அவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஒன்றாய் கூடுகிறார்கள்
நெருக்கி ஒன்றோடுவொன்றாய் பிணையானதாய்
பிளிரும் முழக்கங்களிலும்
வான் பிளக்கும் ஒலிப்பிளம்பு..
அவர்கள் முழங்குகிறார்கள் செவிப்பறைக் கிழிய..
கைகளில் நீதியின் பதாகைகள்..
அவர்கள் வருகிறார்கள் விசையாய்
சப்பாத்து நரநரப்புகள் முன்னணியில்
ஆயுதம் ஏந்திய கைகளில்
அநீதியின் வெறியாட்டம்….
எதையும் எதிர்கொள்ளும்
பால் வேறுபாடற்ற மாணவ அணிகள்
அடித்து நொருக்கும் ஆணவத் திமிர்களை நெஞ்சில் தாங்கி
முழக்க நெருப்பாய் மூச்சை உமிழ்கிறார்கள்…
சிறை பிடிப்புத் தடியடி
அனைத்தும் நொருங்கின
நீதியேந்தியவர்கள் கைகளில்
முழக்கங்களில் முன்டிய முந்தும் முனைப்புகளில்…
காட்சியாகும் நிகழ்வுகள்
இரத்தத்தை சூடேற்றி
நிலை குழையச் செய்தன…
செவிகளில்
திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன
“புத்தகம் படிக்கவா..சாராயம் குடிக்கவா“
அடித்து நொருக்கப்பட வேண்டியவைகள் மதுக்கடைகள் மட்டுமல்ல..அரச பயங்கரவாதமும்
அதிகாரத் திமிரும் கூட…
கசியும் கண்ணீர் துளிகளில்…
எங்களைப்போலவே இரவும்
விழித்திருந்தது
ஓட்டத்தை நிறுத்தியிருந்த கடிகாரம் சுவற்றில்
தேங்கிக்கிடந்த கண்ணீர் வெள்ளம்
சுற்றியிருந்த மனங்களில்
அடர்இருள் துன்பங்கள் துடித்து அலைந்தன
நல்விளக்கின் சுடரொளி
அறைநிறை உறவுகளின் மனத்துயரங்களை அளந்துகொண்டிருந்தது
ஆழ்கடல் அமைதி பொங்கிஎழும்
அலைகளின் ஆர்பரிப்பாய்
விம்மி எழும் மனங்கள்
சுற்றி சுழன்றவண்ணம் அறைமுழுக்க
தங்கை
குளிர்சாதனப் பெட்டியில்
அமைதியாய் ஆழ்ந்த உறக்கத்தில்..!
தினமும்
வாசலில்
மனைவியின் விரல் நுனிகளால் வந்துவிழும் ஓவியம்
மனதை கவ்விபிடிக்குக்கும்.
நாளும் நாளும்
இருசக்கர வாகனம் இறக்கும் பொழுதெல்லாம் கோலங்கள் நசுங்கும்போது
மனமும் கசிந்து நசுங்கும்.
பூக்களை நசுக்காதீர்கள்” எனும்
பிரபஞ்சன் வரிகளும் நினைவில் வரும்.
மென்மையான மனம் மேன்மையானதுதானே..
எனது வாரிசுகள் எங்கும் வனமாய்.
எனது மடியியில் உயிர்பித்த
பறவைகளின் தொடர்ச்சி
எங்கெங்கு காணினும் இசைத்தவண்ணம்.
எனது காலடி நிழலில்
களைப்பாரி சென்ற மாந்தர்கள்
அனுபவ வெளியில் எனைச்சுற்றி எங்கும்
என் பார்வை எட்டியவரை
என்னுள் படிந்த காட்சிகள்
கனத்த சுமையோடு.
எப்பொழுது வேண்டுமானாலும்
வெட்டிச் சாய்க்கப்படலாம்.
பட்டுப்போனாலும்
பட்டறிவோடு தலை நிமிர்ந்து
கம்பீரமாய் நான்!
அந்தப் பள்ளி நாட்களில்…
பூத்துக்குலுங்கும் புளியமரமும்
பொங்கிவரும் பூங்காற்றும்
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
சாலையோரம் நீ சரிந்த நடையொடு
சாய்ந்து எனை நோக்கும்போது
நான் ஒய்யார நடையோடு
ஓரக்கண்ணால் பார்த்து
ஒருக்களித்து சிரித்தேனே
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
சடுகுடு அரங்கானாலும்
கால்பந்தாட்ட மைதானமானலும்
என் விழி பார்த்த ஆர்வத்தில்
வீறுடன் விளையாடி
நீ வெற்றிக்கொண்ட களிப்பில்
என் வியந்த கையசைவை
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
என்மன ஏக்கங்களை எடுத்துரைக்க
நான் எத்தனித்துத் தவித்ததும்
நீ ஏதுமறியாது சூழல் கருதி
சுழன்று சுழன்று வட்டமிட்டு
வாடிய முகமுடன் வலம்வர
உன் கண்ணோரகசிவில்
நான் கரைந்து மிதந்ததும்
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
அக்கால வாழ்வு…
நம்மை அடித்து விரட்டி
புயற்காற்றாய் புரட்டிப்போட்டதில்
இன்று…
நீ எங்கோ… நான் எங்கோ…
நினைவுகள் மட்டும்
ஆழமாய் அப்படியே…!
நினைவேந்தும் தோழி நான்
தேடுகிறேன் உனை
கலுங்கில் நீரளம்பி வரும்
பாதங்களில்
சிக்கித்தவித்தது
ஓடைக்கரையில் உயர்ந்து நிற்கும்
ஆலமரக் குயிலின் ஒற்றைக்குரல்.
நீரில் எதிரேறும் கெண்டை
குரல் பற்றி இழுக்க
இமைக்க மறந்தன விழிகள்.
மூச்சோடு முனைந்து
உயிரைப் பிடித்தது குரல்.
அரைமயக்க நினைவில்
பதறிக்கிடந்தது மனம்.
பாழும் குரல்
மறுபடியும் மறுபடியும்
தனிமையைத் தின்றது!
அப்பாவின் நினைவு நாளில்..
எத்தனையோ மணங்கள் கமழ்ந்து
மனதை வருடினாலும்
ஒவ்வொருவருக்கும் தாய்தந்தையின் மணங்கள் தனித்துவம்தானே..!
இளம் வயதில் இழந்த அம்மாவின் வாசனை விண்வெளியில் திரிகிறது
நட்சத்திர மணமாய்.
அப்பாவின் வாசனை நாசியில் அப்பிக்கிடக்கிறது.
மணம் உமிழ்ந்தது ஞாபகம் மட்டுமல்ல
நல்ல உள்ளத்தை
நேர்மையின் வழியை.
உழவன் மகன்கள் நாங்கள்
கற்றுத்தந்த விவசாய பாடங்கள்
நிலத்தை நீரை
இயற்கையை உயிர்களை
பற்றிப்படரும் கொடிகளின் நெருக்கமாய்
நேசிக்க வைத்தது.
நிலத்தோடு உறவாடிய நாட்களின் நினைவுகள் அப்பாவை சுமந்து வரும்.
கவளை இறைக்கும்போதும்
நஞ்சை உழும்போதும்
வரப்பு கழிக்கும்போதும்
எருவு இறைக்கும்போதும்
அருப்பு அருக்கும்போதும்
நெல்லு அடிக்கும்போதும்
பிணை ஓட்டும்போதும்
தூக்கலாய் எழும் வாசனையைவிட
அப்பாவின் வாசனை அருமையாய் மணந்து
என்னை வளர்த்து வழிநடத்தி மேலேற்றியது.
ஈந்த அன்பும் இருத்திய நேர்மையும்
ஞாலத்தில் நான் உள்ளவரை
என்னோடு திரியும் அப்பாவின் நினைவாக….!
ஒன்றால் ஒன்று மறைக்கப்படும்
தந்திரங்களும் உண்டு
பொய்யும் புரட்டும் சிறந்த
ஆயுதமாய் ஏந்தப்படும்
இங்கே
காய் நகர்த்தல்கள் அனைத்தும்
அதிகார மையம் நோக்கியே…
மரண தண்டனையாகட்டும்
அஞ்சலியாகட்டும்
அனுதாபமாகட்டும் அரவணைப்பாகட்டும்
எல்லாம் அதிகார மையம் நோக்கியே
கட்டமைக்கப்படும்
பீடங்களின் புனைவுகளில்
களமாடல்
ஒரு தடகள வீரனின் முனைப்பைப்போல் வெற்றியின்
இலக்கு நோக்கியே…
ஒன்றுக்கு ஒன்றை
எதிரெதிராய் நிறுத்தியே
களமாடும் வித்தையில் கைதேர்ந்த
நகர்த்தல்கள்…
மீன்கொத்திக் கண்களாய்
தகவமைத்துப் உண்மையைப் பிடிப்போம்!
அந்தப் பள்ளி நாட்களில்…
பூத்துக்குலுங்கும் புளியமரமும்
பொங்கிவரும் பூங்காற்றும்
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
சாலையோரம் நீ சரிந்த நடையொடு
சாய்ந்து எனை நோக்கும்போது
நான் ஒய்யார நடையோடு
ஓரக்கண்ணால் பார்த்து
ஒருக்களித்து சிரித்தேனே
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
சடுகுடு அரங்கானாலும்
கால்பந்தாட்ட மைதானமானலும்
என் விழி பார்த்த ஆர்வத்தில்
வீறுடன் விளையாடி
நீ வெற்றிக்கொண்ட களிப்பில்
என் வியந்த கையசைவை
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
என்மன ஏக்கங்களை எடுத்துரைக்க
நான் எத்தனித்துத் தவித்ததும்
நீ ஏதுமறியாது சூழல் கருதி
சுழன்று சுழன்று வட்டமிட்டு
வாடிய முகமுடன் வலம்வர
உன் கண்ணோரகசிவில்
நான் கரைந்து மிதந்ததும்
நினைவுண்டா தோழா..? நினைவுண்டா..?
அக்கால வாழ்வு…
நம்மை அடித்து விரட்டி
புயற்காற்றாய் புரட்டிப்போட்டதில்
இன்று…
நீ எங்கோ… நான் எங்கோ…
நினைவுகள் மட்டும்
ஆழமாய் அப்படியே…!
நினைவேந்தும் தோழி நான்
தேடுகிறேன் உனை முகநூல் வழியாய்…!
கட்டழகுப் பொட்டு வைத்து
காலையிலே தெருவில் வர
வட்டநிலா சிட்டு முகம்
வாஞ்சையுடன் எனையழைக்கும்.
ஏரிக்கரை மீதிருந்து
என் ஆசைகளை நானிசைக்க
எங்கிருந்தபோதிலுமே
அவளிதயத்திலே ஒலித்திடுமே.
பட்டப்பகல் நிலவெரிக்க
பாவையவள் முகமினுக்க
கட்டிக்கொள்ளும் மாமனிவன்
கிட்ட வர துடிக்கிறேனே.
பொங்கி வரும் புதுப்புனலின்
பூரிப்பிலே மனம் கிறங்க
புது மலரின் புன்னகையாய்
புதுவிதமாய் அது தெறிக்கும்
கள்ளவிழி பார்வையிலே
காதலன் நான் அருகணைய
மெல்ல மனம் குறுகுறுக்கும்
மேனியெங்கும் துருதுருக்கும்.
திருவண்ணமலைக்காரி
தின்னத்தின்ன திகட்டாத தின்பண்டங்கள்போல
எண்ண எண்ண இனிக்கும் இனிமைக்காரி
எங்கே எப்படி வாழ்வின் கோடுகளில்
எந்தப் புள்ளியில் எதுவாய் நிலைக்கிறாளோ..!?
அன்றலர்ந்த அவள்தான்…
எள்ளுப்பூ மூக்கழகி
எழிலான சொல்லழகி
கன்னக்கதுப்பழகி
காந்த விழியழகி
கட்டான உடலழகி
கவர்ந்திழுக்கும் நடையழகி
சொற்சிக்கனப் பேச்சழகி
சொக்கவைக்கும் சிரிப்பழகி
கொன்றைமர இலைக்கீற்றாய்
நீள்கூந்தல் அழகியவள்
வீரப்பழ இதழ் அழகி
விடியும் ஒளி மிளிரழகி
செப்புச்சிலை போல
செதுக்கி வைத்த அழகியவள்
என்மன மேடையிலே
நடைபயிலும் மயிலழகி
அவளை கண்டாள் வரச்சொல்லுங்கள்..!
காணாவிட்டாள் பதில் சொல்லுங்கள்…!
வாலுள்ள மிருகங்கள் அதனதன் எச்சங்களுடன் வால்களை வீசித்திரிவதுபோல்
ஒருவன் வார்த்தைகளை தெருக்களில்
விசிறிவிட்டுச் சென்றான்.
உணர்வின்றி
மிதித்துச் சென்றார்கள் சிலர்
கால்களில் ஒட்டிக்கொண்டதில்
நாற்றம் உணர்ந்தார்கள் சிலர்
திட்டமிடல் இல்லை என்றார்கள் சிலர்
திட்டமிடல்தான்‘என உணர்ந்து
சொன்னார்கள் பலர்
கலங்காமல் காரிஉமிழ்ந்தார்கள் சிலர்
கல்லெறிந்தார்கள் சிலர்
கவலைகளை கவனமுடன்
கையாலவேண்டிய காலம் கையருகில்…
திடமாய் சேமித்த அனைத்தும்
இல்லாமல் போய்வி்டுகிறது.
எடுக்க எடுக்க குறையாமல்
அட்சையப் பாத்திரப் பொருளாய்
‘ அன்பு‘ மட்டும் அப்படியே
குவியல் குவியலாய்…
வஞ்சமின்றி வழங்க
வாஞ்சயுடன் என்றும் நான்!
உன்
தாகத்தை
தாபத்தை
விண்ணில் உலாவும் காற்றில் பதித்துவிடு!
எப்பொழுதுவேண்டுமானாலும்
உன் பதிவுகளை மட்டும் தனியே
பிரித்து எடுத்துக்கொள்வேன்.
துயருர ஏதுமில்லை.
காற்றுவெளியினால் ‘அன்பை‘
கைக்கூடல் சாத்தியமே!
தொலைவான உன் மூச்சு
என் மேனியில் இதமாய்!
காதல்…
சாதியை நிராகரிப்பது
மதத்தை மறுப்பது
மொழியை கடப்பது
இனத்தை எதிர்கொள்வது
நிறத்தையும் அறியாதது
அழகையும்கூட கேள்விக்குள்ளாக்குவது
மனதைக் கவ்விக்கொள்வது
அன்பை விளைவிப்பது
சூழல் மறந்து நெருக்கம் உணர்வது
விழிகளில் ஒளியைத் தெறிப்பது
எத்தனையோ அற்புதங்களை
இசையின் மென்மையாய்
இழைப்பது
எதிர் வினைகளை
எத்தனை இடர் வரினினும்
எதிர்கொள்ளும் துணிவுடன்
போராட கற்றுக் கொடுப்பது..
ஆதலால் காதல் செய்வீர்…!
காதலுக்குத் துணை புரிவீர்..!
அரசு
குடிமக்களை சோம்பியிருக்க விடுவதில்லை
எப்போதும் பரபரப்பாயிருக்கவே விரும்புகிறது
தன்னை மறக்க
போராடும் வாழ்வை மறக்க
அரசைப்பற்றியே நினைக்க வேண்டி
வாழ்வை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே
அடையாளம் இழந்து விடுவோமோ என்ற பயத்துடனேயே
நகர்வுகள் இருக்கவேண்டி
அசைவுகள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.
தயாராகிவிடுங்கள்!
நாய்களுக்குப் பட்டை இருப்பது போல்
கைதிகளுக்கு எண்கள் இணைந்தே இருப்பது போல்
மாறாமலிருக்க மருத்துவமனைகளில்
தாய்க்கும் சேய்க்கும் கட்டப்படும்
எண்களைப் போல்
துறைகளோ நிறுவனங்களோ
பணிபுரிவோர் கழுத்தில் அணிவிக்கும்
அடையாள அட்டை போல்
உங்களின் தகவல் நிறைந்த
அடையாள அட்டை
எப்போதும் நீங்கா வண்ணம்
நிரந்தரமாய் பிணைத்துக்கொள்ள
தயாராகிவிடுங்கள்..!
உங்களுக்கு நன்மை பயக்கும்.
காணாமல் போய்விட்டாலோ
மனப்பிறழ்வால் அலைவுற்றாலோ
விபத்துக்குள்ளானாலோ
கொலைகளுக்கோ
தற்கொலைகளுக்கோ
இடம்பெயர்ந்த மரணத்துக்கோ
பொதுகழிப்பிடத்திற்கோ
சோதனைக்குள்ளாகும்போதோ
ஆட்படும் தருணம்
அடையாளம் காண்பது எளிதாகிவிடும்.
ஓர் ஆலோசனை
பிறக்கும்போதே நெற்றியில்
அவரவர் எண்களை
பச்சைக்குத்திவிட்டு விட்டால் என்ன..!
முன்பே பிறந்தவர்கள்
அனைவரின் நெற்றியிலும்கூட
எண்களைப் பதித்துவிடலாம்
எண்களால்
முரண்படுவோர் தகவலறிதல் எளிதாகிவிடும்
எண்களே இல்லாதோரை
பயங்கரவாதி
தீவிரவாதி
தேசதுரோகி‘ என
முத்திரைக் குத்தி சிறை பிடிக்க
எளிதாகிவிடும்
வேலைகளும் மிச்சமாகிவடும்.