மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது!

இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை நுண்ணறிவு என எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவர்களால் மலம் அள்ளுவதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க முடியவில்லையே, ஏன்? சாக்கடையில் மூழ்கி அடைப்பெடுக்க ஒரு ரோபோவை உருவாக்க முடியவில்லையே, ஏன்?

நான் திகைக்கும்போது, காஃபி மேசை எதிரே அமர்ந்திருக்கும் ழீன் பால் சார்த்தார் , ‘சிம்ப்பிள் கரிகாலன்.
எப்படி வாழ்வது என்பதைத் தவிர, மற்ற அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!’
சிரித்தார் .

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடித்தார்.
‘எப்படி வாழ்வது? ‘யார் கண்டுபிடிப்பது.

காஃபி மேசையின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் ஜாய்ஸ். ‘சிம்ப்பிள் கரிகாலன். கடவுள் உங்களிடம் பல குரல்களில் பேசினார், ஆனால் நீங்கள்தான் கேட்கவில்லை!’ சீரியஸானார்.

திருவள்ளுவர், கம்பர், இளங்கோ எல்லாம் யார்? இவர்களை விடுத்து மரத்தடியில் கிளி ஜோஸ்யக்காரரிடமா வாழ்க்கையை விசாரணை செய்வது.

எங்கள் மூவருடைய காஃபி கோப்பையும் தீர்ந்திருந்தது. கோப்பைகளன்றி மேசையின் நடுவே சீனு ராமசாமியின் ‘மாசி வீதியின் கல் சந்துகள்’ நூல் இருந்தது.

பிரித்துப் பார்த்த ஜேம்ஸ் ஜாய்ஸ். ‘ஆஹா ரொம்ப மாடர்னா எழுதுகிறாரே. படிச்சுட்டு சொல்லுங்க!’ விடைபெற்றார்கள்.

கல்லறை மனிதர்களோடு பார்ட்டி பண்ணுபவன் கரிகாலன்.
கிட்டத்தட்ட அவனுடைய இயல்புதான் சீனு ராமசாமிக்கும்.

வாழ்க்கையை தேடுவதற்கு தேரோடும் வீதிகள் தேவையில்லை. ஒரு சின்ன சந்து போதும். வங்க நாவலாசிரியர் சந்தோஷ் குமார் கோஷ் இப்படி ஒரு சந்தில் வாழும் மனிதர்களுடைய வாழ்வைக் காட்டினார். அந்நாவல் , ‘கினு கோனார் சந்து’.

வாழ்வு ஒரு துக்கம் என்றவர் மகான் புத்தர். மகானுக்கே துக்கம் என்றால்? மனிதர்களுக்கு! அவர்கள் தொடர்ந்து துக்கங்களையே சந்தித்து வருபவர்கள்.

காலம் துயரத்தின் பாரத்தை அழித்துவிடுகிறது. இப்போது பழங்காலம், தன் துக்கத்தின் கனத்தை இழந்து, ஒரு மயிலிறகுபோல இலகுவாக நம் ஞாபகத்தில் அமர்ந்திருக்கிறது.

அந்த நாஸ்டாலஜியாதான் நம் நிகழ்கால துக்கத்துக்கும் ஆறுதலாக இருக்கிறது. ‘எவ்வளவோ பார்த்துவிட்டோம். இதைக்கடக்க மாட்டோமா!’ என்கிற ஆறுதல் இது.

அதே புத்தர்தான் ‘உனக்கு நீயே கை விளக்கு! ‘ என்கிறார். சீனு ராமசாமியிடம் அற்புத விளக்கு இல்லை. இருளில் தேட உதவுகிற கைவிளக்கு வைத்திருக்கிறார். நாம் தேட வேண்டிய செல்வம் பெரிதாக ஒன்றுமில்லை. அது புத்தர் வைத்திருந்தது போல ஒரு கை விளக்கு.

பணம் வைத்திருந்தால் கார் வாங்கிவிட முடியும். மகிழ்வை, அமைதியை, நம்பிக்கையை?
அதற்குதான் கை விளக்கு தேவை.

இந்த விளக்கு ஸ்தூலமானது இல்லை. அந்த விளக்கை வள்ளுவன் தனது குறள் ஒன்றில் ஒளித்து வைத்திருக்கலாம். பூங்குன்றன் ஒரு வரியில் வைத்திருக்கலாம். இந்த செல்வங்களையெல்லாம் செல்வங்கள் என உணராததான் காரணமாகக் கவிந்ததே நம் இருள்.

சீனு ராமசாமி, அந்தி இருளில் எங்கள் ஒழுங்கிகளின் அரளிச் செடிகளில் ஒளிர்கிற மின்மினிபோல நிறைய ஒளித் துளிகளை வைத்திருப்பவர்.
அந்த ஒளிப்புள்ளிகள் மாசி வீதியின் கல் சந்துகளை, அதில் வாழ்ந்த மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, நமக்கு துலக்கமுறச் செய்கின்றன.

ஒரு தத்துவ நூலைப் போலவோ, விஞ்ஞானப் புத்தகம் போலவோ, கவிதை நூலின் பணி, ஞானத்தை வழங்குவதில்லை. அது வெளிச்சத்தைத் தருவது. அதனால்தான் லக்கான் கூறுகிறார், ‘நாம் கவிதைக்குச் செல்வதற்குக் காரணம் ஞானத்திற்காக அல்ல, ஞானத்தை சிதைப்பதற்காக!’ நாம் தேவையில்லாத குப்பைகளையெல்லாம் ஞானமென நம்பி சேகரித்து வைத்திருக்கிறோம்.

உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகிற ஞானமொன்று இல்லை. ஞானமடைபவர்கள் வாழ விரும்புவதில்லை. ஞானிகளுக்கு வீடு, வாசல், கார், பீஸா, எதுவும் தேவையில்லை. போலவே கவிதையும் தேவையில்லை. நமக்கு வீடும் வாசலும் வேண்டும். இவற்றுக்காக தினமும் அல்லல் படவும் வேண்டும்.

இவற்றுக்கு இடையே எழும் முரண்களை களைந்து முன்னேற ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான வழிமுறையொன்று வேண்டும். இந்த பிரத்தியேக அனுபவத்தை வழங்குவதே கவிதை. இவ்வனுபவத்தை நான் ராமலிங்க அடிகளாரிடம் பெற்றேன். அப்பர் சாமிகளிடம் பெற்றேன். மாணிக்கவாசகனிடம் கற்று அழுதிருக்கிறேன்.

இதோ சீனு ராமசாயிடமும்
இதைப் பயில்கிறேன்.

‘எழுத ஒன்றுமிலை
மன்னித்த பிறகு

படுத்துக் கொண்டு
காலாட்டலாம்

மறதியின்
கயிற்றில்
ஊஞ்சல் ஆடலாம்

ஒரு காப்பி அருந்தலாம்.’

காஃபி என்பது லௌகீகம்.
மன்னிப்பது என்பது வாழ்வின்வழி பெற்ற அனுபவம்.

இதை ஏசுநாதரும் சொன்னார்தான். ஆனால் அவர் ஈப்ரு மொழியில் சொன்னார். மன்னித்த பிறகு ஒரு குவளை திராட்சை ரசம் அருந்தச் சொன்னார். என்னைப்போலவே தோற்றமும் குணமும் கொண்ட என் தமிழ் நண்பன், என் அம்மா சொல்லிக்கொடுத்த மொழியில் சொல்கிறார். எனக்குப் பிடித்த காஃபியை அருந்தச் சொல்கிறார்.
இது எனக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறது.

தன் கவிதையைப் படிக்கிறவர்களுக்கு சீனு ராமசாமி என்ன செய்கிறார். இதைவிட என் பக்கத்து சீட் அலுவலர் எனக்கு பெரிய உதவிகள் செய்திருக்கிறார். பாதி வழியில் நின்றுவிட்டது பைக். அந்த நண்பர் பெட்ரோல் வாங்கிக் கொடுத்தார்.

நிச்சயம் அவருடைய role நம் வாழ்வில் முக்கியமானதுதான். ஆனாலும் தம்மிடம் உள்ளதை சகமனிதர்களுக்கு அளிப்பது சாதாரண ஒன்றுதான். ஆனாலும் மனித குலத்தின் மீது அன்பு செலுத்துதல் என்பது தன்னிடம் இருப்பதைத் தருவதல்ல. ‘அன்பு என்பது தன்னிடம் இல்லாத ஒன்றை விரும்பாதவருக்கும் கொடுப்பதாகும்!’ என்கிறார் லகான்.

அதுவரை எடிசனிடம் ஒரு மின்விளக்கில்லை. தன்னிடம் இல்லாத ஒன்றை மானுடர்க்கு வழங்கியர் அவர்.

‘ஒவ்வொரு முறையும்
ஒருவனைத் தள்ளிவிடும்போதும்
அவனை மேலே கொண்டுவரும்
கண்ணுக்குத் தெரியாத
கை ஒன்று இருக்கிறது

திரும்ப எழச்செய்யும்
விசையெதுவெனில்
தள்ளிவிடுபவனின் கை’

இந்தக் கவிதையை படிக்கும்போது என் நெஞ்சம் பேரானந்தத்தில் களிப்புற்றது.

‘புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!’

எனப் பாடினானே பாரதி. அவனது பக்கத்து இருக்கையில் என் சகோதரன் சீனு ராமசாமியை அமரவைத்து அழகு பார்க்கிறேன்.

பசியை புத்தரும் மகாவீரரும் வள்ளுவரும் திருத்தக்கதேவரும்
வள்ளலாரும் சிந்தித்தார்கள்.
‘நான் கேட்பது உணவல்ல
எளிதில் அடங்கும் பசி’. என
சீனு ராமசாமியும் சிந்திக்கிறார்.

நாம் நம்மை யூதராக, கிறித்துவராக, இசுலாமியராக, இந்துவாக நினைக்கிறோம். நாம் நம்மை ஆணாக, பெண்ணாக நினைக்கிறோம். நாம் நம்மை தமிழராக , இந்திக்காரராக, வங்காளியாக, மலையாளியாக, தெலுங்கராக நினைக்கிறோம்.

பசி அதிகமாகிறது.
தேசத்தை, இனத்தை விழுங்கும் பசியது.

தோட்டாக்களையும் குழந்தைகளின் மாம்சத்தையும் விழுங்கும் பசியது.

சீனு ராமசாமி ‘எளிதில் அடங்கும் பசியை’ இறைஞ்சுகிறார்.

மீண்டும் என் காஃபி மேசை நிரம்புகிறது. அருகில் ஸஅபேனிஷ் சர்ரியலிஸ்ட் கவிஞன் சால்வடார் டாலியும் மிஷல் ஃபூக்கோவும்.

‘ஒருவேளை இன்றைய இலக்கு நாம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது அல்ல, நாம் என்ன என்பதை மறுப்பது.’ சிகரெட் சாம்பலை ஆஷ்ட்ரேயில் தட்டுகிறார் ஃபூக்கோ.

‘There are some days when I think I’m going to die from an overdose of satisfaction’ உணர்ச்சிவயப்படுகிறார் சால்வடார் டாலி. ‘Mee too !’ என்கிறேன் அவரிடம்.

எங்கள் மேசையில், காற்று ஆர்வத்தோடு சீனு ராமசாமியின்,
மாசி வீதியின் கல் சந்துகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறது.

 

நூலின் தகவல்கள் 

நூல் : மாசி வீதியின் கல் சந்துகள்

ஆசிரியர் : சீனு ராமசாமி 

விலை: ரூ.320

 

நூலறிமுகம் எழுதியவர் :

கரிகாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *