கவிதைப் புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படத்தின் அழகியலும் வெகு இலகுவாக நம்மை கைப்பிடித்து புத்தகத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன. கவிஞருக்கு இது நான்காவது கவிதை தொகுப்பு. பரபரப்பான திரைப்பட இயக்கங்களுக்கு மத்தியிலும் கவிதை எழுதும் மனம் வாய்த்திருப்பது ஒரு வரம். அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
நேரமில்லை என்போருக்கு இந்நூல் ஒரு பாடம். சென்ற வருடம் வெளிவந்த புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனையை தொடர்ந்து மாசி வீதியின் கல்சந்துகள் இரண்டும் உருவில் கனத்தும் உள்ளடக்கத்தில் அடர்த்தியாகவும் உள்ள கவிதைகள். பால்யத்தின் நினைவுகளை பசுமையாக வைத்திருப்பதும் அதை சுவை பட கடத்துவதும் கவிஞனின் வேலை அதை செம்மையாக செய்திருக்கிறார். செய்நேர்த்தி மிக்க கவிதைகளை வாசிக்க வாருங்கள் மாசி வீதியின் கல் சந்துகளில் பயணிப்போம்.
மொத்தம் 256 கவிதைகள் சிறிதும் பெரிதுமான அனுபவங்களை வார்த்தையாக நெய்திருக்கிறார். நிலை என்று ஒரு அற்புதமான கவிதை. எளிய வாழ்வின் அவலத்தை சொற்களால் வரைந்திருக்கிறார்.
ஒரு நாளும் , ஒரு வேளையும் என் பசியை சொற்களில் சொன்னதில்லை /கண் பார்த்து மெளனித்திருப்பேன் / அறிந்து தரும் தாயின் மகன் நான் / இங்கு திசையெல்லாம் / கையேந்தச் சொல்கிறது / அற்ப வாழ்வு.
பூவின் குணம் கவிதையில் இப்படிச் சொல்கிறார் வீழ்த்துவோரும் கை கொடுப்போரும் நிரம்பியதுதானே வாழ்க்கை வாழ்க்கையில் உயர்ந்தோர் யாவருக்குமான அனுபவத்தை பதிவாக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் / ஒருவனை தள்ளிவிடும் போதும் / அவனை மேலே கொண்டு வரும் / கண்ணுக்கு தெரியாத / கை ஒன்று இருக்கிறது / திரும்ப எழச் செய்யும் / விசையெதுவெனில் / தள்ளி விடுபவனின் கை
படலம் கவிதையில் உலகோர்க்கு பொதுவான புறம்பேசுதலை பகடியாக்கியிருக்கிறார் அடுத்தவரைப் பற்றி பேசும் உரையாடல்கள் எப்போதும் சுவாரசியமாகத்தானே இருக்கிறது. பொதுவான மனித உளவியல் கவியாக்கம் பெறுகிறது.
இரண்டு மனிதர்கள் / சந்திக்கும் போது கூடவே /
கதையும் / எழுத்தாளர் இன்றி / தன் வேலையை தொடங்குகிறது.
கவிச்சி வாசம் வீசும் மீன்காரிகளுக்கும் அழகிய கவிதையொன்றை எழுதியிருக்கிறார் வாசம் இதயத்தை துளைக்கிறது
மீன் காரிகைக்கு / திரி விளக்கென /துள்ளும் கண்கள் / சொற்களோ உள்ளங்கை ஊன்றி / குடிக்கச் சொல்லும் ருசி / நடு முள் தடித்த ஆழ்கடல் தேகம்
கோபத்தை யாரெலாம் அடக்கி ஆள்கிறார்களோ அவர்களே உலகத்தை ஜெயிக்கிறார்கள் கவிஞரும் கோபத்தை அடக்க வழியொன்றை வைத்திருக்கிறார் நிலைப்பாடு என்னும் கவிதையில்
கோபம்/ ஆற்ற முடியாத/ பெருங்கோபம்/ என் கதவை/
அடைத்துக் கொண்டேன்
எடுத்துச் சொல்வதற்கு ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. ஒரு கவிஞனின் மனநிலையும் வாசகர் வாசிப்பு நிலையும் ஒரு புள்ளியில் உறையும் போது அற்புதமான அனுபவங்கள் கடத்தப்படுகின்றன. பிறந்த மண்ணையும் வளர்ந்த வாழிடத்தையும் நட்பையும் சுற்றத்தையும் எப்போதும் ஈரமாகவே ஞாபக இடுக்குகளில் வைத்துக் கொண்டிருக்கும் இளகிய மனதுக்காரன். நேரம் கிடைக்கும் போதெலாம் கருணையின் சொட்டுக்கள் வழிந்து கொண்டே இருக்கும். கவிஞர் சீனு ராமசாமி அவர்களிடம் இருந்து எப்போதும் வற்றாத நீருற்றாய் கவிதைச் சுனைகள் கசிந்து கொண்டே இருக்கும். அள்ளிப் பருகலாம் கவிஞருக்கு வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள்:
நூல் : மாசி வீதியின் கல்சந்துகள்
கவிஞர் : சீனு ராமசாமி
பக்கம் : 256
விலை : 320
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
நூல் அறிமுகம் எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.