சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

Magan Short Story by Baskar Sakthi Synopsis 94 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது.  வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக் காட்டுகிறது.

மகன்
                                – பாஸ்கர் சக்தி

எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும்.  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான்.  என்னால் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எப்போதும் நம்ப முடிவதில்லை.  நானும் என் அப்பாவும் நண்பர்கள் மாதிரி என்று யாராவது சொன்னால் எனக்கு சிரிப்பும் அவநம்பிக்கையும் சேர்ந்தே வரும்.

உதாரணமாக இந்தியாவில் பெரும் பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் என்று நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன்.  அதிசயம் பாருங்கள், எனக்கு வேலை கிடைத்தவுடன் அந்தப் பிரச்னை தீர்ந்து விட்டது,  தற்போதைய பிரச்சனை எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து முன்னேற வேண்டும் என்கிற நெருப்பு இளைஞர்களிடத்தில் இல்லை.  இது மாதிரியே அனைத்தையும் பார்த்துப் பழகிய என்னால் தந்தை மகன் நல்லுறவை நிச்சயம் கற்பனை செய்யவோ ஏற்கவோ முடியாது.  காரணம் எனது தந்தை.   அவருக்கும் எனக்குமான உறவு.

என் அப்பா என்னைப் போல இல்லை.  ஆனால் பார்க்கிற எல்லோரிடமும் என் பையன் என்னை மாதிரி என்று சொல்லிச் சொல்லி என்னை எரிச்சல் படுத்துவார்.    ஆனால் நான் பிறக்கும்போதே புத்திசாலி.  என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியபிறகும் பிழைக்கத் தெரியாத ஒரு தவளை என் அப்பா.  அவருக்குத் தெரிந்தது கிணறளவு.  நானோ பறவை மாதிரி.  நசிந்ததொரு குடும்பத்தில் கடைசிப் பிள்ளைக்கு முந்தைய ஏழாவது பிள்ளையாகப் பிறந்த தவப்புதல்வன் என் அப்பா.  ஊரிலிருந்து ஒன்பது மைல் தூரம் நடந்து நடந்து படித்து ஊரின் ஒரே எஸ்.எஸ்.எல்.சி படிப்பாளி அவர்.   தான் படித்த பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தரைக் கெஞ்சி அந்த சின்ன டவுனிலேயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டாராம்.  பருத்தி வியாபாரி ஒருவரின் கமிஷன் கடையில் கணக்கு எழுதுகிற வேலை.  

காலையில் சீக்கிரமே எழுந்துபோய் எட்டு மணிக்கெல்லாம் கடையைத் திறந்து, ஊதுவத்தி கொளுத்திவைத்து, கடையைப் பெருக்கி, வருகிறவர்கள் அமர பாயை தட்டி விரித்துப் போட்டு, மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு உட்கார்ந்தார் என்றால் ராத்திரி ஒன்பது மணி வரைக்கம் சிறிய கணக்குப் பிள்ளை மேஜையின் முன் கேள்விக் குறியாய் வளைந்து அமர்ந்து நாள் பூரா கணக்கு எழுதிக் கொண்டே இருப்பார்.  ‘கணக்குல நீ புலிய்யா’ என்று அப்பாவை முதலாளி பாராட்டுவாராம்.  அது ஓரளவு உண்மைதான்.  நானே பார்த்திருக்கிறேன்.  கடையில் அவர் பாட்டுக்கு குனிந்து கணக்கெழுதிக் கொண்டு இருப்பார்.  முதலாளி வந்திருக்கும் வியாபாரியிடம் அவர் அனுப்பிய பருத்தி மூட்டை எண்ணிக்கை விலை நிலவரம் எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்.  திடுதிடுப்பென அப்பா பக்கம் திரும்பி ‘அப்படின்னா இவருக்கு நாம் எவ்வளய்யா தரணும் அழகரு’ என்று கேட்பார்.  அப்பா மறுவினாடியே ‘பன்னன்டாயிரத்து நானூத்தி இருவத்தேழு வருதுங்க.  போன மார்கழில ஒரு நாலாயிரத்துச் சொச்சம் வாங்கினாப்ல அதைக் கழிச்சிட்டுப் பாத்தா எட்டாயிரத்து நூத்தியம்பது’ தரணும் என்பார்.  முதலாளி பிரமிப்பார்.

ஆனால் நான் பிரமிக்க ஏதும் இல்லை.  ஏதோ கணக்கு நன்றாக வருகிறது என்பதற்காக மட்டும் அப்பாவைப் பிடித்துப் போகுமா என்ன?  நான் கேட்ட எதையும் அப்பா உடனே வாங்கித் தந்தது கிடையாது.  குடும்பக் கஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடுகிறவராகவே இருந்தார்.   என் படிப்பு பற்றி ஓயாமல் பேசி அறுப்பார்.  என் வாத்தியார்களிடம் வந்து நான் இருக்கும்போதே அவர்களிடம் என் படிப்பு குறித்து கேட்பார்.    எப்படியோ இழுத்துப் பிடித்து பஞ்சப்பாட்டுப் பாடி என் படிப்புக்கான செலவுகளை செய்தார்.  நானும் ஓரளவு படித்து ஆளாகி எனது திறமையில் ஒரு வேலை தேடி மெடிக்கல் ரெப்பாகச் சேர்ந்து ஏழெட்டு வருஷத்தில் நாலைந்து கம்பெனிகள் மாறி இப்போது ஏரியா சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்.  என் திறமை முழுவதும் வாயிலும் நான் பேசுகிற இங்கிலீஷிலும் .. சற்றும் தயங்காமல் நான் சொல்கிற பொய்களிலும்தான் இருக்கிறது.  இது எனது இன்றைய வாழ்வின் நியாயம்.  நீங்கள்தான் இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகக் கணக்குகளைச் சொல்வது எப்படி என் அப்பாவின் திறமையோ அது போலத்தான் இது. இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பவன் பேசுகிறவன் நான்.  ஆனால் போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?

சென்னையிலிருந்து வேலை விஷயமாகத் திருச்சி வந்தேன்.  பஸ் பயணம்.  காலையில் இறங்கி கொட்டாவி மணக்க டீ குடித்து, சிகரெட் பற்றவைக்கும்போதுதான் கவனித்தேன் என் செல்போனைக் காணோம்.  சுருக்கென்றது,  பாதி டீயைக் கொட்டிவிட்டு பையெல்லாம் தேடினேன்.  ம்ஹும் பஸ்ஸோடு போய்விட்டிருக்க வேண்டும்.

பூத்துக்குப் போய் எனது செல்போன் நம்பரை டயல் செய்தேன்.  ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்தது.  மறுபடி பண்ணினேன்.  ‘நாட் இன் யூஸ்’ என்று வந்தது.  என்ன பண்ணுவதென்று தெரியவில்லை.  அடுத்த மூன்று நாட்களுக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.  எல்லாவற்றையும் பக்காவாக முடிக்க வேண்டும். 

யோசனையுடன் பக்கத்து பூத்தில்  நுழைந்து போனை எடுத்தேன்.  மனசு பகீரென்றது.  அனைத்து போன் நம்பர்களும் எனது செல்போனில்தான் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கிறேன்.  ஒரு நம்பர்கூட எனக்கு ஞாபகத்தில் இல்லை.  விஸிட்டிங் கார்டுகளைத் தேடிப் பையில் துழாவினேன்.  அதில் இருந்த இருபத்தேழு கார்டுகளும் என்னுடையவை.  என் வீட்டு எண்’ மொபைல் எண் மற்றும் ஆபீஸ் எண் மட்டுமே அதில் இருந்தன.

ஆபீசுக்குப் போன் அடித்தேன்.  ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.  பத்து மணிக்கு மேல்தான் ஆபீஸ் என்பது நினைவு வந்தது.

வீட்டுக்கு போன் செய்தேன்.

“ஏங்க எவ்வளவு நேரமா? உங்க மொபைலுக்கு ட்ரை பண்றது?  எங்க இருக்கீங்க?”

“ப்ச் மொபைல் தொலைஞ்சிருச்சுடி, என்ன விஷயம்?”

“அச்சச்சோ எங்க தொலைச்சீங்க?”

“இரு முதல்ல நீ எதுக்குத் தேடினே?”

“உங்கப்பா இறந்துட்டாராம்.  ஊர்ல இருந்து போன் வந்துச்சுங்க.  உடனே கிளம்பி ஊருக்குப் போங்க.  நான் நேரா அங்க வந்துர்றேன்”.

“என்ன பேச்சையே காணோம், வந்து சேருங்க. கடமையைக் கழிக்கணுமில்ல”  மனைவி போனை வைத்தாள்.

மனதில் ஒரு முள் தைத்தது.  அப்பாவைப் பற்றி என்றுமே அவளிடம் நான் நல்லவிதமாகப் பேசியதில்லை.  பின் அவளை எப்படிக் குறையாக நினைப்பது?

சட்டையைத் தொட்டுப் பார்த்தேன்.  நூற்றைம்பது ரூபாய்தான் பர்ஸில் இருந்தது.  ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆபீஸ் திறந்ததும் தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் எனத்தோன்றியது.  ஏடிஎம்ஐத் தேடி நுழைந்து என் கார்டை உள்ளே திணிக்கப் போகையில்தான் தோன்றியது இது புதிய அக்கவுண்ட். பின் நம்பர் இப்போதுதான் வந்தது.  அதனையும் மொபைலில்தான் வைத்திருந்தேன்,

நான்கு இலக்க நம்பர்.  இரண்டில் ஆரம்பிக்கும்.  மனதில் இருந்த எண்களைப் போட்டேன். தப்பாக வந்தது.  மறுபடியும் எண்களை மாற்றிப் போட்டேன்.  திரையில் ஸாரி என்று எழுத்துக்கள் கேலி செய்தன.

அப்பா நினைவுக்கு வந்தார்.

எனது எஸ்எஸ்எல்சி ப்ளஸ் டூ தேர்வு எண்கள், தான் வேலை பார்த்த கடையின் அத்தனை அக்கவுண்ட்டுகளின் எண்கள், நூற்றுக் கணக்கான போன் நம்பர்கள் என்று எல்லாவற்றையும் தன் மூளையில் பதிந்து வைத்திருந்த அப்பா என்னைப் பார்த்து புன்னகை செய்வது போலிருந்தது.

குபுக்கென எனக்கு அழுகை வந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.