மடியேந்தும் நிலங்கள்- நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : மடியேந்தும் நிலங்கள் ( ஹைக்கூ கவிதைகள் )
ஆசிரியர் : அய்யனார் ஈடாடி
பதிப்பகம் : அகநி
விலை ; ரூ 80 /
மடியேந்தும் நிலங்கள் என்ற தலைப்பில் கவிஞர் அய்யனார் ஈடாடி அவர்களின் ஹைக்கூ கவிதை தொகுப்பு அகநி வெளியீடாக வந்துள்ளது . கவிஞர் மு. முருகேஷ் ஒரு அற்புதமாக அணிந்துரையை இதற்கு அளித்திருக்கிறார். சுமார் 250 க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் கிராமிய வாசமும் வாழ்க்கையும் பின்னி பிணைந்து இழையோடி வாசகர்களை வந்தடைகின்றன என சொல்லாம் .
தமிழில் இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் ஒட்டு மொத்தமாகவும் , கிராமிய வாழ்க்கையை முன்வைத்து எழுதப்பட்ட ஹைக்கூ கவிதை தொகுப்பு இதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது . இத்தொகுப்பில் உள்ள அத்தனையும் மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகள் என்று நாம் சொல்ல முடியாவிட்டாலும் , ஏராளமான ஹைக்கூ கவிதைகள் நல்ல ரகத்தை சேர்ந்தவைகள் தான். இதில் ஒவ்வொரு பக்கத்திலும் சில ஹைக்கூ கவிதைகள் மின்மினிப் பூச்சியைப் போல ஒளியை உறுத்தாத ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு நம் கண்களுக்கு விருந்தாகின்றன .
இதில் சிறப்பான ஒரு அம்சம் என்னவென்றால் ஒரு கவிதையைப் போல் இன்னொரு கவிதை இல்லை என்பது தான். ஹைக்கூ என்பது வெறுமனே ஒரு காட்சியை படம் பிடித்து வாசகர்களுக்கு காட்டிச் செல்வது மட்டும்தானே தவிர , கவிஞர் முன் வந்து தன்னை முன்னிறுத்திக் கொண்டு கருத்துக்கள் சொல்வதோ , விமர்சனங்கள் செய்வதோ தகாதது ஆகும் .
அந்த வகையில் வாசகர்கள் மனதில் உணரும் வகையில் கிராமிய வாழ்க்கையை, குறிப்பாக மருத நிலக் காட்சிகளை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தது போல் , நமக்கு ஹைக்கூ கவிதைகளாக்கி தந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இதை வாசித்தால் , மீண்டும் தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களுக்கு , அதாவது தங்களின் பால்ய காலங்களுக்கு ஒரு பயணம் சென்று வரலாம் என்பதற்கு நிறைய உத்திரவாதம் உண்டு . விவசாயத்தை அறியாத மனிதர்களாக , நகரத்திற்கு பழக்கப்பட்டு போன மனிதர்களாக நீங்கள் இருந்து , இந்தக் கவிதைகளை வாசிக்க நேர்ந்தால் இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று விழிகள் விரிய ஆச்சரியப்பட்டு போவார்ககள் .
சில கவிதைகளை படித்ததும் சட்டென்று கடந்து போய்விட முடியவில்லை . கிணற்றில் எறியப்பட்ட கல் எப்படி மௌனச் சமாதியாவதற்கு முன்பு ,வளைய வளையமாக , நீர் அலைகளை மேல் எழுப்புகிறதோ, அது போலவே இந்த கவிதைகள் வாசித்த பின்பும் நீண்ட நேரம் மனதில் உணர்ச்சி அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக , தனது கிராமத்து வாழ்க்கையை இலக்கியத்தில் படைப்பாக்க வேண்டும் என்று கவிஞருக்கு தோன்றிய இந்த யோசனைக்காகவே , அவரை நாம் பாராட்டலாம் . வாழ்க்கையை ஹைக்கூவில் படம் பிடித்த விதத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்னும் போது , கூடுதலாக அவருக்கு நமது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் சொல்ல வேண்டும்.
இந்தக் கவிதைகளில் ஏராளமானவை எனக்கு பிடித்தவைகளாக இருக்கின்றன . சில கவிதைகள் முழுமை அடையாமலே பாதியிலேயே நீர்த்துப் போனாலும் , அதுவும் ஒரு கிராமத்து வாழ்க்கையை காட்சியாக படம் பிடித்து காட்டுவதற்கு தவறுவதில்லை . சில கவிதைகள் ஆழ்ந்த படிமங்களாக மனதிற்குள் உருவெடுக்கின்றன . எனக்கு பிடித்த கவிதைகளை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன் .
ஜப்பானிய கவிஞர்கள் எப்படி மலை , காடு , மேகம் , பனி , வண்ணத்துப்பூச்சி , என்று தங்கள் மண் சார்ந்த விஷயங்களை பேசுவார்களோ அதுபோலவே , அய்யனார் ஈடாடி அவர்கள் தன் மண்ணையும் , மரபையும் , குடியையும் , அதற்குள் முகிழ்த்தெழுந்த வாழ்க்கையையும் இந்தக் கவிதைகளில் பேசியிருக்கிறார் .
“ வேப்பம் பூக்கள்
தலையை நனைத்தன
தெக்கத்தி காற்று ‘’
வேப்பம்பூக்களுக்கும் தெற்கத்திக் காற்றுக்கும் உள்ள தொடர்பை கிராமத்தில் வசிப்பவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் . ஒவ்வொரு ஊரிலும் ஒரு நந்தவனம் இருக்கும் அங்கே செடி கொடிகளும் மலர்களும் ஏராளமாக இருக்கும் . அது பொதுவாக ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் . அந்தக் காட்சியை மனதில் கொண்டு , இந்தக் கவிதையை வாசித்தால் மனதிற்குள் ஒரு பிம்பம் உயிர்த்தெழும் .
‘’ ஓலைக் காற்றாடியில்
ஊர் சுற்றி வந்தான்
உறங்கும் நந்தவனம் “
‘’ தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து
தலை நீட்டுகிறது
அரசு கன்றொன்று “
என்று புதிய வாழ்க்கையையும்
‘ வரவேற்புக்குப் போகிறது
குலை தள்ளிய வாழை
வழியனுப்பும் கன்றுகள் “
என்று முடிந்து போகும் வாழ்க்கையையும் ஒரு சேரச் சொல்லும் அற்புதமான கவிதைகள் இந்த தொகுப்பில் நிறைய உண்டு.
“ குவளைத் தண்ணீரைப்
பருகும் மஞ்சள் நிலா
எழுமிச்சை ரசம் “
என்று அருமையான ஹைக்கூ , ஜப்பானிய கவிதையை ஒத்திருக்கிறது . பௌர்ணமி காலத்தில் சிறிய ஏரியில் , குளம் குட்டையில் மஞ்சள் நிலா மிதக்கும் போது , அந்த நீர்ப்பரப்பு அதி அற்புதமான காட்சி தரும் . கவிஞரின் கண்களுக்கு அது ஒரு எலுமிச்சை ரசம் போல் தெரிகிறது
“கடலிட்ட எச்சத்தின்
வெள்ளைப் பூக்கள்
உப்புப் படலம் “
என்ற கவிதை கடல் கிராமத்தை பேசுகிறதென்றால்
“ கொப்பரைத் தண்ணீரில்
தலை சீவி அலங்கரிக்கிறாள்
பிம்பக்கண்ணாடி “
என்ற கவிதை இன்றளவும் கிராமத்தில் வசதியற்ற பெண் பிள்ளைகள் , கொப்பரைத் தண்ணீரிலே முகம் பார்த்து தலை சீவி கொள்கிற பழக்கத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறது.
கிராமத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய ஒரு வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது . மனிதர்களின் இந்த மனப்பான்மை நாளடைவில் அஃறிணைகளுக்கும் தொற்றி விடுகிறது . இதன் தொடர்ச்சியாகவே
“ கிடாரிக் கன்றின்
பசியாற்றிப் போகிறது
தொத்தல் மாடு “
என்ற ஹைக்கூ கவிதை பிறக்கிறது.
“ தொங்கு பாலத்தின் நிழலை
அள்ளிப் பருகியது வெந்த சோறு
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் “
என்ற இந்தக் கவிதையை வாசித்த போது கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் , ஆங்காங்கே தொங்கு பாலங்களுக்கு கீழே அமர்ந்து , கிடைத்ததை சமைத்து உண்டு ஊர் சென்ற காட்சிகள் கண் முன்னால் நிழலாடின.
சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் எதுவும் முன்னேறி விடவில்லை என்பதை இந்த ஹைக்கூ சொல்கிறது .
“ குளத்து மேடு
உடுத்திப் பார்த்தது
கந்தல் துணிகளை ”
அங்கே இருக்கும் சலூனை பற்றிச் சொல்லும் போது
“ ரத்த வாடை பிடித்தது
துரும்பேறிய இரும்புக் கத்தி
கடைசி முக சவரம் “
சாதாரணமாக குப்பை மேடுகளில் காடுகளில் காணக் கிடைக்கும் பூசணியை கவிஞர் இப்படிச் சொல்கிறார் .
“ கொடி வற்றி
நீர் குடம் சுரந்தது
காட்டுப் பூசணி “
“ சாட்டை வால் குருவி
சந்தை எல்லாம் சுற்றி வருகிறது
ஆடி பட்டம் “
நாம் வானில் பறக்கும் பட்டம் தான் பார்த்திருப்போம் . இப்படி கிராமங்களில் சாட்டை வால் குருவிகள் தெருத் தெருவாக பட்டம் போல சந்தோஷமாக சுற்றி வருகிற ஆடிப்பட்டத்தை பார்த்திருக்க மாட்டோம் .
அங்குள்ள மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நேசிக்க கற்றுக் கொள்ளும் அபூர்வமான ஜென்மாஸ்டர்கள் . அதனால் தான் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கை அவ்வளவு பிடித்தமானதாக இருக்கிறது .
“வெள்ளாட்டுக் கொச்சை
சுற்றி வரும் பூ வாசமானது
கிடை ஆட்டுக்காரருக்கு “
கிராமங்களில் சந்தைக்கு சென்று வருவார்கள் . வியாபாரத்திற்காக மாலை வேலைகளில் சென்றால் பொருள்களை தள்ளி விடுவதற்காக கூவி கூவி அழைப்பார்கள் இதோ அந்த காட்சி கண் முன் நிறுத்தும் ஒரு கவிதை .
“ கடைசிக் கூறு
கூவிக் கூவி அழைக்கிறாள்
வீடு போகும் நேரம் “
இதோ வாசிக்க வாசிக்க நெஞ்சைப் பிசையும் இன்னும் சில அக்மார்க் கிராமிய ஹைக்கூ காட்சிகள்
“ நேற்று காய்ந்த குளம்
இன்று பெருகியது
நீரருந்தும் வானம் “
“தேய்ந்த செறுப்பு
நித்தமும் பார்க்கிறது
ஒத்தை வீடு “
“ வெண்கலக் கும்பாவில்
பிசைந்த சோறு
மிச்சமில்லை கைகளுக்கு “
“ நிழல் தரும் குடை
கீழே தகிக்கிறது
எரி மேடை “
“ நார்க்கட்டிலில்
உடம்பெல்லாம் அச்சுக்கள்
அரை குறைத் தூக்கம் “
“ தோப்புக் காற்றை நுகர்ந்த போது
அம்மாவை உணர்ந்தேன்
முத்த மழை “
“ வீடுகளை இழந்தன
கூட்டுக் குருவிகள்
நெல் அறுவடை •
“ குத்தும் முட்கள்
மேய்கின்றன ஆடுகள்
கடும் வறட்சி “
இப்படி ஏராளமான கவிதைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம் . அனேகமாக எல்லாக் கவிதைகளையும் சொல்லி விட நேரும்.
அதனால் மனமின்றியே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்த ஹைக்கூ கவிதை தொகுதிக்கு இது போலவே இன்னும் இரண்டு நூல் மதிப்புரைகள் கூட எழுதலாம். அத்தனை விடயங்கள் இந்த தொகுப்பிற்குள் இருக்கின்றன.
கவிஞர் அய்யனார் ஈடாடி அவர்களுக்கு இலக்கிய உலகில் நல்ல பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.