சீனு ராமசாமி (Seenu Ramasamy) மாசிவீதியின் கல்சந்துகள் (Maasi Veethiyin Kal santhugal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

அன்பெனும் மலர்வனம்
பூத்துக் குலுங்கப்போவதற்காய்
சீனுவுக்கு நன்றிபாராட்டுவோமாக…
————————————–

சோழ. நாகராஜன்

தமிழ் சினிமாவின் யதார்த்தப்போக்கிற்கு இடைவிடாது அளப்பரிய பங்காற்றி, “மக்கள் இயக்குநர்” – என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி அடிப்படையில் ஒரு நல்ல கவிஞர் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எப்போதும் கவியுள்ளம் மாறாத இயல்பு அவருக்கே சொந்தமானது. பேசுவதானாலும் சிந்திப்பதானாலும் கவிதைத்தனமாகவே மிளிரும் அவரின் வெளிப்பாடுகள் யாவும். கவிமனசு அவருடையது. அந்தக் கவிமனசு எழுதிக் குவித்த கவிதைகள் அவ்வப்போது தொகுப்புகளாகி வெளிந்தவண்ணமிருப்பது மகிழ்ச்சி தரத்தக்கது, ஆரோக்கியமானதும்கூட. வாசகப்பரப்பிலும் அவை மிகுந்த வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவண்ணமிருக்கின்றன.

வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்தும், வாழ்க்கைமீதான தனது பெரு விருப்பங்கள் சார்ந்தும் சீனு ராமசாமியின் கவிதைகள் துலங்குகின்றன. இயற்கையும் மனித சமுதாயமும் சீனுவின் இரண்டு கண்கள் போன்றவை என்றும்கூட துணிந்து இயம்பலாம். உயிர்களிடத்தில் அன்பு ஒன்றையே அடிநாதமாகக் கொண்டிருப்பவை அவரது எழுத்தும் சினிமாவும் என்பதே உண்மை.

அப்படியானதொரு உண்மை விளம்பும் முயற்சியாக அண்மையில் வெளிவந்திருக்கும் அவரது கவிதை நூல்தான் “மாசி வீதியின் கல்சந்துகள்”. இது கவிஞரின் நான்காவது நூல்.

சீனுவின் இந்த மாசி வீதியின் கல்சந்துகள் நூலை முழுதும் வாசித்து முடிக்கிறபோது தமிழின் நவீன எழுத்தின் முன்னோடிப் படைப்பாளி புதுமைப்பித்தன் கவிதை குறித்து சொன்னதுதான் நினைவில் வந்துபோனது.

புதுமைப்பித்தன் இப்படிச் சொல்லுகிறார்:
“கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது. உண்மையே இலக்கியத்தின் ரகசியம்!” (புதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து… (2ம் தொகுதி) ஐந்திணைப் பதிப்பகம்,சென்னை-5)

ஆக, புதுமைப்பித்தன் எனும் தமிழின் அந்த உன்னதப் படைப்பாளியின் வரையறைகள் சீனுவின் எழுத்துக்களுக்கும் பொருந்திவிடுகின்றன. சீனுவின் உணர்ச்சிப்பெருக்கு அவரின் கவிதைகளுக்கான சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டுவந்து பெருமழையெனக் கொட்டுவதை இந்தத் தொகுப்பு முழுவதிலும் காணமுடிகிறது. சீனுவின் கவிதையின் முக்கிய பாகமாக அதன் ஜீவசக்தி இருப்பதை வாசிக்கிற எவரும் உணர்ந்துகொள்ள முடிகிறது. இலக்கியத்தின் ரகசியம் உண்மையே என்று புதுமைப்பித்தன் உறுதிபட மொழிவதை சீனுவின் கவிதை ஒவ்வொன்றும் வழிமொழியத் தவறவில்லை.

மதுரைக்காரரான சீனு ராமசாமிக்கு மாசிவீதியின் பரிச்சயம் ஒன்றும் வியப்பைத்தருவதாக இருக்கமுடியாதுதான். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல… மொத்தம் நான்கு மாசிவீதிகள் மதுரையில். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைச் சொல்லியபடி நான்கு திசைகளுக்கும் நான்கு மாசிவீதிகளுண்டு.

அட்டைப்படத்திலேயே கீழமாசிவீதியிலிருந்து உள்நோக்கி வந்தால் எழுகடல்தெருவும், சிற்பியின் கனவாகக் காட்சியளிக்கும் முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரமும், அதனூடாகத் தெரியும் நந்தியும், புதுமண்டபமும், மதுரை ஆலயத்தின் கிழக்குக் கோபுரமும் என்று அழகு ததும்ப நம்மைக் கைப்பிடித்து நூலுக்குள் அழைத்துச்செல்வதாக அமைந்துள்ளதை அனுபவித்து ரசிக்கலாம். அட்டையை உயிரோவியமாக்கியிருக்கும் ஓவியர் ரவி பேலட் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

அந்த அட்டைப் படத்தில் ஒரு டவுசர் சிறுவன் நம்மை நோக்கி ஓடிவருதுபோன்ற காட்சியிருக்கிறது. அந்தச் சிறுவன்தான் நூலாசிரியர் சீனு ராமசாமி என்று அறிகிறபோது வியப்பும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.

இந்தத் தூங்கா நகரத்துக் கவிஞர் சீனு இந்த நூலைத் தனது அன்பு இணையர் தர்ஷணாவுக்கும் அவரது தூங்கா இரவுகளுக்கும் சமர்ப்பணம் செய்வதிலும் தன் எழுத்துக்கு எவ்வளவு நேர்மை இருக்கிறது என வியக்க வைக்கிறார்.

மின் தட்டுப்பாடு என்பது பார்வையற்ற மாணவர் விடுதியில் என்னவிதமான இழப்புகளை நிகழ்த்திவிடக்கூடும்? அப்படியொரு கவிதை வாசிக்க வாசிக்க அந்தக் காட்சியே மனங்களில் விரிகிறது மட்டுமல்ல… மனதைப் பிசையவும் அது தவறவில்லை.

விளக்குகள்
அணையும்போது ஒருவரும்
இச் கொட்டவில்லை
எவரும்
திடுக்கென எரியும்போதும்
ஆரவாரம் செய்யவில்லை
சிறு சந்தோசக் கூச்சல்கூட இல்லை
அப் பார்வையற்ற மாணவர்கள்
விடுதியில்

இந்தக் கவிதையின் அடுத்துவரும் இந்த இடம்தான் மிகவும் காத்திரமானது. அந்த மாணவர்கள் இரவு உணவு உண்ணுகி்ன்ற காட்சியைக் கவிஞர் சொல்லியிருக்கும் விதம் அவரது ஈர நெஞ்சத்தை எடுத்தியம்பும்.

வெளிச்சத்தையும் இருளையும்
இரவு உணவோடு பிசைந்து
உண்டனர்.

தங்களின் புலன்களிலொன்றைக் குறைபாட்டுடன் படைத்திட்ட இயற்கையைப் பழிதீர்த்ததுக்கொள்ளவோ அவர்கள் அவ்வாறு வெளிச்சத்தையும் இருளையும் உணவோடு பிசைந்து உண்டார்கள் என்று நம்மால் எண்ணியெண்ணிப் புருவமுயர்த்தாமல் இருக்க இயலவில்லை. ஒரு கவிஞனின் – ஒரு கவிதையின் பலாபலன்கள் இப்படிப் பலவாறு வாசகனுள் வந்துசேர்வதென்பதே அக்கவிதையின் வெற்றி என்றும் கொள்ளலாம்தானே?

அதேபோன்றதொரு சிலிர்ப்பினை ஏற்படுத்திய சீனுவின் இன்னுமொரு கவிதை இது:

கான்கிரீட் தளத்தில்
கம்பியோடு வெயிலை முறுக்கிய
தொழிலாளியிடம்
மாட்டிக் கொண்டது
உச்சிச் சூரியன்.

இந்தக் கவிதையில் கம்பியை முறுக்கும் தொழிலாளியின் கைகளில் வெயிலும் முறுக்குறுகிறது. அதனால் உச்சிச் சூரியனே மாட்டிக்கொள்ள நேர்கிறது. மனித உழைப்பின் பலனாக சும்மாக் கிடக்கிற இயற்கைகூட புதுப்பொலிவையும் புது அனுபவத்தையும் பெறுகிற விந்தையை ஒரு கவிஞனால் மட்டுமே இத்தனை சிறப்புடன் எடுத்தியம்ப முடிகிறது. அதிலும்கூட பூமியின் முகத்தை உழைப்பால் மாற்றிப்போடுகிற தொழிலாளிகளின் பக்கம் நின்று அவர்களின்பால் வாஞ்சையும் பரிவும் காட்டுகிற ஒரு படைப்பாளியால்தான் தன் கற்பனையைக்கூடத் தடம்மாறாது செலுத்திட முடிகிறது.

அப்படியானதொரு கற்பனைச் சிறகை அகலவிரித்து விண்ணில் ஏகிவிட்டால் இந்த உலகை, இயற்கையை, உயிர்களை, மானுடத்தை என்று யாதொன்றையும் நேசித்தல் ஒன்றே நோக்கமாகிப்போவதும் கைகூடுகிறது. அதுதான் கவிஞர் சீனு ராமசாமியின் இந்த மாசிவீதியின் கலசந்துகள் தொகுப்பிலும் நிகழ்த்தப்பட்டு பக்கங்கள்தோறும் விரவிக்கிடக்கின்றது.

“படைப்பென்பது படைப்பாளியின் உணர்ச்சி மேலீட்டால் அனி்ச்சையாய் வெளிப்படும் அனுபவங்களின் சாரம்!” – என்று எங்கேயோ வாசித்தது இப்போது நினைவில் வருகிறது. அதுவும் சீனுவின்…

இரண்டு மனிதர்கள்
சந்திக்கும்போது கூடவே
கதையும்
எழுத்தாளர் இன்றித்
தன் வேலையைத் தொடங்குகிறது.

-என்ற கவிதை வரிகளைப் படிக்கிறபோது அந்த மேற்கோள் இங்கே நச் எனப் பொருந்திப்போவதை உணர்ந்து ரசிக்க முடிகிறது.

இப்படித்தான் தன் இன்னொரு கவிதையில் சீனு நம்மை வேறு விதமாக யோசிக்க வைக்கிறார்.

வெட்டப்பட்ட ஆட்டுக் கிடாயின் கருகாமல் வாட்டப்பட்ட கால்கள் உள்ளிட்ட எல்லா பாகங்களையும் உண்டு செமிக்கும் மானுடத்தால் அதன் கொம்புகளை மட்டும் தின்னமுடியாது போவது எதனால்? அது முன்னர் மேய்ச்சல் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த நரியின் விலாவில் பாய்ந்ததாயிற்றே? பின் எப்படி அந்தக் கிடாயின் கொம்புகளை உண்டு செரிக்க மனிதனால் ஆகும் என்கிறார் கவிஞர் சீனு ராமசாமி. குணம் எனும் தலைப்பிலான இந்தக் கவிதை கிடாயின் கொம்பை வேறெதுவொன்றுக்கோ உவமையாக்குகிறது. அதன் வழியே “வலுத்தது வாழும்” – எனும் அறிவுசார் தத்துவம் உணர்த்தப்படுகிறது அழகு உவமை நயத்தோடு.

அதேபோல ஜவுளிக்கடை பொம்மைக்கு முகமோ கண்களோ புருவமோ அவசியமற்று, கூரான இரண்டு ஸ்தனங்கள்மட்டும் போதுமானதாகிப்போன வணிகப் புத்தியை வியாபார வெளி கவிதையில் தோலுரிக்கிறார் கவிஞர்.

தலைப்புக் கவிதையின் கல்சந்தில் மணக்கும் பசுக்களின் சாணவாசம்போலவே தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதைக்குள்ளிருந்தும் மண் மணமும், மனித மனமும் நீக்கமற மணம் வீசுகின்றன.

தொகுப்பிலுள்ள ‘ஒரே பார்வை’ கவிதையில் பள்ளிவிட்டதும் மகள்களும் மகன்களுமாக வெளியேறி தங்களின் உயிரான உறவுகளை வந்தடைவதைப்போல இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் வாசிப்போரை வாஞ்சையோடு வந்தடைகின்றன.

வாசித்து முடிக்கையிலே நம் எல்லோர் உள்ளங்களையும் உழுதுபோட்டுப் பண்படுத்தல் எனும் வினைதனை விரும்பிச் செய்துமுடிக்கின்றன. இனி நம் மனங்களெல்லாம் அன்பெனும் மலர்வனம் பூத்துக் குலுங்கப்போவதற்காய் சீனுவுக்கு நன்றிபாராட்டுவோமாக!

இன்னும் எழுதுங்கள் சீனு. எழுதிக்கொண்டே இருங்கள். வெள்ளைத்தாளில் உங்கள் எழுத்துக்களும், வெண்திரையில் உங்களின் திரைப்படங்களும் தமிழுக்கு மகுடங்கள்… தமிழர்க்கு சத்துநிரம்பிய அமுதக்குடங்கள்!
—————————————

நூலின் தகவல் : 

நூல் : மாசிவீதியின் கல்சந்துகள்
ஆசிரியர்: சீனு ராமசாமி
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
9, பிளாட் 1080 A, ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,
சென்னை – 600 078. (பேச 99404 46650)
பக்கங்கள்: 256
விலை: ரூ 320
நூலிப் பெற : https://thamizhbooks.com/product/maasi-veethiyin-kal-santhugal/

நூல் அறிமுகம் :

– சோழ. நாகராஜன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *