நூல் அறிமுகம்: தெலுங்கில் சீலா வீர ராஜூ எழுதி தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான மைனா நாவல்நூல் பெயர்: மைனா தெலுங்கு நாவல்
ஆசிரியர் பெயர்: சீலா வீர ராஜூ
மொழி பெயர்ப்பு:  ராஜேஸ்வரி கோதண்டம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 368
வகை: மொழிபெயர்ப்பு நாவல்
விலை: 360
நூல் பெற தொடர்பு எண் (optional) : 8778073949
முதல் பதிப்பு டிசம்பர்: 2020

சீலாவீரராஜூ தெலுங்கின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை சிறுகதைகள், நாவல்கள் என தொடர்ந்து இயங்கிவருபவர். இதுவரை இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாவல் ஆந்திர சாகித்ய அகாதமி விருதை வென்றது.

ராஜேஸ்வரி கோதண்டம் சமூக சிந்தனையாளர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர். ஐம்பது ஆண்டுகளாக இலக்கியப் பணியில் இருப்பவர்.

தமிழகம் போலவே ஆந்திராவில் இருந்தும் பர்மாவுக்கு தென்னை சம்பந்தப்பட்ட பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் ஏற்றுமதி பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது. 1930களில் காக்கி நாடா ஒரு பெரிய வியாபார மையமாகத் திகழ்வதும், அங்கிருந்து சரக்கை கப்பலில் ஏற்றிக்கொண்டு ரங்கூன் செல்வதில் இந்த நாவல் ஆரம்பிக்கிறது. தொழில் நுட்பம், போக்குவரத்து முதலியவற்றில் முன்னேற்றம் இல்லாத காலத்தில் இந்த வியாபாரம் செய்வது என்பது மாதக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது. ஆனால் அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழில்.

திருப்பதி நிறைமாத கர்ப்பிணியைப் பிரிந்து ரங்கூன் செல்கிறான். புயலில் கப்பல் மாட்டிக்கொள்ள மரணத்தைத் தொட்டுவிட்டுப் பின் மீள்கிறான். நல்ல லாபம் கிடைத்தும் ஊர் திரும்பாது பணமாகக் கொண்டு செல்லாது, அரிசி வாங்கிச் சென்றால் இரண்டு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் தங்குகிறான். இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கிறது. கப்பல் போக்குவரத்து இல்லாமல் கால்நடைப்பயணத்தில் இந்தியா நோக்கி வருகையில் பணம் முழுவதையும் பறிகொடுத்து வெறுங்கையுடன் ஊர் திரும்புகிறான். குடி, கூத்தி என்று நாளைக் கழிக்கும் அவனது குடும்பம் வறுமையில் விழுகிறது. இனி அவனது இளைய மகன் சாயிபாபாவின் கதை ஆரம்பிக்கிறது.

போலீஸ்காரர்களின் வாழ்க்கை அழகாக சித்திரமாக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரரீதியாக முன்னுக்கு வருபவர் வெகுசிலரே. மற்றவர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மாயமாகிவிடுகிறது. திரைப்படங்களில் மிடுக்கான காவல்துறையை எத்தனை முறை காட்டினாலும், இந்தியாவில் காவல்துறைக்கு சமூகத்தில், சொந்தக்காரர் நடுவில் பெரிய மரியாதை இருப்பதில்லை. வங்கியில் காவல்துறையில் இருப்பவருக்கு கடன் வழங்கக்கூடாது என்று எழுதப்படாத சட்டமே முன்பு இருந்தது. எத்தனை பழகினாலும் போலீஸ்காரன் தன் குணத்தைக் காட்டுவான் என்ற சொல்லுக்கேற்ப நாவலில் வரும் டி.எஸ்.பி.

சாயிபாபா மூன்று பெண்களால் ஆட்டுவிக்கப்படுகிறான். முதலில் முஸியா. முஸியா எப்போதுமே தருபவள். அவள் பெற்றுக்கொண்ட ஒன்றையும் அவளால் பல காலம் வைத்திருக்க முடியவில்லை. இரண்டாவது ஹபிஜா. ஹபிஜா குழந்தையும் இல்லாது பெண் என்றும் சொல்ல முடியாது இவனிடம் கண்ணாமூச்சி ஆடிச் சென்றவள். அடுத்து கமலா. மாமன் மகள். மனைவி. எல்லாத் திருமணங்களைப் போலவே அலைவரிசை பிசகி பின்சுருதி சேர்ந்து கொள்கிறது. கடைசியாக தெரீஜா. தெரீஜா புதிர் போட்டு விடை சொல்லாது போனவள். இவளிடம் மட்டுமே முடிவை சாயிபாபாவால் எடுக்க முடிகிறது. மீதி எல்லோருமே அவன் வாழ்க்கை செல்லும் பாதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

குற்ற உணர்வு சாயிபாபாவை உலுக்கி எடுக்கிறது. அவனது அப்பாவிடம் எது குற்றம் என்று நினைத்தானோ அதை விடப் பெரிய குற்றமான நம்பிக்கை துரோகத்தை இவன் செய்கிறான். கடைசி ஞாபகார்த்த மோதிரமும் குற்ற உணர்வுத்தீயில் உருகி மறைந்து விடுகிறது.

கடமை உணர்வை சாயிபாபா கடைசி வரை விட்டு விடுவதில்லை. மலை ஜாதி பெண்ணை கடமைக்காக நம்பவைத்து ஏமாற்றுகிறான். இரவு பகல் பாராது வேலை செய்கிறான். உயிருக்கு ஆபத்தான காரியங்களிலும் பின் வாங்குவதில்லை. எல்லாமிருந்தும் கடமை உணர்வு கதைகளில் வருவது போல் அவனை உயரத்திற்குக் கூட்டிச் செல்லவில்லை.

காற்றில் பறக்கும் காகிதம் போல் சாயிபாபா போகும் திசையறியாது பயணிக்கிறான். முஸியாவிலிருந்து, ஹபீஜா, கமலா, தெரீஜா என்று நான்கு பெண்களின் முழு நம்பிக்கையையும் அவனால் கடைசி வரை பெறமுடிவதில்லை. அதற்கு அவனது போலீஸ் வேலை மட்டும் காரணமில்லை.

இது சாதாரணனின் கதை. சபலங்களும், சந்தர்ப்பங்களும் இழுத்த இழுப்பிற்குச் செல்லும் சராசரி மனிதனின் கதை. ஆரம்பத்தில் இருந்தே எந்த தேக்கமும் இன்றி வேக நடைபோடும் கதை. சாயிபாபா எனும் மனிதனின் அக உணர்வுகளைத் தெளிவாக வாசகர் புரிந்துகொள்ளச் செய்யும் மொழிநடை. ராஜேஸ்வரி கோதண்டம் இது வேறு மொழி நாவல் என்று சிறிதும் தோன்றாத அளவிற்கு மொழிபெயர்த்துள்ளார். நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் நாவல்.

நூல் பெயர்: மைனா தெலுங்கு நாவல்
ஆசிரியர் பெயர்: சீலா வீர ராஜூ
மொழி பெயர்ப்பு:  ராஜேஸ்வரி கோதண்டம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 368
வகை: மொழிபெயர்ப்பு நாவல்
விலை: 360
நூல் பெற தொடர்பு எண் (optional) : 8778073949
முதல் பதிப்பு டிசம்பர்: 2020

நன்றி: தமிழ்வெளி