மதுசூதனின் நான்கு கவிதைகள்

Madhusudhan S Four Poetries in Tamil. Book Day (Website) And Bharathi Tv (YouTube) Are Branches of Bharathi Puthakalayam.1)

சிவப்புப் பொறிகள் சிறு நேர்கோட்டில்
பறந்து மறைகிற தீத் துணுக்களை
இமைக்காமல் பார்க்கிறவனிடம்
மேலும் கத்திகள் கேட்கிற
சாணைப் பிடிப்பவனின்
இடப்பக்க தோள் பை
பழைய பனம்பாயை மாற்ற
சேமிப்பதற்காகவுமிருக்கும்
இல்லை
மகளுக்கு வாங்க நினைக்கிற
ரொட்டிகளுக்காகவுமிருக்கும்.

******
2)

மாட்டிற்கு அலங்காரம் செய்து
வண்ணத் துணி போர்த்தி
சாமிப் படம் ஏந்தியவளின்
இரந்த குரலுக்கில்லையேனும்
இரு முறை தலையசைத்து
ஒரு முறை வால் சுழற்றி
இருக்கிறதா இல்லையா
எனக் கேட்கும் பாங்கில்
நிற்கிற அதற்கேனும்
ஒரு பத்து ரூபாய்
தந்திருக்கலாம் ரங்கனாதா.
******
3)
அத்தனை எளிதல்லை
பிச்சைக் கேட்பவளின்
முந்தி பிடித்து
கண்களை உருட்டுகிற
சிறுமியைத் தவிர்ப்பது.
அதை விடச் சிரமமாயிருக்கிறது
அவள் இடுப்புக் குழந்தை
விரல் நீட்டி
வீட்டைக் காட்டும் போது.
இன்னும் மோசம்,
தருவதற்கு எதுவும்
தயாராகவில்லை என்கிற
பொய்யைக் கேட்கும் போது.

******
4)
அரண்மனையின் படத்தைப்
பார்க்க நேரிடுகையில்
ராஜ குரு தாடி வருடுகிறான்
குறுவாளின் நுனியில்
சொட்டிக் கொண்டிருக்கிறது
துரோகத்தின் குருதி.
கோப்பை மதுவில்
இறங்குகிறது துளி விஷம்
அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணின்
ஆடை அவிழ்கிறது.

******

மதுசூதன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.