மாறாது என்று எதுவுமில்லை (Maarathu Entru Ethuvumillai) – நூல் அறிமுகம்
இந்தியாவில் கடந்த 2500 ஆண்டுகளுக்கு மேலாக சாதியம் சமூகத்தில் மிக வலுவாக இயங்கி வருகிறது. சாதிய ஒழிப்பை மையமாகக் கொண்டு போராடிய பௌத்தம் , சமணம் போன்ற மதங்களும் ஒரு கட்டத்தில் சாதியத்தை எதிர்க்க இயலாமல் வலுவிழந்து அதனோடு சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதை வரலாறு தெரிவிக்கிறது.
ஆனால் நாடு முழுவதும் சாதியத்திற்கு எதிராக அவ்வப்போது சிறு சிறு இயக்கங்களும் தனி நபர்களும் தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். சிறு அசைவுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் காண முடிகிறது.
ஆயிரக்கணக்கான சாதிகளாக இந்திய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருணாச்சர தர்ம அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டு தொழில்களும் உருவாக்கப்பட்டு இந்திய சமூகம் இயங்கி வந்திருக்கிறது.
யார் யார் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட்டு சமூகத்தில் அவர்கள் எந்த படிநிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் தொடர்ந்து இயங்கியலாக இருக்கிறது.
சாதிய எதிர்ப்பியக்கத்தை முன்னெடுத்த இந்திய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழகத்தில் தந்தை பெரியாரும் ஆவார்கள்.
ரத்த ஓட்டத்தை போல தொய்வின்றி இயங்கி வரும் சாதிய அமைப்பில் இந்திய நாட்டில் அடித்தட்டு மக்களாக துப்புரவு பணியினை மேற்கொள்ளும், கையால் மலம் அள்ளும் இச் சமூகத்தை அத்தொழிலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கும் பெஜவாடாவில்சன் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தவர். *ரமோன்* *மகசேசே* விருதினை 2016 இல் பெற்றவர். அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர்.
கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வரும் அடித்தட்டு மக்களிலும் அடித்தட்டு மக்களாகிய இந்த எளிய மக்களுக்காக *சஃபாயி* *கர்மச்சாரி அந்தோலன்* என்ற இயக்கத்தை உருவாக்கி இன்று வரை செயல்படுத்தி வருபவர். கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகள் அறிந்தவர். அவரை எழுத்தாளர் *பெருமாள் முருகன்* நேர்காணல் செய்தது “மாறாது என்று எதுவும் இல்லை” என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.
127 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நம் கண் முன்னே கையால் மலம் அள்ளும் எளிய மக்களின் துயரக் காட்சிகள் நெஞ்சைப் பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் நேர்காணலில் விஜயவாடா வில்சன் அளிக்கும் பதில்கள் இந்த சமூகத்தில் சாதிய கொடுமையின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. தகவல்கள் மிக எளிமையாகவும் ஆற்றொழுக்காகவும் செல்கின்றன.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் நாடு முழுவதும் அவ்வப்போது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். என்பதையும் குறிப்பிடுகிறார். ட்ரை லெட்டின் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அப்பிடவிட் தாக்கல் செய்த மாநிலத்தில் இருந்த கையால் மலம் அள்ளும் டிரை லெட்டின்களை இடித்து தள்ளுவது என்று இத் தொழிலார்கள் எடுத்த போராட்டம் மிக உறுதியாகவும் வலிமையோடும் நடைபெற்றது என்று குறிப்பிடுகிறார். இதனால் ஆட்சியாளர்கள் வேறு வழியின்றி அவற்றை இடித்துத் தள்ள அனுமதி கொடுத்ததுடன் எழுத்துப்பூர்வமாக தற்போது இல்லை என்றும் தெரிவிக்க அவர்களது போராட்டம் நடைபெற்று இருக்கிறது.
ஒரு கட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதே தொழிலாளிகள் கொடுமைகளுக்கு எதிராக தொடப்பம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மொத்தமாக குவித்து தீ வைத்து எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். இனிமேல் இந்த மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வேறு பணிகளுக்குச் சென்றிருப்பதைக் குறிப்பிடுகிறார்.
மிக அடித்தட்டு மக்களான இவர்கள் கல்வி அறிவில் குறைவாக இருப்பதுடன் உணவுக்கு வேறு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையிலே பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு பகுதி மக்கள் இந்தத் தொழிலை விட்டு அறவே வெளியே போய் விட வேண்டும் என்பதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு கையால் மலம் அள்ளும் இத் தொழிலாளர்களை “கடவுளின் குழந்தைகள்” என்று புகழ்ந்து கூறி அவர்களைச் சுரண்டுவதில் மிகக் கவனமாக உள்ளது.
சாதிய படிநிலையில் கடை நிலையில் உள்ள இவர்கள்தானே இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும். வேறு யார் செய்வார்கள் என்ற கருத்தில் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது சாதிய சமூகம்.
மலக்குழிக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் பல நூற்றுக்கணக்கான பேர். அவர்களுடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்குக் கூட சரியான சட்டங்களோ, யார் வழங்குவது என்ற தெளிவுரைகளோ இல்லை.
ஸ்வீடன், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கையால் மலம் அள்ளும் முறை முழுமையாக ஒழிக்கப்பட்டதுடன் மாற்று ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது பற்றி இந்தியாவில் கேட்டால் நீங்களே மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என்று நம்மையே திருப்பி விடும் போக்கு இருக்கிறது.
மனிதக் கழிவு அகற்றும் வேலை இயந்திரமயமாக்கப் பட வேண்டும். துப்புரவுத் தொழிலாளர் களிடமிருநது பிரிக்க வேண்டும் என்பது அவ்வப்போது அரசியல்வாதிகளின் முன்னுரிமைப் பேச்சாக இருந்து காற்றோடு கலந்து விடுகிறது. சில சட்டங்கள் இயற்றப்பட்டதோடு சரி. அதுவும் முழுப் பயனளிக்கும் வகையில் இல்லை. சாதியத்தை ஒழிக்காமல் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் வேலை முறைக்கு விடிவுகாலம் கிடைக்காது.
இந்த பணியைச் செய்பவர்களுக்கு போராட்டங்கள் தேவைப்படும். அரசியல் அறிவும் உறுதியும் தேவைப்படுகிறது. அதற்குத் துணை நிற்க மார்க்சை அழைத்துக் கொள்ளலாம். அம்பேத்கர் மிகவும் அவசியப்படுகிறார். பெண் விடுதலை மிக மிக அவசியம் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்து நாடு முழுவதும் களத்தில் பெற்ற அனுபவங்களை எளிமையாகப் பகிர்கிறார்”.
புத்தகத்தில் பரவலாக சொல்லப்பட்ட கருத்துக்களில் சில. “ஆறு லட்சத்து 40 ஆயிரம் கிராமங்கள் இந்தியாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் ஒரு கிராமம் கூட சாதி இல்லாத கிராமம் கிடையாது”
“காந்தியடிகள் எனக்கு புனர்ஜென்மம் இருக்கிறதோ இல்லையோ ஒருவேளை அப்படி இருந்தால் நான் தோட்டிக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று சொன்னார்.நமது எண்ணமோ மனிதர்கள் தோட்டிகளாக இருக்கக் கூடாது என்பதுதான்”
“மனிதர்களாகிய நாம் எளிய அம் மக்களை நம்பும்படிச் செய்து விட்டோம். அவர்களுடைய இயலாமையாக இருக்கலாம். அவர்கள் மீது நம்முடைய ஒடுக்குமுறையாகக் கூட இருக்கலாம். இந்த சாதியில் பிறந்து விட்டதால் அவர்கள் செய்து தான் ஆக வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். கர்வத்தினால் கூட இதை எல்லாம் அவர்களைச் செய்ய வைக்கிறோம். அவர்கள் மீது இதை திணிக்கிறோம்”
” எங்களைப் பொறுத்த அளவில் வெற்றி என்பது அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல் இருப்பது. யாராவது உன்னை அடிமையாக்க நினைத்து ஒடுக்கினால் அப்படி இருக்க மாட்டேன் என்று எதிர்த்து நிற்பது. இது பெரிய வெற்றிதான். அது புரட்சி மட்டுமல்ல வெற்றியும் தான். ”
99 சதவீத துப்புரவுத் தொழிலாளிகளுக்கு வாங்கும் சம்பளம் நிறைவாக இருக்காது. ஆகவே வட்டிக்கு பணம் வாங்குவார்கள். இந்தியா முழுவதிலும் பாருங்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிகமாக முனிசிபாலிட்டியில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். எல்லா முனிசிபாலிட்டிகளிலும் 10 பேர் இருப்பார்கள். மற்ற எல்லா தொழிலாளிகளையும் உறிஞ்சி இவர்கள் பெரும் பொருளைச் சேர்த்தவர்களாக இருப்பார்கள்.”
“பக்கட்டை பயன்படுத்தி பழசாக இருந்தால் புதிதாக பக்கெட் வேண்டும் என்று கேட்கவும் போராட வேண்டி இருக்கும். துடைப்பத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் போராட வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட கொடுக்க மாட்டார்கள். பயன்படுத்திய துடைப்பம் மிக குட்டையாக ஆகி இருக்கும்.அதனால் ரொம்பவும் குனிந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். இந்த அத்தியாவசிய தேவைகளுக்குப் போராடுவதிலேயே அவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கும்”.
ஒரு இந்தியராக சமத்துவம் வேண்டி நாம் குரல் எழுப்ப முடியாது. நீதிக்காகவும் போராட முடியாது.நீதியும் சமத்துவமும் கிடைக்கும் பட்சத்தில் ஒரு புது சமூகத்தை உருவாக்கி விடலாம்.ஆனால் தேய்ந்து போன தொடப்பத்திற்கு பதில் புது துடைப்பம் கிடைக்கப்பெறுவதிலேயே நீதி கிடைத்த உணர்வை அளிக்குமாறு செய்து விட்டோம்.
சாதிய அடுக்ககின் படிதான் இவை எல்லாம் என்பதாக நிர்ணயித்து விட்டோம். இவ்வாறு விளிம்பு நிலை மனிதர்களை கையாளுதலை சாதிய மனோபாவம் நியாயப்படுத்தி விடுகிறது.
“உங்கள் அம்மாவும் இந்த வேலையைச் செய்திருக்கிறார். நீங்களும் செய்கிறீர்கள். உலகில் வேறு எந்த வேலையை விடவும் இது முக்கியமான பணி. இவர்களை நாம் வணங்க வேண்டும் பாராட்டணும்” என்பது போல எல்லாம் காந்தி சொல்லி இருக்கிறார்.
“ராணுவ வீரர்களுக்கு வணக்கம் வைப்பது போல துப்புரவு பணியாளர்களுக்கு நாம் வணக்கங்களைச் செலுத்த வேண்டும்” என்றெல்லாம் இப்பொழுது பரப்புகிறார்கள். இப்படி எல்லாம் சொல்லி அவர்களை நாம் அதே வேலையைச் செய்யும்படி மயக்கத்தில் தள்ளுகிறோம். இரக்கப்படுதல் மூலம் அவர்களை மேலும் ஒரு விளிம்பு நிலைக்குக்குத் தள்ளுகிறோம். ”
“ஒரு வீட்டில் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பெண்ணிற்கு உடல்நலம் சரியில்லை எனில் அவருடைய மகளை வேலைக்கு அனுப்பச் சொல்லுவார்கள். வேலை செய்யும் அம்மா வேலை செய்ய முடியாத பட்சத்தில் அவருடைய மகள் வேலை செய்வது சரிதானே என்று நினைக்கிறோம்”.
“ஒரு சமுதாயமே இந்தத் தொழிலில் ஈடுபட்டார்கள். பணிக்கு வந்த பிறகு அவர்களின் உழைப்பை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டி விடுகிறார்கள்.
மேலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குடிக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள். படிப்பு, சுகாதாரம்,சேமிப்பு என எதுவும் அவர்களிடத்தில் இருக்காது.இது எல்லாமே அவரிடம் ஒழுங்கீனமாக கலந்திருக்கும். ஆனால் வேலைக்கான போட்டியி ருப்பதால் லஞ்சம் கொடுத்தும் இந்த வேலையை வாங்க முன் வருகிறார்கள். இது அரசாங்கத்தினுடைய குற்றம்.”
“கலைகளில் ஆண்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. ”
“மதமும், மத நம்பிக்கையும் பொதுவாகவே மக்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும்”
“அம்பேத்கரிய சிந்தனைகள் தான் சமூக நீதியையும் சமூக விடுதலையையும் கொண்டு வரும். அவருடைய சிந்தனைகள் இல்லாமல் எதுவும் நடக்காது. ஒருவேளை
மார்க்ஸ்சைக் கூட கொண்டு வரலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் மார்க்ஸ் மட்டும் போதாது. ஏனென்றால் இங்கு சாதியம் வேரூன்றி இருக்கிறது.
இந்த இரண்டுடனும் சேர்த்து மகளிர் பற்றிய பிரச்சனைகளையும் அடையாளம் காணாமல் விட்டுவிட்டால் சமூக மாற்றம் எதுவும் ஏற்படாது.
இந்த மூன்றையும் சரிப்படுத்தி விட்டால் அது பெரிய மாற்றமாக இருக்கும்”.
“ஒரு கோவில் பூசாரியோ பாஸ்டரோ மத குருமாரோ வந்து தலையில் கை வைத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் எல்லாம் சுபிட்சம் அடைவீர்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. எதார்த்த சிக்கல்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். இதெல்லாம் மதப் பிரச்சனையோ, சமூகப் பிரச்சனையோ அல்ல. அடிப்படை அரசியல் உரிமைப் பிரச்சனை. அரசியல் தீர்வு வேண்டும் எனில் பிரச்சனையை அரசியலாக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் கோணத்தில் அணுக வேண்டிய அவசியத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.”
சில விஷயங்கள் சார்ந்து எனக்கு எதிர்பார்ப்புகள் மிக அதிகம். எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான் உண்மையில் பேசக் கூடியவர்கள். ஒரு கருத்தை உருவாக்க வேண்டும். மக்களின் குறைகளை எழுதுவதும் பேசுவதும் புனைவதும் மேடை ஏற்றுவதும் இவர்கள்தான். இது மிகவும் முக்கியமான கடமையும் கூட.
தாஜ்மஹால் போன்ற அழகிய லைப் பற்றியே மறுபடியும் பேசக்கூடாது. விளிம்பு நிலை வாழ்க்கையில் எழுதப்படாத பக்கங்கள் நிறையவே இருக்கின்றன. அவர்களுடைய துயரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவற்றைப் பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் நிறையவே இருக்கிறது.”
” பிரஞ்சு புரட்சி ஒரு துண்டறிக்கையில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு துண்டறிக்கை வரலாற்றின் முக்கியமான திருப்பத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது எனில் எழுத்தாளர்கள் கொஞ்சம் ஆழ்ந்து எழுதினால் மாறாதது என ஒன்றும் இல்லையே.
*ஒரு மாற்றம் நிகழும் ”
இப்படி பல கருத்துகள் அங்கங்கே விரவிக் கிடக்கின்றன.
127 பக்கங்களை கொண்ட இந்த நூலைப் படிப்பது புதிய வெளிச்சங்களைத் தரும் .
அவசியம் படிக்க வேண்டும்.
நூலின் தகவல்கள் :
நூல் : மாறாது என்று எதுவுமில்லை
நேர்காணல் : பெஜவாடா வில்சன்
நேர் கண்டவர் : பெருமாள் முருகன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2022
பக்கம் : 128
விலை : ரூபாய் 160
நூல் அறிமுகம் எழுதியவர் :
ச.செல்லத்துரை
உடுமலைப்பேட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

