மதில்கள் (Madhilkal): பெரும் மதில் சுவரின் இரு பக்கமும் கசியும் காதலைச் சொல்லிடும் வைக்கம் முகம்மது பஷீரின் நாவல்.
நூலின் தகவல்கள்:
நூல்: மதில்கள் (Madhilkal)
ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹100
பக்கங்கள் :72
மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படும் வைக்கம் முகம்மது பஷீர் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இளம் வயதில் மகாத்மா காந்தியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவரை விடுதலைப் போரில் ஈடுபடச் செய்தது. சென்னை, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் சிறைகளில் பஷீர் அடைக்கப்பட்டார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றைத் துவக்கிச் செயல்பட்ட பஷீர் அந்த அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வார இதழை நடத்தி வந்தார். இந்தியா முழுவதும் தேசாந்திரியாகத் திரிந்த பஷீர் அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் சுற்றியுள்ளார். அந்தப் பயணங்களின் போது கிடைத்த வேலைகள் அனைத்தையும் அவர் செய்துள்ளார். இமயமலைச் சரிவுகளில், கங்கையாற்றின் கரைகளில் அவர் இந்துத் துறவியாக, இஸ்லாமிய சூஃபியாக வாழ்ந்துள்ளார். விடுதலைப் போரில் பங்கேற்றதற்கான தாமரைப் பத்திரம் பெற்ற பஷீர் பத்மஸ்ரீ விருது, வள்ளத்தோல் விருது, சாகித்ய அகாதமி விருது போன்ற ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
பால்யகாலசகி, சப்தங்கள், பத்துமாவின் ஆடு, ஜன்மதினம், மதிலுகள் போன்ற நாவல்கள், ஏராளமான சிறுகதைகளை பஷீர் எழுதியுள்ளார். பால்யகாலசகி நாவல் பஷீரின் ஆகச் சிறந்த (Magnum Opus) நாவலாகக் கருதப்படுகிறது. பஷீர் தன் வாழ்வின் அனுபவங்களையே மதிலுகள், ஜன்மதினம், பால்யகாலசகி நாவல்களில் சித்தரித்துள்ளார். ’என்டே தங்கம்’ (1937) என்ற அவரது முதல் சிறுகதை மலையாள இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. காதல், பசி, வறுமை, சிறை வாழ்க்கை ஆகியனவே பஷீர் படைப்பின் கதைப் பொருள்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் பஷீரின் கதை மாந்தர்களாக சமூகத்தின் விளிம்பில் வாழும் சூதாடிகள், திருடர்கள், விலை மாதர்கள், பிக்பாக்கெட்டுகள் போன்ற ஏழை எளிய மக்களே இருக்கின்றனர். பஷீரின் படைப்புகளில் நகைச்சுவையும், சோகமும் இரண்டறக் கலந்து இழையோடுவதைக் காண முடிகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் அராஜகத்தைக் கண்டித்து எழுதியதற்காக பஷீர் மீது ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறைவாச அனுபவங்களையே பஷீர் ‘மதிலுகள்’ நாவலில் பதிவுசெய்துள்ளார். 1964இல் ’கௌமுகி’ வாரப் பத்திரிகையின் ஓணம் பண்டிகையின் சிறப்பிதழில் ‘மதிலுகள்’ குறுநாவல் வெளிவந்தது. இந்நாவலை தமிழின் சிறந்த கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் என்று பல துறைகளிலும் பரிணமிக்கும் சுகுமாறன் ’மதில்கள்’ என்ற தலைப்பில் அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மதிலுகள் நாவல் அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் திரைப்படமாக வந்துள்ளது.
விடுதலை வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட இளைஞன் பஷீர்தான் மதில்கள் நாவலின் கதைசொல்லி. இந்நாவலில் சிறை வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட விடுதலைப் போராட்ட வீரனாக நாம் பஷீரைச் சந்திக்கிறோம்,
1937இல் எழுதிய ‘அம்மா’ சிறுகதையிலும் பஷீர் தன்னுடைய சிறை அனுபவத்தையே சித்தரித்துள்ளார். சிறையின் கொடுமைகளை ’அம்மா’ சிறுகதையில் காட்சிப்படுத்தும் பஷீர் ’மதில்கள்’. குறுநாவலில் சிறை வாழ்க்கையை மகிழ்ச்சியாக, இயல்பாக எதிர்கொள்ளும் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். மதில்கள் நாவல் முழுக்க கேலியும், நையாண்டியுமாகவே நகர்ந்து செல்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லி அந்தக் கதையை தன்னிலை மொழியில் சொல்லிச் செல்கிறார்.
சிறைக்குள் நுழைந்ததும் கதைசொல்லிக்கு வேண்டிய விரிப்பு, போர்வை, பாத்திரங்களைக் கொடுக்கும் ஜெயிலர் அவரை செல்லுக்குள் அடைக்கிறார். “எனக்கான இரவு உணவு என்னானது”? என்று கைதி கேட்கிறார். மாலையில் சிறைக்குள் அடைக்கப்படும் கைதிகளுக்கு இரவு உணவு கொடுப்பதில்லை என்று ஜெயிலர் சொன்னதும், வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பீடியை அவர் பற்றவைத்துக் கொள்கிறார். மறுநாள் காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஜெயிலைச் சுற்றி வருகிறார். தன்னையும் சேர்த்து ஜெயிலில் பதினெட்டு அரசியல் தலைவர்கள் கைதாகி செல்லில் அடைக்கப்பட்டிருப்பதைக் கேட்டறிந்து கொள்ளும் அவர் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்.
ஜெயிலில் ஒரு தலைவர் கார்ல் மார்க்சின் ’காப்பிட்டல்’ நூல் தொகுப்பைப் படித்த வண்ணம் இருக்கிறார். ஒருவர் பிரிட்ஜ் சீட்டு விளையாடக் கற்றுத்தரத் தயாராக இருக்கிறார். தினமும் தனக்குத் தேவைப்படும் கடும் சாயா குடிப்பதற்கான ஏற்பாடுகளை பஷீர் செய்து கொள்கிறார். காலையில் வரும் கஞ்சியை ருசித்துக் குடிக்கிறார். சிகப்புத் தொப்பி அணிந்திருக்கும் ஆயுள் கைதிகளிடம் அன்பாகப் பேசி அவர்களின் நட்பைப் பெறுகிறார். நன்னடைத்தை காரணமாக தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய அவர்களிடம் பஷீர் வாஞ்சையுடன் பழகுகிறார். ஜெயில் சூப்பிரண்டெண்ட், ஜெயிலர் போன்ற அதிகாரிகளிடமும் இயல்பாகப் பேசி ஏதோ சுற்றுலா வந்தவர் போலவே அவர் சிறைக்குள் நடந்து கொள்கிறார்.
பஷீர் அடைத்து வைக்கப்பட்ட செல்லின் இரு பக்கமும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் மதில்கள் நீண்டு நிமிர்ந்து நிற்கின்றன. ஒரு மதிலுக்குப் பின்னால் சிறையின் வெளிப்புறம். அவரைப் பொறுத்தவரை அந்த வெளிப்புறமும் ஒரு சிறைதான். மதில்கள் எதுவுமில்லாத உலகமெனும் மிகப் பெரிய சிறை அது. மற்றொரு மதிலுக்குப் பின்னால் இருப்பது பெண்களுக்கான சிறை. அது தெரிய வந்ததும் பஷீர் புளகாங்கிதம் அடைகிறார். இளைஞர்களிடத்து பெண்களைப் பற்றிய கனவுகள் இருப்பது இயல்புதானே! பெண்ணின் மணமும் அவருக்குப் பிடித்ததாக இருக்கிறது. ஆம்; பெண்ணின் மணம்தான் எவ்வளவு சுகந்தமானது! பெண்களை அடைத்து வைத்துள்ள சிறையிலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்பதைப் போல பஷீருக்குத் தோன்றும். மதிலுக்கு அந்தப் பக்கமிருந்து சிரிப்பொலி கேட்கிறதா என்று தினமும் அவர் உற்றுக் கேட்டுக் கொண்டேயிருப்பார். பெண்ணின் சிரிப்பொலியைக் காட்டிலும் இனிமையானது வேறு எதுவும் உண்டோ? அந்தப் பக்கமிருந்து பெண்ணின் மணம் வருகிறதா என்றும் அவர் நுகர்ந்து பார்ப்பார்.
ஒருநாள் உண்மையிலேயே ஒரு பெண்ணின் சிரிப்பொலி அவருக்குக் கேட்கிறது. சிரிப்பொலி வந்த திசை நோக்கி யாரென்று கேட்கிறார். ’நாராயணி’ எனப் பதில் வருகிறது. அவர்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்கின்றனர். இது கண்டதும் தோன்றிய காதல் அல்ல. கேட்டதும் உருவான காதல். ஆம்; நாராயணியின் குரலைக் கேட்டதும் உருவான காதல். மதிலுக்குப் அப்பால் இருந்து நாராயணி ஒரு கம்பை உயர்த்திப் பிடிப்பாள். இந்தப் புறம் நிற்கும் பஷீர் அவளுக்கு உடனே பதிலுரைப்பார். அவளுக்கு வயது இருபத்திரெண்டு, பதினான்காண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவள். அந்தச் சிறையில் எண்பத்தியேழு பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் தான் ஒருவள் மட்டுமே அழகி என்கிறாள் நாராயணி. இவரோ நான் ஒன்றும் அழகனல்ல என்கிறார். மதிலோரம் நின்று கொண்டு மதிலை முத்தமிட்டுக் கொள்ளும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வதாகவே எண்ணி மகிழ்கின்றனர்.
கதைசொல்லியான பஷீர் தன்னுடைய செல்லிற்கு முன்னால் அழகிய ரோஜாச் செடி ஒன்றை வளர்க்கிறார். மதிலின் இந்தப் புறமிருந்து ரோஜாப்பூ ஒன்றைத் தூக்கி எறிகிறார். அது தன்னுடைய மார்பகத்தின் மீது விழுந்ததாக நாராயணி மகிழ்ச்சியுடன் சொல்கிறாள்.
வெளியிலிருந்து சிறைக்குள் தலைவர்களுக்குத் தேவைப்படுகின்ற பொருட்கள் வீசி எறியப்படும். சிறைக்குள் கிடைக்காத பொருட்களே கிடையாது. தலைவர்கள் அடைக்கப்பட்டுள்ள செல் முன்னாலும் ரோஜாச் செடியை வளர்த்து அவர்களின் அன்பைப் பஷீர் பெற்றுக் கொள்கிறார். நாராயணியின் அறிமுகத்துக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து வைத்திருந்த கதைசொல்லி நாராயணியின் அறிமுகத்திற்குப் பின்னர் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட்டு விடுகிறார்.
ஒரு காலத்தில் அந்த மதிலுக்கு அடியில் ஓர் ஓட்டை இருந்தது. அந்த ஓட்டை ஆண்களும், பெண்களும் தங்கள் அன்பைப் பறிமாறிக் கொள்வதற்கு வசதியாக இருந்தது. குசும்பு பிடித்த ஜெயில் வார்டர் ஒருவர் ஓட்டை வழியாகப் பார்ப்பதற்கு கைதிகளுக்கு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தார். நல்ல வியாபாரம் நடந்தது. பணக்காரக் கைதிகளிடம் காசு இருந்தது; அனுபவித்தார்கள். ஏழைக் கைதிகள் என்ன செய்வார்கள்? ‘வார்டரே, இது சரியில்லை’ என்றார்கள். ஜெயில் வார்டர் அந்த ஓட்டையை சிமெண்ட் பூசி அடைத்து விட்டார். கோபமடைந்த கைதி ஒருவர் அந்த வார்டரை அடித்துவிட்டார். ஜெயில் நிர்வாகம் அந்தக் கைதிக்கு முப்பத்தாறு கசையடிகளைத் தண்டனையாகக் கொடுக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அவ்வப்போது சிறையில் தூக்கிலிடப்படுவார்கள். இரவு முழுவதும் தூங்காதிருக்கும் அவர்களுக்கு கதைசொல்லி கடும் சாயா தாயாரித்துக் கொடுப்பார். சாவதற்கு இரண்டு வழிகள் உள்ளன; ஒன்று அழுது கொண்டே சாவது; மற்றொன்று சிரித்துக் கொண்டே சாவது; சிரித்துக் கொண்டே மரணத்தைச் சந்தியுங்கள் என்று அவர் கைதிகளுக்கு அறிவுரை தருவார்.
ஒருநாள் இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்ட கைதி ஒருவரை ஜெயிலுக்குள் இழுத்து வருகிறார்கள். சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியாம்! அவனைப் பார்த்ததும் பஷீருக்கு ஆச்சரியம்! அவன் பஷீரின் பள்ளித் தோழன். ”என்னைத் தெரியும் என்று காட்டிக் கொள்ளாதே. உனக்கு அவமானம்” என்கிறான் சங்கிலியில் கட்டப்பட்டவன். அவரோ “நீ என் நண்பண்டா! என்று அவனைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்.
ஒருநாள் நேரில் சந்திப்பது என்று நாராயணியும், கதைசொல்லியும் திட்டமிடுகின்றனர். ஒரு வெள்ளிக்கிழமை காலை பதினொரு மணிக்கு ஜெயில் மருத்துவமனையில் சந்தித்துக் கொள்வது அவர்களுடைய திட்டம். ஆனால் அவரது விடுதலைக்கான ஆணை வியாழக்கிழமை இடியென இறங்குகிறது. ஜெயிலர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த விடுதலைச் செய்தியைத் தெரிவிக்கிறார். கதைசொல்லி கவலையில் மூழ்கிவிடுகிறார். ”எனக்கெதுக்கு விடுதலை? இதற்குப் பெயர் விடுதலையா? இச்சிறையிலிருந்து வெளியில் பரந்து விரிந்து கிடக்கும் உலகமெனும் சிறைக்குச் செல்வது எப்படி விடுதலையாகும்?” என்று அங்கலாய்க்கிறார். ஜெயிலர் அன்புடன் அவரை வழியனுப்பி வைக்கிறார். நாராயணியை கடைசிவரை பார்க்க முடியாமல் போன வருத்தத்துடன் கதைசொல்லி சிறையிலிருந்து வெளியே வருகிறார். ஜெயில் கதவு பெரும் சத்ததுடன் மூடப்படுகிறது. கையில் நாராயணிக்குக் கொடுக்க வேண்டிய ரோஜாப் பூவுடன் நிற்கிறார். சிறையில் பூத்த காதல் அந்தச் சிறையிலேயே முற்றுப் பெற்றுவிடுகிறது.
நூல் அறிமுகம் எழுதியவர்:
பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஒருத்தரையொருத்தர் காணாமல் கொள்ளும் காதல் இன்றைய திரைப்படங்களில் நிறைய பார்த்துவிட்டோம் . ஒருவேளை இந்த நாவல்தான் அதற்கெல்லாம் ஆதாரமோ? முகம்மது பஷீரும் , நாராயணியும் ஏதேனும் பாடல் பாடியிருந்தால் அதனைக் கொண்டு மதில்கள் இல்லாத வெளிச்சிறையில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம் . காணாத காதல் , சொல்லாத காதல் என்றெல்லாம் இன்றைய தலைமுறைகளிடம் பேசினால் அவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை . எல்லாம் whatsapp புண்ணியம் . கோப்பெருஞ்சொழனும் , பிசிராந்தையாரும் கொண்ட நட்பைப் போல் காணாமல் கொண்ட காதலும் இந்த உலகத்தில் சாத்தியம்தான் என்பதை இந்த மதில்கள் நாவல் எடுத்துரைக்கிறது . நாவலின் சுவையை அறிமுகம் செய்யும் விதமான இந்த விமர்சனம் தந்தமைக்கு நன்றி .