ஒன்றிரண்டு நாட்களில் மின் கம்பியில்.
பின்னொரு நாளில்
எதிர் வீட்டு உச்சியில்.
போன மாதம்
ஒற்றைத் தென்னையில்.
நீண்ட நாளாய்க் கண்ணில்
படவில்லை அந்தச் சிறுபறவை
இன்று காணக்கிடைத்த
சாம்பல் நிற உதிர்ந்த சிறகை
கடந்து செல்பவர்களுக்குத் தெரியாது
அதிலிருக்குமதன்
பயணக்குறிப்பின் முன்னுரை.
*****
ஒரு முத்தத்தோடு முடித்திருக்கலாம்
கடைசி வரியில்.
அதுவுமில்லையெனில்
ஒரு கனவின் உபத்திரவங்களையாவது
சொல்லியிருக்கலாம்.
அப்படியுமில்லையெனில்
தோழியாக்கி தொடர்ந்திருக்கலாம்
எதுவுமில்லாமல் விரயமானது
கொஞ்சம் கறுப்பு மையும்
சில கவிதைகளும்…!
*****
சைக்கிள் இருக்கையில்
சாக்கட்டியால்
எழுதப் பட்ட
அழியாத டோக்கன் எண்
அப்பாவிற்கு
அடையாளம் காட்டுமென
பயந்து அழுத்தித் தேய்த்து
இடப் பக்கப் பெடலை
உந்தி அழுத்தியேறி
குறுக்கே வந்த கிழவன்
நகர பெல் அடித்து
விரைகிறேன்
அரைக்கால் சராயோடு
தரைமட்டமான
அலங்கார் தியேட்டரைக்
நடந்து கடக்கும் போது.
******
நீர் குடித்து மேலே
பார்த்த பறவை
கொஞ்சம் வானத்தையும்
குடித்து விட்டிருந்தது.
*****
நான் சரித்திர பாடத்தை
மனனம் செய்த அன்று
என் மாணவக் கனவில்
போரஸை வெல்கிறான்
அலெக்ஸாண்டர்.
கலிங்கத்தோடு போர்
போதுமென்கிறான்
அசோகன்.
சீனப் பயணி ஒருவனை
சந்திக்கிறான்
ஹர்ஷ வர்தனன்.
ஆசிரியர் வரைபடத்தாளில்
குறிக்கச் சொன்ன பிரம்மபுத்திரா
என் கொல்லப் புறத்தில் ஓடுகிறது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள் (Poems), சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.