக்குப் பின்னால், கடைசியாக வந்திருக்கும் காரணியாக இந்த தொற்றுநோய் இருக்கலாம். சில காரணிகள் துறை சார்ந்தவையாக இருக்கின்றன. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் தொழிற்பேட்டைகள், பல நிறுவனங்களை, குறிப்பிட்ட சில தொழிற்பேட்டைகளின் மதிப்பு சங்கிலியின் கீழ்முனைகளில் இருக்கின்ற நிறுவனங்களைப் பாதித்திருக்கின்ற நெருக்கடிகளை எடுத்துக்காட்டுகின்றன. பணமதிப்பு நீக்கம், பொருட்கள் மற்றும் சேவை வரியைத் (ஜிஎஸ்டி) தவறாகச் செயல்படுத்தியது என்ற இரண்டு நடவடிக்கைகளும், இந்த நிறுவனங்களின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் பணி மூலதனத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன. தவறாமல் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டியைச் செலுத்த வேண்டும் என்று சிறிய நிறுவனங்களிடம் எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்களால் பொருட்களை வாங்கியவர்களிடமிருந்து பெரும்பாலும் 3 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகுதான் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை திரும்பப் பெற முடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையின் விளைவாக, நிறுவனங்கள் பணம் செலுத்துவதை மேலும் தாமதப்படுத்தி வருகின்றன. அது பணப்புழக்க நெருக்கடிக்கு வழிவகுப்பதோடு, சரியான நேரத்தில் ஜிஎஸ்டியை செலுத்துவதற்காக முறைசாராக் கடனை நம்பியிருக்குமாறு பொருட்களை வழங்குபவர்களைத் தூண்டி விடுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த பிற சலுகைகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதால்,  ஆடைகள் உள்ளிட்ட சில துறைகளில் உள்ள நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, பயன்படுத்தப்படாத இருப்புகளும், சரக்குகளும் நிறுவனங்களிடம் சேர்ந்துள்ளன. சரக்குகளை வைத்திருப்பதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில், உலகம் முழுவதும் ’சரியான நேரத்திலான உற்பத்தி’ என்ற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், சரக்குகளைப் பராமரிப்பதற்கு ஆகின்ற செலவுகளை, நிறுவனங்கள் தங்களுடைய சங்கிலியில் கீழே இருக்கின்ற, பொருட்களை வழங்குபவர்களின் வெவ்வேறு அடுக்குகளிடம் தள்ளி விடுவதாகவே  இருக்கின்றது. பொருட்களுக்கான தேவைகளில் உள்ள ஏற்ற இறக்கங்களால், அவை சிறிய அளவிலான பொருட்களை வழங்குபவர்களிடம் விற்கப்படாத சரக்குகளாக மாற்றமடைந்து தேங்குகின்றன. மேலும் அத்தகைய சரக்குகளைச் சேமித்து வைப்பதற்கான செலவுகளையும் அந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள  வேண்டியிருக்கிறது.

லாப விகிதம் குறைவதால் லாபத்தில் ஏற்படுகின்ற நெருக்கடியைத் தவிர, பொருட்களுக்கான ஒட்டுமொத்த தேவையும் குறைவதால், சிறுநிறுவனங்களும்கூட இதில் பாதிக்கப்படுகின்றன. கோவிட்-19 நோய்பரவல் புதிய நெருக்கடிகளை உருவாக்குவதற்கு முன்பாகவே, கோயம்புத்தூர் – திருப்பூர் பகுதிகளில் குறைந்தது 10,000 தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், மந்தநிலை காரணமாக சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டதாகவும், திருப்பூர் மாவட்ட குறு மற்றும் குடிசை தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவரான திரு.சிவகுமார் கோவையில் அளித்த நேர்காணலை மேற்கோள் காட்டி லைவ்மின்ட்4 செய்தி வெளியிட்டுள்ளது. தரப்படுகின்ற ஆர்டர்களின் அளவுகளில் 60% பற்றாக்குறை இருக்கும் என்றும் சிவகுமார் கூறியுள்ளார். இதேபோன்ற நெருக்கடிகளை  திருப்பூரில் உள்ள  ஆடை ஏற்றுமதியாளர்களும் எதிர்கொண்டுள்ளனர்.5 முன்னுரிமை வர்த்தகத்தால் மேலும் பாதிப்பு ஏற்படுவதால், அவ்வாறான வர்த்தகம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை வகுப்பதன் மூலமாக மறுக்கப்பட வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.

தொற்றுநோய் என்ன செய்திருக்கிறது?

பொருட்களுக்கான தேவைகள் மேலும் வீழ்வதற்கு பங்களிப்பு செய்திருப்பதோடு, விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்படுவதற்கும் இந்த தொற்றுநோய் வழிவகுத்துக் கொடுத்துள்ளது. உதிரிப்பாகங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற பாகங்களுக்கான தேவை குறைக்கப்பட்டுள்ளது.  இதே போன்று ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் துறைகளிலும் நடந்திருந்தாலும்,  இந்தியாவிற்கு வருகின்ற மொத்த ஆட்டோ பொருட்கள் இறக்குமதியில் 27% சீனாவிடம் உள்ளதால்6 ஆட்டோ உதிரிபாகங்கள் துறையில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தேவைகளைப் பொறுத்தவரை, திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற 25% – 30% ஆர்டர்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேவை குறைவு காரணமாக வாங்குபவர்களில் பலர் தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். நிலுவையில் உள்ள தொகைகளும் வருவதற்கு தாமதமாகும் என்றே தெரிகிறது. தோல் தொழிற்துறையும் ஏற்றுமதி ஆர்டர்களில் 20% வீழ்ச்சியை எதிர்பார்க்கிறது. தங்கள் சரக்குகளை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு, வாங்குவோர் ஏற்கனவே ஏற்றுமதியாளர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல ஆட்டோ பெருநிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்திவிட்டன. பெரும்பாலும் அவை பொருட்களை ஒருங்கு சேர்க்கும் நிறுவனங்களாக இருப்பதால், பாகங்களை வழங்கி வருகின்ற நிறுவனங்களிலும் கணிசமான வேலை இழப்புகளுக்கு அவை வழிவகுத்திருக்கின்றன. வேலையிழப்பு, வீடு திரும்ப இயலாமை, குறிப்பாக வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றம் போன்றவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. உடனடியாக வேலைக்குத் திரும்புவதற்கு தொழிலாளர்களிடம் இருக்கின்ற தயக்கம், விநியோகச் சங்கிலியில் நெருக்கடிக்கே வழிவகுக்கும். ஆக, 2020 மத்தியில் தேவைகளுக்கான சரிவிலிருந்து மீண்டு விட முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளை, இந்த தொற்றுநோய் மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த குறிப்பானது தேவைகளுக்கான நேரடித் தீர்வு காணும் கொள்கை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாறாக, தேவைகளுக்கான புத்துயிரை மீண்டும் இந்த தொழிற்பேட்டைகள் பெறுகின்ற போது, சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி சங்கிலிகளாக அதனை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில சுட்டிகளை மட்டுமே வழங்குகிறது.

இரண்டு தளங்கள்

அனைத்து காரணிகளையும் மாநில அரசாங்க மட்டத்திலே கவனிக்க முடியாது என்ற நிலையில்,  மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்ற சில பிரச்சினைகள் குறித்து, மத்திய அரசாங்கத்துடன் வலுவான பேச்சுவார்த்தைகள் உட்பட, சில தலையீடுகளுக்கான சாத்தியமான நுழைவுப் புள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் சில குறுகிய காலத்தில் சாத்தியமானவையாகயும், மற்றவை நடுத்தர காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவயாகவும் இருக்கின்றன.

இந்த குறிப்பிற்கான இரண்டு தளங்கள் இருக்கின்றன. அதிக உழைப்பு கொண்ட உற்பத்தி திறந்த சூழலில் நீடித்திருப்பதற்கு, உற்பத்தி அளவை மட்டுமே அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்ற கொள்கை போதுமானதாக இருப்பதில்லை. உற்பத்தி விளைவு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தாலும், மழுங்கடிக்கும் வளர்ச்சி என்று ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ள வகையில், உழைப்பு மற்றும் மூலதனத்தின் மீது கிடைக்கின்ற வருவாய் வீழ்ச்சியடையக் கூடிய சூழ்நிலைக்கே, ஊதியத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டி வழிவகுக்கும். எனவே, திறன், தரம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் நுழைவதற்கான அதிக தடைகளை ஏற்படுத்துகின்ற பிரிவுகளாக தொழில்நிறுவனங்கள் பன்முகப்படுத்தப்படுவதை உறுதி செய்வது முக்கியமாகிறது. அதன் மூலம் அதிக வருவாயைப் பெறவும், புதிய வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி சங்கிலிகளை உருவாக்கவும் முடியும். உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு, அதிக மதிப்பை பெறுவது உதவுகிறது. கணிசமான அளவில் திறமையான உழைப்பாற்றல் கிடைக்கின்ற, குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் சூழலில் இது முக்கியமானது. ஆக, மாநிலத்தில் இருக்கின்ற அதிக அளவிலான பொருளாதாரம் மற்றும் மனித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, வெறும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை விட, வேலைவாய்ப்பு தரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, சமீப காலங்களில் செய்து வந்திருப்பதைப் போல, இனிமேலும் தனியார்களுக்கு வசதி ஏற்படுத்தி தரும் வகையில் மட்டுமே அரசு இருக்க முடியாது என்பதை முக்கிய கொள்கையாக இந்த குறிப்பு அங்கீகரிக்கிறது. அரசானது தொழில்முனைவோராகவும் இருக்க வேண்டும். தொழில்முனைவோராக இருந்து, புதுமைகளுக்கான நிறுவனங்களை அமைப்பதில் அரசு முக்கிய பங்கு வகித்து, புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான சந்தையாக இருப்பதன் மூலமாக மட்டுமே, பொருளாதார முனைப்பு உலகளவில் நிகழ்ந்துள்ளது என்று மரியானா மஸ்ஸுகாடோ தனது புத்தகத்தில்7 குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா போன்ற சந்தை சார்பு பொருளாதாரங்களில்கூட, பல்கலைக்கழகங்களுடன், சில நேரங்களில் தனியார் நிறுவனங்களுடன் பொதுத்துறையானது இணைந்து, புதுமைகளையும், பொருளாதார முனைப்பையும் உருவாக்குவதில் முன்னணியில் இருந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த இரண்டு தளங்களின் அடிப்படையில், கொள்கை தலையீட்டிற்கான முக்கிய களங்களை அடையாளம் காண இந்த குறிப்பு முயல்கிறது. முக்கியமாக ஜவுளி மற்றும் ஆடைகள் துறைகளின் மீது கவனம் செலுத்துகின்ற இந்த குறிப்பு, இந்த துறைகளில் அரசு தலையிடுவதற்கான சில கொள்கைகளை அடையாளம் காட்டுகின்றது.

புதுமைகள், உழைப்பு செறிவு மற்றும் விலை பெறுதல்  : மேம்படுத்தலுக்குத் தேவை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%, தொழில்துறை உற்பத்தியில் 7%, இந்திய ஏற்றுமதி வருவாயில் 15% என்று இந்தியாவில் ஆடை ஏற்றுமதியில் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கின்ற ஜவுளி மற்றும் ஆடைகள்  துறை 4.5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் பின்னலாடை தொழிற்பேட்டை, குறிப்பாக விவசாயத்திலிருந்து வெளியேறுகின்ற குறைவான திறமை கொண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக இருக்கிறது. 2005ஆம் ஆண்டில் ஏற்றுமதி ஒதுக்கீட்டை நீக்கிய பிறகு, உலகளாவிய ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சுமார் 3.5%இலிருந்து 4.2% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது என்றாலும், இந்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகளின் பங்கு ஓரளவிற்கு நன்கு அதிகரித்திருக்கிறது.  திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் குறைந்த அளவு, நடுத்தர விலை பொருட்களுக்கான உற்பத்தி பிரிவில் இருந்து, தரப்படுத்தப்பட்ட, பெரிய அளவிலான உற்பத்திக்கு மாற்றமடைந்து, தங்களை குறிப்பிட்ட பிரிவுகளுக்குள் விரிவாக்கம் செய்து கொண்டுள்ளன.

மேம்பட்ட தரங்களை முன்னிறுத்தி, தானியங்கும் இயந்திரங்களின் அளவு அதிகரித்து வருவதால், சாயமிடுதல், பின்னல் மற்றும் பக்குவப்படுத்தும் பிரிவுகளான சாயமிடுதல், வெளுத்தல், அச்சிடுதல் மற்றும் எம்பிராய்டரி போன்றவற்றிற்குத் தேவையான உழைப்பு குறைந்துள்ளது. ஆயினும், தொடர்ந்து உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற தொழிலாகவே ஆடை தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. நிறுவனங்களின் அளவில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற மனிதவளத் துறைகள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில், வேலைவாய்ப்பு அளவு காலப்போக்கில் குறைந்துவிட்டாலும், உற்பத்தியின் விரிவாக்கமானது, உழைப்பிற்கான தேவை அதிகரிப்பதை உறுதி செய்திருப்பதோடு, கைத்தொழிலாளிகளாக இல்லாதவர்களிடம் புதிய திறன் தொகுப்புகள் அதிகரிக்கவும் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

பக்குவப்படுத்துகின்ற செயல்முறைகளின் தரத்தை மேம்படுத்துகின்ற வகையில், நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளை அதிகரித்துள்ள போதிலும், கடந்த 7-8 ஆண்டுகளாக ஒரு துண்டுக்கான சராசரி விலை 2.5 அமெரிக்க டாலருக்கும் குறைவு என்ற நிலையிலேயே தேங்கி நிற்கிறது. அதனால் ஏற்றுமதியாளர்களுக்கான லாப விகிதங்கள் குறைந்து விட்டன. இந்த காலகட்டத்தில் பின்னலாடைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தைகளில் விரிவாக்கம் செய்து கொண்டதன் மூலம் எதிர்வினையாற்றியுள்ளன. ஏற்றுமதியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நிறுவனங்களுக்கு உதவியிருக்கின்றன. ஆனாலும், அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகளும் இருக்கவே செய்கின்றன. தரம் மற்றும் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ஆட்டோ துறையில் உள்ள பல பிரிவுகளில் இருந்து வருகின்ற விற்பனையாளர்கள், தங்களுக்கு மோசமான விலையே கிடைக்கின்றது என்று புகாரளித்து வருகின்றனர். விரிவாக்கம் செய்தல் மற்றும் அதிக மதிப்பு சேர்க்கும் பிரிவுகளில் நுழைவது போன்றவை, தரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியமானதாகின்றன.

மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளாலான துணிகள்: சிலநிறுவன ஆதிக்கம் மற்றும் பலவீனமான திறன்கள்

திருப்பூர் உட்பட இந்திய ஆடைகளின் ஏற்றுமதியில் பருத்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் உலகளாவிய சந்தைகளில், மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளாலான துணிகள் (எம்.எம்.எஃப்) மற்றும் கலப்பு இழைத் துணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இத்தகைய சார்பு நிலைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட, 2000ஆம் ஆண்டு தேசிய ஜவுளி கொள்கை மற்றும் 2010ஆம் ஆண்டு தேசிய இழைக் கொள்கை ஆகிய இரண்டும் எம்.எம்.எஃப் அடிப்படையிலான துணிகளை ஊக்குவித்ததுடன், இழை உற்பத்தி மற்றும் நுகர்விலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தயாரிப்பாளர்களால் குறைந்த விலையில் தரமான துணிகளைப் பெற முடியவில்லை. இழை உற்பத்தியில் இருக்கின்ற சிலநிறுவன ஆதிக்கம், உள்நாட்டு இழைகளின் விலையை உலக சந்தையில் நிலவும் விலையை விட அதிகமாக்கியுள்ளது. போக்குவரத்து செலவுகளை எடுத்துக் கொண்ட பிறகும், இறக்குமதி செய்யப்பட்ட நூல் 3% முதல்  5% வரை மலிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் லாபியின் காரணமாக, வரி இல்லாத செயற்கை இழைகளின் இறக்குமதியைப் பெற முடியாதிருப்பதாக சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். ஓரளவிற்கு இந்த பிரச்சனை சமீபத்திய மாதங்களில் தீர்க்கப்பட்டிருந்தாலும், இது உடனடியாக கவனம் தேவைப்படுகின்ற மற்றொரு களமாகும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம், இவ்வாறான கட்டணக் குறைப்புகளை மாற்றியமைக்கக் கூடும். அதுபோன்ற கொள்கை மாற்றம், வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்ற ஆடைத் துறையில் இருக்கின்ற போட்டியைப் பாதிக்கக்கூடும். உள்நாட்டு இழைகளுக்கான தொழிற்துறையின் குறைவான விலை மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கான போட்டியை உறுதி செய்வதன் மூலம், அத்தகைய இழைகள் பயன்படுத்தப்படுகின்ற உயர்தர ஜவுளிகளை நோக்கிச் செல்லுமாறு, ஆடை தயாரிப்பாளர்களை வழிநடத்துகின்ற வகையில் கொள்கை நடவடிக்கைகளின் மறு நோக்குநிலை தேவைப்படுகிறது, பொருத்தமான வர்த்தகக் கொள்கைகளைத் தவிர, தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கிய பயனர்களாக இருக்கின்ற மருத்துவ சேவை வழங்குநர்களுக்கும், ஜவுளி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மாநில அரசு எளிதாக்கித் தர வேண்டும். மருத்துவ சேவைகளுக்கான முக்கியமான மையமாக தமிழ்நாடு இருப்பதால், இதுபோன்ற தொடர்புகளை ஏற்படுத்தி தருவது பயனளிக்கவே செய்யும்.

இடைநிலைப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள்

நாணய மதிப்பு மற்றும் உள்ளீட்டு-விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படுகின்ற ஆபத்து (பிந்தையது குறிப்பாக நூல் விஷயத்தில்), ஒப்பீட்டளவில் அதிக மதிப்புள்ள பெரிய அளவிலான ஆர்டர்களை ஏற்றுமதியாளர்கள் எடுத்துக் கொள்வதைத் தடுக்கின்ற காரணியாக இருக்கிறது. நூலுக்கான செலவு, உற்பத்தி செலவுகளில் பெரும்பகுதியாக இருக்கிறது. உற்பத்தி தொடங்குவதற்கு முன்பாகவே, ஒப்பந்தங்களும் விலைகளும் நிர்ணயிக்கப்பட்டு விடுவதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு நூல் விலையில் ஏற்படுகின்ற அதிகரிப்பு ஏற்றுமதியாளர்களின் லாபத்தைப் பாதிக்கின்றது. பணமாற்று விகிதங்களைப் பொறுத்த அளவிலும் இதுவே பொருந்துகிறது.  இத்தகைய  அபாயங்களை எதிர்கொள்வதற்கான காப்பீடு கிடைக்கின்ற போதிலும், ஆபத்துக்களை குறைப்பதற்காக இதுபோன்ற வழிமுறைகளை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நாடுவதை, அதற்காக ஆகின்ற அதிக பரிவர்த்தனை செலவுகள் தடுக்கின்றன. நூல் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் இதை வலுவான வேலைவாய்ப்பு சங்கிலிகளைக் கொண்ட உள்ளீடு என்பதைக் காட்டிலும், ஒரு பொருளாக மட்டுமே காண முனைகிறார்கள். சம்பந்தப்பட்ட சங்கிலிகளைக் கொண்டு, வகுக்கப்படுகின்ற கொள்கைகளால்,  அத்தகைய முன்னோக்கைத்  தர முடியாது. மற்ற உள்ளீடுகளைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகவே இருக்கின்றது. அவற்றின் வழங்கல் சிலநிறுவன ஆதிக்க அமைப்பு நடைமுறைகளால் வடிவமைக்கப்படுகிறது. இறுதிப் பொருட்களின் உற்பத்திக்கான செலவு குறைவான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வகிப்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான (ஆர்&டி) அரசின் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது

பல்வேறு துறைகளுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான (ஆர்&டி) அரசின் ஆதரவில் தொடர்ந்து நிலையான சரிவு ஏற்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தின் ஆதரவில் இருக்கின்ற, ஜவுளித் துறைக்கான ஆர்&டி அமைப்புகளில் ஒன்றான தென்னிந்திய ஜவுளி ஆய்வு சங்கத்தின் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10% மட்டுமே மத்திய அரசு இப்போது ஆதரவளித்து வருகிறது. 1980களில் சுமார் 300 என்ற அளவில் இங்கே பணியாற்றிய விஞ்ஞானிகளின் எண்ணிக்கை. தற்போது 50க்கும் குறைவாக இருக்கின்றது. இந்த சரிவு குறித்து, ஆர்&டி முதலீடுகளில் பெரிய தனியார் நிறுவங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவற்றில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. கொள்கை சார்புகள் நீண்டகால ஆர்&டி முதலீடுகளுக்கு எதிராக இருப்பதால், கணிசமான அளவில் இல்லாமல், ஆனால் உடனடித் தீர்வுகளைத் தருகின்ற குறுகிய கால ஆராய்ச்சி திட்டங்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகக் கூறப்படுகின்றது. துணி துறைகளில் புதுமைகள் உருவாகி, புதிய இயற்கை இழைகள், தொழில்நுட்ப ஜவுளி என்று விரிவாக்கம் நடைபெற்று, உலகளவில் வருமானத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உருவாகி வருகின்ற சூழலில் இது கவலை தருவதாக இருக்கிறது.

தொடக்க சூழல் அமைப்பு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும், முக்கியமான நடவடிக்கைக்குத் தேவையான வளங்களையும், பொருத்தமான வழிமுறைகளையும் வழங்குவதில் மாநில அரசின் பங்கு போதுமானதாக இல்லை. முக்கியமான வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற துறைகளை அடையாளம் காண்பது, அதிக மதிப்பு கூட்டும் பிரிவுகளாக விரிவாக்கம் செய்வதற்குப் போதுமான ஆர்&டி உதவிகளை  நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தித் தருவது போன்றவை மிகவும் முக்கியமானவையாகும். இந்த விஷயத்தில், தோல் துறைக்கான ஆதரவை வழங்குவதில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), வகித்து வருகின்ற பங்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது.

தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறன்களைப் பயன்படுத்துவதில் பலவீனம் இருக்கின்றது. மாநிலத்தில் கணிசமான முதலீடுகள், பொறியியல் மற்றும் அறிவியல் கல்வியில் செய்யப்பட்டிருப்பதால், புதுமைகளைக் காணுகின்ற வகையில், பல்கலைக்கழகம் – தொழிற்சாலைகள் இடையிலான உள்ளூர் அளவிலான கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, வெறுமனே வளஒதுக்கீடு என்பதாக மட்டுமே, அரசின் தலையீடுகள் இருக்க முடியாது. மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வியை மறுசீரமைக்க வேண்டிய தேவை அரசிற்கு இருக்கின்றது.

உற்பத்தித்திறன்

பொதுவாக வியட்நாம், சீனா போன்ற போட்டி நாடுகளை விட உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வேறுபாடுகள், தொழிலாளர்களின் திறன் நிலைகளை விட, தொழில்துறை மற்றும் செயல்முறை பொறியியலில் இருக்கலாம். மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இருக்கின்ற தொழில்துறை சார்ந்த  பொறியியல் துறைகளால் எந்த அளவிற்கு இந்த முயற்சியை ஆதரிக்க முடியும் என்பதை ஆராய்வது சிறந்தது. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான தொழில்துறை சார்ந்த பொறியியல் தீர்வுகள், குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள போட்டியைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள உற்பத்தி குறித்த நிறுவன தனித்தன்மையை அங்கீகரிக்க வேண்டும். ஒரே நிறுவனம் வெவ்வேறு பாணிகளை, ஒரே நேரத்தில் வெவ்வேறு சந்தைகளுக்காக உருவாக்குவது என்று திருப்பூர் பல வகையான ஆடைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. போட்டியிடும் நாடுகளில் உள்ள நிபுணத்துவத்திற்கு மாறாக, பல திறமைகளுக்கு அதிக முக்கியம் அளிக்கின்ற வகையிலே, திறமைகளுக்கான தேவைகள் இருக்கின்றன. தொழிற்பேட்டை நிலை அளவிலே, பயிற்சிக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், மோசமான தரநிலைகளும், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் அத்தகைய விருப்பங்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைமையும்  இன்னும் நீடித்தே வருகின்றன. எனவே சரியான மதிப்பீடுகளின் அடிப்படையிலான சான்றளிப்புகள்  முக்கியமாகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் விரிவாக்கப்படுவதற்கு முன்னதாக, மாறுகின்ற உற்பத்தி முறைக்கு எந்த அளவிற்கு அத்தகைய திறன் ஊட்டமளிக்கிறது என்பதுவும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

பயனர்-தயாரிப்பாளர் வலைப்பின்னல்கள் இல்லாமை

நிறுவனங்களுக்கான புதுமை மற்றும் கற்றலுக்கான முக்கிய ஆதாரமாக, சங்கிலியில் உள்ள பிற நிறுவனங்களுடன் உருவாக்கப்பட்ட சந்தைக்கு அப்பாற்பட்ட வலைப்பின்னல்கள் அமைந்துள்ளன. ஏற்றுமதியாளர்கள், பக்குவப்படுத்துபவர்கள் மற்றும் துணை ஒப்பந்த நிறுவனங்களுக்கிடையில் இதுபோன்ற வலைப்பின்னல்கள் ஒரு தொழிற்பேட்டைக்குள்ளே இருந்தாலும், பொருட்களை வழங்குபவர்கள் மற்றும் பயனர்கள், ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இடையே அத்தகைய வலைப்பின்னல்கள் இருக்கவில்லை. இந்த வலைப்பின்னல்கள் தொழிற்பேட்டை-நிலையில் உள்ள உறவுகளை மீறுகின்றன. பெரும்பாலும் நிறுவனங்கள் பிராந்தியங்களுக்கிடையிலான அத்தகைய உறவுகளை உருவாக்கும் நிலையில் இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஆடை உற்பத்தியாளர்களுடன் எப்போதாவது தொடர்பு வைத்திருக்கின்ற வர்த்தகர்களின் லாபியால், பருத்தி நூல் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அண்டையில் உள்ள கோயம்புத்தூர் பிராந்தியத்தில் நூற்பு இயந்திர திறன்கள் இருந்தபோதிலும், இயந்திரங்கள் தற்போது பெரும்பாலும் இறக்குமதியே செய்யப்படுகின்றன. இது கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திறனை பலவீனப்படுத்தி இருக்கிறது. அதேபோன்று சென்னை பிராந்தியத்தில், ஆட்டோ பாகங்கள் மற்றும் மென்பொருள் சேவைத் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால் இந்த இரண்டு துறைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கிடையே எந்தவிதமான தொடர்புகளும் இருக்கவில்லை. உற்பத்தியில் மென்பொருளுக்கான பங்கு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இரு துறைகளுக்கும் இடையிலான உற்பத்தித் தொடர்புகளை அதிகரிப்பதற்கான வலுவான தேவை இருக்கிறது. மென்பொருள் சேவைப் பிரிவுகளின் உள்ளீடுகள் எம்எஸ்எம்இ தொழிற்பேட்டைகளுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். துறைரீதியான அணுகுமுறையிலிருந்து விலகி, துறைகளுக்கு இடையிலான அணுகுமுறை, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான பிராந்திய அணுகுமுறைகள் நோக்கி நகர்வது போன்றவை தேவைப்படும்.

சமூக உள்கட்டமைப்பின் புறக்கணிப்பு

உழைப்பாளர்களைப் பொறுத்தவரை, வாங்கும் திறனுக்கேற்ற உண்மையான ஊதியங்களே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், நிறுவனத்தின் லாபம் என்பது பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஊதியத்தை வழங்குவதைப் பொறுத்தே இருக்கிறது. ஆகவே, நிறுவனங்கள் திறமையான தொழிலாளர்களை குறைந்த செலவில் பெறுவதற்கு, வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை அரசு வழங்குவது உதவும். ஒப்பீட்டளவில் வலுவான பொதுக் கல்வி மற்றும் சுகாதார அமைப்பு மாநிலத்தில் இருக்கின்ற போதிலும், அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தனியார் பள்ளிக்கூடங்களையும், சுகாதார வசதிகளை வழங்கி வருகின்ற தனியார்களை மட்டுமே நம்பியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. தரமான சுகாதாரத்தை அல்லது கல்வியை பொதுநிறுவனங்கள் (எ.கா. ஊழியர்களின் மாநில காப்பீட்டு மருத்துவமனைகள்) வழங்குவதில்லை என்ற எண்ணமே பெரும்பாலான குடும்பங்களிடம் தற்போது இருந்து வருகிறது.  அதன் விளைவாக, தொழிலாளர் குடும்பங்கள் உடல்நலம் மற்றும் கல்விக்காக கணிசமான தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. அவர்களுடைய உண்மையான ஊதியங்கள் குறைவதற்கே அது வழிவகுக்கிறது. அதிகரித்து வருகின்ற நிலத்திற்கான செலவுகள் மற்றும் பெரிய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பது ஆகியவை வீட்டு வருமானத்தில் கணிசமான செலவை ஏற்படுத்துகின்றன. நீண்டகால வேலைகள் இல்லாதிருப்பது, சிறந்த பணிநிலைமைகளைக் கோருவதற்கோ, பயிற்சியில் முதலீடு செய்வதற்கோ தொழிலாளர்களிடம் இருக்கின்ற தூண்டுதலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவே இருக்கிறது.

திருப்பூரில் அரசு-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் தொழிலாளர்களுக்கான விடுதிகளைக் கட்டுகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் நிலத்தின் அதிக விலை காரணமாக அந்த முயற்சி வெற்றி பெற இயலாமல் போனது. பொருளாதார மந்தநிலையின் காரணமாக நிலத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு அது தொடர்பாக புதிய முயற்சியைத் தொடங்குவதைப் பரிசீலிக்கலாம். உழைக்கும் குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள மாநிலத்தில் இருக்கின்ற  அனைவருக்குமான பொது விநியோக முறை, இத்தகைய தொழிற்பேட்டைகளில் இருக்கின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடையில் நிலைத்திருக்கவும், விரிவாக்கப்படவும் வேண்டும்.

உள்கட்டமைப்பு

தொழிற்சாலை இடங்களுக்கான அதிக விலை காரணமாக வருமானம் குறைவது, பல நிறுவனங்களின், குறிப்பாக மதிப்பு சங்கிலியின் கீழ்கடைசியில் உள்ள நிறுவனங்களின், உறுதியான நம்பகத்தன்மையைக் குறைப்பதற்கே வழிவகுக்கும். இந்த களத்தில் மாநில அரசால்  தலையிட முடியும். அதேபோல், மூலப்பொருட்கள் அல்லது சரக்குகளை சேமிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், உள்ளீட்டு விநியோகங்களை ஒழுங்குபடுத்துவது போன்றவை தனிப்பட்ட சிறுநிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதற்கு உதவும். ஆனால் இத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கும் போது, நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் குறிப்பிட்ட தொழிற்பேட்டைகள் செயல்படும் சூழல்களின் தன்மையைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழிற்பேட்டைகளும், சூழல்ரீதியான பாதகமான பொருளாதாரங்களும்

பெருமளவில் தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்துவதையே பெரும்பாலான முனைப்பான தொழிற்பேட்டைகள் நம்பியிருக்கின்றன. மாசுபடுத்தும் கழிவுகளை அவை பெரும்பாலும் உருவாக்குகின்றன. அந்தப் பகுதியில் சுகாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பாழ்படுத்துபவையாக அவை இருக்கின்றன. திருப்பூரைப் பொறுத்தவரையில், தொழிற்பேட்டையில் திரவ வெளியேற்றமே இல்லாமல் செய்வதற்கான தொழில்நுட்பம் இருந்தாலும், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான உற்பத்திக்கு அதைப் பயன்படுத்துவதற்கு ஆகின்ற அதிகச் செலவுகளை, நிறுவனங்களால் வாங்குவோரிடம் தள்ளி விட முடியாது. இது தொடர்பாக நிறுவன ஆதரவு இல்லாதிருப்பதையும்,  மேம்படுத்துவதற்காக சூழல் முத்திரைகளைப் பயன்படுத்த முடியாததையும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய ஆதரவு கிடைக்காததால், செயல்முறைச் செலவுகளைக் குறைக்கின்ற வகையில், சாயமிடுதல் போன்ற தங்களுடைய நடவடிக்கைகளை பெரும்பாலும் மாசுபாட்டைக் கண்காணிப்பது குறைவாக இருக்கின்ற புதிய இடங்களுக்கு நகர்த்துவது போன்ற சட்டத்திற்குப் புறம்பான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இந்த விஷயத்தில் அரசு தலையீட்டின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது.

சுருக்கம் 

தொழிற்பேட்டை முனைப்பைக் கட்டுப்படுத்துகின்ற பெரும்பாலான நெருக்கடிகள் திருப்பூரின் அனுபவத்திலிருந்து பெறப்பட்டிருந்தாலும், பல காரணிகள் மற்றபிற தொழிற்பேட்டைகளிலும், துறைகளிலும் செயல்படுவதாகவே இருக்கின்றன. குறைந்த வரிகள், மானிய விலையில் நிலம் அல்லது பிற உள்ளீடுகளை வழங்குவதன் மூலம், மூலதனத்தை ஊக்குவிப்பது போன்ற தலையீடுகளில் இருந்து அரசு விலகிச் செல்ல வேண்டும் என்று இந்த குறிப்பு கேட்டுக் கொள்கிறது. மேலும், புதிய நிறுவனங்கள் அல்லது புதிய நிறுவன அளவிலான உத்திகள் மூலமாக உருவாகக்கூடிய வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கிடையிலான இணைப்புகளுக்கும்,  அத்தகைய இணைப்புகளை உணர்ந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளும் வகையில் அரசின் தலையீட்டிற்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சமூக உள்கட்டமைப்பில் முதலீடுகளுக்கான  தேவையைத் தவிர, மாநில அரசுக்கு கூடுதல் ஆதாரங்களையும் தெளிவாகக் கோருவதாகவே அத்தகைய தலையீடுகள் இருக்கின்றன. அதன் விளைவாக, மையமாக்கப்பட்டிருக்கும் வளங்களுக்கான அணிதிரட்டலில் இருந்து விலகி, இந்த அணிதிரட்டப்பட்ட வளங்களை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையில் இன்னும் சமமாகப் பகிர வேண்டிய நிலை நோக்கி நகர்வது தேவைப்படும்.

மிக முக்கியமாகச் சொல்வதென்றால், உள்ளூர் நிலைமைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வளர்ச்சிப் பாதைகளைக் கட்டமைப்பதற்கான மாநில அரசிடமிருக்கின்ற தலையிடுகின்ற திறனும், ஊக்கமும் சமீபத்திய கொள்கை மாற்றங்களால் மேலும் குறைக்கப்பட்டு விட்டன. இவ்வாறான மாற்றங்கள் பிராந்திய அளவிலான எம்எஸ்எம்இ தொழிற்பேட்டைகளின் முனைப்பிற்கான ஆதாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.8 தன்னாட்சிக்கான இடத்தைப் பெறுவதற்காக மத்திய  அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் இருந்து, தரமான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான மாநில அளவிலான திறனுள்ள தலையீட்டை  விலக்கி வைக்க முடியாது.

MIDS - Madras Institute of Development Studies

எம். விஜயபாஸ்கர்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை > [email protected]

2020 ஜூன்

மேற்கோள்கள்

1 Indian SME clusters. SIDO Online.

2 This was undertaken as part of a larger study titled ‘Manufacturing Matters’, coordinated by the Indira Gandhi Institute of Development Research (Mumbai), to look into constraints to employment generation through industrialisation across key sectors in India.

3 E.T.B. Sivapriyan. 2020, February 23. but some have to do with national and global-level factors Tiruppur knitwear hub in doldrums. that transcend sectors. Journalist reports from Chennai, Deccan Herald.

4 Nidheesh M.K. 2020, January 29. Fear and loathing in India’s small factories. Livemint.

5 Sowmiya Ashok. 2020, May 1. A tense textile hub spins out of control. Livemint.

6 Coronavirus’ impact on India’s auto sector. 2020, April 10. ET Markets.

7 Mariana Mazzucato. 2013. The entrepreneurial state: Debunking public versus private sector myths. Anthem.

8 Aanchal Magazine. 2020, June 2. One in three small businesses close to winding up, says survey. The Indian Express.

நன்றி

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தங்களிடம் இருக்கின்ற நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கித் தந்த திருப்பூர் பின்னலாடை தொழிற்பேட்டையில் உள்ள பல தொழில்நிறுவனங்களுக்கும், இந்த குறிப்பின் வரைவின் மீது பயனுள்ள கருத்துகளை வழங்கிய ஜெ.ஜெயரஞ்சன் அவர்களுக்கும் கட்டுரையாசிரியர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

கோவிட்-19 தொடர்

தொற்றுநோயின் தாக்கம் மற்றும் கடுமையான பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நாம் தற்போது இருந்து வருகிறோம். அசாதாரணமான கொள்கை நடவடிக்கைகளை இந்த நிலைமை கோருகின்ற போதிலும், புதிய ஆராய்ச்சி திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான கூடுதல் கால அவகாசம் நம்மிடம் இல்லை. கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், பிரச்சனைகளின் மீதான உடனடி பிரதிபலிப்பு மற்றும் தீர்விற்கான  தேவையை இப்போதைய நிலைமை ஏற்படுத்தி இருக்கிறது. தறுவாய்க்கேற்ற கொள்கை ஆவணங்களைக் கொண்ட இந்த கோவிட்-19 தொடரின் மூலமாக, முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சிக்கல்களைப் பற்றி சிந்தித்து, சமகால சவால்களுக்கேற்ப தங்களுடைய பணியைத் தகவமைத்துக் கொண்டு, ஒன்றோடொன்று தொடர்புடைய துறைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் இடையிலான இணைப்புகள் மீது கவனத்தைச் செலுத்தி வருகின்ற சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்குழு,  குறுகிய மற்றும் நடுத்தர கால கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. தொற்றுநோய்க்குப் பிந்தைய சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு  வடிவமைப்பதற்கான பயனுள்ள உள்ளீடாக இந்தத் தொடர் இருக்கும்.

 பி.ஜி.பாபு

இயக்குனர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

No photo description available.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தறுவாய்க்கேற்ற கொள்கை ஆவணம் எண் 3/ ஜுன் 2020

கோவிட்- 19 தொடர்