magizhini ifs book reviewed by s.harini நூல் அறிமுகம்: மகிழினி IFS - எஸ்.ஹரிணி
magizhini ifs book reviewed by s.harini நூல் அறிமுகம்: மகிழினி IFS - எஸ்.ஹரிணி

நூல் அறிமுகம்: மகிழினி IFS – எஸ்.ஹரிணி

நூலின் பெயர் : மகிழினி IFS
ஆசிரியர் : ஈரோடு சர்மிளா
ஓவியம் : ஜமால்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 48

ஒரு பள்ளி மாணவி தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வில் ஊக்கமடைந்து பிற்காலத்தில் வனத்துறை அதிகாரியாக மாறுவதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே “மகிழினி IFS”

மகிழினி, நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், வனத்தின் மீதும், வனத்தில் வாழும் மலைவாழ் மக்களின் மீதும் நேசமும் பேரன்புமும் எப்படியெல்லாம் கொண்டிருக்கிறாள் என்பதை எழுத்தாளர் ஈரோடு சர்மிளா அவர்கள் மிக அழகாக நாவல் வடிவில் தந்துள்ளார்.

இக்கதையில் வலம் வரும் கதாப்பத்திரங்களான கெம்பா, மாதவி, மகேஷ், அமுதா,…..ஆகியோர் நம் அன்றாட வாழ்வில் எதார்த்தமாக வந்து செல்லும் சிறுவர் சிறுமியர் தான். ஆனால் கதைகளுக்குள் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்க வைக்கிறது.

குழந்தைகளுக்கான நாவல் என்பதால், எளிய மொழி நடை, சிறு சிறு வாக்கியங்கள், மிகப் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் என்று வாசிப்பதற்கு ஏதுவாக எழுதப்பட்டிருக்கிறது.

நகரத்தில் வாழும் குழந்தைகள் அறிந்துகொள்வதற்காகவே, மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் இக்கதை விவரித்துச் செல்கிறது.

மலைவாழ் மக்கள் காலங்காலமாக கடைபிடித்துவரும், பழக்க வழக்கங்கள், அவர்களின் வெள்ளெந்தியான குணம் ஆகியவற்றை வாசிக்கும் போது நாமே நேரடியாக காட்டிற்குள் வலம் வந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்நாவலில் வரும் ஒரு சில சம்பவங்கள், என் அம்மா சொன்னதை நினைவு கூர்கிறது. அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் சிறுவயதாக இருந்த பொழுது, அவர்களது பொதுவான உணவே கேப்பங்களியும் கீரையும் தானாம்.

மின்சாரமில்லாத காலகட்டத்தில் கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.  பொழுது சாய்வதற்கு முன்னதாகவே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, பெரியவர்கள் கதை சொல்ல அவர்களைச் சுற்றி குழந்தைகள் கதை கேட்பார்களாம்.

அதே போன்றதொரு வாழ்க்கையை இன்றளவும் பெரும்பாலான மலைவாழ் குழந்தைகள் வாழ்வதையும், ஒரு சில மலைவாழ் கிராம மக்கள் காலத்திற்கேற்ப மாறி வருவதையும் இக்கதையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இக்கதையில் வனவிலங்குகளைப் பற்றிய குறிப்புகள் மிக அருமை. மனிதர்கள் தங்களது தேவைக்கேற்ப காடுகளை அழிக்கிறார்கள். வனவிலங்குகளின் பூர்வீக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பிறகு விலங்குகள் மனிதர்களுக்கு இடையூறு செய்வது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இக்கதையை வாசிக்கும் குழந்தைகள் சிறுவயது முதலே வனத்தைப் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றியும், வன விலங்குகளின் நடமாட்டம் குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வனத்திற்குள் சென்றுவந்த உணர்வைப் பெறுவார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

இவ்வளவு அழகான நாவலைத் தந்ததற்காக எழுத்தாளருக்கு எனது நன்றியும், பேரன்பும்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/magizhini-i-f-s/

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *