ஒரு மெல்லிய இசையைப்
புதிதாகக் கேட்டுப்
பிடித்துப்போவது போல
இருந்தது
நம் முதல் சந்திப்பு!
நேசம் என்பது
ஒற்றைச் சொல்…
ஆனால்,
அது வியாபித்துக் கிடப்பது
பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்!
பவனிவரும்
பால்வீதிகளிலும்!
நதி இறுகிக் கல்லாகும்…
கல் கரைந்து கலந்து நதியாகும்…
ஆவல் வற்றி ஆவியாகும்…
ஆவி கசிந்து ஆழியாகும்…
வனமும் வாழத்தோதாகும்…
வாழ்வோ ஒடுங்கிச்
சிறுதுளியாகும்…
இந்தப்பொல்லாத நேசத்துள்
நுழைந்து கொண்டால்!
நாட்பட்டாலும்
பழுதடையாமல்
பவித்திரமாய் இருக்கிறது
என் இதயமெனும்
வெற்றுக் கிண்ணத்தில்
நீ ஊற்றிய
பேரன்பின் ரசம்!
இருத்தலில் யுகமொரு மின்னலாகும்…
மறைதலில் மின்னலே
யுகமாகும்…
நேசமே….
உன் மாயத்தில்
மாய்ந்தழிந்தது மனது!