மதுசுதன் கவிதைகள்நேற்றைக்கு
நெடுநேரம் முயற்சித்தேன்
தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தது
பல முறை இன்றைக்கும் முயற்சித்தேன்
வேறொருவருடன் இணைப்பிலிருந்தது
நாளைக்கும் முயற்சிப்பேன்
அந்த எண் உபயோகத்தில் இருக்காது
கை தந்து தூக்கி விடாமல் இருக்கிற
கடவுளின் கை பேசி எண்
எப்படிப் போனாலென்ன?

******

சிகை நரைத்து
மூப்பெய்த மிருகம்
தீரா ரௌத்ரத்தில்
உறுமுகிறது.
அங்குமிங்கும் அலைகிறது.
இரை சிக்கியும்
தன் மழுங்கிய நகங்களை
நக்கிப் பார்க்கிறது.
நிலைக் கண்ணாடியைக்
காட்டுங்கள்
நான் உறுதிப்படுத்துகிறேன்
அது என்னிலிருந்து பிரிந்ததாகவும்
இருக்கக் கூடும்.

*****
ஓடிக் கொண்டேயிருந்தது
ஒரு மாயநதி
நீந்திக் கொண்டேயிருந்தது
மீன்களெல்லாம்.
மோதிக் கொண்டேயிருக்கிறது அலை
எனக்குள்ளே கரையேறி நிற்கிறேன்
இடக்கையில் மாயநதியும்
வலக்கையில் இரண்டு மீன்களும்*****

அந்தக் காடிருந்த பகுதிக்கு
சம்மதமென்றால்
அங்கேயே
விட்டுவிடத் தயாராக இருக்கிறேன்
என் அலமாரியின் மரயானைகளை,
சிறுத்தை, புலிகளின் பொம்மையை,
ஏன்..?
என் மகளின் டெட்டிக் கரடியைக் கூ
பெரு மரங்களுக்கு எங்கே போவது
போன்ஸாய்க்கள் நிறைந்த வீட்டில் ?

******

பறந்து திரிந்த
அயர்ச்சியிலிருக்கிறது
முதிய பறவை
பறக்கத் துடிக்கும்
ஆர்வத்தில் குஞ்சுப் பறவை.
இரண்டின் இறக்கைகளின்
இடைவெளியில் வானம்

*******