1)
பச்சை லேபிள் பாட்டில்கள்
வைக்கப்பட்ட
கல்யாணப் பந்தியில்
இலைக்கு நீர் தெளிக்க
மூடி திருகும் போது
சட்டையில் சிதறியதற்கு
கோபப்பட யாராவது
இருக்கிற மாதிரி தான்
எதிலும் சிதறாமல் திறக்கிற போது
சந்தோஷப்படுபவர்
ஒருவரும் இருக்கிறார்
எதார்த்தங்கள் சூழ் உலகில்
*****
2)
மின் கம்பியில்
தொங்குகிற காகத்தைப்
பார்த்துப் பதறாமல்
பறக்கின்ற புறாக்கள்
பற்றி எழுதென்கிறது
சாத்தானாகிற மனது.
இப்படி எதற்காகவாவது
சாத்தானாவது இன்றைக்கு
ஏழாம் முறை.
*****
3)
பசுவின் நாக்கு போல
கைகளைச் சுழற்றி
அரவத்தின் நாக்கைப்
போல அச்சுறுத்தி
காளியின் நாக்கைப் போல
ரத்தம் சொட்டுகிற
அதி பயங்கரக் கதை
சொல்வாள் என் பாட்டி.
ஒரு ஈஸிச் சேரில்
திரும்பிப் படுப்பார் தாத்தா
இத்தனை தான்
நினைவிருக்கிறது
தாத்தாவைப் பற்றி.
******
4)
வில்லேந்து
அம்பெடு
குறிக்கோள் நிர்ணயி
குறி வை
இரை வீழ்த்து அல்லது
தாக்கு
லட்சியம் கொள்
வித்தை பழகு
வெற்றி பெறு
எல்லாம் சரி
இதெல்லாம்
ஒரு வேளைச் சோறு
கிடைத்த பின்னாலா ?
இல்லை
கிடைப்பதற்கா ?
*******
5)
தாழ் கிளையிடம்
உச்சிக் கிளை
சொன்னது
நேற்று தங்கிய பறவை பற்றி
தாழ் கிளைப் பகர்ந்தது
நேற்று பூத்த மலரை.
இரண்டையும்
கேட்டுக் கொண்டேயிருந்த
மரம் சொன்னது
கீழே முளைத்த
சாம்பல் காளானை.
அவரவர் பெருமைப்பட
எதாவது
நிகழ்ந்தவாறேயிருக்கிறது
****
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.