புத்தக தலைப்பு :- மகாகவி பாரதியார்.
பாரதியைப்பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வந்திருக்கின்றன.

எத்தனை முறை எத்தனை பேர் எழுதி படித்தாலும் படிக்க படிக்க ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுபவை பாரதியைப் பற்றிய செய்திகள்

இந்த புத்தகத்தை எழுதியவர் வ.ரா. என்று அழைக்கப்படும் வரதராஜ அய்யங்கார் ராமசாமி.

மிகப்பெரிய பாரதியாரின் பக்தரான இவர் பாரதியுடன் தனது ஐந்தாண்டுகால வாழ்க்கையினை இந்த புத்தகத்தில் மிகச்சுவாரசியமாக தருகிறார் வ.ரா.

சுதேச மித்திரன் நாளிதழில் பாரதி எழுதிய கட்டுரைகள் ராஜதுவேஷம் என வாரண்ட் பிறப்பிக்கப்பட ஐந்தாண்டு காலம் பாரதி பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்.

அந்த பயணத்தில் பாரதியோடு வ.ரா இணைந்து கொண்டு பாரதியுடனான தன் நினைவுகளை இந்த புத்தகத்தில் கொண்டுவருகிறார்.

பாரதி மகாகவி இல்லை என கல்கி உட்பட சிலர் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த காலத்தில் அவர்களுக்கு பதிலுரைக்கும் விதமாக காந்தி பத்திரிக்கையில் 1933-34 ஆம் ஆண்டுகளில் எழுதியவை நூலாக வடிவம் பெற்றிருக்கிறது.

பாண்டிச்சேரியில் பாரதிக்கு வீடு கொடுத்திருந்த செட்டியாரை விளக்கெண்ணைச் செட்டியார் என்றே அழைப்பாராம்.

வாடகை கேட்டு வரும் செட்டியாரிடம் இன்னும் பத்து வருசத்துக்குள் இந்தியாவிற்கு சுயராச்சியம் கிடைத்துவிடும் அரசாங்க கஜானாவிற்கு ஒரு செக் கொடுக்கிறேன் போய் வாங்கிக்கொள்ளும் என சொல்லிவிட்டு வெண்கலத்தை தட்டியது போல சிரிப்பாராம் பாரதி.

சதா சர்வ காலமும் பேசிக்கொண்டே இருப்பாராம் பாரதி, பேச்சு ஓய்ந்தால் உடனே பாட்டுத்தானாம். நான் சொல்லவில்லை வ.ரா சொல்கிறார்.

பாரதி எழுதிய சின்னச்சங்கரன் கதை திருட்டு போனது…

கங்காபானம் செய்யும் வீட்டில் பிறந்த பாரதி “கஞ்சா பாணம் ” அருந்தியது…

என ஏராளமான விசயங்கள் இந்த புத்தகத்தில்.

பாரதியின் உடுப்பு எப்படி?

ஒரு பனியன், அதற்கு மேலே ஒரு ஷர்ட்டு. அது கிழிந்திருக்கலாம், அனேகமா பித்தான் இருக்காது. அதற்கு மேலே ஒரு கோட்டு. மரியாதைக்காக அதிலே ஒரு பித்தான் போட்டிருப்பார்.

சர்ட்டின் இடப்பக்க ஓரத்தில் அன்றைக்கு பூத்த ஏதாவது ஒரு மலர் இருக்கும். வேப்பம்பூவாக கூட அது இருக்கும் என வ.ரா. வின் எழுத்துக்களில் பாரதி நம்முன்னே உடை மாற்றுகிற காட்சி வந்து நிற்கிறது.

பாரதியின் எழுத்து குண்டு குண்டாக இருக்கும் , உயிரெழுத்தின் மேலே சந்தனப்பொட்டு வைத்தமாதிரி புள்ளி இருக்கும் என சொல்கிற போது கண்கள் விரிந்து பாரதியை தேடுவதை தவிர்க்க முடியாது.

பாரதி குனிந்தே நடக்க மாட்டாராம்.

நெஞ்சை முன்னே தள்ளி தலையை நிமிர்த்தி பாடிக்கொண்டே நடப்பாராம் பாரதி…

இது மட்டுமல்ல. பாரதிக்கு மிகவும் பிடித்த, பாண்டிச்சேரியில் நிறைய உதவி புரிந்த வெல்லச்சு செட்டியார்…

காந்திக்கும் பாரதிக்குமான சந்திப்பு…

அட பாரதியார் காலில் காலணா சைஸில் இருந்த ஆணி உட்பட சகலமும் இந்த புத்தகத்தில்

இந்த புத்தகத்தை படித்தால் பாரதியோடு ஐந்தாண்டு காலம் பாண்டிச்சேரியில் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்

அதனாலே,
வாங்குங்க,
வாசியுங்க,

வ.ரா. எழுதிய “மகாகவி பாரதியார்.”

ஆசிரியர் வ.ரா

பதிப்பு :- பாரதி புத்தகாலயம்

தொன்னூற்று ஐந்து ரூபாய் மட்டும்

# வாசிப்பதை பகிர்வோம்,
#பகிர்வதற்காக வாசிப்போம்
மு. வீரகடம்ப கோபு
திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *