போன்சாய் வனம்
உண்டு உமிழ்ந்த
கனியின் விதை
முளைக்கிறது தோட்டத்தில்.
மரங்கொத்திக்கு நடுமரம்
புறாக்களுக்கு ஒரு கிளை
மைனாக்களுக்கு ஒன்று
கிளிகளுக்கு மேல் கிளை
காகங்களும் குருவிகளும்
எங்கு வேண்டுமானாலும்!
எனக்கு வேண்டிய நிழல்
பூவாளியின்
கடைசிச் சொட்டில்.
*****
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆறு கொண்டை
ஊசி வளைவுகள் தாண்டி
நின்றேன்
தேனடை தாங்கிய மலைவாசியின் பாடல்
அதிர அதிர நடந்த
கருத்தவளின் மார்பு
அவசரமற்ற பறவையின்
இறகுச் சப்தம்
அருவி நீரில் நனைந்த பாறை
யாரும் தொடுதலற்ற
மஞ்சள் பூக்கள்
இத்தனையும் நாளை
ஆறாம் எண் பேருந்தில்
நெரிசலுக்கு நடுவே
நினைத்துப் பார்க்க வேண்டும்
*****
நானும் அவனும்
வானத்தைப் பார்த்தோம்
நான் சிரிக்கவில்லை
என்னை ஒன்றும்
சொல்லாதவர்கள்
கடவுளிடம் பேசிச் சிரித்த
அவனை
பைத்தியம் என்கிறார்கள்
*****
மனத்துயர் மிகுந்த நாளில்
ஒரு சிற்றெறும்பு
ஏறுவதும் இறங்குவதுமாய்
இருந்தது
முற்றத்தில் கிடந்த
செம்பழுப்பு வாதாமிலையில்.
அவரவர் துயரம்
அவரவர்க்கு
******
பொட்டலத்தில் வைத்த
நட்சத்திரங்களை
கந்தைத் துணியிலிறுக்கிக்
கட்டியிருந்த வானத்தை
உள்ளங்கையில்
வைத்திருந்த நிலாவை
தோள் துண்டிலிருந்த
பழைய ஞாபகங்களை
ஒவ்வொன்றாய் தொலைத்து விட்டிருப்பான்
போலிருக்கிறது.
முச்சந்தி தேநீர்க் கடையில்
அம்மணமாய் நிற்கும்
பைத்தியக்காரன்.
******
*******
இவைகள்
வேறு சாமந்திகள் தான்
ஆனால்
அப்பாவின் அஸ்தியோடு
மிதந்த
நான்கைந்தைப்
போலத் தெரிகிறது
*****
அருகாமை மரத்தின்
பறவை ,
கூட்டிற்கு
வருவதையும் போவதையும்
அப்புறம்
ஒன்றாய் லயித்திருப்பதையும்
மனதில் பதிந்து
கொள்கிறேன்.
என்றைக்கேனும் உதவும்
காலிக் கூடு பார்த்து
பெரு மூச்சு விடும் போது.
******
கம்பிக் கதவிலமர்ந்த
சிறுகணத்தில்
நோட்டம் விட்ட பறவை
இன்னொன்றிடம்
சொல்லிக் கொண்டிருந்தது
என்னைப் பற்றி
வீட்டைப் பற்றி
சிறகுதிர்க்க ஏதுவான முற்றம் பற்றி
*****
சிமிழ் போலிருக்கும்
தழும்பு
கிடத்திய கேள்விக் குறி போலிருக்கும்
மாரின் ஒற்றை நரை முடி
திறந்திருக்கும் ஜன்னல்
காற்றில் சிலிர்க்கும்
தொட்டிப் பூக்கள்
இத்தனையும் போதும்
அரைப் பக்கக் கவிதைக்கு
******
நகர்ந்த தேர்
குறி சொன்ன குறத்தி
குரங்காட்டி
பாம்புப் பிடாரன்
கோடங்கி வந்த தெரு
புல்லாங்குழல் கடை
மஞ்சள் பூசிய லட்சுமி மாடு
பால்ய ஸ்நேகிதன் ரங்கனாதன்
உறக்கமற்ற இரவில்
வரிசைக்கிரமாமாய்
வந்து போகிறது
பெயர்ப்பலகையற்ற
சொந்த ஊர்.
******
தேர்ந்தெடுத்து பதிவிட்டமைக்கு நன்றி
மதுசூதன்
வாழ்க்கையின் நெரிசலுக்கு நடுவிலும் கூட நினைத்துப் பார்த்து ரசித்த அழகான/ உண்மையான விஷயங்களை சொல்லும் போது, அது கவிதை ஆகி விடுகிறதோ..! ( இரண்டாவது கவிதை )
பதிப்பிற்கு மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.