ச.சுப்பாராவ் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதுரை போற்றுதும்’ புத்தகத்தை மதுரை பார்சல் பாசஞ்சர் போல மெதுவாகப் படித்தேன். மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறு வயது முதல் தான் அலைந்த மதுரை தெருக்களில் மீண்டும் ஒருமுறை சுற்றியிருக்கிறார். இம்முறை வேடிக்கையாக மட்டும் அல்ல; பார்த்த ஒவ்வொன்றிலும் ஒளிந்திருந்த வரலாற்றை, சோகத்தை, அழகை ஆழமாகப் பார்த்திருக்கிறார். ஆனாலும் எளிமையான, ஜனரஞ்சகமான கதை போல் சொல்கிறார். போகிற போக்கில் அவர் தெளித்துச் செல்லும் இலக்கிய குறிப்புகளை அறிவதற்கு என்னைப் போன்ற வாசகன் சற்று முயற்சி எடுக்க வேண்டும்.கம்பராமாயணத்தில் தொடங்கி நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் வழியாக சி.சு செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, ஒரு எழுத்துப் புலியின் மதுரை குறித்த வர்ணனை (யார், என்ன புத்தகம் என்று சொல்லி விடுங்கள் ராவ்),’காவல் கோட்டம்’ என ஆங்காங்கே மதுரை தொடர்பான இலக்கியப் படைப்புகளைக் கொடுக்கிறார். இருந்தாலும்…..
தனது ஆளுமையை உருவாக்கியவர்களில் ஜனதாக் கட்சி, எழுத்தாளர் சுஜாதா, மதுரையில் நடைபெற்ற அரசியல் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், இடது பக்கம் திருப்பிய டெய்லர் மணி என ஒரு அத்தியாயம். அதில் இடதுசாரிகள் குறித்து நல்ல விவரிப்பு. அன்று அவர் கேட்ட அரசியல் தலைவர்களில் மோகன், நன்மாறன் ஆகியோருடன் பின்னாளில் நெருங்கிப் பழகியதையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும்….
நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து அவற்றின் சாரத்தைச் சுவையான கட்டுரையாக எழுதுபவர் அல்லவா? அதனால் மதுரையில் இருக்கும் பதிப்பகங்களைப் பற்றிக் கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் எழுதியிருக்கிறார். மீனாட்சி புத்தக நிலையம், என்சிபிஎச், அன்னம், பாரதி புக் ஹவுஸ் என பரந்துபட்ட தொடர்புகள். ஆனாலும்….
பழம்பெரும் நடிகர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் திருப்பாவை கற்று தந்த மாமி என கலைகளைப் பற்றிய ஒரு 365 சுற்று அனுபவத்தைத் தருகிறார். இருந்தாலும்…..
மதுரைக்காரன் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி எழுதாமல் இருப்பானா? சங்கப் புலவர்களுக்குச் சன்னதி, மதுரையை முன்னொட்டாகப் போட்டுக்கொண்ட புலவர்களின் பெரிய பட்டியல், பள்ளியறை போகும்போது கோயில் கணக்கு படிப்பது, அப்போது எதுவரை தேவாரம் ஓதுவார்கள், எங்கிருந்து நாதஸ்வரம் வாசிக்கப்படும், பெண்கள் படுக்கப் போகுமுன் நகைகளைக் கழற்றி வைப்பது போல மீனாட்சி அம்மனும் செய்வது (தொ.பரமசிவன் மக்களுக்கும் கடவுள் வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கட்டுரையாக விளக்குவதை இந்த இரண்டு வரிகளில் விளக்குவது போல தோன்றுகிறது. ஐயப்பனின் மனைவியாகக் கருதப்படும் புஷ்கலை என்பவர் ஒரு சவுராஷ்டிரப் பெண்; அவரின் திருமண சடங்குகள் இன்றும் சவுராஷ்டிர சமுதாயத்தினரால் நடத்தப்படுவது என்கிற சேதியும் இது போன்றதாகக் கருதுகிறேன்.) போன்றவை குறித்த புதிய செய்திகள் சிறப்பு. இருந்தாலும்……
பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தது; தன் பள்ளியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் அவர் நினைவாற்றல்; கல்லறையையும் ஆய்வு செய்யும் அவரது விந்தை மனம்; அதிலும் ஜாக்சன் துரையையும் ஜம்புரோவையும் ஒப்பிட்டிருப்பது; இருந்தாலும்…
மதுரையின் உணவு வகைகளை ஆங்காங்கே சுவையாகச் சொல்லியிருப்பது; தானும் நண்பர்களும் டீ குடித்துக்கொண்டே கச்சேரிகளையும் அரசியல் பேச்சுக்களையும் கேட்டது; பீப்பிள்ஸ் நாடக்குழுவில் நடித்தது; தன்னால் விலை குறைந்த பொருட்களையே வாங்க முடிந்தது என்பது போன்ற வருணனைகள் அவரின் எளிய பின்னணியை காட்டுகிறது என்றாலும்…….
புத்தகம் முழுக்க நகைச்சுவை உணர்வு விரவிக் கிடக்கிறது; இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வந்த அன்று எதிர்த்த வீட்டு அக்கா தூக்கில் தொங்கியதைச் சொல்லும்போது சோகம் பின்னணியாய் ஒலிக்கிறது ஜார்ஜெட் தாவணி போட்டால் அந்த அக்கா சினிமாவுக்குப் போகிறார்கள் என்ற இடத்தில் தமிழ் மக்களின் மனத்தில் சினிமா எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைப் போகிற போக்கில் சொல்கிறார். இருந்தாலும்…..
மதுரையின் கட்டிடங்கள்,தெருக்கள்,திருவிழாக்கள் எல்லாமே சிறப்பாக விவரிக்கிறார். இருந்தாலும்……
(இந்தப் பதிவின் முடிவில் நான் சொல்ல நினைத்ததைச் சரியாக ஊகிக்கும் முதல் ஐந்து நண்பர்களுக்கு சுப்பாராவின் புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.)
– ரமணன்
நூல் : மதுரை போற்றுதும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : ₹ 200
தொடர்பு எண் : 098411 91397
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.