மகளாற்றுப்படை மரபுக்கவிதைகள்

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப இந்நூலாசிரியர் தன் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து, தானும் ஒரு குழந்தையாக, சக தோழியாக, விளையாட்டுப் பொம்மையாக, செல்லப்பிராணியாகஎன பலவிதமாய் மாறி அவளுடைய சேட்டை, அழுகை, விளையாட்டு, பேச்சு, கோபம், பள்ளிக்குச் செல்லும் பாங்கு, சிரிப்பு, என அனைத்தையும் 60 தலைப்புகளில் மரபுக் கவிதைகளாய் வடித்திருக்கிறார்.

பொதுவாக ‘ஆற்றுப்படை’ என்பது ஆற்றுப்படுத்துதலைக் குறிப்பதாக இருக்கிறது.

சங்க காலப் புலவர்கள், தாங்கள் பாடி பரிசில் பெற்று வந்த வள்ளலைப் பற்றி பெருமையாக மற்ற புலவர்களிடம் எடுத்துக் கூறி, அவர்களும் பரிசில் பெற்றுப் பயன் பெற அவர்களை ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படை இலக்கியமாகும். அந்த வகையில் இந்நூலாசிரியர் தன் மகளுக்கு அவளது குழந்தைப் பருவ மகிழ்ச்சி தரும் நினைவுகளைப் பாடல் வடிவில் தெரிவித்து, தமிழ் மொழியின் மீதும், இனிய தமிழ்ப் பாடல்களின் மீதும் ஆர்வத்தினை ஏற்படுத்த, ஆற்றுப்படுத்துவதால் இது ‘மகளாற்றுப்படை’ என்றாகி நிற்கிறது. இதனை‌க் கவிஞர்
வெண்பாவினால் யாத்திருக்கிறார்.

தொன்மை மொழியாம் நம் தமிழ்மொழி இன்றும் குமரியின் எழிலுடனே இருக்கும் அழகினை

‘பைந்தமிழே காப்பு’ என்று முத்தான முதல் வெண்பாவினால்
ஆரம்பித்திருக்கின்றார்.

இப் புவியில் வாழும் மாந்தரெல்லாம் தன்னைப் பெற்ற அன்னையே தனக்கு மகளாய் வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது இயல்பு. ஆனால் கவிஞரோ,

“பொற்றமிழே
தாயாய் தமிழருக்கு வாழ்வளித்தாய்; என் வாழ்வில்
சேயாய் வரவேண்டும் நீ”
என்று கேட்கிறார்.

பிறந்தகத்தில் பெண் குழந்தைகள் எல்லாம் ராணிகள் தான். அதனால் தான் அந்தச் செல்லமகள் பிறந்தவுடன் அவளைக் கையில் ஏந்தும் போது, இவள் என் இரத்தம்;என் மகள்; என் வீட்டு மகாலட்சுமி என்று மகளைப் பெற்ற தந்தைக்கு ஏற்படும் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது ‘என் மகள் ராணி’
எனும் கவிதை. இன்பமும் துன்பமும் நிறைந்த இந்த வாழ்க்கையில் சோர்வுற்ற மனம், வெள்ளந்தியான குழந்தைகளின் சிரிப்பில் உயிர் பெற்று வாழ்கிறது.

“அருமைத் திருமகளே!
எம்குலச் சொத்தேயென் நோய்க்கு மருந்தாகும்
உந்தன் சிரிப்பு”‌ என்ற வரிகளில்

குட்டிப் பெண்ணவள் தன் கன்னங்குழிச் சிரிப்பை நம் கண்முன்னே உதிர்த்துவிட்டுச் செல்கிறாள். தமிழில் சிற்றிலக்கியங்களில் ஒன்று பிள்ளைத்தமிழ். அதில்
குறிப்பிடப்படுகின்ற பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்களை நினைவூட்டும்விதமாக ‘வாராய் தவழ்ந்து’ எனத் தன் மகளை வாரி அணைக்கின்றார் கவிஞர்.
தாலாட்டு என்பது இன்றைய தலைமுறையினருக்கு என்னவென்று தெரியாத நிலையில், தாலாட்டுப் பாடும் தந்தைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்
என்பதனை கவிஞரின் தாலாட்டுப் பாடலால் அறிந்து கொள்ளலாம்.

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளமேகப் புலவர் இருபொருள்படப் பாடுவதில் வல்லவர்.”கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்” என்ற
பாடலில் கீரைப்பாத்தியும், ஓடுகிற குதிரையும் ஒன்று எனப் பாடியிருப்பார்.‌அது போல

“பாசத்தைக் காட்டுவதால்;
மேலேறி ஆடுவதால்;
வாசத்தைத் தேடுவதால்;
குன்றாத நேசமுடன்
கட்டி அணைக்க மகிழ்வதால்;
நானறிந்த
குட்டிநாயும் என்மகளும் ஒன்று.”

என்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் மனதைக் கவர்வதாக இருந்தது. சேவகம் செய்யக் காவலர் பலர் இருக்கும் நாட்டிற்கே அரசனாக இருப்பினும்,
ஒரு குழந்தைக்குத் தந்தையென்றால், அதுவும் பெண் குழந்தையென்றால் அவள் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயங்காமல் அவளின் வாகனமாகவும்
மாறி நிற்பது , நம் சிறு வயது நினைவுகளை மேலெழும்பச் செய்கிறது.

கவிஞரின் மகள் இந்தக் காலத்துக் குழந்தையல்லவா!அதனால் தான் தொலைக்காட்சிப் பெட்டியினை வச்ச கண் மாறாமல் சிலைபோல் பார்க்கிறாள்.

“யாரும் விலக்கிவிடல் ஆகாது; காளியாட்டம் ஆடிடுவாள்; கள்ளிக்கு போகாது‌ கோபம்
மறந்து”

என்று நம்வீட்டுக் குழந்தைகளின் மனநிலையையும் அப்படியே எடுத்தியம்புகிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சேட்டை செய்யாமல் அமைதியாக இருப்பதனைத் தான் விரும்புவர். ஆனால் கவிஞர் மகளிடம் போர்க்குணம் ஊற்றெடுக்கச் சொல்வது எதனாலே? பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா என்ற பாரதியின் வரிகளுக்குஉயிர் கொடுக்கவா?

முதன் முதலாய் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் இயல்பினை நூலாசிரியர் பாங்காய் எடுத்தியம்பிய விதம் அழகு. தோழியர் வந்து விட்டனர். பள்ளி செல்ல வேண்டாமா? என்று மகளை எழுப்பும் போது திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் மார்கழி நீராட தோழிகளை எழுப்புவதனைப் போல் இருக்கிறது தந்தையின் செயல்.

திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன மகள் திரும்பக் கிடைத்தவுடன்,”அற்ற உயிர் மீண்டும் அடைந்து விட்டேன் உன் முகம் கண்டு” என்றுரைக்கையிலே தாயாய் மாறி நிற்கிறது தந்தை உள்ளம்.

தன் மகள் தன் பெயரைச் சொல்லி அழைத்த போதும் அதனை ரசித்து, மகளாய் வந்துதித்ததாலே அப்பா என்ற பேர் கிடைத்தது என்று பூரிப்படையும் கவிஞரின்
செயல்கள், நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது தந்தையின் நினைவுகளைத் தூண்டுவதாய் இருக்கிறது. மகள்களைப் பெற்ற தந்தையாக இருப்பின்
அவர்களது செல்லமகளின் நினைவுகள் வாட்டும். பொதுவாக மரபுப்பாக்களை வாசித்துப் பொருளறிவது என்பது கடினம் என்று எண்ணுவோர் மனநிலையை மாற்றி எளிய நடையில் இயற்றியிருப்பது வாசிப்பில் இன்பம் கூட்டி மகிழச் செய்கிறது இந்த மகளாற்றுப்படை.

 

நூலின் தகவல்கள் 

நூல் : மகளாற்றுப்படை மரபுக்கவிதைகள்

நூலாசிரியர்: திரு ச.கந்தசாமி, இ.ஆ.ப.

பக்கம் : 48

விலை :ரூ.50

பதிப்பு : சுடர்விழிப் பதிப்பகம்

 

நூலறிமுகம் எழுதியவர் 


அ.லட்சுமி குமரேசன்
 இலட்சிய ஆசிரியர்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *