பருவச் சிள்வண்டுகள் | காலநிலை மாற்றம் | Article

பருவச் சிள்வண்டுகளும் காலநிலை மாற்றமும்

மரங்கள் பாடுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அவை பறவைகளின் பாடல்களாகவோ, அல்லது சிள்வண்டுகளின் பாடல்களாகவோ இருக்கும். பலnசமயங்களில் சிள்வண்டுகளின் ரீங்காரத்தை மக்கள் மரங்களின் ரீங்காரம் என்று கருதிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பருவச் சிள்வண்டுகளின் (Magicicada species) கதை நமது பேரண்டத்தின் கதை. மரங்களிலிருந்து பொரிக்கும் பருவச் சிள்வண்டு முட்டைகள் 13 ஆண்டுகள் அல்லது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பருவச் சிள்வண்டுகளாக உருமாறும். இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும்? பொரித்த முட்டைகள் சிறு புழுக்களாக நிலத்தில் விழும். அவை நிலத்துக்கடியில் ஊர்ந்து சென்றுவிடும். சிறு புழு ஐந்து முறை உருமாற்றம் பெற்று வெளியே வரும்போது ஆண்டுகள் பலவாகிவிடும். இந்த ஐந்து வகை உருமாற்றங்களை இன்ஸ்டார் என்று சொல்வார்கள். பருவச் சிள்வண்டுகள் வெளியே வந்த பின்னர் நான்கு வார காலம் பாடியும் கூடி மகிழ்ந்தும் அடுத்த தலைமுறைக்கான முட்டைகளை விட்டுவிட்டு மடிந்து போகின்றன. நமது வண்ணத்துப்பூச்சிகளின், நமது தேனீக்களின் ஆரோக்கியம் தான் நமது புவியின் ஆரோக்கியம். பருவச் சிள்வண்டுகளின் நலவாழ்வு நம் ஒவ்வொருவரின் நலவாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

இப்படி 13 அல்லது 17 ஆண்டுகால சுழற்சி கொண்ட பருவச் சிள்வண்டுகள் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி அமெரிக்கர்கள் இவற்றைப் பார்த்து அறிந்திருந்தார்கள். பருவச் சிள்வண்டுகளைப் பற்றிய முதல் ஆய்வுக் கட்டுரை 1666இல் லண்டனிலிருந்து வெளியான ஆய்வேட்டில் பதிவானது. ஏழு வகை பருவச் சிள்வண்டுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் மூன்று வகைகள், 17 ஆண்டுகால சுழற்சி காணும்; மற்ற நான்கும் 13 ஆண்டுகளில் தம்முடைய வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்பவை.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பருவச் சிள்வண்டுகள் நிம்ஃப் (nymph) எனப்படும் பிள்ளைப் பருவத்தில் இருக்கும் போது ஆண்டுகளைக் கணக்கில் வைத்துக் கொள்கின்றன. சரியாக வெளியேறுவதற்கு ஓராண்டு இருக்கும் நேரத்தில் இவற்றின் கண்கள் சிகப்பாக மாறி விடுகின்றன. இவை சின்னதாய் துளைகளிட்டு வெளியே வருவதற்கான பாதையை கட்டமைக்கின்றன. ஒரு ஏக்கருக்கு சுமார் 15 லட்சம் பருவச் சிள்வண்டுகள் ஒரே நேரத்தில் மண்ணிலிருந்து வெளியேறுகின்றன. இது அனேகமாக மாலை வேளையில்தான் நடக்கிறது.

பாம்பு சட்டையை உதிர்ப்பதுபோல வெளியே வந்த சிறு நிம்ஃபின் உடலிலிருந்து ஒரு பருவச் சிள்வண்டு வெளியேறுகிறது. வெள்ளை நிறத்தில் உள்ள இது தன் உடல் காய காய நிறம் மாறி படத்தில் காணும் வளர்ந்த பூச்சியாய் மாறுகிறது.

வளர்ந்த பருவச் சிள்வண்டுகளில் ஆண் பூச்சிகள் பாடி பெண் பூச்சிகளை அழைக்கின்றன. இந்தப் பாடல்கள் அவற்றின் வகைக்கு தகுந்தாற்போல தனித்துவத்துடன் இருக்கும். கூடிப் பாடும் சேர்ந்திசையும் உண்டு. சேர்க்கையின் பிறகு மரப்பட்டைகளின் இடுக்குகளில் பெண் பூச்சிகள் ஒவ்வொன்றும் பல முட்டைகளிடுகின்றன. முட்டைகள் பொரிந்து தரையில் விழுந்து மீண்டும் தரைக்குள் ஊர்ந்து செல்கின்றன புழுக்கள். இப்படியாக இன்னொரு 13 அல்லது 17 ஆண்டுகளுக்கு மண்ணின் கீழ் நடக்கிறது இவற்றின் வாழ்க்கை.

இந்த ஆண்டு – 2024 – பருவச் சிள்வண்டுகளுக்கு முக்கியமானதாகும். 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தங்கள் பயணத்தைத் துவங்கிய பருவச் சிள்வண்டுகள் இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் வெளி வந்துள்ளன. இதில் முதலாவது 17 ஆண்டு சுழற்சி கொண்ட வகையும் இரண்டாவது 13 ஆண்டு சுழற்சி கொண்ட வகையும் ஆகும்.

இதே போன்ற நான்கு வருட சுழற்சி கொண்ட பருவச் சிள்வண்டு வகை வடகிழக்கு இந்தியாவிலும் உண்டு. அங்குள்ள மக்கள் இவற்றிற்கு நியங்டேசர் (Chremistica ribhoi) என்று தாங்கள் பேசும் காசி மொழியில் பெயரிட்டுள்ளனர். இவற்றின் வருகையை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவ்வூர் மக்களுக்குக் கால்பந்து ஆட்டத்தின்மீது ஆர்வம் அதிகம். அதற்கு இசைந்ததுபோல இந்தப் பூச்சிகள் ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் கால்பந்தாட்ட உலகக்கோப்பை நடக்குமாம். அதனால் நியங்டேசருக்கு உலககோப்பை சிள்வண்டு என்றொரு பெயரும் உள்ளது. சென்ற முறை இவை வெளியே வந்தது 2022ஆம் ஆண்டில். அப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது.

இப்படிப் பருவம் தவறாமல் வரும் பருவச் சிள்வண்டுகள் கூட காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. அவை வெளியே வர வேண்டுமென்றால் பல ஏக்கர்களுக்கு மரங்களும் பசுமையும் தேவைப்படுகின்றன. அதனால் இந்த இடங்களில் காடுகளையும் பழ மரங்களையும் அழித்து வேறு பயன்பாட்டுக்கு அந்த நிலத்தைத் திசைதிருப்பினால் இந்தப் பூச்சிகளுக்கு ஆதரவில்லாமல் போகக்கூடும்.

பருவச் சிள்வண்டுகள் பல மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இவை பல முறை கால நிலை மாற்றங்களை எதிர்கொண்டும் நிலையாக இருக்க பழகியுள்ளன. எனவே அவற்றை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது என்று கணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் மனிதர் நடவடிக்கைகளால் உருவாகும் காலநிலை மாற்றங்கள் மிக விரைவாக நிகழ்வதால் இதைச் சமாளிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

புவி வெப்பமடைவதால், இந்தப் பருவச் சிள்வண்டுகள் வெளியேறும் மாதங்கள் மாறுபட்டு, இவை கொஞ்சம் காலம் முன்கூட்டியே வருவதைப் பார்த்திருக்கிறார்கள். இதுவே இனி நடக்கக்கூடும் என்று அனுமானிக்கிறார்கள்.

இதே போல தாம் வெளி வருவதற்கான அறிகுறிகள் மாறித் தெரிவதால் மண்ணின் கீழ் வளரும் பருவச் சிள்வண்டுகள் மாறுபட்டு அந்த ஆண்டிற்கு முன்னோ அல்லது பின்னோ வெளியேறக்கூடும். இதனால் அந்தக் கூட்டு வெளிப்பாட்டு முறையே கூட தவறிப்போகலாம்.

பருவச் சிள்வண்டுகளை ஆராய்ச்சிக்குட்படுத்துவது மிக கடினம். கூட்டம் கூட்டமாய் வெளியே வரும் இவை நான்கு வாரங்கள் வெளியே இருந்துவிட்டு இறந்து விடுகின்றன. இவற்றின் வாழ்க்கையை தொடர்ந்து ஆராய வேண்டும் என்றால் பல தலைமுறைகளை இந்தப் பூச்சிகளும் தாண்ட வேண்டும். ஆராய்ச்சியாளர்களும் தாண்ட வேண்டும்.

வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்ற பூச்சி வகைகளின் ஆரோக்கியம் புவியின் ஆரோக்கியத்தை குறிப்பதாக நம்புகிறோம். அதேபோல 12 ஆண்டுகளூக்கு ஒரு முறை மலரும் நீலக் குறிஞ்சி போன்ற மலர் வகைகள் காடுகளின் ஆரோக்கியத்தை அடையாளப்படுத்துகின்றன. 4, 13, 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவமடையும் பருவச் சிள்வண்டுகளும் கூட புவியின் நலத்தை அளக்கக் கூடிய தெர்மாமீட்டரைப் (வெப்பமானி) போன்றவையே.

கட்டுரையாளர்

 சுபஶ்ரீ

இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் இதழாளராகப் பணியாற்றி வருகிறார். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் பத்தாண்டுகளாக அறிவியல் செய்தியாளராக இருந்தார். தற்போது ஐ.ஐ.டி மெட்ராஸ் சாஸ்த்ரா அறிவியல் இதழில் இணை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியலை மக்களிடம் பரப்புவதில் சிறந்த செயல்பாட்டுக்காக 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வென்றார். இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை வழங்கும் விருது இது. மொழியாக்க வல்லுநர், எழுத்தாளர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர் இவர்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. அமுதன்

    இயற்கை அறிவை எளிய மொழி நடையில் ஊட்டும் கட்டுரை. பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *