மகேஷ் கவிதைகள்

மகேஷ் கவிதைகள்




ஆழம்!
**********
சிதறிய பாகங்களை
கிளறியபடி நகர்கிறது
கைவிடப்பட்ட
ஓர்
அநாதை நினைவு!

வனங்களை விழுங்கிய
பூங்காவினுள் கொதிக்கிறது
பாலைவன அனல்!

சிதைந்த சொற்களின் மீது
நடனமாடியவன்
வேடம் கலைக்கிறான்!

சொற்களைப் பதிந்து கொண்ட
உணர்வுகளில்
விழுகிறது
பெருங்கீறல்!

பல்வேறு வெளிகளில்
தயங்கி
வார்த்தைக்கு வலிக்காமல்
வரி கோர்த்தவனுக்கு
பரிசாகிறது
புதைகுழி!

அகன்றுவிட்ட நாட்களை
கோர்த்துக் கொள்கிறது
அகத்தேடல்!

நட்புக்கும் உறவுக்கும்
அவப்பெயரிட விரும்பாத
அஞ்ஞான உணர்வொன்று
அமிழ்ந்து கிடக்கிறது
மன மூலையில்!

கனவுகள்!
**************
ஓரங்கட்டப்பட்ட
இருக்கைகளில்
உறங்கிக்கொண்டன
ஓராயிரம் கனவுகள்!

காடு மலை
கடல் நதி
ஆகாயமெனக்கடந்து
நட்சத்திரங்களை
சமீபித்தபின்
கட்டப்பட்டன கைகள்!

பறவையின் இறகுகளைக்
துணைக்கழைத்துக்கொண்ட

வானத்தில்
பலியிடப்பட்டது
புலியின் வீரம்!

இறகுகளை இறுக்கிக்கட்டவும்
ஏதோ ஒரு
சமிக்ஞை மின்னல்
விரைகிறது!

கற்பனை தேசத்துக்
காவிய வெள்ளங்களை
அணைகட்டுகிறது அழுத்தம்!

கனவு கவிழ்தலின்
வீதி வியாபாரம்

விதியாய்க்களைகட்டுதல்
அமோகம்!

கரைகளை
உடைத்தெறிந்த விபரீதங்களில்
ஊசலாடும்
உயர் கனவுகள்!

இரவின்
அழகு தேசங்களில்
ஏற்றி வைத்த
கனவு தீபங்களை
அணைத்து விரையும்
பாழான பகல்கள்!

இன்னும்
நீள் வரிசை கட்டி
நின்று தவமிருக்கும்
நிறைவேற்றச்சொல்லிக்
கெஞ்சும்
அழியாக்கனவுகள்!

உணர்வெனும் பறவை!
*****************************
சிறகொடிந்த பறவையான
உணர்வொன்று
உடைந்து விழுந்து
அழுகிறது!

அம்பெய்த வேடன்
அடுத்த குறிக்கு
ஆயத்தமாகிறான்!

சந்தோஷ மயக்கங்களில்
வானம் தொட்ட உணர்வு
அடிபட்டு
அழுந்தித்தவிக்கிறது!

மீட்பர்
யாரேனும்
உணர்வு காக்கலாம்
எனக்கணிக்கவியலாது!

எப்படியோ மீளும்
உணர்வுப் பறவை
எனும் நேர்மறைகள்
பலிக்கலாம்!

ஆயின்
கடுஞ்சொல் புனைந்து
எய்த வேடன் வீழ்ந்ததாய்
நினைவடுக்கங்களில்

பதிவேடுகள்
ஏதும்
அகப்படவில்லை!

எங்கேனும்
சொற்கள் படபடக்கும்
ஓர்
நாவரசனை வினவலாம்!

– மகேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *