2024 ஏப்ரல் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். இந்திய கால்பந்து உலகில் மிக முக்கியமானவரான சையத் அப்துல் ரகீம் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அமித் ஷர்மாவின் இயக்கத்தில் அஜய் தேவகன், பிரியாமணி, கஜ்ராஜ் ராவ், நிடான்ஷி கோயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
1950-60 இந்திய கால்பந்தின் பொற்காலம் எனப்படுகிறது. ‘ஆசியாவின் பிரேசில்’ என இந்தியா புகழப்பட்டது. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் அரை இறுத்திக்கு முன்னேறியது; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1951டெல்லி மற்றும் 1962 ஜகார்த்தா போட்டிகளில் தங்க பதக்கம் வென்றது ஆகியவை இக்காலங்களில் நிகழ்ந்தது. இதை எவ்வாறு ரகீம் சாதித்தார் என்பதே படம். கூடவே அவரது இல்லற வாழ்க்கையின் ரசங்களும் சோகங்களும் நம்மை ஈர்க்கின்றன. பயிற்சியாளர், நிர்வாகிகள் எல்லோரும் எப்போதும் புகை பிடித்துக்கொண்டே இருக்கின்றனர். அந்தப் பழக்கமே ரகீமின் உயிருக்கு எமனாக மாறுகிறது. புகை பிடித்தலுக்கு எதிரான வலுவான பிரச்சாரம் கலாபூர்வமாக னடைபெற்றுள்ளது.
பெரும்பாலான விளையாட்டு வகமை படங்களில் வருவது போல இதிலும் பயிற்சியாளருக்கும் கால்பந்து கழக நிர்வாகிகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல், நிர்வாகிகளின் பொறுப்பற்ற போக்கு, பிராந்திய மனப்பான்மை, இறுதியில் பயிற்சியாளரும் வீரர்களும் வெற்றி பெறுவது ஆகியவை இதிலும் உள்ளது. வங்காள வீரர்கள் பக்கம் சாய்மானம் உள்ள பத்திரிக்கையாளர் ஒரு வீரரைப் பார்த்து ‘நீ என்ன செக்கந்திராபாத்தா?’ என்று கேட்கும்போது ‘’நான் இந்திய அணியை சேர்ந்தவன்’ என்று கூறும்போது இந்தியா போன்ற பன்முக கலாச்சார பகுதிகளைக் கொண்ட நட்டில் ஒருமைப்பாடு விளையாட்டின் மூலமும் வளர்க்கலாம் என்பது தெரிகிறது. எந்த ஒரு வீரரும் தனித்துக் காட்டப்படவில்லை. பயிற்சியாளர் குழுவாக விளையாடுவதையே வலியுறுத்துகிறார். தனிமனித சாகசங்களையே திரைப்படங்களும் அரசியல் கட்சிகளும் முனைப்புடன் வெளிப்படுத்தும் சூழலில் குழு உணர்வு முக்கியத்துவம் ஆகும். தனித்திறமை அவ்வப்போது வெளிப்படுவதும் அது வெற்றிக்கு வழி வகுப்பதும் காட்டப்படுகிறது. திறமை, குழு உணர்வு ஆகியவற்றுடன் மன உறுதியும் முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. பிரதான கோல் கீப்பர் தங்கராஜுக்கு அடிபட்டு விளையாட முடியாதபோது ‘அவனுடய காயத்தை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அவனுடய உணர்வை நீங்கள் பார்க்கவில்லை.’ போன்ற வசனங்கள் மூலம் இது சுட்டிக்காட்டப்படுகிறது.
அஜய் தேவகனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டியது. அதோடு அவரின் மனைவியாக வரும் பிரியாமணியின் நடிப்பும் சிறப்பு. ரகீம் பயிற்சியாளர் பணியை இழந்து நோய்வாய்ப்பட்டு சோர்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும்போது ‘ உன்னுடய கனவை நிறைவேற்று. அப்போதுதான் நீ நிம்மதியான மரணத்தை பெறுவாய்’ என்று கூறும்போது ஒரு மனைவி தன்னுடய இணையருக்கு எவ்வளவு ஆதரவும் தைரியமும் தரமுடியும் என்பதோடு ‘என்னுடய மரணத்தின்போது சூடான கண்ணீர் விழும்படியான பணியே எனக்கு விருப்பமானது’ என்ற மார்க்சின் கூற்றும் ‘புரந்தார் கண் நீர் மல்க சாகிற் பின் சாக்காடு இரந்துகோள் தக்கதுடைத்து’ எனும் குறளும் ஒப்பு நோக்கத்தக்கது.
60களின் ட்ராம் போன்ற வாகனங்கள், வீரர்களின் நீளமான டவுசர்கள், பழுப்பு நிற பந்து, அடிபட்டால் மாற்று வீரரை இறக்க அனுமதிக்காத விதிகள், தைவான், இஸ்ரேல் நாடுகளை போட்டியில் அனுமதிக்காத அந்தக்கால அரசியல் போன்ற விசயங்கள் நுணக்கமாக காட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன. 50 கோடி வரை வசூலாகியுள்ளதாம். ஒரு நல்ல பண்பாட்டை சித்தரிக்கும் படம்.
எழுதியவர்
ரமணன் ராமய்யர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

