நூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.! – பெ.விஜயகுமார்.

 

மகாசுவேதா தேவி மேற்கு வங்கத்தின் சிறந்த எழுத்தாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஞான பீடம், சாகித்திய அகாதமி, ரமோன் மெக்சாசெ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றவர். ஜான்சிர் ராணி என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும், ஆரண்யெர் அதிகார், ஹஜர் சவுராசி மா, ஆகிய நாவல்களையும், நிறைய சிறுகதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய மகாசுவேதா தேவி மேற்கு வங்கம், பீஹார், ஒடிஸா பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்வியல் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டதோடு அவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். வாழ்நாள் முழுவதும் குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்து அவர்களின் துயர் துடைக்கப் பாடுபட்டார்.

 மற்றும் சமூக ...
பிரபல எழுத்தாளர் மகாசுவேதா தேவி

ஹஜர் சவுராஸி மா நாவல் தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் ’1084இன் அம்மா’ என்ற பெயரில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் கோவிந்து நிஹால்னி இந்நாவலை இந்தியில் திரைப்படமாகவும் எடுத்துள்ளார். தன் மகனின் அகாலமான, அசாதாரணமான மரணத்தின் துயர நினைவுகளுடன் வாழ்ந்திடும் சுஜாதா என்ற பெண்மணியே நாவலின் தலையாய கதாபாத்திரமாவார். ’ஜனவரி பதினேழு’ அவர் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்று தான் அவரின் செல்ல மகன் ப்ரதீ கொடூரமாகக் கொல்லப்பட்ட நாள். அதுவே அவனின் பிறந்த நாளும் கூட! இருபது  வயது இளைஞன் ப்ரதீ தான் உயர்த்திப் பிடித்த கொள்கைகளுக்காக தன்னுயிர் ஈந்த நாள். இந்திய ’ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம்” என்று சொல்லி கல்கத்தா நகரக் காவல்துறை என்கவுண்டர் செய்து ப்ரதீ உட்பட நான்கு இளைஞர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற நாள். இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்கள் கல்கத்தா நகரின் சவக்கிடங்கில் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டிருந்தனர். ப்ரதீயின் பூதவுடலின் நம்பர் 1084 ஆகும். இதனால் ப்ரதீயின் அம்மா “1084இன் அம்மா” ஆனார்

ப்ரதீயின் இரண்டாவது இறந்த நாளும், இருபத்திரெண்டாவது பிறந்த நாளுமான ஜனவரி பதினேழாம் நாள் முழுவதையும் ப்ரதீயின் நினைவுகளைச் சுமந்தவாறே சுஜாதா கழிக்கிறார். இந்த ஒரு நாள் நிகழ்வுகளையும். அவரின் நினைவலைகளையும் மட்டுமே நாவல் காட்சிப்படுத்துகிறது. காலை, நண்பகல், மாலை, முன்னிரவு என்று ஒரு நாட்பொழுதின் நான்கு கால அளவுகளையே நாவலின் நான்கு பகுதிகளின் தலைப்பாக்கி சம்பவங்களை விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர். ப்ரதீயின் நினைவினைப் போற்ற அவ்வீட்டில் மற்ற யாரும் விரும்பவில்லை என்பது மிகப் பெரிய அவலம். ப்ரதீயின் தந்தை திவ்யநாத் சாட்டர்ஜி, அண்ணன் ஜோதி, அண்ணி வினி, அக்கா நீபா, அவள் கணவன் அமித், அக்கா தூலி, அவளின் வருங்காலக் கணவன் டோனி கபாடியா யாவருக்கும் ப்ரதீ பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதற்கு அவர்களின் சுயநலமே  காரணம். அவனின் நினைவு நாளில் தூலியின் திருமண நிச்சயத்தைக் கொண்டாடிடத் திட்டமிடுகிறார்கள். அதுவும் வீட்டுத் தலைவி சுஜாதாவைக் கேட்காமலே முடிவு செய்கிறார்கள். தூலியின் வருங்கால மாமியாரின் மானசீகமான சாமியார் அமெரிக்காவிலிருந்து ஜோசியம் பார்த்து இந்த நாளைத் தேர்ந்தெடுத்தாராம்! குடும்பத் தலைவர் திவ்யநாத் கல்கத்தாவின் லீடிங் சார்ட்டர்டு அக்கவுண்டெண்ட், மூத்த மகன் ஜோதி ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் ஆபிசர், நீபாவின் கணவன் சுங்க இலாகா அதிகாரி, தூலியின் வருங்காலக் கணவன் டோனி மேல் நாடுகளுக்கு கலைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகன்.

பிரபல எழுத்தாளர் மற்றும் சமூக ...

தூலி சொந்தமாகக் கலைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கி இருந்தாள். இப்படிக் குடும்பமே படித்துப் பதவியிலிருந்தாலும் மூட நம்பிக்கைகளிலிருந்து யாவரும் விடுபடவில்லை. பெரியவர் திவ்யநாத் பெண் பித்தர். தன்னுடைய ஆபிஸ் அசிஸ்டெண்டை வைப்பாட்டியாக வைத்திருப்பது ஊர் அறிந்த ரகசியம். ஜோதி – வினி தம்பதிகளுக்கு காமத்தில், கட்டில் சுகத்தில் மட்டுமே நாட்டம். மூத்தவள் நீபா தன் கணவனின் உறவுக்காரப் பையன் பலாயி உடன் குடித்துக் கும்மாளம் போடுவதுடன் தகாத உறவும் வேறு. வீட்டில் சுஜாதா, ப்ரதீ இருவரும்  வேறுபட்டுத் தனித்து நின்றார்கள். ப்ரதீ புரட்சியினால் மட்டுமே நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். அவனின் செயல்பாடுகளுக்கு முழு ஒப்புதலை வழங்காவிட்டாலும், அவனின் சிந்தனைகளுக்குத் தடையாக சுஜாதா இருக்க விரும்பவில்லை.

1970களில் மேற்கு வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சிகளின் அனைத்துப் பிரிவினர் மீதும், அதிலும் குறிப்பாக நக்சல்பாரிகள் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் மீதும் அன்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நரவேட்டை நடத்திக் கொண்டிருந்தது. அரசின் தாக்குதலைக் கண்டு அஞ்சிடாமல் வங்காள இளைஞர்கள் மாநிலம் முழுவதும் செங்கொடி ஏந்தி பொதுமக்களுக்கு வர்க்கப் பார்வையை ஊட்டிக்கொண்டிருந்தார்கள். ப்ரதீ இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபடுவதை அவன் தந்தையும், உடன் பிறந்தவர்களும் விரும்பவில்லை. அம்மா சுஜாதா மட்டும் அவனின் இடதுசாரி சித்தாந்தத்தில் தப்பேதும் இல்லையே என்று அவனுக்கு ஆதரவாக நின்றார். திவ்யநாத் சாட்டர்ஜியின் குடும்பமே இரண்டு கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ப்ரதீயும் அவன் அம்மாவும் ஓரணியாகவும், மற்றவர்கள் எல்லாம் எதிரணியாகவும் நின்றனர்.

Hazaar Chaurasi Ki Maa - Wikipedia

காலை:

சுஜாதா அன்று காலையில் எழுந்ததும் ப்ரதீயின் அறைக்குள் சென்று அவன் விட்டுச் சென்றுள்ள புத்தகங்கள், ஆடைகள், காலணி, சால்வைகள் மற்ற உடைமைகளைக் கண்டு பெருமூச்சு விடுகிறார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொடிய நாளில் கடைசியாக வீட்டைவிட்டுச் செல்வதற்கு முன் நீலச் சட்டை அணிந்த ப்ரதீ மாடிப்படிக்குக் கீழே நின்று கொண்டு தன்னை நிமிர்ந்து பார்த்த அந்தக் கணம் இனி ஒருபோதும் திரும்பாது என்றெண்ணி வருந்துகிறார். அவன் இறந்த அந்த நாளைய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அதிகாலையில் போன் வருகிறது. ப்ரதீ கொல்லப்பட்ட செய்தியையும், அவன் உடல் காண்ட்டா புகூர் சவக் கிடங்கில் இருப்பதையும் தெரிவிக்கிறார்கள்.  திவ்யநாத் பதறுகிறார். ப்ரதீ இறந்துவிட்டான் என்று பதறவில்லை. மறுநாள் காலைப் பத்திரிக்கைகளில் அவன் பெயர் வந்துவிடக்கூடாது என்று பதறுகிறார். அவருடைய குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு அல்லவா? தன்னுடைய அதிகார பலம், ஆளுமை, செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்துகிறார். டோனியின் நண்பன் சரோஜ் கல்கத்தா நகரின் காவல்துறை அதிகாரி. நகரின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முழுப்பொறுப்பு அவனுடையது. திவ்யநாத் சாதித்துவிடுகிறார். மறுநாள் காலை பத்திரிக்கைகளில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் பெயர்கள் மட்டும் வெளிவருகின்றன. பட்டியலில் ப்ரதீயின் பெயர் இல்லை. பணம் பாதாளம் மட்டும் பாயுமே?

ப்ரதீயின் அங்க அடையாளங்களைப் பார்த்து உறுதிப்படுத்த திவ்யநாத் வரத் தயாரில்லை. சவக்கிடங்கில் கிடக்கும் தீவிரவாதிகளின் உடலைப் பார்த்து ப்ரதீயை அடையாளம் சொல்வது தனது சுயமரியாதைக்கு இழுக்கு என்று நினைக்கிறார்.. பதறித் துடித்துக் கொண்டு செல்லும் சுஜாதாவுடன் கூடச் செல்வதற்கு வீட்டில் யாரும் வரவில்லை.  சவக்கிடங்கில் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்த ப்ரதீ, விஜித், சமூ, பார்த்தா, நால்வரின் உடல்களைப் சுஜாதா பார்க்கிறார். ப்ரீதீத்தும் அவன் சகாக்களும் செய்த குற்றம் தான் என்ன? நாட்டின் அநீதிகளைத் தட்டிக் கேட்டதுதான் குற்றம். அன்றிரவே நான்கு உடல்களும் தகனம் செய்யப்படுகின்றன. இளைஞர்களின் கனவுகள் சாம்பலாகின்றன.

காவலர்கள் ப்ரதீயின் அறையை சோதனை செய்து சில சாட்சியங்களைச் சேகரிக்கின்றனர். சில சுவரொட்டிகளைக் கைப்பற்றுகிறார்கள். “சிறைதான் எங்கள் பல்கலைக்கழகம்”, “துப்பாக்கிக் குழலிலிருந்துதான்…..”, “வெறுங்கள்! அடையாளம் காணுங்கள்! நொறுக்கித் தள்ளுங்கள்! மிதவாதிகளை!” என்ற முழக்கங்கள் கொண்ட போஸ்டர்கள் சிக்குகின்றன. ப்ரதீயும் அவன் தோழர்களும் இந்தப் போஸ்டர்களை ஒட்டுவதற்காக நள்ளிரவில் கல்கத்தா நகரில் சுற்றிவருவார்கள். மொத்தக் குடும்பமும் சுஜாதாவை திட்டித் தீர்த்தது. தவறான பாதையில் சென்ற ப்ரதீயை திருத்தி நல்வழிப்படுத்தத் தவறினார் என்று பழி சுமத்தினர். வீட்டில் யார் குற்றவாளிகள் என்பதை சுஜாதா அறிவார். ப்ரதீ கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும் அது ஒரு மிகப் பெரிய தியாகம்! நாட்டின் சுரண்டலுக்கெதிரான போரில் அவனும் அவன் தோழர்களும் தங்களின் இன்னுயிர்களை ஈந்துள்ளார்கள் என்றே கருதினார்.

1084 இன் அம்மா – எஸ் கே என். | குவிகம்

நண்பகல்:

இந்த நினைவுகளில் இருந்து மீண்டு தான் திட்டமிட்டிருந்தபடி  ப்ரதீயுடன் உயிர் நீத்த தோழன் சமூவின் தாயாரைச் சந்திக்க நண்பகலில் சுஜாதா புறப்பட்டார். இதற்காக தான் வேலை பார்க்கும் வங்கிக் கிளையில் ஏற்கனவே விடுமுறை சொல்லியிருந்தார். அவர் வெளியே செல்வதைப் பார்த்த மகள் தூலி “மாலையில் பார்ட்டி இருக்கு தெரியுமில? வந்துருவீங்களா?” என்று அதட்டலான குரலில் கேட்கிறாள். சுஜாதாவின் மாமியார் இறந்த பின் அந்த வீட்டுப் பொறுப்புகளை அவள்தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக தூலிக்கு நினைப்பு. ”ஏழு மணிக்குத் தானே பார்ட்டி அதற்குள் வந்துவிடுவேன்” என்று சொல்லி புறப்படுகிறார். ”டாக்டர் உங்கள் அப்பெண்டிக்ஸ் சிகிச்சைக்காக ஆப்பரேஷன் தேவை என்று சொல்லியுள்ளார். எப்போது செய்துகொள்ளப் போகிறீர்கள்”? என்று அதே அதட்டலான குரலில் தூலி கேட்கிறாள். “உன்னுடைய திருமணம் முடிந்ததும் செய்துகொள்கிறேன்” என்று சொல்லி விடைபெறுகிறார். அவர் உடல்நிலை மோசமாக இருப்பது வீட்டில் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தியாவிலேயே மிகவும் விழிப்புணர்வு மக்கள் நிறைந்த நகரமாகக் கருதப்படும் கல்கத்தா நகரின் ஒதுக்குப்புறத்தில் அந்த சேரி இருக்கிறது. மிகுந்த சிரமத்திற்குப்பின் சமூவின் வீட்டைக் கண்டுபிடிக்கிறார். சேரிக்குச் சம்பந்தமில்லாத மேட்டுக் குடியைச் சேர்ந்த ஒருவர் வருவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்து பார்க்கின்றனர். சமூ கொல்லப்பட்ட ஒரு சில மாதங்களில் அவனின் அப்பாவும் இறந்துவிடுகிறார். சமூவின் தாயாரும், அவனின் சகோதரியும் மட்டும் அந்தக் குடிசையில் வாழ்கிறார்கள். குடிசையின் உள்ளும், புறமும் வறுமையின் கோரத்தை வெளிப்படுத்துகின்றன. சுஜாதாவைக் கண்டதும் சமூவின் தாய் கதறி அழுகிறார். ஜனவரி பதினாறாம் நாள் இரவு நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கூறுகிறார். குடிசைக்குள் கிழிந்த சமுக்காளத்தை விரித்து சமூ, விஜித், ப்ரதீ. பார்த்தா நால்வரும் படுத்திருந்ததை விவரிக்கிறார். இரவு நீண்ட நேரம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்கிறார். விடிகாலை மூன்று மணி அளவில் காவலர் படை குடிசையைச் சுற்றி வளைத்துக் கொண்டு நிற்பதை அறிகிறார்கள். சமூவின் அப்பா அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுத் தடுத்துள்ளார். காவலர்கள் அவரைத் தள்ளிவிட்டு நான்கு இளைஞர்களையும் கொடூரமாக அடித்து போலீஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு போனதை விவரிக்கிறார். சமூவின் அம்மா தன்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை சுஜாதாவிடம் கேட்கிறார் ”வசதிகள் படைத்த உங்க வீட்டுப் பிள்ளை எப்படி அம்மா இந்தக் குடிசையில் வந்து படுத்திருந்தான்? அதுதான் தோழமை போலும்” என்று அவரே பதில் சொல்லி வியந்தார்.

சமூவின் தாயும், சகோதரியும் கொடிய வறுமையில் உழலுவதை சுஜாதா உணர்ந்தார். சமூவின் சகோதரி என்பதால் யாரும் அவளை வேலையில் சேர்த்துக்கொள்ளத்  தயாரில்லை என்ற துயரமான விஷயத்தை சமூவின் அம்மா சொல்கிறார். ஒரு சில மாணவர்களுக்கு டியூசன் எடுத்துப் பிழைப்பை நடத்துவதாகக் கூறுகிறார். அந்த ஏழைத் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னுடைய துயரைப் பகிர்ந்து கொண்டது சுஜாதவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. சமூவின் நடவடிக்கைகளால் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் நாசமாகிவிட்டதாக அவனின் சகோதரி நினைக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சமூ தொடர்பான அனைத்தையும் துடைத்து எறிய வேண்டும் என்று நினைப்பதை அவர் முகமே காட்டிக் கொடுத்தது. தன்னுடைய வருகையை அவள் விரும்பவில்லை என்பதையும் சுஜாதா புரிந்து கொண்டார். இதுவே அந்தக் குடிசைக்கு வருவது கடைசியாக இருக்குமோ என்ற ஏமாற்றத்துடன் சமூவின் அம்மாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு குடிசையிலிருந்து வெளியேறுகிறார்.

மாலை:

அன்று மாலை நந்தினி வீட்டுக்கு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் சுஜாதாவின் வரவை எதிர்பார்த்து நந்தினி காத்திருந்தாள். ப்ரதீ தன் சிநேகிதி நந்தினியைப் பற்றி சுஜாதாவிற்கு முழுவதும் சொல்லியிருக்கிறான். நந்தினி தன் நிலைமைகளை விளக்கிச் சொன்னது மிகுந்த வருத்தத்தை அளித்தது. சிறையிலிருந்து அவளை விடுவித்திருந்தாலும் அவளைத் தொடர்ந்து காவல்துறை கண்காணித்து வருவதைச் சொன்னாள். நந்தினிக்கு வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. காவல் நிலையத்தில் இரண்டாயிரம் வாட் விளக்கு முன்னால் உட்கார வைத்து நீண்ட நேரம் விசாரணை நடத்தியதால் கண்களில் பார்வை மங்கிவிட்டது என்று அவள் சொன்னதைக் கேட்டு சுஜாதாவின் மனம் பதறியது. ப்ரதீயும் அவன் தோழர்களும் எப்படி பிடிபட்டார்கள் என்பதை விளக்கினார். அநிந்தியா என்பவன் காட்டிக்கொடுத்த துரோகத்தைப் பற்றியும் நந்தினி கூறினாள். இவ்வளவு துயரங்களுக்குப் பிறகும் இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக நந்தினி உறுதியுடன் கூறியது சுஜாதாவை வியப்பில் ஆழ்த்தியது. வாசல் வரை வந்து நந்தினி வழியனுப்பினாள். இந்த எல்லையைத் தாண்டி தன்னால் வர முடியாது என்று அவள் சொன்னது மிகுந்த வேதனையைத் தந்தது.

1084 இன் அம்மா: உண்மையைத் தேடி ஒரு பயணம்!

முன்னிரவு:

நாவலின் நான்காம் பகுதி சற்று பலவீனமானதாகும். நாவலில் இழையோடி வந்த சோகமும், அமைதியும் விலகுகின்றன. நாவலில் இதுவரை அறிமுகம் ஆகாதவர்கள் எல்லாம் பார்ட்டியில் கலந்து கொள்கின்றனர். வினி, நீபா, தூலி மூவரும் ஒரே மாதிரியான விலை உயர்ந்த ஆடைகளுடன், அதீத அலங்காரத்துடன் வலம் வந்தது அசிங்கமாக இருந்தது. எல்லோரும் ஒரு கையில் மதுவையும், இன்னொரு கையில் இறைச்சித் துண்டையும் வைத்துக் கொண்டு போதையில் உளறுவதை சுஜாதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் தூலியின் வருங்கால மாமியார் அமெரிக்கச் சாமியாரின் மகிமைகளைப் பற்றியே பேசியது எரிச்சலூட்டியது. நீபா போதையின் உச்சத்தில் அருவருப்பான வார்த்தைகளில் கணவன் அமித்திடம் பேசியதைக் கேட்டு சுஜாதா கண்டிக்கிறார். பார்ட்டியில் இதெல்லாம் சகஜம்தானே என்று மற்றவர்கள் சொல்லும் சமாதானம் அதைவிட மோசமாக இருக்கிறது. காலையிலிருந்து மன உளைச்சலில் இருக்கும் சுஜாதாவின் உடல் சோர்வடைகிறது. சமாளித்துக் கொண்டு நிற்க முயற்சிக்கிறார். பார்ட்டியிலிருந்த ஒருவன் தன்னை பத்திரிக்கையாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சுஜாதாவிடம் “உங்கள் மகன் ப்ரதீ  பற்றி ஒரு பேட்டி எடுத்துக்கொள்ளலாமா” என்று அவன் கேட்டது சுஜாதாவின் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. தான் மிகவும் சோர்வடைவதை உணரும் சுஜாதா அடுத்த நிமிடம் கீழே சரிந்து விழுகிறார். ”அப்பெண்டிக்ஸ் வெடித்திருக்க வேண்டும்” என்று திவ்யநாத் சொல்வதுடன் நாவல் நிறைவடைகிறது.

 –பெ.விஜயகுமார்.

 ——————————————————————