மகாகவி பாரதியார் – நூல் அறிமுகம்
வரா என்று அறியப்படும் வரதராஜ ஐயங்கார் ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர் சமூக சீர்திருத்தவாதி பத்திரிக்கையாசிரியர் நாவலாசிரியர் கட்டுரையாளர் பாரதி பக்தர் வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கிய வளர்ச்சி மேம்பாடு என்பதற்காக பாடுபட்டவர் பாரதி வரலாற்றை பற்றி இவர் எழுதிய மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar) என்ற இந்த நூல் பாரதியை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையப்பெறுகிறது.
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அதனோடு கூடிய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தீவிரமான போக்கு, புதுச்சேரியில் பாரதியாரின் வாசம், கவிதைகளின் மீது பாரதியார் கொண்டிருந்த பற்று, சமூக சீர்திருத்தங்களின் மீது பாரதியாருக்கு இருக்கும் விருப்பம் என பாரதியின் அகமும் புறமும் இந்த நூலின் வழியாக முழுமையாகத் தெரிய வருகின்றன.
நூலில் வ.ரா பாரதியாரைப் பற்றியும் அவரது குண நலன்களைப் பற்றியும் எழுதியிருக்கும் சில கருத்துக்களை நாம் வாசித்தாலே பாரதியைப் பற்றிய முழுமையான ஒரு சித்திரம் நமக்கு காட்சியாக விரியக்கூடும்.
“தேமதுரத் தமிழ் ஓசையை அன்று நான் நேரே கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக் கூடவில்லை. தமிழுக்கு உயிரும் உருவமும் வலிமையும் பொலிவும் மேன்மையும் ஒன்று என்று அன்றுதான் கண்டேன். (முதன் முதலாக பாரதியை கண்ட போது வ.ரா மனநிலை)
பாரதியாரின் சொற்கள் முல்லைமலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கும் புதிய புதிய கருத்துக்களும் சித்திரச் சொற்களும் திடீர் திடீரென்று புதை வாணங்களைப்போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப்பிடித்து வந்ததாக சொற்களைப் பொழிவார். அரவிந்தர் பூமியை துளைத்து தூண்டி பொக்கிஷத்தை குழந்தையாக பேசுவார். இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்.
சின்னச்சாமி ஐயர் தமது குமாரனை கணிதப் புலவனாகச் செய்ய பெரிதும் முயன்றார். அவருக்கு இயந்திரப் பழக்கம் மிகுதியும் உண்டு. மேனாட்டிய. எந்திரங்களை அக்காலத்திலேயே தாமே எவர் உதவியும் இல்லாமல் பிரித்து மறுபடியும் பூட்டக்கூடிய சாமர்த்தியமும் சக்தியும் பாரதியாரின் தகப்பனாருக்கு இருந்ததாம். தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது பாரதியார் ஜில்லா கலெக்டராய் கைச்சொக்காய் கால் சராய் உடன் வரவேண்டும் என்பது தகப்பனாரின் பேரவா.
தம் தாயைப் பற்றி பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்து பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார். அண்டை வீட்டு குழந்தைகளுக்கு இருந்த தாயெனும் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார். தாயார் இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் அகன்றதாலேயே பாரதியார் சாகும்வரைக்கும் குழந்தையாய் இருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மா தான். வயது கணக்கு அவருக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை.
சிறு பிராயத்தில் பெரிய புலவர்களின் நட்பும் சமஸ்தானத்தின் தயவும் பாரதியாருக்கு அபரிதமாக கிடைத்திருந்தபடியால் அவர் தேனை நுகரும் வண்டைப் போல கவி எய்தி வாழ்ந்து வந்தார். லேசாக படிப்பதும் எளிதிலே பரிட்சையில் தேர்வதும் அவரது வழக்கமாயிற்று. இலக்கணத்தின் கொடிய விதிகளில் சிலவற்றை உடைத்து எறிந்து விட்டு கவிகள் பாடத் தொடங்கினார்.
கங்கா பானம் செய்ய வேண்டும் என்று பெரியார்கள் சொல்லுவதை வேறு விதமாக மாற்றி பாரதியார் சிறு பிராயம் முதல் கஞ்சா பானம் முயற்சியில் மோகங் கொண்டார். பணக்காரர்களின் உறவு ஏழைகளுக்கு நல்ல பழக்கத்தை உண்டாக்காது என்று பலர் சொல்லுவதற்கு பாரதியாரே பெரிய அத்தாட்சியாக விளங்குகிறார். பாரதியாருக்கு உபதேசம் செய்த ராஜாவுக்கும் காந்திக்கு உபதேசம் செய்தவருக்கும் கெட்ட எண்ணம் கிடையாது. பாலியத்தில் ஒன்றை கேட்டாலும் பார்த்தாலும் அது எவ்வாறு அழுத்தமாக பதிகின்றது என்பதை இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
“காசியில் பிரவேச பரீட்சைக்கு இரண்டு பாஷைகள் வேண்டும். ஒன்று இங்கிலீஷ் இருந்தது. மற்றொன்றாக இரண்டே வருடங்களில் ஹிந்தி பாஷையை கற்றுக்கொண்டு பரீட்சையில் முதல் வகுப்பில் பாரதியார் தேறினார். பாரதியாரின் ஹிந்தி உச்சரிப்பை கேட்டவர்கள் அவர் வடக்கத்திய கோஷாயி பிராமணர் என்று சந்தேகப்படும்படி இருக்கும்.
தமிழ் பண்டிதர் பதவிக்கு பாரதியாரிடம் இருந்த லட்சணங்கள் வினோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்துவான்கள் அளித்த பாரதி என்ற பட்டம் ஒன்றே முதல் தரமான லட்சணம் என்று எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் சூத்திரங்களை தலைகீழாகச் சொல்ல முடியுமே அந்த சாமர்த்தியம் பாரதியாருக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய் சொல்லலாம். அதை படித்து நெட்டுரு பண்ணி இருப்பாரா என்பது சந்தேகம் தான்.
“‘நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குவதில் சுப்பிரமணிய ஐயர் ரொம்ப கொம்பன் என்றாலும் பத்திரிகை தொழில் எனக்கு பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தவர் அவர்தான். அவரை நான் ஒரு வகையில் பரமகுருவாக மதிக்கிறேன்” என்பார் பாரதியார்.
“”தினசரி பத்திரிகைகளுக்கு தந்தி வெளியூர் வர்த்தமானம் இவைகளில் தான் நாட்டம். மனிதர்களின் பாழடைந்த கருத்துக்களை மாற்ற, அவர்களை வலியோர்களாய் செய்யும் வேலையில் தினசரிகள் பெரும்பாலும் இறங்குவதில்லை.
மண்டையம் சீனுவாசாச்சாரியார் இன்னொரு நண்பர். இவர் இப்பொழுது திருவல்லிக்கேணியில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். இவருடைய குடும்பத்திற்கு தூத்துக்குடி சுதேசி கப்பல் கம்பெனி மூலமாக ஏற்பட்ட நஷ்டத்தை இலட்சக்கணக்கில் சொல்லலாம். சென்னையிலும் புதுச்சேரியிலும் சுமார் 20 வருடங்களுக்கு அதிகமாக பாரதியாருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இந்தியா பத்திரிக்கையின் சொந்தக்காரர்களில் ஒருவர். தமிழ் கன்னடம் உருது பிரெஞ்சு இங்கிலீஷ் முதலிய பாஷைகளில் நிபுணர்
“மனிதன் ஆபத்தினால் அனேகமாக சாவதில்லை. ஆபத்து வருமோ என்று எண்ணி ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான். இந்தியா பத்திரிக்கையை புதுச்சேரியிலிருந்து வரவிடாமல் சென்னை சர்க்கார் தடுத்து விடுவார்களோ என்று ஜனங்கள் நினைக்க ஆரம்பித்த பொழுது இந்தியாவின் ஆயுள் காலம் குறுகிவிட்டது என்று சொல்லலாம்.
பூரண வாழ்வு வாழத் துணிந்த மேதாவிகளுக்கு, வீரர்களுக்கு பொதுவாக எந்த நாட்டிலும் சிறப்பாக சுதந்திரம் இல்லாத நாட்டில் எத்தனை வித துன்பங்கள் நேருகின்றன என்றும் அவைகளை மேதாவிகள் எவ்விதம் ஜீரணம் செய்து கொள்கிறார்கள் என்றும் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். லோகத்தில் ஒரு விசித்திரம் உண்டு. இணையற்ற மேதாவிகள் பிறந்தாலும் அவர்களுடைய மேதையை சிலரால் கூட அனுபவிக்க முடியாமல் போனால் மேதாவிகள் கதி அதோ கதிதான். எவ்வளவுதான் திட சித்தம் இருப்பினும் மேதாவிகள் மனம் உடைந்து போகக்கூடிய நிலைமைக்கு வந்து விடுவார்கள்.
புதுச்சேரி தேசபக்தர்களுள் வ.வே.சு ஐயரைபா போல நூல் பயிற்சி உள்ளவர்கள் யாருமே இல்லை என சொல்லலாம். அபாரமாக படிப்பார். வீரர்களின் சரித்திரம் இலக்கியம் யுத்த சாஸ்திர புத்தகங்கள் பழைய தமிழ் காவியங்கள் பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் என ஐயர் இடைவிடாது படித்துக் கொண்டிருப்பார்.
உடம்பிலே எப்பொழுதும் ஒரு பனியன் சட்டை இருக்கும். வேஷ்டிகளையும் சட்டைகளையும் அவர் சலவைக்கு போட்டு நான் பார்த்ததில்லை. யாராவது ஒரு பக்தரோ வீட்டு வேலைக்காரியோ துவைத்து காய வைத்திருப்பார்கள். பனியனுக்கு மேல் ஒரு ஷர்ட்டு. அது கிழிந்து இருக்கலாம் அநேகமாய் பித்தானும் இருக்காது. இதற்கு மேல் ஒரு கோட்டு. அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார். சர்ட்டின் இடப்பக்க பித்தான் துவாரத்தில் ஏதாவது ஒரு புதிய மலர் செருகி வைத்துக் கொள்வார்.
இடக்கையில் ஒரு நோட்டு புத்தகம் சில காயிதங்கள் ஒரு புத்தகம் இவை கண்டிப்பா இருக்கும். எப்பொழுதும் பென்சில் எழுத்துத்தான். எழுத்து குண்டு குண்டா இருக்கும். ஓர் எழுத்தின் பெயரில் இன்னொரு எழுத்து படாது உராயவும் உராயாது. மார்பை பட்டாளத்து சிப்பாய் போல முன்னே தள்ளி தலை நிமிர்ந்து பாடிக்கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரொம்ப பிரியம்.
பாரதியார் வெளியே புறப்பட்டு விட்டால் புஷ் வண்டிக்காரர்களுக்கு ஆனந்தம். அவரின் முன்னே வண்டியை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அவரை நடக்கவும் விட மாட்டார்கள். கூலியும் பேச மாட்டார்கள். பாரதியார் வாடகை பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். தான் மேலே போட்டுக் கொண்டிருப்பது பட்டாக இருந்தாலும் சரி கிழிந்த அங்கவஸ்திரமாக இருந்தாலும் சரி சரிகை துப்பட்டாவாக இருந்தாலும் சரி அது அன்றைக்கு புஷ்வண்டிக்காரனுக்கு பிராப்தி.
“பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார் யாரையும் கண்டிப்பார் ஆனால் எதிரில் இல்லாதவர்களை பற்றி அவதூறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளி கூடக் கிடையாது.
“பணம் சம்பந்தமாக பாரதியாரிடம் இங்கிகத்துடன் பழக வேண்டும். அவருடன் பழகிய நண்பர்களுக்கு எல்லாம் இது நன்றாகத் தெரியும். பாரதியார் யாரிடமும் நன்றாய் பழகித் தெரிந்தால் ஒழிய லேசில் பணம் கேட்டு விடமாட்டார். கேட்டு வாயிழப்பதும் அவரால் தாங்க முடியாத காரியம்.
நடத்தை சிரமத்தில் மரியாதை விஷயத்தில் பிறர் துளி தவறி நடந்தாலும் பாரதியாருக்கு ரோஷமும் ஆத்திரமும் வந்துவிடும். இரவிலோ விடியற்காலையிலோ எப்பொழுதேனும் வெறிபிடித்தார் போல் பாரதியார் பாட ஆரம்பித்து விட்டால் பாட்டு நிற்பதற்கு குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். தெருவாருக்கும் தூக்கம் கெடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கும் தூக்கம் போய்விடலாம். ஆனால் யாரும் இதைப் பற்றி பாரதியாரிடம் குறை கூறிக் கொண்டதே கிடையாது. பாரதியாரிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எச்சிலை எட்டப் போய் துப்ப மாட்டார். இருந்த இடத்திலிருந்து துப்புவார். அது எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கு அது தான் பிராப்தி.
ஸ்நானம் செய்வதற்கு முன் முழு ஜாதிக்காய் ஒன்றை என்னிடம் கொடுத்து அதை சாப்பிடச் சொன்னார். பாதி ஜாதிக்காயை கடித்துத் தின்று இருப்பேன். எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது மாதிரி தோன்றிற்று. கால்கள் நிதானம் தவறிவிட்டன. எனக்கு ஒன்று கொடுத்துவிட்ட பாரதியார் இரண்டை தமது வாயில் போட்டு அடக்கிக் கொண்டார். அந்த பாழாய் போன ஜாதிக்காய் அவரை ஒன்றும் செய்யவில்லை. தமது பாடல்களை தமிழர்கள் ஏராளமாக ரசிக்க முன்வரவில்லை என்ற வருத்தத்தாலோ அல்லது புதுச்சேரியில் தமக்கு சரியான தோழமை இல்லை என்ற எண்ணத்தாலோ பாரதியார் மீண்டும் அபின் பழக்கத்தை பிடித்துக் கொண்டார். நீங்கள் இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ளக்கூடாது என்று பாரதியாரிடம் சொல்ல எங்கள் ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை. அபின் பழக்கம் நாளாவர்த்தியில் அவருடைய உடம்பை நிரம்பவும் கெடுத்து விட்டது.
“உலக மகாகவிகளில் தலைசிறந்து விளங்குபவரும் தமிழ்நாட்டுப் புரட்சிக்கவிமான பாரதியாரின் பூத உடலை அடக்கம் செய்வதற்கு போதிய பணம் அவரது வீட்டார்களிடம் இல்லை என்றும் சில பக்தர்களின் பண உதவியைக் கொண்டுதான் உடலை அடக்கம் செய்ய முடிந்தது என்றும் பாரதியாரின் பக்தரும் சிறந்த தேச பக்தருமான ஒருவர் என்னிடம் சொன்னார்.
“பொதுக்கூட்டம் ஒன்றில் சத்தியமூர்த்தியும் இன்னொருவரும் முதலில் பேசி விட்டார்கள். அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதை கூட கவனிக்காமல் சத்தியமூர்த்தி துடுக்காக நீங்கள் வழக்கமாக கேட்கும் பாரதியார் நாளைக்கு பேசுவார் இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவு பெற்றது என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் கூட்டம் கலையவில்லை. பாரதியார் எழுந்திருந்தார் சத்தியமூர்த்திக்கு அழகான சொற்களில் விதாரனையாக சன்மானம் கொடுத்தார். பிறகு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது போல ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே பாரதியார் பிரசங்கம் பொழிந்தார். அன்றைக்குத்தான் என்றும் உயிரோடு இருக்கக்கூடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்று அற்புதமான பாடலை பாரதியார் பாடினார். கூட்டம் கலையும் பொழுது மணி பதினொன்று இருக்கலாம். பாரதியாரை பிற்காலத்தில் புகழ்ந்து கொண்டாடின சத்தியமூர்த்தி கூட அக்காலத்தில் சரியானபடி அவருடைய பெருமையை தெரிந்து கொள்ளாமல் போனதுதான் ஆச்சரியம்.
படைப்பில் எல்லா ஜீவராசிகளோடும் அவைகளின் சலனத்தோடும் ஒட்டிக் கொள்ளும் தன்மைக்கு கவிதை உள்ளம் என்ற பெயர். கவிஞன் புயலைப் பற்றி கவிதை எழுதினால் அவன் புயலோடு புயலாய் ஒட்டிக்கொண்டு இருப்பான் அன்பை வர்ணித்தால் அவன் அன்புமயமாக ஆகிவிடுவான் அநீதியை தாக்கினால் அவன் உள்ளம் சீறி எழும் கவிஞன் ஓர் ஆளையோ ஒரு பொருளையோ கேலி செய்தால் அது அவன் தன்னைத்தானே கேலி செய்து கொண்ட மாதிரி இருக்கும். அதாவது கவிஞனின் உள்ளம் இரண்டறக் கலக்கும் உள்ளமாகும். அவன் கட்சி பேச முடியுமே ஒழிய, சாட்சி சொல்ல முடியாது.
“பாரதியாருக்கு உலக மதிப்பு ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்று கேட்கலாம். அரச மரத்தை பிடித்த பிசாசு பிள்ளையாரையும் பிடித்துக் கொண்டது என்பார்கள் அது உண்மை என்றே தோன்றுகிறது. அதுபோலவே பாரதியாருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் தற்போதைய தாழ்வு அடைந்த அலங்கோலமான குறிக்கோள் இல்லாத நெறி இல்லாத வாழ்க்கை தான் பாரதியாருக்கு உலக மதிப்பு வராததன் காரணம். இன்னொரு காரணமும் உண்டு. உலகம் இப்பொழுது கவிஞனைப் பாராட்டாமல் கொலைஞனைப் பாராட்டும் கோரமான தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மனப்பான்மையில் மயங்கி கிடக்கும் உலகம் கவிதைக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசத்தை காண முடியாது. பாரதியார் எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்பட போகின்ற கவிஞர்களில் சிரேஷ்டமானவர்.இதை அடிக்கடி நம்முடைய மனதில் சிந்தனை செய்து கொண்டு நாம் பெருமையும் தைரியமும் கொள்ள வேண்டும்.
“”தீர்க்கதரிசிகளாக இருப்பவர்கள் தங்கள் தீர்க்கதரிசனத்தை கொண்டு எக்காலத்தும் எந்த நிலைமைக்கும் பொதுவான தேவையான அழிவு இல்லாத உண்மைகளை கண்டுபிடிகிறார்கள். ஆனால் அவைகளை மனிதர்கள் நேரே உணர்ந்து கொள்வதில்லை.
தமிழனைத் தட்டி எழுப்பி அவனை முன்னேறச் செய்தவர் திட சங்கர்ப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர் கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாட வேண்டும். குழந்தைக்கு தோழனாகவும் பெண்மைக்கு பக்தனாகவும் அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும் சுதந்திரத்திற்கு ஊற்றுக்கண்ணாகவும் சுற்றி நில்லாது போ பகையே என்னும் அமுதவாய் படைத்த ஆண் மகனாகவும் கவிதைக்கு தங்குமிடமாகவும் உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப்பெற்றவனாகவும் எவன் ஒருவன் இருக்கிறானோ அவன் தான் தூங்கும் தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பி தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன். அத்தகு கவியாக பாரதி விளங்கினார்.
“பாரதியார் பிறந்த காலத்தில் தமிழ் மொழியும் ஜன சமூகமும் அவ்வளவாக நல்ல நிலைமையில் இல்லை. ஏங்கிக் கிடந்த தமிழர்கள் தூங்கிக் கிடந்த தமிழ் மொழி இதுதான் பாரதியார் கண்டது. இந்த நிலையிலிருந்து தமிழர்களை மாற்றி ஊக்கமும் உள்வலியும் ஏற்படும்படியாக செய்வது மிகவும் அசாத்தியமான வேலையாகும். ஆனால் இந்த வேலையை பாரதியார் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
எத்தனையோ நூல்கள் பாரதியைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் எழுதப்பட்டாலும் பாரதியின் முழுமையான உள்ளத்தையும் அவரது வாழ்க்கை நெறிகளையும் கவி எழுதும் பாங்கையும் தேச விடுதலைக்காக அவரது உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிக் கனலையும் இந்த நூலின் மூலம் முழுமையாக அறிய முடிகிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar)
ஆசிரியர் : வ ரா
வெளியிடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : மார்ச் 2015
மூன்றாம் பதிப்பு : ஆகஸ்ட் 2024
பக்கம் : 152
விலை : ரூபாய் 160
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/mahakavi-bharathiyar/நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.