மகாராஜ் (இந்தி) – திரைப்படம் விமர்சனம்
இரவு (இந்தி)மகாராஜ் பார்த்து முடித்துவிட்டு, அடுத்த நாள் காலையில் செய்தித்தாள் பார்த்தால் உபி யில் போலே பாபாவின் ‘சத்சங்’ கூட்டத்தில் 121 பேர் சாமியார் காலடி மண் எடுக்க நெருக்கியடித்து இறந்திருக்கின்றனர்
எல்லாரும் உழைக்கும் வர்க்கத்தினர். கொடுமை.
மகாராஜ் படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பதே பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
16 ஆம் நூற்றாண்டில் வல்லபாச்சாரியா அத்வைத கோட்பாடு அடிப்படையில் ஒரு வைஷ்ணவ மதப்பிரிவை உருவாக்குகிறார். அவர் மரபுவழிவந்தவர்கள் ‘மகாராஜ்’ பட்டத்துடன் குஜராத் வணிகர்களின் மதகுருவாக பதவி வகிக்கிறார்கள்.
மகாராஜ் என்ற பெயரில் உழைக்காமல் சுகபோக வாழ்வை அனுபவித்தும், தினமும் தனக்குப் பிடித்த இளம் பெண்களை “Charan Seva ” என்ற பெயரில் அனுபவிப்பதுமே வேலையாக இருக்கிறான். ” Charan seva” பற்றி தேடிப்பிடித்து வாசித்தால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. மதத்தை ஏன் இந்தியர்கள் இப்படி கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்!!
அதே சமூகத்தில் பிறந்த கர்சன்தாஸ் தட்டிக் கேட்க, மகாராஜ் கர்சன்தாஸ் மீது அவதூறு வழக்கு போடுகிறார்.
படத்தில் ‘ honour’ பற்றி கர்சன்தாஸ் பேசும் பல இடங்களில் பிற்போக்குத்தனமும், ஊரில் எல்லாருக்கும் Charan seva பற்றி தெரிந்திருந்தாலும், கர்சன்தாஸ்க்கு மட்டும் அதைப்பற்றி தெரியவில்லை என்பது லாஜிக் அபத்தம்.
இந்தப் படம் பார்க்கும் போது மகாராஜ் பேசும் ஒருசில இடங்களின் உளவியல் அதிகம் யோசிக்க வைத்தது.
ஒன்று. மகாராஜ் செய்யும் தவறை அதே மதத்தின் பெரியவர் ஒருவர் சுட்டிக் காட்டும் போதும் சரி, வழக்குக்கு ஆதரவாக சில வணிகர்கள் முன்வர, அதை அறிந்த மகாராஜ் அவர்களை அழைத்து பேசும் போதும், கர்சன்தாஸ் தந்தையை அழைத்து மிரட்டும் போதும் சரி , மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தை சொல்கிறார்.
“சமூகத்தில் சமநிலையை நான்தான் உருவாக்குகிறேன். இங்கு எல்லாமே சரியாக உள்ளது.”
அந்தச் சமநிலையை ஒருவன் கேள்வி கேட்பதால்தான் சமூகத்தில் தொந்தரவு ஏற்படுகிறது என்பது மறைபொருள்.
இங்கே ஏற்கனவே இருக்கும் விதிகள்/அமைப்பு/முறை நோக்கி கேள்வி கேட்டால், இங்கு எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்பதே பதிலாக வரும். கேள்வி எழுப்பாமல் இரு என்பதும்,தனிநபரின் அராஜகத்தை கேள்வி கேட்டால், கேள்வி எழுப்பியவரை தான் சார்ந்த சமூகத்துக்கு எதிரியாக மாற்றும் உளவியல் தாக்குதல் காலம் காலமாக நடக்கும்.
அதிகாரம் கேள்விகளால் உடையும். கண்டும் காணாமலும் இருக்கும்.ஆனால் உள்ளுக்குள் பயம் கொள்ளும்.
நம் வேலை விடாமல் கேள்வி கேட்பதும், கேள்வி கேட்க பிறரைத் தூண்டுவதும் தான். நம் கேள்வி சரியாக இருந்தால் எத்தகைய அதிகார குவியலும் ஆட்டம் காணும்.
படத்தின் இறுதியில், அவதூறு வழக்கில் இருந்து கர்சன்தாஸ் விடுவிக்கப்படுகிறார்.
கால் தரையில் படாமல் பக்தர்கள் கையில் நடந்துச் செல்லும் மகாராஜின் அதிகாரமும் உடைகிறது.
கர்சன்தாஸ்க்கு நீதி கிடைக்க ஒரே காரணம் ஆங்கிலேயரின் சட்டமும் நீதிமன்றமும் தான். இதுவே நம் நாட்டு சட்டமாக இருந்தால் கர்சன்தாஸை தண்டித்திருக்கும்.
சரியான, நியாயமான கேள்விகளே சமூகநீதியை பெற்றுத்தரும்.
கேள்வி கேட்பவர் கொல்லப்படலாம்.
ஆனால் கேள்விகள் காலம் கடந்தும் நிற்கும். அதிகாரம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
எழுதியவர்:
முத்துமாரி. எஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.