2022இல் வெளிவந்த திரைப்படம். அஜய் கோவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். எழுத்தாளர், இயக்குனர், கார்ப்பரேட் பயிற்சியாளர் என பன்முக ஆளுமையான இவர் 40க்கும் மேற்பட்ட ஆவண படங்களை இயக்கியுள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ‘ராகிங்’ எதிர்ப்பு செயலாளர்.இந்தப்படத்தின் கதையை இவரும் ஷைகீனா கே.ரஃபிக் என்பவரும் எழுதியுள்ளனர்.
மடப்பள்ளி அரசு பள்ளியில் விளையாட்டு சாதனங்கள் புதிதாக வந்துள்ளன. அவற்றை ஒவ்வொரு குடியிருப்பு பகுதி மாணவர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் வழங்க முடிவெடுக்கப்படுகிறது. அதன்படி முதல்வாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் குழுவில் பலதரப்பட்ட மாணவர்களும் உள்ளனர். மீனவர் ஒருவரின் மகன். அவர் தன் மகனை தொழிலில் பழக்க அன்று அழைத்து செல்ல இருக்கிறார். அவனோ விளையாட்டிற்கு செல்ல பிடிவாதமாக இருக்கிறான். மனைவியின் வற்புறுத்தலால் அவனை அனுப்புகிறார். இன்னொரு பெண். அவள் தாயார் தையல் வேலையில் சிறிது பணம் சம்பாதிக்கிறார். தந்தை வெளிநாட்டில் சாதாரண ஊதியத்திற்கு வேலை செய்கிறார். வீடு கட்ட வாங்கிய கடன் அடைக்க வேண்டும். அந்த பெண் விளையாடுவதற்கு காலணியும் உடையும் கேட்கிறாள். முதலில் மறுக்கும் தாய் பிறகு அவளுடைய வருத்தத்தைப் பார்த்து வாங்கி தருகிறாள். கணவன் வெளிநாட்டிலிருந்து கோபிக்கிறான். இன்னொருவீட்டில் துணிகளை துவைத்துவிட்டு விளையாடப்போக சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வீடாக மாணவர்களும் மாணவிகளும் குழுவாக சேருகிறார்கள். இந்தக் குழுவின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொள்ளும் மாணவன் புறப்படும்போது வழுக்கி விழுந்து காலில் அடிபட்டுக் கொள்கிறான். ஆனாலும் நண்பர்களின் கைத்தாங்கலுடன் போகிறான்.போகும் வழியில் ஒருவனின் கைக்கடிகாரம் தொலைந்துவிடுகிறது. இவர்கள் விளையாட போகும் சுடுகாட்டு மைதானம் ஒரு அறக்கட்டளையால் வணிக வளாகமாக மாற்றப்பட உள்ளது.அதை சமுதாயக் கூடம் அமைக்க நன்கொடையாக அளித்த வழக்கறிஞர் அறக்கட்டளையை எதிர்த்து வழக்கு தொடுக்க நினைக்கிறார். தன் வழக்கறிஞர் நண்பருக்கு தெரிவித்துவிட்டு மாரடைப்பில் இறந்துவிடுகிறார். பத்திரிகைகள் அவர் மீது அவதூறு செய்கின்றன. வழக்கறிஞரின் நண்பர் உண்மையை தெரிவிக்கிறார். மைதானம் கிடைக்காத மாணவர்கள் காவல் நிலையத்தின் முன் உள்ள திறந்த வெளியில் சாதாரண பந்து மட்டைகளை கொண்டு விளையாடுகிறார்கள். இதுதான் கதை.
ஒரு சாதாரண சம்பவத்தை சமுதாய பிரச்சினைகளோடு இணைத்து சுவாரசியமாகவும் சில இடங்களில் நெகிழ்வாகவும் சொல்லியிருக்கிறார்கள். கிரிக்கெட் பேட், பந்து, கால் பேடு, ஸ்டம்ப்ஸ் இவையெல்லாம் அப்போது இருந்ததா என்று கேட்கும் மகனிடம் அதெல்லாம் இல்லை ஆனால் விளையாட நிறைய இடம் இருந்தது என்று சொல்லும் இடம், பெண்கள் அப்பொழுதெல்லாம் விளையாடுவார்களா என்பதற்கு பாட்டி படிக்கவே முடியாது, தான் போராடி படித்ததாக சொல்லும் இடம் குறிப்பிட வேண்டும். அதேபோல் வழக்கறிஞரின் இறுதிச் சடங்கில் மாணவர்கள் கலந்துகொண்டபின் அதில் ஒருவன் ‘இவர் நமக்கு உறவினரா, இல்லை தெரிந்தவரா?’ என்று கேட்கும்போது அவர் நம் பள்ளிக்கு வந்து உரையாற்றும்போது ‘மற்றவர்களின் உணர்வில் நாமும் பங்கு கொள்ள வேண்டும்’ என்று சொன்னாரல்லவா அதைத்தான் நாம் இங்கு செய்கிறோம். அவர் மகனின் வருத்தத்தை பார். அதில் நாமும் இணைய வேண்டும்’ என்கிறான் ஒருவன். ‘ஒ எம்பதி ‘என்கிறான் ஒருவன். அதைத்தான் நான் மலையாளத்தில் சொன்னேன் என்கிறான் அவன்.
எதற்கெடுத்தாலும் சதவீத கணக்கு சொல்லும் டீ கடைக்காரர், சுடுகாட்டு மைதானம் குறித்த விவரத்தை சொல்லும் ஆட்டோக்காரர், வாட்ச் தொலைந்ததற்கு புகார் கொடுக்க நிறைய விதிகள் உள்ளன என்பதை விளக்கும் காவல் நிலைய அதிகாரிகள் என பல சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன.
பல மதத்தை, பல தரப்பை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் ஒன்றாக விளையாட செல்வது, அவர்களுடைய குறும்புகள், கேலிப்பேச்சுகள், வழக்கறிஞரிடம் சமரசமாகவும் மிரட்டலாகவும் பேசும் இடைத்தரகர்கள், தாயில்லாமல் வளரும் வழக்கறிஞரின் மகன் தந்தையையும் இழக்கும் சோகம் என ஒரு சிறிய படத்தில் நிறைய விஷயங்களை தந்திருக்கிறார்கள்.

