“மதுரம்” (சிறுகதைகள்)
“வண்ணதாசன்”
சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்: 136
₹.130
தனது சிறுகதைகளால் தனக்கென்று தனி முத்திரை பதித்த வண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
இந்நூலுக்கான 12 ஆவது சிறுகதை குறித்த அவதானிப்பாகவே இந்நூலின் முன்னுரை அமைந்துள்ளது. அதுவே இன்னும் ஓராயிரம் விருட்சங்களைத் தாங்கி நிற்கும் மகோன்னத உணர்வைத் தந்து எளிதில் நூலினுள் இழையோட வைப்பதாக உள்ளது..
வழக்கமான வண்ணதாசனின் எளிய நடையே இந்நூலினுள் தாண்டமாடி நம்மைக் கட்டுண்டு கிடக்க வைக்கிறது. இயல்பான மொழிநடையில் எளிய மனிதர்களின் வாழ்வியலை அழகியலோடு பகிரும் பாங்கு பரவசமானதே…
ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதத்தில் தனிசுகமே… “பூவை நினைத்தாலே பூவின் வாசம் புலப்படுவது போல” அமைந்த மொழிநடையில் நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறார் வண்ணதாசன்.
நறுமணம் கமழ, மையிருட்டுள் மயக்கி, மெல்லிசை ராகமீட்டி, அகவொளியை கிளறி புத்துணர்ச்சி ஊட்டி பரவசமடையச் செய்யும் எழுத்துநடையில் அமைந்த சிறுகதைகளே இவை.
நிரம்பியும் காலியாகவும் :
சுயம்புலிங்க பெரியப்பா, ரெங்கம்மா, நவஜோதி, நவீனா என்ற நான்கு கதாபாத்திரங்களில் பெரியம்மை நினைவுகள் சுழல, பூட்டிக் கிடக்கும் மனவீட்டைத் திறந்து ஊஞ்சலாடுவது நிறைவுறுவது கவித்துவமான சிறுகதை. உணர்வுகளின் பரிமாற்றம் அபாரம்.
“ஒரு ஆள் இருக்கும் போது ஒண்ணும் தெரியல. போன பிறகுதான் மூச்சு விடுகிற சத்தம் வரைக்கும் கேக்கு”
கைக்குத்து அவலும் வெள்ளரிப் பிஞ்சும்:
டீ கேன் வைத்த சைக்கிளில் வந்த அருணாச்சலம், சொர்ணம் மேஸ்திரி வீட்டை விசாரிப்பதில் தொடங்கும் சிறுகதை மூப்பனார் கடையில் ரெங்க மாமா உடையாடலில் பயணிக்கும் சிறுகதை. கிராமத்து கேலி கிண்டலுடன் உரையாடும் வண்ணம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தலைப்பிற்கான நிறைவு பகுதி அருமை.
” இந்தக் காலத்தில தொந்தரவு இல்லாத மனுஷனை யாருக்கு அடையாளம் தெரியுது?”
நடுவில் இருக்கிற பெண்:
செல்வின் ஸ்டோர்ஸில் தொடங்கும் கதை ஓவியத்திற்குள் நிறைவுறுவது கலையின் உச்சமே. ஓவியக் கலையின் நுட்பத்தை அதனை ரசனையை குறிப்பாக ரசிகனை நயம்பட கௌரவப்படுத்தும் தனித்துவமான சிறுகதை.
ஓவியர் சுந்தரம், நர்ஸ் அமலி அவரது மகன் செல்வம் எனத் தொடங்கி அவனது தந்தை ஓவியர் ஸ்டீபன் என வியாபித்து பெரிய வீட்டில் (ஒரு வயதான மனுசி போல நடமாடும்) உலாவி ஈஸ்டர் ஓவியத்தில் ஐக்கியமாகி வெற்று ப்ரேமில் அமலியின் முகம் தெரிவதுடன் நிறைவுறுவதெல்லாம் கவித்துவமின்றி வேறேது.
“ஞாபகங்களைத் திறக்கிற சாவியை மற்றவர்களே வைத்திருக்கிறார்கள்”
சீரங்கம்:
இத்தொகுப்பில் சிறிய சிறுகதையென கருதுகிறேன். எனினும் கனத்த மனத்துடன் கடக்க முயல வேண்டும். மனைவியை இழந்து வாழும் திரவியம் பிள்ளையின் கனவினூடாக வாழ்வின் நுட்பத்தைப் பகிரும் காட்சி தனித்துவமானது.
திரு’ணாமலை:
பிச்சம்மாச் சின்னம்மை, முருகேசு (சுப்பையா) என்ற இருவரின் உரையாடல் வழியாக குடும்ப உறவுகளின் குண இயல்புகளை பகிரும் பாங்கு அலாதியானது. சுப்பையாவுக்கும் ராமையாத் தாத்தாவுக்குமான ஆன்மீக மலைப் பயணம் மாந்திரீகமானதே.
சின்னம்மைக்கும் அம்மாவிற்குமான வேறுபாட்டை முருகேசு உணரும் தருணம் தனிச்சிறப்பானதே. பூர்வீக வீட்டின் சாவியை வைத்து கோடித் துணியை வைக்காமல் அய்யாவும் அம்மையும் உடுத்தினதை வைத்து செய்யும் பூஜை திடுக்கிட வைப்பதே ஆகும்.
பசுவிற்கு பிரசவம் பார்க்க நினைக்கும் முனைப்பு சுகப்பிரசவமாகிவிடும் காட்சி அத்தனை ரம்மியமானதே.
“ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். இன்னொன்று பிடிக்காது போல” (முழுக்கை சட்டை, மடித்த கை சட்டை)

மதுரம்:
பழநியப்பன், சைலஜா என்ற இருவரின் வழியே கடந்த காலத்தில் உலவும் கதை. ஆஸ்பத்திரியில் இருக்கும் பழநியப்பன் மனைவி தெய்வானை குறித்த நினைவுகள் (சாவிக்கொத்து, நைட்டி) கவிதையென்றால், பழநியப்பனுக்கும் தந்தையான சிதம்பரம் கணபதியப்பனுக்கான / கணேஷ் உரையாடல் (நகம் வெட்டுதல்) இலக்கியமென்றால் கணேஷுக்கும் மதுரத்திற்கான உறவு (தொலைபேசி அழைப்பிற்கான காத்திருப்பு) காப்பியமின்றி வேறேது.
மதுரத்திற்கும் கணேஷ் பெரியப்பாவிற்கான அந்நியோன்னியத்தை சைலஜா விவரிக்கும் காட்சி உணர்வு பூர்வமானது. அதனைத் தெய்வானை பார்த்தும் பழநியப்பனிடம் இன்று வரை பகிராமல் இருப்பது, அதனை சைலஜா பாராட்டுவதெல்லாம் கலைநயத்தின் உச்சம்.
அதற்கு மேல்:
ராமராஜன் காந்திமதி தம்பதியர். காந்திமதியின் தோழியான சுலோச்சனா, கணவர் பரி அவர்களின் செல்ல நாய்க்குட்டி ரீனா. ராமராஜனுக்கு சுலோச்சனா மேல் உண்டாகும் ஈர்ப்பை படம் பிடித்து காட்டிய வண்ணம் நகரும் சிறுகதை நாய்க்குட்டியின் இறப்பின் மூலம் அது சுலோச்சனா கையில் வந்த ரிஷிமூலம் (பூபதி) அறிந்த பின் ராமராஜன் அடையும் மனமாற்றமே கதை.
நதியானவள் :
மிக நேர்த்தியான சிறுகதை. ஜெயக்கொடிக்கும் மங்களத்திற்கான நட்பில் தொடங்கும் சிறுகதை மங்களத்தின் கனவுகள் வழியாக பயணித்து கனவு மெய்யாகி மாறுவதாக நிறைவுடைகிறது.
இத்தொகுப்பில் சோக முடிவுடன் நிறைவடையும் ஒரே சிறுகதையென கருதுகிறன். விவாகரத்து பெற்ற ஜெயக்கொடியின் கதாபாத்திர வடிவமைப்பு சுவாரஸ்யமானது. அதிலும் சுற்றுலாப் பயணியாக பாவித்து அவள் செய்யும் செயல்கள் ஒவவொன்றும் இனிமையையே… சேகர் கதாபாத்திரம் புரியாத புதிரே.
“ஒவ்வொருத்தரையும் ஒரு குறிப்பிட்ட சத்தத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் அவர்கள் வேறு ஒருவர் ஆகிவிடுவார்கள் என்று தெரிந்தது”
வித்தை:
அய்யம்மாள், சிப்பிப்பாறை நாய், கிளிக்கூண்டு. உருவகத்துடன் பயணிக்கும் பாந்தமான சிறுகதை.
வீட்டில் வேலை செய்யும் அழகரின் மனைவி அய்யம்மாள் புள்ளத்தாச்சி. அய்யம்மாளின் அம்மா பெத்தாச்சிக்கும் சாஸ்தாவுடையானுக்குமான காதல் கதை சாதி வன்மத்திற்கான சவுக்கடியே.
இருப்பினும் சாஸ்தா குட்டி பெத்தாச்சியை விட்டுவிட்டு போனது ரணமே என்றாலும் தாய் பெத்தாச்சியைத் தவித்து வாடும் மனைவி அய்யம்மாளை அன்போடு அழகர் அரவணைக்கும் காட்சி ரசனையானதே.
குடை நிழல் அமர்ந்து:
செல்லப்பாண்டியைப் பார்க்க வரும் சந்திராவுக்கும் முத்துமணிக்கான சந்திப்பில தொடங்கும் சிறுகதை ஞாபகக் கவிதையாக நீள்வதே தனிச்சிறப்பு. முத்துமணிக்கும் தாண்டவராயனுக்கான காதல் ஒருபுறம், செல்லப்பாண்டிக்கும் தில்லைக்குமான மணமுறிவு (?!) மறுபுறமென பவனி வரும் சிறுகதை “அசல் கொழும்பு ராஜா ராணி குடை” நிழலில் நிறைவுறுவது அடைமழையின் சாட்சியன்றி வேறேது.
முத்துமணிக்கும் சந்திராவுக்கான உரையாடல் தனிரகம்….
ஒரு வேரைப் பிடித்தபடி:
ஆழ்வாரப்பன் மனைவி காசியம்மா. காசியம்மா வீட்டிற்கு பத்திரிகை வைக்க வரும் பெரிய பிச்சம்மாவும் (பார்வதி) சின்னப் பிச்சம்மாவும் (லெட்சுமி) வழியாக ஞாபகக்கீற்றில் நீளும் கதையே இது.
லெட்சுமிக்கும் காசியம்மாவிற்கான உறவின் நீட்சி கேலி கிண்டலில் தொடங்கி கண்ணீரில் நிறைவுறுவது கவித்துவமானதே. ஆசை மாமனின் காதல் மனைவியிடம் அந்தரங்கம் பகிரும் அபலைப் பெண்ணின் கதையே இது.
இங்ஙனம் இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதை குறித்தும் பல பக்கங்கள் வியந்து பேசலாம்.
அனைத்து சிறுகதைகளின் அடிநாதமாக நான் கருதுவது அன்பும் அதற்கான பகிர்தலுமே….
மனித மனங்களிடையே இழையோடும் அன்பை அச்சு பிசகாமல் வாசம் குறையாமல் வண்ணம் குன்றாமல் அழகுற காட்சிப்படுத்திய பாங்கே பிரமிக்கத்தக்கது.
வாசத்தின் மீது இனம்புரியாத நேசம் கொண்டவரே வண்ணதாசன் என உரக்கக் கூறலாம். ஒவ்வொரு சிறுகதையிலும் கட்டாயம் ஒரு வாசம் (செங்கல் வாசம்) வருகிறது. அது நம் நாசியையும் நிறைக்கிறது நறுமணமாக.
எழுத்துக்களைக் கூட்டி வார்த்தைகளை வசமாக்கி காட்சிகளை படிமங்களாக்கி வாசமென்னும் நறுமணமூட்டி நம்கண்முன்னே திரையிட்டு
நமது மனதைக் கொள்ளையிட்டு
ரசவாத சுழலில் சிக்கித்
தானே வலிந்து முயன்று
தற்சார்பு பெற்று
தன்னிலை உயர உதவும்
உன்னத படைப்புகளைத் தந்த
தரும் வண்ணதாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“மதுரம்” (சிறுகதைகள்)
“வண்ணதாசன்”
சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்: 136
₹.130
வெளியீடு : 2018
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.


தேனைக் குடித்த வண்ணத்துபூச்சியின் பாதையும் வட்டமாகச் சுழன்று சுழன்று அமைவதுபோல் கவித்துவம் ததும்பும் வண்ணதாசனின் மதுரம் கதைகளை அறிமுகம் செய்யும் அசோக்கின் எடுத்துரைப்பும் கவித்துவம் வழிகிறது.வாழ்த்துகள்.