மதுரா கவிதைகள்எட்டப்படாத
அறிவெல்லைகளின்
விளிம்புகளைத்
தேடி களைக்கிறது மனிதம்.
இன்னும்…இன்னும்…
ஆசைகளின் நீட்சியில்
அறிவியலின்
அத்தனைப் பக்கங்களும்
திறந்து கொள்ள
அடுத்தடுத்து நகர்கையில்
அனாதையாக்கப்பட்ட
கணங்கள்..
முன்னேறும் நெரிசலில்
உதிர்ந்து போன
பொன்சிறகுகள்..
பெற்றது எது?
கற்றது எது?
இழந்தவைகளுக்கான
இழப்பீடுகளை
கையளிக்க இயலாமல்
சுழல்கிறது கோளம்.


2.
நிசப்தத்தைப்
பருகும் இரவுகளில்
தன் கூண்டைத்
திறக்கிறது மனப்பறவை.
சிறகசைத்து சடுதியில்
யுகங்களைக் கடந்து
ஏதோ ஒரு புள்ளியில்
நிலை கொள்கிறது.
தன்னைத் தானே
கொத்திக் கிளறி
உருவமற்று
உலாத்தித் திரிகையில்
உதிர்க்க முடியாத
நினைவிறகுகளைப்
பிய்த்தெறியவாவது
ஒரு விரல் தேடி
விண்ணப்பிக்கிறது.


3.
விரல் பற்றி
விதிர்க்கும் வினாக்களுக்கு
விடையறிந்தாலும்
கனக்கும் மௌனத்தோடு
கடக்கும் கணங்களில்
ஒளிந்து கொண்டிருக்கிறது
நிதர்சனத்தின் நிழல்.
நூலிழையில்
பொய்மை நிலைபெறும்
யதார்த்தங்களில்
இற்றுப் போகும் நம்பிக்கைகள்
நிகழ்தகவில் ஜெயிக்கும்
உண்மையில்
மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகின்றன.
இருளிலும் ஒளியிலுமாய்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
நாட்கள்..
மதுரா