நூல் அறிமுகம்: வரதராஜன் ராமசாமியின் “மகாகவி பாரதியார்” – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: வரதராஜன் ராமசாமியின் “மகாகவி பாரதியார்” – பெ. அந்தோணிராஜ்

 

நூலாசிரியர் திரு. வ. ரா என்ற வரதராஜன் ராமசாமி ஒரு சுதந்திர போராட்டவீரர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், குறிப்பாக பாரதியாரின் பக்தர். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர், வ. வே. சு. அய்யர் போன்றவர்களோடு ஐந்தாண்டுகள் உடன் இருந்து வாழ்ந்தவர் இந்நூலை 1943ல் எழுதியுள்ளார். பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் பெரியதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற தன் மனப்பொருமலை எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

ராஜாஜி, “சென்ற முன்னூறு ஆண்டுகாலத்தில் மாகாண மொழிகளில் பாரதியரைப்போன்ற ஒரு கவி தோன்றவில்லை ” திரு. வி. க, “இது பாரதி சகாப்தம், தமிழர்களின் உள்ளத்திலும் உன்னதமான புரட்சியை உண்டாக்கி விட்டார் “நல்ல வார்த்தைகள்தானே. சிறப்பாகத்தானே பேசியுள்ளனர், அதுவும் எப்போது 1943ல். ஆனால் இதுபற்றி வ ரா குறிப்பிடுவதை கவனியுங்கள், “பாரதியார் உலக மகா கவியென்று கூறுவதற்கு இந்தப் பெரியவர்களுக்கு இருபது ஆண்டுகள் பிடித்தது “என்று குறிப்பிடுவதை பார்க்கும்போது, இவர் பாரதியார் மீது வைத்திருந்த பற்றை எப்படி அளவிடமுடியும். நிறைய தகவல்களை கொடுத்துள்ளார். பாரதியார் குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்துள்ளார். அபின் என்ற போதைப் பழக்கம் இருந்துள்ளது. பாடல்கள் மெட்டு போட்டு பாரதியரால் பாடிகாட்டப்படும், பத்திரிக்கை ஆசிரியராக இருப்பதற்கு பெரு விருப்பு உள்ளவராயிருந்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவரான கனகலிங்கத்திற்கு அக்னி வளர்த்து ஹோமம் செய்து பூணூல் போட்டு இன்றிலிருந்து நீ பிராமணன் என்று சொல்லிய பாரதி வெகுகாலத்திற்கு முன்னமேயே பூணூல் போடுவதை கைவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்நூலாசியரான வ ரா வையும் பூணூல் நீக்க அறிவுறுத்தியுள்ளார்.  எழுதும் நேரம் தவிர ஏனைய நேரமெல்லாம் மீசையை வலது கை தடவியபடியே இருக்குமாம்.  தன் வழுக்கைத்தலையை மறைப்பதற்கு மிகுந்த கவனமெடுத்து கொள்வாராம்.

Bharathy | மகாச் சுடர் - maha Chudar

பாரதியாரை ஒருமையில் அழைக்கும் அளவிற்கு அவரின் நெருங்கிய நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா, ஆறு ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வெளியில் வரும்போது கிறிஸ்துவனாக மதம் மாறி வருகிறார். மதம் மாறியதை பற்றி பாரதியார் குறிப்பிடும்போது, “ஹிந்து சனசமூக ஆசாரங்களிலும், கொள்கையிலும், தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள் கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும். அவைகளை ஒழிக்க முடியாது எனத் தீர்மானம் பண்ணி வேறு மதத்திற்கு மாறுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா மதங்களிலும் உண்மை உண்டு. “என்று வருத்தத்தை பதிவு செய்கிறார். அதன்பின் அந்த சுரேந்திரநாத் ஆர்யா அமெரிக்க சென்று முனைவர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டதாக நூலாசிரியர் கூறுகிறார்.

புதுச்சேரி அரசு அந்நியர் சட்டம் ஒன்று கொண்டுவருகிறது. அதன்படி சுதேசிகள் (புதுச்சேரி அல்லாதவர்கள் )அரசால் அங்கீகரிக்கப்பட்ட கௌரவ மஜிஸ்திரேட்டுகள் ஐவரிடம் கையெழுத்து பெற்றால்தான் புதுச்சேரியில் இருக்கமுடியும் என்பது அச்சட்டம். இச்சட்டத்தின்படி பாரதியார், அரவிந்தர், வ வே சு அய்யர், சீனிவாசாச்சாரியார், இந்நூலாசிரியர் ஆகியோர் கட்டாயமாக சான்றிதழ் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாரதியாரின் ரசிகரான கலவலா சங்கர செட்டியாரிடம் பாரதியார் செல்கிறார், ஒரே நாளில் அந்தச் சான்றிதழ்கள் பெறப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றன. சிக்கல் நீங்குகிறது. புதுச்சேரியில் பாரதியின் கவிதைகளுக்கு நிறைய ரசிகர்கள் இருந்துள்ளனர்.

வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கையான மாயையைக் கண்டால் பாரதி சீறி எழுவார். “தங்கச்சிலை போல் மனைவி இருக்கிறாள், நமது துயரத்தில் கண்ணீர் விட்டுக் கரைந்தாள், நமது மகிழ்ச்சியின் போது உடல் பூரித்தாள், நமது குழந்தைகளைப் பேணுகிறாள், அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்யா? “எனப் பாரதி ஆத்திரத்தோடு கேட்கிறார். அதனால் பாரதியை வேதாந்தி என்று அழைப்பது பெரும்பிழையாகும் என்கிறார் நூலாசிரியர்.

1908ல் திலகர் சிறையில் அடைக்கப்பட்டதும், சென்னையில் இந்தியா பத்திரிகையில் இருந்த பாரதியாரை, எச்சரிக்கை செய்து சென்னையை விட்டு புதுச்சேரிக்கு போய்விடுமாறு கூறியவர்கள் இரண்டுபேர். ஒருவர் நீதிபதியாயிருந்த கிருஷ்ணசாமி அய்யர். மற்றொருவர் DSP யாக இருந்த இன்னொரு கிருஷ்ணசாமி அய்யர். இல்லையென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்.

பாரதியின் புதுச்சேரி வாழ்வில் அவருக்கு பெரிதும் உதவியவர்கள் என்றால் நகைகளைக்கூட அடமானம் வைத்து பணஉதவி செய்த சுந்தரேச அய்யர், வீட்டு வாடகை கேட்க வந்து வாடகை தராவிட்டாலும் மௌனமாக மரியாதை செலுத்தி திரும்பும் விளக்கெண்ணெய் செட்டியார், எப்போது சென்றாலும் தங்களுடைய விருந்தோம்பும் பண்பினால் உயர்ந்து நின்ற பொன்முருகேசம்பிள்ளை, பணஉதவியென்றால் தட்டாமல் புன்னகையோடு கொடுக்கும் வெல்லச்சு செட்டியார், யானை தன் கோட்டத்துக்குள் நுழைந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் போன்றோரை இந்த வையகம் நினைவில் போற்றும்.

நிறைய தகவல்கள் உள்ளது. நூலாசிரியர் பாரதியின் மீது வைத்துள்ள அபிமானத்தால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் எழுதியுள்ளார். வாசிக்க அருமையான நூல். பாரதியாரின் ஐந்தாண்டுகள் வாழ்க்கையை ஓரளவு பதிவுசெய்துள்ளார் என்பது உண்மை.

நூல் ==
மகாகவி பாரதியார்
ஆசிரியர் =, வ. ரா.
பாதிப்பு =பாரதி புத்தகாலயம்
விலை =ரூ 95/

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mahagavi-bharathiyar-vara-8031/

அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *