எதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன்.
ஒரு கவிதையை எடுத்து கரப்பான் பூச்சியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதைப்போல செய்யும் வேலை எனக்கு சரிவரத் தெரியாதென்பதால் வாசகனாக அணுகினேன்.
புதர்கொடிகளில், இலைகளுக்கு அடியிலும்
சில இலைகளுக்கு மேலேயும் பூத்தும் காய்த்தும் வாடியும் இருந்த வரிகளை
கொய்தெடுத்து என் மேசையில் வைத்துப் பார்த்தேன்.
சடவு தொகுப்பு
சலிப்புற்ற வாழ்வின் அம்சங்களை பதிவு செய்யும் வரிகளைக் கொண்டிருக்கின்றன.
அதிலுள்ள காட்சிக் குவியல்களுக்குள்
ஒவ்வொன்றும் தனிக்கவிதை.
என் வசதிக்காக காதல் பக்கங்களை மட்டும்
வெட்டி ஒட்டியிருக்கிறேன்.
உங்களுக்கும் பிடிக்கலாம்
வாசித்துப் பாருங்கள்
உருளும்போதும்
கையிலெடுக்கும்போதும்
கூழாங்கல் அழகுதான்
அதற்காகப் பாறை பிளவுபட்டிருக்கவோ
நதி தடம் மாறியிருக்கவோ
முகத்துவாரத்தில் உப்பாகவோ
நாம் தேங்கியிருக்க வேண்டாம்.
தாழப் பறந்த பறவையின்
ஈர அலகில் சொட்டுவது
நம் அன்பு தான் என்கிறாய்.
தன்னியல்பாக காளானைப் போல விரிகிறது
செயற்கை புன்னகை.
தூக்கி எறிந்த அல்லது
தூக்கி எறியப்பட்ட பரிசு
மீண்டும் நகர்ந்து வரும்போது
தடவிக் கொடுக்கிறேன்
நாய்க்குட்டியாய் அது வாலாட்டும் போது
கொஞ்சாமல் இருக்க முடியவில்லை.
காற்றில் நெடுநேரம்
தன்னிருப்பை நிலைநாட்டியது
மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைந்து
காதல் சின்னத்தை வரைந்தது
இவ்வளவு தூரம் போகுமென்று
நாமே கூட எதிர்பார்க்கவில்லை.
இப்போது நம்மைவிட்டு
நாம் பிடிக்க முடியாத உயரத்திற்குப்
போய் கொண்டிருக்கிறது.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
வேகமாகக் கீழிறங்கி
மரக்கிளையில் சிக்கி ஆடுகிறது.
மரமேறத் தெரியாத நாம்
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அன்பின் பட்டத்தை.
அன்பின் சுரண்டல்கள் மீது
அவர்கள் நெய்தீபம் ஏற்றினர்
அவர்களைச் சுற்றி
“நூறு மலர்கள் மலர்ந்தன
நூறு கருத்துகள் போட்டியிட்டன”.
இப்போது அவர்களின் காதல்
அமிலத்தால் தீண்டப்பட்ட மீனாய்
கரை ஒதுங்கியுள்ளது.
நேற்று வந்த அதே வழியில்
நேற்று கொண்டு வந்த அதே நாளைத் தானே
தூக்கி வந்திருக்கிறாய்?
ஒரு நெற்றி முத்தம் போதுமென்ற
அன்பின் கிளை மீதே
அடிக்கடி வந்தமர்கிறது
பெரும் பிணக்கைத் தின்று செரிக்கும்
நம் சிறு பறவை.
அந்த நொடியில் நம்மை மறந்து
நாம் புன்னகைத்த போது
எடுத்த புகைப்படத்தை தான்
இன்றுவரை எல்லாவற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.
மெளன அரக்கால் முத்திரையிடப்பட்ட
ரகசியங்களை உடைக்கத் தானே நீள் முத்தம்?
நீண்டு கிடந்த பாயை
மூலையில் சுருட்டி வைத்ததும்
வெறுங்கையோடு வந்து
வெறுங்கையோடு திரும்புவதும் நீ தானா?
சரியாக அடைக்காத கனவு
இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது
ராட்சஷ பிம்பத்துடன்.
கவனம் துளியுமின்றி வழுக்கி விழுந்து
கேட்பாரற்றுக் கிடக்கும் அன்பை
அழுகி நாறும் முன் அப்புறப்படுத்தவென்றே
அவசியம் இருக்கக்கூடும்
உங்களிடமும் ஒரு கடைநிலைப் பணியாள்.
உதிர்ந்த தன் இறகைப் பொருள்படுத்தாமல்
வானுயரும் பறவையின்
இயல்பானதொரு புன்னகைக்கு இருவரும் ஏங்குகிறோம்.
வரிவரியான நம் உதடுகளின்
பள்ளங்களில் தியானிக்கின்றன
நிராசைகளின் பிசாசுகள்.
சட்டையாய்க் கழற்றி
நினைவுகளில் தொங்கவிடப்படுகிறது
இன்னொரு நாள்.
வாழ்வில் ஒரு புறம் சடவுகள் வெளிப்பட்டாலும்
அந்த சலிப்பின் இருப்பிடத்திலேயே இரசனைகளும் வெளிப்படுகின்றன
அப்படியெனில் அவை கவிதைகளிலும் நிகழாமலா போகும்
கவிஞரின் கவிதைகளிலும் நிகழ்கின்றன.
எங்கு எப்பொழுது தொடங்கியதோ
அங்கேயே ஒரு பட்டாம்பூச்சியாய்
சுற்றிக் கொண்டிருக்கிறது உன் காதல்.
சற்றுநேரம் இளைப்பாறிப் போகலாமென
உன் காதல் திண்ணையில் கண்ணயர்ந்தவனை
இறகாய் வருடுகிறது உன் பார்வை.
பெருமழை முடிந்ததும்
முற்றத்து மரத்தை லேசாக உலுப்பு
துளிகளாக உன்னை மீண்டும் நனைப்பேன்.
ஆணிவேர் வரை வெயில் உலர்த்தும்
சுவாசம் உன் புன்னகை.
மேலும் இந்த தொகுப்பிலுள்ள கவிதை வரிகள்
ஓர் இரவு
கைப்பிடிச் சுவற்றில் தத்திதத்தி நகர்கிறது.
தூக்கம் அப்பிய முகங்களுக்கு
கதவு கணங்களின் நெடுந்தாள்.
சரி ஏதாச்சு குற்றம் குறை ;(இல்லையெனில் உங்களுக்கு தூக்கம் வராதே
கொஞ்சம் வாசிக்க சலிப்பாக இருந்தது
ஆனால் மேலே உள்ள கவிதைகள் சலிப்பின் வழியாகவே கிடைத்தவை.
அன்பு வாழ்த்துகள் தோழர் மா. காளிதாஸ்.
குமாரன் விஜயகுமார்
நூலின் பெயர் : சடவு [கவிதை தொகுப்பு ]
ஆசிரியர் : கவிஞர் மா. காளிதாஸின்
பதிப்பகம் : மௌவல் பதிப்பகம்
விலை : ரூ 130/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.