சீனு ராமசாமியின் “மாசி வீதியின் கல் சந்துகள்” – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : மாசி வீதியின் கல் சந்துகள்
ஆசிரியர் : சீனு ராமசாமி
விலை : ரூ.330
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்
நூலைப் பெற : thamizhbooks.com
திரைப்பட இயக்குனர் என்பதை விட இங்கே கவிஞர் என்று தானே சொல்ல வேண்டும்.
சீனு ராமசாமி எங்க ஊர்க்காரர் தான் ஆனாலும் அறிமுகம் இல்லை ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருக்கிறோம்
ஆனாலும் அறிமுகம் இல்லை.
அறிமுகம் இல்லை ஆனாலும் .எனக்கு அவரைத் தெரியும்
எனக்கு மட்டுமா, அவரை இந்தியாவுக்கே தெரியும் அகில இந்திய ஸ்டாரான அதாவது, பான் இந்தியா என்று சொல்வார்களே, அப்படி சூப்பர் ஸ்டாராக விளங்கும் மக்கள் செல்வன் சேதுபதியை அறிமுகம் செய்தவராயிற்றே.
எவரும் தொட முடியாத: எவரும் தொட முடியாத என்று சொல்ல முடியாது லட்சத்தில் ஒருவரே தொடக்கூடிய உச்சத்தை தொட்டு மீண்டவருக்கு இன்னும் என்ன பசி? அது ஏன் அடங்கவில்லை? அப்படியென்ன அது அடங்காத பசி?
அணிந்துரை வாசித்தேன் அணிந்துரையில் எஸ். ராமகிருஷ்ணன் அஜயன் பாலா பாஸ்கரன் இருவருமே இரண்டு வரியை குறித்திருக்கிறார்கள்,
நான் கேட்பது உணவல்ல எளிதில் அடங்கும் பசி.
அப்படி என்றால் முதலில் பசி வேண்டும் பசியைத் தான் வேண்டி கேட்கிறார். பிறகு அது எளிதில் அடங்க வேண்டும்.
அடங்குமா? கிடைக்குமா? இவர் கேட்கும், எளிதில் அடங்கும் பசி,
அது என்னவாக இருக்கும்? ஒரு படைப்பாளன் என்ற முறையில் அது என்ன பசியாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. அந்தப் பசி, காசு பணத்தால் நிரம்பாது கை தட்டலால் நிரம்பும் பிரியாணியால் முடியாது
பிரியமானவர்களால் முடியும்.
கடல் நடுவே என்றால் கலங்கரை விளக்கு போதும் கரை சேர கால வெளியை கடக்க நினைப்பவனுக்கு? இப்போது, இந்த நாள், இந்த நொடி வாழ்வதற்கான, தேவையை மட்டும் தேடிகிறானென்றால், அவனது பசி அடங்கி விடும்.
காலம் கடந்து, ஞாலம் கடந்து இதழ் கடந்து இதயங்கள் கடந்து வாழ நினைப்பவனின் பசி, எப்படி அடங்கும் எளிதில்.
கவிதை எழுதுவார்கள், சினிமாவில் பாட்டெழுதும் கனவோடு கதை எழுதுவார்கள் திரைத்துறையில் வலம் வரும் கனவோடு ஆனால், சீனு ராமசாமிதிரைத் துறையில் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர்களின் பெயர் சொல்லாமல் சீனுராமசாமியின் படம் என்று சொல்லும் அளவு வென்று விட்டார்.
மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதைப் போல, மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதைப் போல, நிறைவேறா ஆசையோ அல்லது தீராத பசியோ வானில் பறந்த மேகத்திறள் மண்ணில் நீராய் வந்து நடப்பதைப் போல ஏராளமான கவிதைகளை எழுதிக் குவிக்கிறார் சீனு ராமசாமி.
திரையில் மின்னிய நட்சத்திரம் தரையில் நடக்கிறேன் என்கிறது என்ன செய்கிறது எப்படி நடக்கிறது வாருங்கள் பார்ப்போம் அதன் நடனத்தை.
நூலுக்குள் நுழையும் முன்னே அவரின் பசியை நான் அறிந்து விட்டேன் நான் கணித்தது தான். 27 ஆம் பக்கத்தில்.
‘நான் கேட்பது
முதல் இடமல்ல
மூலையில் ஓர் இடம்
நான் கேட்பது மெத்தை அல்ல
திண்ணையில்’
………………………………….
‘நான் கேட்பது மரியாதை அல்ல
அவமதிக்காத அன்பு
நான் கேட்பது பிழைப்பு அல்ல
இறப்புக்குப் பின் வாழ்வு’
………………………
‘நான் கேட்பது உணவல்ல
எளிதில் அடங்கும் பசி”
எனக்கே வியப்பாய் உள்ளது
கவிஞரை நான் சரியாக கணித்தது
அடுத்து ஒரு கவிதையில் தன்னை
இப்படி வெளிப்படுத்துகிறார்,
…………….
‘பிணத்தை குளிப்பாட்டுவது
இயலாத காரியம்
பாதி நீரும்
பாதி கண்ணீரும்
குலவையோடு ஊற்ற வேண்டும்’
………………….
‘தன் பிணத்தை தானே குளிப்பாட்டி
அலையும் மிருக உலகில்
பிணம் ஆயினும் பிறர் குளிப்பாட்டி
வணங்கி அனுப்பும் வரம் வேண்டும்’
…………………….
‘அவர்கள் அழுதபடி நீரூற்ற வேண்டும்
என்பது மட்டுமல்ல அவர்கள்
குலவையிட வேண்டும் என்பதையும்
மறக்காமல் குறிப்பிடுவது தான்
கவிதையின் உச்சம்’
கவனித்தீர்களா
இது என்ன மாதிரியான சொற்கள்!
வளைத்து வளைத்து
எழுதும் சொற்களின் திரட்சியல்ல
ஆழ்ந்து ஆழ்ந்து
எழுதிய வெறும் கவிமையல்ல
காற்று, மழையென காலம் நடந்து நடந்து
கட்டிபட்டுப் போன மனதிருந்து
எழுந்த வைரச் சொற்கள்
கவிதைகள் சில உடலை உலுப்புகிறது
எளிய சொற்கள் தான் ஆனாலும்
நம்மை ஏதோ செய்கிறது
மனதை மயக்குகிறது
அப்படியான ஒரு கவிதை,
இந்நூலை வாங்கி வாசிக்க,
இந்நூல் ஆசிரியர்
காலத்தைக் கடந்து வாழ
இந்த ஒரு கவிதையே போதும்,
தெய்வத்தையும் தெய்வீகத்தையும்
யார் யாரோ எங்கெங்கோ பார்க்கிறார்கள்
ஆனால், கவிஞர் கடவுளை
நமக்கு காட்டுகிற இடம்!!!
மெய் சிலிர்த்துப் போனேன்
‘பால் அருந்திய நிலையிலேயே
குழந்தை தூங்குகிறது
தாயிம் தூங்குகிறாள்
அங்கே தெய்வம்
கண்விழிக்கிறது’
அடடா நாத்திகனும் கண்கலங்கி
வணங்குகின்ற ஒரு தெய்வக் காட்சி
இந்தக் கவிதையிலிருந்து
நான் வெளிவர நீண்ட நேரம் ஆனது
கவிதையை வாசிக்கும் போது,
இந்தக் கவிதைக் காட்சியில்,
நான் என் தாயோடு
பிசைந்து செய்த மழலையாய்
நான் கிடந்த காட்சி
மனதில் மலர் தூவியது
எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது
அவர் சென்னை சென்று ஆனாலும்,
எத்தனையோ சுமந்து கொண்டிருக்கிறது
அவர் இதயம்
அத்தனையும் இறக்கி வைத்து விட்டார்
இந்தப் புத்தகத்தில்
ஆலமர நிழலில்
உறங்கிக் கொண்டிருக்கும்போது,
மேலும் தாலாட்டுவதைப் போல
மனதை மயக்கும் இசையை,
எங்கிருந்தாவது காற்று
காதில் வந்து சேர்க்கும்
கொஞ்ச காலம் கழித்து
அந்த காற்றையும், ஆலமரத்தையும்,
காதில் கேட்ட இனிமையான இசையையும்
மனதில் நிறுத்தி வந்து பார்க்கிற போது
காகங்கள் குடியிருந்த இடத்தில்
கட்டுமானம்
மரம் இருந்த இடத்தில்
மதில் சுவர்கள்
கவிஞரின் மனம் வேதனையில்
……………………
‘வெட்டி எடுத்தார்களோ
வேரோடு சாயர்த்தார்களோ தெரியாது
இன்று விடுதி ஒன்று
மரத்தின் நடு முதுகில் நிற்கிறது
அங்கே உறங்கிக் கொண்டிருந்த
என் கண்கள் வழியே
அதன் வேர்கள்
தலை நீட்டியது’
மரத்தை காணாத சோகம் கவிஞருக்குள்
அந்த சோகத்தை கவிதையின் வழியாக
நமக்குள்ளும் பரவச்செய்கிறார்
பல கவிதைகள் அவருக்காக மட்டுமல்ல இலக்கிய செல்வர்களுக்கும் சொல்லி இருக்கிறார்.
‘வாழும் காலத்தில் கொல்லப்பட்ட
இலக்கியச் செல்வர்கள்
அநேகருக்கு தமிழ் சமூகத்தின்
முதல் கொலைக் கருவி
மௌனம்’
மௌனம் மிகப்பெரிய ஆயுதம் தான்
ஆனால்,
அது எப்படி மனிதனைக் கொல்லும்
என்பதை
இந்த கவிதையில் தான்
தெரிந்து கொண்டேன்.
ஒரு கவிதை இப்படி முடிகிறது
……………………………
‘ஏவுகணை விழுந்த
நொடிக்கு முன்
ஒரு தட்டில் உணவுவிருந்தது’
இந்தக் கவிதை முடியவில்லை
நமக்குள் தொடங்குகிறது
இந்த உணவு தட்டின்
முன் இருந்தானே அவன்,
இருக்கிறானா? இறந்தானா?
உணவு தட்டு என்றால்
அதை பரிமாற ஒருத்தி இருந்திருப்பாளே
அருகில் பிள்ளைகள் குழந்தைகள்
இன்னும் யார் யாரோ
என்னென்ன விளைவுகளை
உருவாக்கியதோ ஏவுகணை …
என்று இந்தக் கவிதை
நம்மை உள்வாங்கிக் கொள்கிறது
‘இரவில் இணையைப் பிரிந்த
பறவையின் உள்ளுர்ந்த
முனங்களுக்கும்
மரத்தின் கீழ்
நினைவற்று கிடப்பவனின்
நிசப்தத்திற்கும்
ஒரு தொடர்பு உண்டு’
……………………………
நிசப்தத்திற்கும் முனங்களுக்கும்
என்ன தொடர்பு என்பதை
கவிஞர் சொல்லவில்லை
ஆனாலும் நமக்கு புரிகிறது
இப்படி சொல்லாமலே
புரிய வைக்கக்கூடிய பல கவிதைகள்…
‘தெருவில்
காலி பாட்டிலை
வேடிக்கையாக உதைப்பவனெனில்
உனக்கு புரியாது
என்று சொல்லி
இந்தக் கவிதையை முடிக்கிறார்’
சொல்லாமல் சொல்லி புரிய வைப்பது
கவிதையில் மற்றொரு பரிமாணம்
வாசிப்பவரையும் கூட சேர்த்துக் கொண்டு
கவிதை முடிப்பது மற்றொரு சிறப்பு
நிணமும், நாற்றமும்
அழகியலும், அழுகையும்
பூ மணமும்,பூ மனமும்
ஒன்றுக்கு மேல் ஒன்றாக
அடுக்கியதுதான்
மாசி வீதியின் கல் சந்துகள்
தோழர் சீனு ராமசாமி அவர்களுக்கு
எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
இந்நூலை எனக்கு வாசிக்க தந்த
அன்பு தம்பி சென்றாயனுக்கும் என்
இதயபூர்வமான நன்றி
நூல் அறிமுகம் எழுதியவர் :
பொன் விக்ரம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.