“மகா கவிதை” ஓர் அறிவியல் களஞ்சியம்
திரைப்படப்பாடல்கள், கவிதைகள் மட்டுமல்லாது நாவல், சிறுகதை, கட்டுரை என்று அனைத்து இலக்கிய வகைமைகளிலும் தடம்பதித்து வைரமுத்து சாதனைகள் புரிந்து வருகிறார். ஆறாயிரத்துக்கும் மேலான திரைப்படப் பாடல்களை அவர் எழுதியுள்ளார். ‘சிகரங்களைநோக்கி’, ‘காவிநிறத்தில் ஒரு காதல்’ கவிதைத்தொகுப்புகள், ’கள்ளிக்காட்டு இதிகாசம்’, ’கருவாச்சி காவியம்’, ’மூன்றாம் உலகப் போர்’ நாவல்கள் உள்ளிட்டு சிறுகதைகளையும் படைத்துள்ளார். இன்றைய இளைஞர்கள் அறிந்திடும் வண்ணம் தமிழ் கூறும் நல்லுலகின் இருபத்து நான்கு ஆளுமைகளைப் பற்றி ’தமிழாற்றுப்படை’ என்றொரு ஆற்றுப்படை இலக்கியத்தையும் வைரமுத்து ஆற்றியுள்ளார்.
வைரமுத்துவின் ’தண்ணீர் தேசம்’ நாவல் கவிதை மொழியில் எழுதப்பட்டது. காதல் காவியமாக எழுதப்பட்ட அந்த நாவல் அறிவியல் உண்மைகளையும் அள்ளித் தந்து வாசகர்களைப் பிரமிக்கச் செய்தது. காதலர்கள் கலைவண்ணன்–தமிழ்ரோஜா கடல்வழிப் பயணத்தில் சந்திக்கும் சாகசங்களைச் சித்தரித்த அந்த நாவல் இயற்கையின் அரிய படைப்பான கடலின் இரகசியங்களையும் சொல்லிச் சென்றது. அண்மையில் வெளியாகியுள்ள வைரமுத்துவின் ’மகா கவிதை’ ஓர் அறிவியல் காவியமாக தற்போது பரிணமித்திருக்கிறது. தனித்தும், கூடியும் இயங்கும் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, வளி, வெளி பற்றிய அறிவியல் செய்திகளை ’மகா கவிதை’ நூலில் வைரமுத்து கொட்டிக் கொடுத்துள்ளார். அறிவியல் தரவுகளைக் கவித்துவமான நடையிலும் தர முடியும் என்று இந்த உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்.
காதலை, வீரத்தை சங்க இலக்கியப் புலவர்கள் பாடினர். திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் அறத்தைப் பாடினர். இளங்கோவடிகள், திருத்தக்கத்தேவர் போன்றோர் காப்பியங்கள் பாடினர். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியைப் பாடினர். அறிவியல் கோலோச்சி வரும் இந்தக் காலத்தில் அறிவியலை வைரமுத்து பாடியிருக்கிறார். அறிவியலின் அரிய செய்திகளைக் கட்டுரைகள் வழிதான் எடுத்துச் செல்ல முடியும் என்ற விதியை மாற்றி கவிதை வழியாகவும் அறிவியல் கோட்பாடுகளை, விதிகளை, அதிசயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். ’மகா கவிதை’ நூலின் மூலம் சொற்சுவை, பொருட்சுவை கலந்து அறிவியல் விருந்து படைத்துள்ளார் வைரமுத்து.
’மகா கவிதை’ என்ற தலைப்பில் ’மகா’ எனும் அடைமொழி உருவம் பற்றியதன்று; உள்ளடக்கம் பற்றியது என்று முன்னுரையில் அவரே கூறி விடுகிறார். அளவிடற்கரியதாக அகன்று, பரந்து, விரிந்து கிடப்பதுதானே இந்தப் பிரபஞ்சம்! “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” எனும் தொல்காப்பிய அறிவின் நவீனத் தொடர்ச்சிதான் ’மகா கவிதை’ என்று பிரகடனப்படுத்தும் வைரமுத்து முப்பது மாதங்கள் அஞ்சிறைத் தும்பியாய்த் தேடித் தேடித் திரட்டிய தகவல்களை மகா கவிதையாக வடித்துள்ளார்.
மனித குலத்தைக் காவல் காக்கும் ஐம்பூதங்களை நாம் சீரழித்து வருகிறோம் என்ற எச்சரிக்கைமணி ஒலித்திருப்பதை நூலின் முன்னுரையில் சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். புவிச்சூடு என்னும் ஆபத்து அனைத்துக் கண்டங்கள் மீதும் தன் மூர்க்கத்தை எழுதிச் செல்கிறது. நிலம் என்னும் நல்லாள் கடும் வறட்சியால் வெடித்துக் கிடக்க, இறந்து கிடக்கும் இயற்கையின் மீது மனிதனும் கிடப்பான் மடிந்த ஈசலாய் என்பதுறுதி என்கிறார். இதை நன்கு உணர்ந்த உலகநாடுகள் உள்ளதற்கே ஊறு வந்துவிடுமோ என்று பதறி 2015இல் பாரிஸ் நகரத்தில் ஒன்று கூடின. அனைத்து நாடுகளும் பூமி எனும் வெண்ணெய் உருண்டை பொங்கி எழும் புவிச்சூட்டில் உருகி ஒழுகிவிடப் போவதை ஏற்றுக்கொண்டன. ஒற்றைக் குரலில் அவை ‘2030க்குள் உலக வெப்பத்தை 1.5 பாகை செல்சியஸ் குறைத்தே ஆகவேண்டும்’ என்று உரக்கக் கூவின. ஆனாலும் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் சூடாறிப் போனார்கள் தலைவர்கள். வணிகப் பேராசை, துய்ப்புக் கலாச்சாரம், முந்திச் செல்ல வேண்டும் என்ற முதலாளித்துவ மூர்க்கம். இவையெல்லாம் சேர்ந்து மாநாட்டுத் தீர்மானத்தை மறக்கடித்தன என்று வேதனையுடன் வைரமுத்து குறிப்பிடுகிறார்.
”அகோ மனிதர்களே! உங்கள் காலடியில் இருப்பதனாலேயே பூமியை இழிவாய் எண்ணுவதை எப்போது நிறுத்துவீர்கள்? பூமி என்னும் இந்த ஒற்றைக் கிரகத்தை விட்டுவிட்டால் ஏதுவான இடமுண்டா உயிர்ச்சாதிக்கு?” என்று படிப்பவர் மனதைக் கேள்விகளால் மடக்குகிறார். புதன், செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, நெப்டியூன், புளூட்டோ என்று அனைத்து கிரகங்களிலும் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியம் இருக்கவில்லை. நூலின் முன்னுரை பூமியைப் புதைத்துவிட்டு எக்கோள் போவாய் மனிதா? என்ற கேள்வியை எழுப்பி மனித குலத்தின் இயலாமையை எடுத்துரைக்கிறது. “இந்த உலகத்தின் வளம் அனைவர் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசையை நிரப்பப் போதுமானதல்ல” என்ற அண்ணல் காந்தியடிகளின் கூற்றை ஏற்றுக்கொண்டு மகாகவிதைக்கு மௌலி புனைகிறேன் என்கிறார் வைரமுத்து.
நிலம்
நிலம் தோன்றிய வரலாறு கூறி நம்மைப் பிரமிக்க வைக்கிறார். ‘ஆதியிலே ஒரு மேகம் இருந்தது. சுழன்று கொண்டேயிருந்தது அந்த மூத்த முகில் பந்து. இணைந்ததெல்லாம் பிரியுமென்றும், பிரிந்ததெல்லாம் இணையுமென்றும் கூர்தல் அறம் கூறியபடி அணுக்களை ஈர்த்து ஈர்த்து நிறைகொண்ட பொருளானது. அந்த மேக வட்டத்தின் கருவறைக்குள் கண்வளர்கிறது ஒரு பேருலகம். அப்பேருலகின் ஒரு சிற்றுலகுக்கு பூமி என்று பெயர்’ என்று பூமியின் தோற்றத்தைக் கவித்துவமாய்க் கூறுகிறார் புலவர். வேகமெடுத்த பூமி வெறியெடுத்துச் சுற்றச் சுற்ற மலைகளும், சமவெளிகளும் உருவாகின. உயிர்களற்ற அந்த ஆதி வெளியில் பூமிக்கு அறிமுகமாகி இருக்காத முதல் அதிசயமாக மழை என்னும் பேரதிசயம் நிகழ்ந்தது. பூமியின் தனிப் பெருச் செயல் மழை, மறு பெருஞ் செயல் மலை. மாறிக் கொண்டே இருப்பது பூமிக்கு மிகவும் பிடித்த குணம். கடல் நிலம் செய்வதும், நிலம் கடலைச் செய்வதும் பூமியின் பொழுதுபோக்கானது. முக்கால் பாகம் நீர் கொண்ட கோளம் இது. ஆயினும் நீரகம் என்றழைக்காமல் மண்ணகம் என்றே அழைக்கின்றோம். மானுடத்தின் உச்சங்களையும், எச்சங்களையும் எழுதிச் செல்வது மண்ணென்ற ஊடகமன்றோ? பூமித்தாயே! லட்சலட்சம் பேருயிர்களை ஈன்றளித்த இறைமாதா! உனக்கு நெடுஞ்சாண்கிடை வணக்கம் தாயே! என்று வணங்கி மகிழ்கிறார். பேராசை கொண்டு அலையும் மனிதனை ”பூமி உன் சொந்தமென்று மமதை கொள்ளாதே. ஆறடி குழியே உனக்கான இடம் என்பதைப் புரிந்துகொள்” என்று எச்சரிக்கிறார்.
நீர்
நிறமில்லை உனக்கு. நீதான் நிற மூட்டினாய் வானுக்கு. வடிவில்லை உனக்கு. நீதான் வடிவம் தந்தாய் நிலத்துக்கு. திரவம், திடம், வாயு என்று மூன்று வடிவெடுப்பாய். ஐம்பூதங்களில் மூன்றாய் திரியும் ஒரே பூதம் நீதான். குளிர் காலத்தில் உறைந்து உறங்கி ஓய்வெடுக்கிறாய். வசந்த காலத்தில் உருகி எழுகிறாய். நெடுவழியெங்கும் நீ நிகழ்த்திப்போகும் கொடுங்கூத்து கொஞ்ச நஞ்சமா? பொதுவுடைமைப் பொருளை தனியுடமைப் பொருளாய்ப் பெண்டாளப் பார்க்கிறான். சண்டாள மனிதன். ”அற்ப மனிதர்களே! நதியைத் துய்க்காமல் எதைத் துய்க்கப் போகிறீர்கள்? ஏழை நாடுகளுக்குத் தொழிற்சாலைகளை ஏற்றுமதி செய்; பொருளை மட்டும் இறக்குமதி செய் என்று கார்ப்பரெட் வேதம் ஓதுகிறது. பொதுவுடைமையிலிருந்து தனியுடைமை ஆன கனமே உலகத்தின் தண்ணீரெல்லாம் கண்ணீரானது” என்று சந்தடி சாக்கில் அரசியலும் பேசி நையாண்டி செய்கிறார் வைரமுத்து. அங்கிங்கு என்னாதபடி எங்குமுளதே கடவுள் எனில் நீதான் கடவுள். தலைக்கு மேலும் உடலுள்ளும் நீதான் ஓடிக் கொண்டிருக்கிறாய் தீராத தெய்வத் தீர்த்தமே என்று தண்ணீரைப் போற்றிப்பாடுகிறார் பாடலாசிரியர்.
தீ
”பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் எரியும் தொலையா நெருப்பே! கோள்கள் சமைத்த அணையா அடுப்பே! எங்கள் தாயும் நீயே! தந்தையும் நீயே! தணியாதெரியும் தீயே!” என்று சூரியனை வணங்கித் தொடங்குகிறது அடுத்த காண்டம். சூரியனே எங்கள் ஒற்றை ஒளிவிளக்கு; ஒரே நம்பிக்கை. நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் கட்டிப்பிடித்து ஒரு ஹீலியமாக அந்த மகாசக்தி எரிகிறது. அந்த எரிதல் வினாடிக்கு ஐம்பது லட்சம் டன் எடையை இழக்கச் செய்கிறது. நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் நிகழ்ந்தும்- இன்னும் நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் நிகழப்போவதும் இந்த ஹீலிய சம்பவம்தான் என்று கதிரவன் பற்றிய அறிவியல் செய்தியை ஒரு கவிஞன் அறிவியலாளராக மாறிக் கூறுவது நெஞ்சை நெகிழச் செய்கிறது. கொடுஞ் சூரிய வெப்பத்தை தூர வெளிகளில் சூடாற்றி காற்றின் கனல் குறைத்து மேகச் சல்லடையில் மெல்ல வடிகட்டி இதம் பதம் மிதம் செய்து தாய் பூமியின் தாங்கு திறன் பார்த்து வெயிலொன்று பரப்புகிறாய். நீ மட்டும் நிலைப்படுத்தவில்லையெனில் கிடாமுட்டு நிகழ்வதுபோல் கிரகமுட்டு நிகழ்ந்திருக்கும் என்று பகலவனுக்கு நன்றி பாராட்டுகிறார் புலவர் பெருமகனார்.
ஆக்கலும் அழித்தலுமன்றி மூன்றாம் தொழில் ஒன்றும் மூண்டது நெருப்புக்கு. அது கற்பறிதல் ஆகும். கற்பெனும் அருவத்தின் துப்பறியும் கருவியாய் தீயை ஏவல் செய்தான் அயோத்தி அரசன். கொண்டுபோனவன் நந்தவனத்தில் இறக்கிப் பாதுகாத்தான். கொண்டவனோ தீக்குழியில் இறக்கிவிட்டான். ஒரு பெண்மைக்கு நேர்ந்த பெரு முரண் இது. காப்பியத்தில் தாயாகாத தாயொருத்தி தீயை முடித்துவைத்த இடம் முலை. மதுரை மாநகரையே தீக்கியிரையாக்கி தன் கோபம் தணிந்தாள். திரௌபதன் மூட்டிய தீயிலே ஜனித்தவள் யாகசேனி என்று பெயர் பூண்டாள் மற்றுமொரு காவியநாயகி என்று இலக்கியத்தில் நெருப்பின் பங்கை பாங்குடன் பகர்கிறார் வைரமுத்து. .வாழ்வென்பதே உன் வருகையும், தொடுகையும்தான். எப்போதும் ஒளிகொள்! சுடராய் இரு! எங்கள் நெற்றியிலும், வெற்றியிலும் சூரியத் தீயே! என்று ஞாயிறு போற்றி முடிக்கிறார்.
வளி
ஓரிடம்விட்டு வேறிடம் பெயரும் வளியாடலுக்குக் காற்று என்று பெயர். நிறமும், உடலுமற்ற அருவ ஜீவியே யார் நீ? உன் பிறப்பு பூமிக்கு முன்பா? பின்பா? நீ இல்லாவிடில்…? இன்னொரு நிலவாகும் பூமி. ஒலியும் மழையுமற்ற நிலாவுக்கு வானுண்டு; வானிலை இல்லை என்று வளியின் வலிமை குறித்த வாழ்த்துப்பாவுடன் தொடங்குகிறது அடுத்த காண்டம். உன் உடன்பிறப்புகள் ஹைட்ரஜன், ஹீலியம், நைட்ரஜன், அமோனியா, மீத்தேன் மட்டுமா? உயிர்வளி என்னானது? அது தாமத சம்பவம். கரியமிலவாயுவைத் தாவரம் உண்ணத் தந்தேன்; அதன் உடன்விளைவுதான் உயிர்வளி. என்று உயிர்வளி வரலாற்றை விளக்குகிறார் கவித்துவ மொழியில்.
‘உன் பொழுதுபோக்கு?’ காட்டுக்குள் பொடிநடையாய் போய்வருவது. ‘நீ விரும்புவது’? –உழைக்கும் பெண்களின் தூளிகளை ஊஞ்சலாட்டுவது. ‘வியப்பது’?–மூங்கில் துளைகளில் நுழைந்து இசையாய் வெளிவருவது”. என்று காற்றுடன் உரையாடல் நடத்துகிறார் கவிஞர். ”எனக்குப் பிடிக்கும் பைத்தியத்தைப் ’புயல்’ என்பார்கள். நான் நானாக இல்லாத காலம் அது” என்று காற்று வாக்குமூலம் தருகிறது. சாதி, மத, இன, அரசியல் பேதங்கள்; கண்டங்கள், காடுகள், கடல்கள் என் காலடியின் கீழே கழிகின்றன. தமிழ்ப் பேரரசன் ராஜராஜ சோழனின் கலங்களை கடாரம்வரை நெட்டித் தள்ளியது நான்தான் என்று பெருமை பேசுகிறது”. மானுடம் காப்பாற்றிய காற்றை மானுடன் காப்பாற்றும் காலம் அண்மித்துவிட்டது. ”காற்றாகிய நான் நஞ்சூட்டப்பட்டால் மொத்த உலகமும் மூச்சழியும். பிறகு என்னைக் குறித்துக் கவலையுற எவ்வுயிரும் இராது என்று காற்று எச்சரிக்கை செய்து கடிதே நகர்கிறது.
வெளி
”கோள்களே சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியன் பூமியை அல்ல” என்றான் கோப்பர்நிக்கஸ். சிலுவையிலிருந்து கழன்று விழுந்தன துருப்பிடித்த ஆணிகள். இருளின் முகமூடி கிழிக்கும் மின்னல்போலப் பொய்மையின் தோலுரித்தது அறிவியல். பூமி உள்ளிட்ட கோள்கள் எல்லாம் சுற்றி வருவது சூரியனைத்தான். அதுவும் வட்டப்பாதையில் அல்ல. நீள்வட்டப்பாதையில். அண்மையானவை விரைவாக, சேய்மையானவை மெதுவாக. பல்லாயிரங்கோடி அண்டங்களின் பெருவெளியே பேரண்டம். இதில் சூரியமண்டலம் சுண்டைக்காய் விதை” என்று ’வெளி’ குறித்த தகவல்களை அள்ளித் தருகிறது மகா காவியம். பால்வீதிக்கு பெயர் சூட்டத் தள்ளாடின உலக இனங்கள். ‘ஆகாயகங்கை’ என்றனர் இந்தியர். ’சொர்க்கப் பாதை’ என்றனர் கிரேக்கர்கள். ’தேவலோக நதி’ என்றனர் சீனர். வீதியில்தானே ஓடுவோம். வீதியே ஓடினால்…? ஒளியாண்டுகள் கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது நட்சத்திரப் பந்தல் என்று ’வெளி’ மீது ஒளி பாய்ச்சுகிறார் வைரமுத்து.
அண்டங்களின் இடைவெளிகளில் பழையன கழிகின்றன. புதுவன புகுகின்றன. அண்டங்களின் கதை வேண்டாம். நம் குடும்பக்கதை பேசுவோம். சூரியக் குடும்பக் கதை பேசுவோம். என்று வாசகர்களிடம் நெருங்கி வருகிறார் கவிஞர். ”புதன், வீனஸ், பூமி, செவ்வாய் உள்வரிசை. வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் வெளிவரிசை. சூரியன் ஆரஞ்சுப்பழம்; உள்வரிசைக் கோள்கள் ஆலம்பழங்கள்; வெளிவரிசைக் கோள்கள் அத்திப்பழங்கள் என்று அளவினைச் சொல்கிறார் உவமையுடன். அனைத்துக் கோள்களின் அளவு, குணம், பெருமை, சிறுமைகள் என்று இதுவரை வானவியலாளர்கள் அறிந்தவை எல்லாம் சொல்லித் தீர்க்கிறார் கவிஞர். வானவியல் கற்றறிந்த மகிழ்வில் திளைக்கிறோம். இறுதியில் நம் தாய்மண் பூமியின் பெருமைபேசி புளகாங்கிதம் அடைகிறார் கவிஞர்.
”கடவுளை ஒருபோதும் மதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒருவராகக் கருதமாட்டேன். வேண்டுமானால் பிரபஞ்சத்தின் ஒழுங்குவிதியைக் கடவுள் என்பேன்” என்று மதமறுப்பாளராக நின்று மகா காவியத்தை முடிக்கிறார். கவிதை வடிவில் அறிவியலைப் படித்து முடித்ததும் திகைத்து நிற்கிறோம். அறிவியல் உண்மைகள் அனைத்தையும் காவியம் ஆக்குங்கள் கவிஞரே என்று வைரமுத்துவிடம் உரிமையாகக் கேட்டுக்கொள்வோம
நூலின் தகவல்கள்
நூலின் பெயர்: “மகா காவியம்”
ஆசிரியர் : வைரமுத்து
வெளியீடு : சூரியா லிட்ரேச்சர் (பி) லிட்., சென்னை- 600090.
விலை : ரூ.500/-
எழுதியவர்
பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை. தொடர்க உங்கள் பணி. நல்வாழ்த்துகள் தோழரே.