மாற்றம் செய்வார்கள் – கவிதை
வெற்றுக் கூடையில் முட்கள் சுமந்து
விற்க வந்தவனே-நீ
பற்றி வந்த விளக்கின் திரியால்
பகையைத் தந்தவனே!
வெற்று வத்திப் பெட்டி கொண்டு
வீதியில் நின்றவனே!-உன்
வெற்று வாக்கு உறுதி தெரிந்தால்
வெறுப்பை உமிழ்பவனே!
பாம்பு முட்டைக்குக் கோழி முட்டை
பட்டம் தருகிறாய்!-மதக்
காம்பு கொண்டே அதனை நீயும்
காட்சி தருகிறாய்!
மதத்தின் பெயரால் வணிகம் செய்து
மக்களை ஏய்க்கிறாய்!-அதில்
விதைக்கும் நஞ்சை விளக்கிச் சொன்னால்
விரோதி என்கிறாய்!
வெளிச்சம் காட்ட எங்கள் விழியை
வெட்டி எடுக்கிறாய்!-அதை
அளித்த எங்களை இருளின் தவிப்பில்
அலைய வைக்கிறாய்!
உங்கள் முதுகில் ஒளிந்து இருக்கும்
உருவம் தெரிந்தது-அது
எங்களை அழிக்கும் பூதம் என்றே
எளிதில் புரிந்தது!
ஆள்காட்டி விரல் பாட மும்மை
அடக்கி வைக்குது-அது
ஆளும் மதவெறிப் பேயின் பல்லை
அசைத்துப் பிடுங்குது!
நீண்ட நாள்கள் மறந்து மக்கள்
நிற்கமாட்டார்கள்-உன்
மாண்ட கொள்கை மரித்துப் போக
மாற்றம் செய்வார்கள்!
எழுதியவர் :
கோவி.பால.முருகு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

