சிறுகதைச் சுருக்கம் 64: ம. காமுத்துரையின் *இந்த பந்தமும் பாசமும்* சிறுகதை

Ma. Kamuthurai (ம. காமுத்துரை) Short Story Intha Pandamum Payasamum Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Dayகதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

சாத்திரம் சம்பிரதாயங்கள் உடைபடுவதும் உடைக்கப்படுவதும் வழக்கமாய் இருந்து வருவதுதான். ஆயின் யார் உடைக்க வேண்டும் எப்படி உடைபட வேண்டும் என்பதில் இவர் தீர்மானமாக உள்ளார்.

இந்த பந்தமும் பாசமும்
ம. காமுத்துரை

அவள் கும்பலை அடைந்தபோது கூட்டத்தினர் அண்ணன், தம்பி இருவரையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆக்ரோஷமான வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்திருக்கும் போலிருக்கிறது. இவளைப் பார்த்ததும் கும்பல் கொஞ்சம் சலனப்பட்டது. இவளுக்கு யாரிடம் முதலில் பேசுவது என்று தெரியவில்லை. உடன் பிறந்த சகோதரனிடமா? உடன் பிறவாச் சகோதரனிடமா? பொதுவாக கத்தினாள்.

“இப்ப என்னா நெனச்சு இப்பிடி சண்டை போடுறீங்க. பெத்தவரோட கடைசி காரியத்தில் கூட இந்த மாதிரி சண்டை போடுறது உங்களுக்கே அவமானமா இல்ல. . . வெக்கமா தெரியல? ஏங்க பெரியவங்க யாருமே இல்லியா? பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே” கூட்டத்தை பார்த்துக் கேட்டாள்.

கூட்டத்தில் ஒரு பெரியவர் “ஏம்மா எவன் நாங்க சொல்றத கேக்குறான், அதான் அப்பவே வீட்லே எளையவன்தாண்டா கொள்ளிவைக்க வேணும்னு சொல்லி சமாதானப்படுத்துனம். இங்கேயும் வந்து கலாட்டா பண்ணுனான்னா நாங்க என்னதான் பண்றது? எங்க மரியாதைய நாங்க காப்பாத்திக்க வேணாமா” என்று பதில் கூறினார்.

“அப்பறம் என்ன மாப்ள, நீ கொள்ளி வையியா, எவெ மறிக்கிறான்னு பாப்பம். ஊர்க்காரங்ள மீறுவான்னா அவெ என்ன பெரிய கொம்பா?” இளையவனுக்கு சம்பந்திகள் சூடேற்றினார்கள்.

“சும்மா வப்பானா, வைக்கச் சொல்லு பாப்பம். எங்க வச்சிருவானா?” மூத்தவனுக்கு அவன் சம்பந்திகள் பரிந்து கொண்டு வர.

“லேய் பெரியவனே, என்னடா சலம்பல் பண்ற. அப்பனுக்கு எளையவன்தாண்டா கொள்ளி வைக்கணும். நீ பாட்டுக்க எடைல வந்து கலாட்டா பண்றயே” பொறுமையிழந்த ஒரு பெரியவர் சலிப்பாக கூற.

“சிய்யா நீங்க பாட்டுக்கு போங்க. ஒங்களுக்கு ஒரு வெவரமும் தெரியாது. இவே எப்பிடிபட்டவன், இவெ ஆத்தா எப்படிப்பட்டவள்னு உங்களுக்கு தெரியாது”.

“ஏய் என்னப் பத்தி பேசு, என் ஆத்தாளப் பத் பேசுன அம்புட்டுதே.”

“அப்பிடித்தாண்டா பேசுவே, ஏம் பேசக்கூடாது. ஒண்ணுந் தெரியாத எங்கப்பன ஏவாரத்துக்காக ஊர் ஊர் வந்தவர மயக்கி மடிலே போட்டு ரெண்டாந்தரமா ஆகிட்டாளே, அவளப்பத்தி பேசுனா என்ன கொறைஞ்சி போகுமோ. அப்பிடித்தாண்டா பேசுவே”.

பேசிக்கொண்டிருக்கும்போதே மூத்தவன் விசும்பிக் கொண்டுவந்து அவன் முகத்தில் ஓங்கி குத்த, மூக்கு உடைந்து இரத்தம் வரவும், இளையவனின் பின்னால் நின்றிருந்த அவன் சம்பந்திகள் மூத்தவனைச் சூழ மூத்தவனின் வகையறா இவனுக்கு ஆதரவு தர ஒரே அடிதடியாக மாறியது.
ஒருவரையொருவர் கட்டிப்புரண்டு கொண்டிருந்தனர்.

சிதையைப் பார்த்தாள். எருவட்டி அடுக்கி வைத்கோல் போர்த்தி மண்ணால் மெழுகப்பட்டிருந்தது. அதைப் பார்க்க பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதன்கால் பக்கம் போய் அமர்ந்து தலையை முட்டி அழுதாள். அப்பன உள்ள வச்சிட்டு இவனுக சண்டை போடுறானுகளே உண்மையிலேயே இவனுக இவருக்கு பொறந்தவனுகதான?

எழுத்தாளர் ம.காமுத்துரை

காலையில் ஒரு சண்டை வந்து சமாதானம் பண்ணப்பட்டது. தந்தையின் பிணம் தன் வீட்டில் இருக்கிறது என்பதற்காக மூத்தாளின் மகன் இளைய குடியாளையும் அவளது மகனையும் உள்ள நுழையவிடவில்லை. தாயும் மகனும் வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டார்கள். பின் அக்கம் பக்கத்தார் பேசி வழிவிடச் சொன்ன போது இளையாளின் மகன் உள்ளே போக மறுத்தான். அவன் தாய் மட்டும் கணவனின் முகம் பார்க்க கதறிக் கொண்டு போனாள்.

இளையவன் தன் சம்பந்தி சகாக்களுடன் அவனும் தனியாக நீர்மாலை எடுத்தான், கோடி கொண்டு. ஊரே அதிசயப்பட்டது, ஒரு பிணத்திற்கு இரண்டு நீர்மாலையா? பாடை செய்ய ஆட்களை இளையவன் கூட்டி வந்தபோது அங்கிருந்த பெரியவர்கள் தடுத்து ஒரே பாடையை இருவரும் தூக்க நாங்கள் ஆவன செய்கிறோம் என்ற பிறகே அந்தப் பிரச்சனையும் சுமுகமாகியது.

பாடைக்கு முன்னால் இரண்டு கொள்ளிச் சட்டிகள் புகையத் தொடங்கியதும் மீண்டும் கூட்டம் கூடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கூட்டத்தில் சொன்ன தாய்க்கு தலைமகன், தந்தைக்கு இளையமகன் என்ற பாடத்தை இறுதிவரை மூத்தவனும் அவனை சார்ந்தவர்களும் ஏற்கவேயில்லை. சமாதானத்தை ஏற்காமல் தாறுமாறாய் திட்டியவன் பிண ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. அப்போது ஓடிய மூத்தவன் இப்போது சம்பந்திகளோடு மயானத்திற்கு வந்திருக்கிறான்.

முதல் தாரத்திற்கு ஒரு குழந்தை இருக்கும்போதே சின்னம்மாவை வெளியூரில் வியாபாரத்திற்கு போகும்போது சிநேகிதம் பிடித்து சேர்த்துக் கொண்டார். பின்னால் திருமணம் நடந்தது. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூத்தாளுக்கு மீண்டும் ஒரு பெண்தான் பிறந்தது. இவர்கள் தலையெடுக்க ஆரம்பித்த பின்னே இவ்வளவு சண்டையும். குடும்பம் இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளாமல் வேறு வேறு ஊரில் பிரித்து வைத்ததுதான் இந்த சண்டை வரக்காரணமோ?

மீண்டும் சிதையைப் பார்த்தாள். மெழுகப்பட்ட அந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் ஓரமாக கொள்ளிச் சட்டி கேட்பாரற்று புகைந்து கொண்டிருந்தது. சண்டை இன்னமும் முடியவில்லை.

மூத்தவன் தன் சம்பந்திகளோடு கம்பும் கழியுமாய் சண்டை போட மயானத்திற்கு வந்திருக்காரு என்ற செய்தி கேட்டு அவளோடு ஓடிவந்த பெண்கள் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்கள். இவர்களைப்போலவே தானும் காடு கரையும் வீடுமே சொந்தமென்று இருந்திருந்தால் இந்நேரம் இரண்டு மூன்று பிள்ளைகளுடன் தானும் நின்றிருப்பாள். ஆனால் தந்தை தன்னை டீச்சராக ஆக்க வேண்டுமென்று வீட்டின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது படிக்க வைத்தார்.

“ஆயி நீ நல்லா படிச்சு, பேருக்கு புத்திசொல்லணுமாயி. நீதே தாயி நம்ம குடும்பத்திலே புது விளக்கேத்தி வைக்கப் போறே!”

அப்படிப்பட்டவரின் பிள்ளைகள் இப்போது சாதாரண கொள்ளி வைக்கும் பிரச்னைக்காக அடிதடி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லை. இதை அனுமதிக்க முடியாது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து கொள்ளிச் சட்டியிருந்த தீப்பந்தத்தை எடுத்து தகப்பனை வலம் வந்தாள்.
இதைப்பார்த்ததும் பெண்கள் ஓவென அலற,

சங்கூதும் நாவிதன் வேடிக்கை பார்ப்பதை விட்டு ஓடி வந்தான். “தாயி, என்ன தாயி, நீ கொள்ளி வைக்கற ஆகாதே, தாயி கொடம் கூட ஒடைக்கல” அவன் சொல்லி முடிக்கும் முன் பந்தத்தை வைத்தாள்.

“அடிப்பாவி, என்னடி இது அநியாயம். கன்னி கழியாதவ மயானத்துக்கே பொணங்கூட வரக்கூடாது. வர்றதுமில்லாம நீயே கொள்ளி வச்சிட்டியேடி” ஒருத்தி கத்தினாள். சண்டைக்காரர்கள் திக்பிரமை பிடித்தபடி நிற்க சிதையில் புகை வரத்தொடங்கியபோது அவள் சொன்னாள். “அத்தே இப்ப என்னை பாவம் பிடிக்காது, இந்நேரம் நான் கொள்ளி வைக்காட்டி எத்தனை கொலை விழுந்திருக்கமோ?”

“பேசுவடி பேசுவ, ஏன்னா பொட்டக்கழுத ஒன்னை உங்கப்பன் படிக்க வைச்சாம்பாரு, அதுக்கு பேசுவ. சாஸ்திரம் சம்பிரதாயம் கூட தெரியாம அப்பிடி என்னாடி நீ படிச்சு கிழிச்ச”.

“ஒங்க சாஸ்திரம் சம்பிரதாயத்தால் இப்ப என்னா நடக்க இருந்திச்சு பாத்தியா? கொள்ளி வச்சவன்தான் அதிகாரபூர்வமான பிள்ளைங்கவும் அவனுக்குத்தா அதிக உரிமைன்னு வைக்கவும் அவனவன் எத்தனை கொள்ளி வைக்க வரான். அப்படி ஒரு பக்கம் சாயிர சாஸ்திர சம்பிரதாயங்கள நீங்களே வச்சு பூஜை பண்ணுங்க, எனக்குத் தேவையில்ல” என்றபடி ஆற்றில் இறங்கினாள் முழுக்கு போட.

@செம்மலர், ஜனவரி -1985

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.