மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்

மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்



மாரியம்மன் திருக்கல்யாணம்

                          

 எங்க ஊரு மாரியாத்தாளுக்கு

ஆடி மாச(ம்) மூணாவது செவ்வா

காப்புக் கட்டி கெடா வெட்டி

செவ்வாவோட செவ்வா

எட்டா நாளு கூவு ஊத்தி

தேரு ஈத்து திருவிழா

பண்ணுவது வழக்கம்!

 

மாரியாத்தா தா(ன்)

எங்க ஊரு கட்டிக் காப்பாத்தறவ

அதனால பிறாத்தன காரங்களா(ம்)

தலா ஒரு பொறுப்பு ஏத்துக்குவாங்க

 

அப்படித்தா(ன்)

எங்க பக்கத்து வூட்டுலகீறவரு

எட்டு நாளைக்கு

கெரகம் சிங்காரிக்கிர வேலையும்

அதுக்கு பூவு பூஜை எல்லா

செலவையும் ஏத்துக்கினாரு.

 

எட்டா நாளு

கூவு ஊத்துருது முன்னால

வயனியன் பம்பவுடுக்க காரங்களும்,

எல்லா(ம்) சாமிகளையும்

வர்ணிச்சி ஆத்தா மேல் இட்டுக்கட்டி

பாடுவா(னு)ங்க.

 

அப்பதா(ன்) எங்கீருக்கிற

சாமியும் ஓடியாரு(ம்)

நான் சேத்து காளி செல்லிடா…

நான் கன்னிமாடா…

நான் நாகாத்தம்மாடா…

நான் ஊத்துக்கோட்டைகாரிடானு…

சொல்லுங்க.

 

எல்லார்கிட்டடையும்

கூவூத்த சம்மதமா ஆத்தான்னு

வயனியனும்

பூசாரி பெரியண்ணனும் கேப்பாங்க.

 

எல்லோரு(ம்)

எனக்கு மனப்பூர்வ சம்மதடா

எனக்கு முழு திருப்திடா

எனக்கு பண்ண இந்த திருக்கல்யாணத்துல

சம்மதம்……  சம்மதம்….. முழுசம்மதடா…

ஊத்துடா

இந்த ஊர் மக்களுக்கு கூவன்னுங்க….

கடைசியா அவுங்கவுங்க

வாய்க்கு வந்த வார்த்தையே

சட்டு புட்டுன்னு சொல்லிட்டு

போய்டுங்க!

 

அப்பதா(ன்) பார்வதி அக்கா

அவுங்க வூட்டுக்காரருக்கு

சோறு போட்டுக்குனு

இருக்கும்போது

வயனிய பம்ப உடுக்க

மைக்ல ஊர் முழுவதும் கேக்குனும்னு

ஸ்பீக்கர் பாக்ஸ் சத்தத்தில்

அடிச்சுக்குனே இருந்தா(ன்).

 

பார்வதி அக்கா

சோறு போடும் போது தலையைச்

சோங்கி… சோங்கி ஆடிக்கினே

சோறு போட்டுச்சு.

 

என்னாடி ஆச்சின்னாரு

அவங்க வூட்டுக்காரு

ம்ம்ம்….. ம்ம்ம்………ம்ம்ம்…….

(உறுமல் சத்தம்)

 

உடுக்கை அடிக்குறாங்களே!

தெரியலையா(டா)னுச்சு

 

அவுங்க வூட்டுக்காருக்கு

வந்துச்சு கோவம்

உட்டாரு ஒன்னு

அப்படியே ஒதுங்கிச்சி சாமி(!)

 

அவர் சாப்பிட்டு வெளியே போனாரு

 

சத்தம் போட்டுக்குனே

அங்கிருந்து ஆடிக்கினே வந்துச்சு

அய்யய்யோ…..

மாரியாத்தா வரா…..

வழிவுடுங்கோன்னு ஒதுங்கிட்டாங்க.

 

எனக்கு கொஞ்சம் கூட

சம்பந்தம் இல்லை டா….

என்னைய யாருனா கேட்டீங்களான்னுச்சு(?)

கூவூத்தன பிறகு மாரியாத்தா!

 

கூடியிருந்த இளவட்ட எல்லா(ம்)

பார்வதி அக்கா

உங்க வீட்டுக்காரு

குடிச்சிட்டு வராருனுடாங்க.

 

சட்டுனு அதுவும்

ஊர்ல மழை வர வைக்க மாட்டே(ன்)

ஊரக் கட்டிக் காப்பாத்த மாட்டே(ன்)

மூணு தலைச்ச புள்ளைகள

காவு வாங்குவேன்னு

சொல்லிட்டு மலயேறிடிச்சி.

 

எங்க ஆயா…

அதெ எங்க

அப்பா பெத்த கிழுவி.

அங்க இங்க போவாதன்னும்

ஏன்னு கேட்டா?

நான் தலைச்ச புள்ளைன்னும்.

 

ஆனாலும்….

ஒவ்வொரு ஆடிமாசமும்

ஊர்ல மாரியம்மனுக்கு

காப்பு கட்டி கூழ் ஊற்றும் போது….

 

சொரணை கெட்ட தனமாக

வருவது பார்வதி அக்காவா?

இல்ல….

மாரியாத்தாவா?

அப்படின்னு எங்களால

இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல!!

                                 

                                              – பேரா. முனைவர் எ. பாவலன்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. விஜயகுமார்

    மொழி நடை நீரோட்டம் போல இயல்பாக நம்மை இழுத்துச் செல்கிறது. ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *