மானுடம் கண்ட மகத்தான புரட்சி – நூல் அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டு கண்ட மகத்தான ரஷ்ய மக்கள் புரட்சியை, ஆயிரம் பக்கங்களில் விவரித்து எழுதக்கூடிய செஞ்சரித்திரத்தை, 270 வண்ண துண்டு படக்காட்சிகள் மூலம் ஒரு வரலாற்றை யாவரும் சுலபமாக வாசித்து புரிந்து கொள்ளும் வண்ணம் சுவாரசியமாக தொகுத்து தந்துள்ளார் ஓவியக் கவிஞர் ஸ்ரீ ரசா அவர்கள் . துரிதங்களின் காலமல்லவா காலத்திற்கேற்ற கோலமென்றும் கொள்ளலாம்.
ஆகாவென்று எழுந்தது பார் ரஷ்ய யுகப் புரட்சி என்று பாரதி பாடியதிலிருந்து துவங்குகிறது. சின்ன சின்ன உரையாடல்களாக, வண்ண வண்ண படங்களுடன், பால்ய காலத்தில் ராணி காமிக்ஸ் என்ற புத்தகத்தில், சித்திர வரைபடத்தில் துப்பறியும் படக்கதைகளை படித்த ஞாபகங்களை கிளறி விடுகிறது.
காலவரிசைக் கிரமப்படி ஒவ்வொரு செய்தியையும் ரத்தினச் சுருக்கமாக நமக்கு தந்துள்ளார். மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய மூலதனம் ஒரு கருத்தியல் ஆயுதமென்றால் ,அதன் பரிசோதனைக் களம் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சியே, எளிய மக்களுக்கான ஒரு பொன்னுலகை பூக்கச் செய்த, எல்லாம் இழந்த பிறகும் அதை புதிய தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியிருக்கிறது. பஞ்சம், பசி, பட்டினி, போராட்டம், புரட்சிக்கான வரலாற்றை வறட்சியாக சொல்லாமல், அழகியலாக சொல்வதில் அனைத்து தரப்பின் கவனத்தையும் கவருகிறார்.
17 ஆம் நூற்றாண்டில் துவங்கிய ஜார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி, மக்கள் படும் சொல்லொண்ணாத் துயரங்கள். மக்கள் கிளர்ச்சிகள், 1825 இல் நடந்த தோற்கடிக்கப்பட்ட ராணுவப் புரட்சி, புஷ்கின், கோகல், பிளக்கனோவ், பகுனின் என எண்ணற்ற தலைவர்களின் புரட்சிகர நடவடிக்கைகள். நரோத்னிக்கள், பிளக்கனோவ் இடையேயான கருத்து முரண்பாடு, 1870 இல் பிறந்த இளந் தோழன் லெனின், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை படித்து தத்துவத்தை உள்வாங்கி கட்சியை கட்டுதல். பிரச்சாரம் செய்தல், வெகுண்டெழுந்த ஜார் அரசாங்கம் லெனினை நாடு கடத்துதல்,போல்ஸ்விக்குகள் மென்ஸ்விக்குகளின் தத்துவார்த்த பிரச்சனைகள் ,டிராட்ஸ்கியர்கள், புகாரிகளில் திரிபுவாதங்கள் என வரிசைக் கிரமமாக சின்ன சின்ன பத்திகளில் முழுமையான வரலாற்றை நுணுகித் தந்துள்ளார்.
ஒரு பிரமாண்டமான திரைப்படத்தின் முன்னோட்டம் மாதிரி ரசனையாக இருக்கிறது. இதன் குறிப்புகளை வைத்துக் கொண்டு ரஷ்யப் புரட்சியின் விரிவான வரலாற்றை எழுதலாம். எளிய குறிப்புகளில் கூட வலியசெய்திகளை சொல்ல முடியும் என்பதற்கு இந்நூல் உதாரணமாக திகழ்கிறது. பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்களை ஓவியங்களுடன் இணைத்தது தோழர் ஸ்ரீ ரசா அவர்களின் நுண்மான் நுழைபுலத்தை காட்டுகிறது. 1895 இல் 20 மார்க்சிய குழுக்களை ஒருங்கிணைத்து கட்சியை கட்டுகிறார். இஸ்க்ரா எனும் பத்திரிக்கையை துவங்கி புரட்சிக்கான கட்சி திட்டங்களை கட்டுரைகள் வாயிலாக தோழர்களுக்கு கொண்டு செல்கிறார். 1905 இல் நடைபெற்ற ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான ரஷ்யர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இஸ்க்ரா பத்திரிகை மென்ஸ்விக்குகள் கைப்பற்றிக் கொண்டதால், லெனின் முன்னேறு என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து வந்தது. அக்டோபர் 20 இல் துவங்கி நவம்பர் 7 வரை நடைபெற்ற மக்கள் புரட்சி வெற்றி பெற்றது. லெனின் சக தோழமைகளான ஸ்டாலின் உட்பட பலருடைய பங்களிப்புகளும் லெனின் பிரபலமான பொன் மொழிகளும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.
கடுமையான புரிந்து கொள்வதில் சிரமமான வரலாற்றை கூட எளிமையாக சொல்ல வாய்த்திருப்பது அவரின் வாசிப்பு மேன்மையை காட்டுகிறது. கோர்பச்சேவ் போன்ற துரோகிகளிடம் மார்க்சிய மாடல் வீழ்ந்தால் கூட அது என்றாவது உயிர் பெற்று எழுந்து விடாதா என்ற தாகத்துடனிருக்கும் கோடிக்கணக்கான மார்க்சிஸ்டுகளின் கனவு நிச்சயம் ஓர் நாள் மலரும் அன்று மக்கள் விடியலில் சிவக்கப் போகும் இப்பூமிப்பந்திற்கு இந்நூல் சிறு கை விளக்காய் அமையும்.
உயர் தரமான தாள், நவீன அச்சாக்கம், வண்ணங்களை குழைத்துக் கட்டிய சொற் கோட்டையாக விலையுயர்ந்து திகழ்கிறது. மக்கள் செம்பதிப்பாக விலை குறைத்து வெளியிட முயற்சித்தால் எளிய மக்களுக்கும் சென்று சேரும். மூத்த தோழர்கள் எவரிடமாவது வாழ்த்துரையோ அணிந்துரையோ வாங்கி இணைததிருக்கலாம்.. எளிய முறையில் மார்க்கியத்தை கொண்டு செல்லும் தேவை நமக்கு இருக்கிறது. சாத்தியமான வடிவங்களையெல்லாம் நாம் பரிசீலிக்கலாம் அன்புத் தோழர் ஸ்ரீ ரசா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள் :
நூல் : மானுடம் கண்ட மகத்தான புரட்சி
ருஷ்யப் புரட்சியின் வண்ணச் சித்திர வரலாறு
ஆசிரியர் : ஸ்ரீ ரசா
பக்கம் : 104
விலை : 400
ஆண்டு : 2025
பதிப்பகம் : காலம் வெளியீடு
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.